எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, March 30, 2017

ஹனிமூன் தேசம் – ஆப்பிள் தோட்டத்தில் தங்கலாமா?

ஹனிமூன் தேசம் – பகுதி 8

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

தங்குமிடத்திலிருந்து பனிபடர்ந்த மலைகளின் தோற்றம்
 
மணாலியைப் பொறுத்த வரை தங்குமிடங்கள் நிறையவே இருக்கிறது. அதுவும் ஹனிமூன் தேசம் என்பதால் இணையத்தில் எங்கே, எப்படி தேடினாலும் உங்களுக்கு மணாலியில் தங்குமிடம் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. குளிர் பிரதேசம் என்பதாலும், இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் மிக அதிகம் என்பதால் ஊர் முழுக்கவே தங்குமிடங்கள் புற்றீசல் போல அதிகரித்து விட்டன. பல முக்கியத் தெருக்களில் தொடர்ந்து தங்குமிடங்கள் அமைந்திருக்கின்றன. எனக்கென்னமோ வீடுகளை விட தங்குமிடங்கள் அதிகமோ என்ற சந்தேகம் உண்டு!

ஸ்னோ க்ரௌன் காட்டேஜ் - அங்கிருந்து புறப்படும் முன் மழை பெய்து கொண்டிருக்க, அடாத மழையிலும் விடாது எடுத்த புகைப்படம்...

நாங்கள் தங்குவதற்கு ஜோதி ஏற்பாடு செய்த இடம் ஒரு காட்டேஜ். மணாலி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் வன் விஹார் என்ற பகுதியில் அமைந்திருந்தது. காட்டேஜ் பெயர் Snow Crown Cottage. மொத்தம் 16 அறைகளைக் கொண்டது. அடிப்படை வசதிகள் அனைத்தும் உண்டு. குலூவிலிருந்தே நிர்வாகியை அழைத்து பேசி விட்டதால், நாங்கள் செல்வதற்கு முன்னரே எங்களுக்கான தங்குமிடம் தயாராக வைக்கப்பட்டிருந்தது.  வண்டியை காட்டேஜ் ஓரம் நிறுத்த, உடைமைகளை பணியாளர்கள் வந்து எடுத்துக் கொண்டு சென்றார்கள். 


தங்குமிடத்தின் உள்புறம்
இரண்டு படங்களும் இணையத்திலிருந்து....

ஒரே இடத்தில் அனைவரும் தங்கும்படியாக அமைந்திருந்தது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட Cottage. முதலாம் தளத்தில் – சில படிகள் ஏறி மேலே சென்று கதவைத் திறக்க, ஒரு பெரிய ஹால் – முதலில் வரவேற்பறை – பத்து பன்னிரெண்டு பேர் அமர வசதியாக சில சோஃபாக்கள்.  பக்கத்திலேயே ஒரு  Fire place – அதில் நெருப்பு வேண்டுமெனில் போட அறை கதகதப்பாக இருக்கும். அதைத் தாண்டினால் Dining area. Dining area பக்கத்தில் சமையல் அறை. நுழைந்ததும் வலது பக்கத்தில் வரவேற்பறை என்றால் இடது பக்கத்தில் இரண்டு தனித்தனி அறைகள் – Double bedded with attached bathroom.

எல்லோரையும் ஒழுங்கா ஃபோட்டோ எடுப்பா தம்பி.....

அறைகளுக்கு முன்னால் ஒரு மரப் படிக்கட்டு – அதில் மேலே ஏறிச் சென்றால் மேலேயும் இரண்டு தனி அறைகள் – அவையும் Double bedded with attached bathroom – கூடவே ஒரு டைனிங் ஏரியா. ஒரு Duplex flat போலவே அமைப்பு. உங்களுக்குத் தேவை எனில் மொத்தமாக எல்லாவற்றையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். தனித்தனி அறையாகவும் வாடகைக்குத் தருவதுண்டு! Fire place பக்கத்திலிருக்கும் கதவைத் திறந்தால் Balcony. அங்கிருந்து பார்த்தால் பின்னால் ஆப்பிள் தோட்டம்! பனி படர்ந்த மலைகள் என அருமையான காட்சிகள்! ஆடூ மரங்களும், ஆப்பிள் மரங்களும் முன்னரும் பின்னரும் வளர்ந்திருக்க, நடுவே தங்குமிடம்.


தங்குமிடத்திலிருந்து பின்புறம் தோட்டங்கள், மற்ற விடுதிகள், மலை.... 

Wifi வசதி, உணவு வசதிகள், Camp Fire வசதிகள், சுத்தமான இடம், மொத்த இடமும் தரைகளில் Carpet என நன்றாகவே இருந்தது. குலூவில் பார்த்த அரசு தங்குமிடத்திற்கும் இந்த இடத்திற்கும், ஹிந்திக்காரர்கள் சொல்வது போல “ஜமீன் ஆஸ்மான் கா ஃபரக் ஹே!” அதாவது பூமிக்கும் வானத்திற்கும் உள்ள வித்தியாசம்! எல்லோரும் உடைமைகளை அப்படியே வைத்து விட்டு விஸ்ராந்தியாக ஆங்காங்கே அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தோம். மாற்றி மாற்றி பாட்டு, ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பாடல்கள், புகைப்பட Session என அமர்க்களமாக இருந்தது. 


