எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, March 28, 2017

ஹனிமூன் தேசம் – மாலையில் மதிய உணவு – சப்பாத்தி ஆலு ஜீரா மற்றும் சில!


ஹனிமூன் தேசம் – பகுதி 7

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


உணவகத்திலிருந்து பனிபடர்ந்த மலைகள்...உணவகத்திலிருந்து பனிபடர்ந்த மலைகள்...
வேறொரு கோணத்தில்....

கம்பளி உடைகள் வாங்கிய பிறகு பயணம் தொடர்ந்தது. மணாலி சென்று சேர்வதற்குள் வழியிலேயே மதிய உணவை, மாலையில் சாப்பிடலாம் என்று தீர்மானித்தோம்! பசி அப்படி! பொதுவாகவே குளிர் பிரதேசங்களில் மூன்று வேளை மட்டுமல்லாது நான்கு ஐந்து வேளை கூட சாப்பிடலாம் என்று தோன்றும் எனக்கு! காய்கறிகளும் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் என்பதாலும், குளிருக்கு இதமாய் சுடச்சுட எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும்! கூடவே வயிற்றைக் காயப் போடுவது நல்லதல்ல!


சாலையோரத்திலேயே ஆப்பிள் மரங்கள்.....


என்னைப் பிடிச்சுருக்கா.......

சாலையோர உணவகம் ஒன்றில் வண்டியை நிறுத்தினார் ஜோதி. சாப்பிடும் இடம் மேற்கூரை வேயப்பட்டிருந்தாலும், நமது பார்வையில் மலையும், அதன் மீது படர்ந்திருக்கும் பனியும், சாலை ஓரங்களில் இருக்கும் ஆப்பிள் மரங்களும் படும்படிதான் அமைந்திருந்தது அந்த உணவகம். அழகிய இடத்தில் நிறைய பூஞ்செடிகள், மரங்கள், புல்வெளிகள் என இருக்க, தூரத்தில் தெரியும் மலையும் காட்சிகளும் ரம்மியமாக இருந்தன. சப்பாத்தி, ஆலூ ஜீரா, ராய்த்தா/தயிர், Dதால் என உணவுகளைச் சொல்லி விட்டு காத்திருக்கையில், உணவகத்தின் அருகே இருந்த காட்சிகளை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன்.
உணவகத்திலிருந்த பூக்கள்...
ஒண்ணு ஆடூ... மற்றது குபானி!

வித்தியாசமான பூக்கள், அப்போது தான் இலைகள் துளிர்க்க ஆரம்பித்திருந்த ஆப்பிள் மரங்கள், ”ஆடூ” என்று அழைக்கப்படும் Peach பழங்களின் பூக்கள் [தமிழில் இந்தப் பழத்தின் பெயர் “குழிப்பேரி” என்று இணையத்தில் பார்த்தேன் – இதுவரை கேள்விப்பட்டதில்லை!], குபானி என அழைக்கப்படும் Apricot பழங்களின் பூக்கள் [இந்தப் பழத்திற்கு தமிழ்ப் பெயர் சருக்கரை பாதாமி! இதுவும் கேள்விப்பட்டதில்லை], வித்தியாசமான பூக்கள், செடிகள் என பலவற்றையும் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன்.  குழுவினரும் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பனிபடர்ந்த மலைகளில் பின்புலமாக இருக்க புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.


அப்படி என்னத்த படம் எடுக்கறேன்! தெரியலையே!


ஒட்டிக்கொண்டிருக்கும் பனித்துளிகளோடு பூக்கள்...


ரிப்போர்ட்டிங் டைம்....  ஜோதி!...

நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, சிலரோ, விஸ்ராந்தியாக அமர்ந்து இதுவரை கிடைத்த அனுபவங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் கண்களை மூடி தூங்க ஆரம்பித்திருந்தார்கள் – உட்கார்ந்தபடியே தான். ஜோதி மனைவியிடம் ரிப்போர்ட்டிங் செய்ய ஆரம்பித்திருந்தார் – வாகனம் செலுத்தும்போது பேச முடியாது என்பதால், பெரும்பாலும் இப்படி சாப்பிடும்போதும், வண்டி ஓட்டாத சமயங்களில் மட்டுமே அலைபேசி மூலம் பேசுவார். அவரையும் மற்றவர்களையும் கிண்டல் செய்வதும், தூங்குபவர்களை புகைப்படம் எடுப்பதும், என காத்திருக்கும் வேளையில் பல விஷயங்கள் செய்து கொண்டிருந்தோம்.கட்டிட வேலை செய்பவரின் குழந்தைகள்...

இந்த உணவகத்தில் இன்னும் ஏதோ கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்க, அங்கே வேலை செய்பவர்கள் தங்களது குழந்தைகளோடு நின்று கொண்டு நாங்கள் புகைப்படம் எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாவம் குழந்தைகள் – அத்தனை குளிரில் குறைவான குளிர்கால உடைகள் அணிந்து, நின்று கொண்டிருப்பதைப் பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது. அக்குழந்தைகள், நான் புகைப்படங்கள் எடுப்பதையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருக்க, குழந்தைகளின் அம்மாவிடம் புகைப்படம் எடுக்கலாமா எனக் கேட்டு, அக்குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்து, அவர்களிடமும் அக்குழந்தைகளின் அம்மாவிடமும் காண்பித்தேன்.


இன்னுமோர் பூ!


இயற்கையை ரசித்தபடியே உணவு உண்ணலாம் வாங்க!...

முன்பே பல முறை சொன்னது போல, இது போன்று சுற்றுலா வந்திருக்கும் இடங்களில் அடுத்தவர்களை புகைப்படம் எடுப்பது சவாலான விஷயம். சிலரை பார்க்கும்போதே புகைப்படம் எடுக்கத் தோன்றினாலும், ஒன்று அவர்களது அனுமதி பெற்று எடுக்க வேண்டும், அல்லது அவர்களுக்குத் தெரியாமல் discreet ஆக எடுக்க வேண்டும்! ஆண்களையும் சிறுவர்களையும் படம் எடுப்பதில் அத்தனை பிரச்சனை இல்லை – பெண்களை – குறிப்பாக முதியவர்களை படம் எடுப்பதில் பிரச்சனை தான்! அதுவும் புகைப்படம் எடுப்பவர் ஆணாக இருந்துவிட்டால் இன்னும் அதிக பிரச்சனை.  பல பயணங்களில் முகத்தில் பல சுருக்கங்களோடு இருக்கும் மூதாட்டிகளை படம் எடுக்க நினைத்தாலும், எடுக்க முடியாமல் திரும்பியதுண்டு!


சாலட்....


ஆலூ ஜீரா....


சிறிய பக்கெட்டில் Dதால்


ஃபுல்கா எனப்படும் சப்பாத்தி!

இதோ வந்து விட்டது. சப்பாத்தி, ஆலு ஜீரா, சாலட், சிறிய பக்கெட்டுகளில் Dதால், என ஒவ்வொன்றாக வர, அனைவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். Simple and delicious உணவு! அனைத்துமே நன்றாக இருந்தது. சப்பாத்தி சுடச் சுட வர தேவையானவற்றைக் கேட்டு சாப்பிட்டு முடித்தோம். இப்பகுதிகளில் Dதால் மிகச் சிறிய பக்கெட்டுகளில் தருகிறார்கள் – தில்லி மற்றும் சுற்றுப் புறங்களில் குழிவான தட்டுகளில் மட்டுமே தந்து பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி பக்கெட்டுகளில் கொடுப்பதை சில இடங்களில் மட்டுமே பார்க்க முடியும்.


Checking time.... 
இவங்க சாப்பிட்டதெல்லாம் நல்லா இருந்ததா....

அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு, தேநீரும் அருந்தி, உணவுக்கு உண்டான காசைக் கொடுத்து விட்டு [அப்படி ஒன்றும் அதிகமில்லை! பதினைந்து பேருக்கு, பரிமாரியவருக்கு உண்டான Tips சேர்த்து 2000 ரூபாய் தான்] அங்கிருந்து மணாலி நோக்கி புறப்பட்டோம். எங்களுக்கு தங்குவதற்கு ஏற்பாடும் ஆகிவிட்டது என்பதை அலைபேசி மூலம் தெரிந்து கொண்டோம். ஒரே இடத்தில் அனைவரும் தங்கப் போகிறோம். அந்த இடம் எப்படி இருக்கப் போகிறது, குலூவில் ஏற்பாடு செய்தது பிடிக்கவில்லை என்று வந்து விட்டோமே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன்.  அந்த இடம் எப்படி இருந்தது என்பது பற்றியும் அடுத்த நிகழ்வுகள் குறித்தும் அடுத்த பதிவில் சொல்கிறேன்!
   
தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

28 comments:

 1. சாலையோரத்தில் ஆப்பிள் மரங்கள் நம்மூர் கருவேல்மரம் மாதிரியோ ஜி ?

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊர் கருவேல மரத்தினால் பயன் இல்லை! ஆப்பிள் மரங்களில் பலன்/பழம் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. அருமையான படங்கள் வெங்கட்ஜி! அனுபவமும் அப்படியே! இல்லையா தொடர்கிறோம்..