இன்னுமொரு படம்....  திகட்டாதோ :)

நடுநடுவே ஸ்னாக்ஸ், டீ என உள்ளே சென்று கொண்டிருந்தது.  உணவும் தங்குமிடத்திலேயே, சுடச்சுட கிடைக்கும் என்பதால் வெளியே செல்ல வேண்டிய அவசியமும் இல்லாமல் போயிற்று. அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடிய படி இருக்க, இரவு உணவுக்கான தேவைகளை கேட்க, தங்குமிடச் சிப்பந்தி வந்தார். அவரவருக்கான உணவுத் தேவைகளைச் சொல்லி அவரை ஒரு குழப்பு குழப்பி மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்தோம்! J பாவம்! சரி அவரை மேலும் குழப்ப வேண்டாமென்று ஒரே ஆளாக அத்தனையும் எழுதிக்கொடுக்க, அரை மணி நேரத்தில் டின்னர் தயாராகும் எனச் சொல்லி வெளியேறினார்! எங்கள் அரட்டைகளும், பாடல்களும் தொடர்ந்தன.

பின்புறத்தில் ஆப்பிள் தோட்டம்......

அதெல்லாம் சரி, தங்குமிட வாடகை பற்றி ஒன்றி சொல்லவே இல்லையே என்று கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன். இத்தனை வசதிகளையும் கொண்ட இடத்தில் வாடகை சற்றே அதிகமாகத் தான் இருக்கும் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். பொதுவாகவே மணாலியில் சீசன் சமயங்களில் Double Bed Room வாடகையே ஆயிரங்களில் இருக்கும். சாதாரண அறைக்கே ஆயிரம் ரூபாய்க்கு மேல் தான். இங்கே ஒரு நாள் தங்க, கட்டணமாக, வரிகளோடு 9700/- என்று இன்றைக்குத் தேடினால் வருகிறது! – ஒரு Double room – மூன்று பேர் தங்கலாம்! சில தளங்களில் 4000 ரூபாய் எனவும் வருகிறது! வசதியைப் பொறுத்து, கூடவோ, குறையவோ இருக்கும். நாங்களோ மொத்தமாக Cottage-ஆக தங்க ஏற்பாடு செய்து இருக்கிறோம். அதனால் எப்படியும் அதிகம் தானே இருக்கும்! என்றாலும் இணையம் வழியே முன்பதிவு செய்யாமல், ஜோதி மூலம் ஏற்பாடு செய்ததில் எங்களுக்குக் குறைவாகவே ஆனது – மொத்த வாடகையாக நாளொன்றுக்கு எட்டாயிரம் ரூபாய்! உணவுக் கட்டணம் தனி. அத்தனை அதிகமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


இன்னும் கொஞ்ச நாள் தான் - மலைக்கு மேலேயும் ஹோட்டல் தான்!

சிறிது நேரத்தில் டின்னர் வர தேவையானவற்றை சாப்பிட்டு அனைவரும் உறங்கச் சென்றனர்.  நிம்மதியான உறக்கம். நீண்ட பயணத்திற்குப் பிறகு சுகமான உறக்கம். அடுத்த நாள் காலையில் புறப்பட்டு மணாலியின் புகழ்பெற்ற இடங்களைப் பார்க்க வேண்டும். நீங்களும் பார்க்க தயார் தானே…. 

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

20 comments:

 1. நானும் தயார் தொடர்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. போய் வந்த நண்பர்கள் சொல்வார்கள்.
  இதுவரை போனதில்லை.
  உங்கள் பதிவு குறை தீர்க்கிறது படங்களால்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 3. >>> மணாலியின் புகழ்பெற்ற இடங்களைப் பார்க்க வேண்டும்.
  நீங்களும் பார்க்கத் தயார் தானே… <<<

  அதைவிட வேறென்ன வேலை!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. வெங்கட் ஜி அருமை!! காட்டேஜ் மிக அழகாக இருக்கிறது. நாங்களும் தொடர்கிறோம்...

  கீதா: காட்டேஜ் வாவ்!! அதிகமில்லை என்றே தோன்றுகிறது ஜி! இத்தனை பேர் தங்கியிருக்கிறீர்கள்!! மணாலியில் என்ன பார்த்தீர்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன்...தொடர்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. தொடர்கிறேன். எந்த மாதம் சென்றீர்கள்? ஆப்பிள், பீச் மரங்களெல்லாம் காண்பிக்கிறீர்கள்.. ஆனால் பழங்கள் இருக்கும் சீசனில் போகலையா? எனக்கும் பழ மரங்கள் சூழ்ந்த இடங்களில் வாழப் பிடிக்கும்....

  இரவுச் சாப்பாடு எப்போதும்போல் ரோடி, சப்ஜியா?

  ReplyDelete
  Replies
  1. மார்ச் மாதம். ஆகஸ்ட் - செப்டம்பர் சமயத்தில் சென்றால் ஆப்பிள் பழங்கள் கிடைக்கும்.

   ரொட்டி, சப்ஜி தான் பெரும்பாலான நேரங்களில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 6. மொத்தவாடகையையும் பகிர்ந்தால் குறைவாகத்தானே இருக்கும் எஞ்சாய் பார்க்காத இடம் பார்க்க முடியுமா தெரியவில்லை. தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 7. தாங்கள் தங்கிய தங்குமிடம் ஒரு நட்சத்திர விடுதி போல் உள்ளது. மணாலியின் புகழ்பெற்ற இடங்களைப் பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. Replies
  1. தொடர்ந்து வருவது அறிந்து மகிழ்ச்சி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

   Delete
 9. ஆகா
  அருமை
  ஆப்பிள் தோட்டம் கண் கொள்ளா காட்சியாகத்தெரிகிறது
  தொடருங்கள்
  நாங்களும் வருகின்றோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. மிக அருமையான படங்கள். அழகிய சூழல். பனிமலை அழகு. தங்கிய வீட்டின் படிகள் கட்டப்பட்டிருக்கும் விதம் பார்க்க ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பயமாக்க்க்க்கிடக்கூஊஊஊஊ:).

  ReplyDelete
  Replies
  1. பயப்பட வேண்டிய அவசியமில்லை. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....