  கீதா: படங்கள் வெகு அழகு! நிறைய நினைவுகளை மீட்டெடுத்தது. உணவும் போகும் வழிகளில் நன்றாகவே இருந்தது விலையும் குறைவாகத்தாஅன் இருந்தது. அதுவும் பெரும்பாலான உணவகளில் இயற்கையை ரசித்துக் கொண்டே சாப்பிடலாம்...அப்படித்தான் இருந்தன...பல உணவகங்கள். அருமையான பயணம் தொடர்கிறோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான உணவகங்கள் இயற்கையை ரசித்தபடியே சாப்பிடும் வசதி கொண்டவை. தங்குமிடங்களும் அப்படியே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 3. ஆடு தெரியும், குர்பானி தெரியும் இது ரெண்டும் புதுசு! எட்டிப்பார்க்கும் பச்சையாடைக் குழந்தை அழகு. சரவணபவன் சாம்பார் மாதிரி வாளிகளில் Dதால்!

  ReplyDelete
  Replies
  1. ரெண்டும் புதுசு! :)

   சரவணபவன் சாம்பார் பெரிய பக்கெட்! இது சிறியது! - டம்ளரை விட சற்றே பெரிய அளவில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. இனிய பயணத்தில் தொடர்கின்றேன்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. புதுமையான பூக்கள் பற்றி தெரிந்து கொண்டேன் . படங்கள் அழகு . மிக முக்கியமாக ரொம்ப நாளைக்கப்புறம் ஆலு ஜீரா ..... நாளைக்கே செய்யணும்

  ReplyDelete
  Replies
  1. ஆலூ ஜீரா செய்தாச்சா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 6. அந்தப்பக்கம் ஜீரா ரைஸ்,ஜீரா சலாட்,என ஜீராவை அதிகமாக உணவில் சேர்ப்பது ஏன்?
  உங்கள் பயணக்கட்டுரைகள் எனக்கு மிகவும் பயன் தருவதாக இருக்கின்றது. முடிந்தால் செல்லுமிடங்களின் உணவகங்கள் உண்வின் பெயர், பரிமாறும் பாத்திரங்கள் எனவும் புகைப்படம் எடுத்து பகிருங்கள். எங்களுக்கு நிச்சயம் பயனுடையதாக இருக்கும்.

  மார்ச் மாதம் முதல் எங்கள் ஹோட்டலுக்கு நார்த் இந்தியன் ரூரிஸ்ட் குருப் எங்கள் ஹோட்டலுக்கு வரும் புரோஜெக்ட் எடுத்திருக்கின்றோம். அதனால் அவர்கள் உணவுப்பழக்கங்கள் குறித்து அதிகம் அறியும் தேவைகள் எனக்குள்ளது. இப்போது நார்த் இந்தியன் குக் மற்றும் சர்வர் சொல்வதை வைத்து நடைமுறைப்படுத்துகின்றேன்.

  சிறிய பக்கெட்டில் ப்தா’ ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தானே தருவார்களா? மொத்தமாக அனைவருக்கும் சேர்த்து தருவார்களா?

  டோலோ எனும் உணவு எதில் தயாரிப்பார்கள்?

  ReplyDelete
  Replies
  1. பக்கெட் சிறிய அளவு தான். ஒருவர் அல்லது இரண்டு பேர் அதிலிருந்து சாப்பிடலாம்! எங்கள் குழுவினருக்கு ஆறு அல்லது ஏழு Dதால் வாங்கியதாக நினைவு. அத்தனையும் குட்டி குட்டி பக்கெட்டுகளில்.

   உணவு பற்றிய படங்கள், விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். டோலோ என்பது சைனீஸ் உணவு. எப்படி தயாரிப்பார்கள் என்பது தெரியாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
  2. டோலோ வை தான் வரும் நார்த் இந்தியர்கள் சட்டியோடு தூக்கி போய் சாப்பிடுகின்றார்கள். அதனால் கேட்டேன்.

   Delete
  3. பெரும்பாலான வடக்கிந்தியர்களுக்கு சைனீஸ் உணவு பிடித்தமானது. மோமோஸ்க்கு நல்ல டிமாண்ட் இங்கே!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 7. உணவணத்தினை குறித்த வெளித்தோற்றம் குறித்த வர்ணிப்பும் குழந்தைகள் புகைப்படமும் அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 8. ஒவ்வொரு படமும் அழகோ அழகு ஜி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. கொடுத்து வைத்தவர் நீங்கள். நாங்கள் மணாலி சென்றபோது அங்கிருந்த ஒரு கடையில் south indian food என்று பார்த்துவிட்டு தோசை வாங்கிச் சாப்பிட்டோம். சாம்பார் சகிக்கவில்லை. சட்னி பிடித்தது. துரதிர்ஷ்டவசமாக, சட்னிக்கும் என்னைப் பிடித்திருந்தது. ஜலதோஷம், வாந்தி, குளிர்ஜுரம் என்று மூன்று நாட்கள் என்னை ஓட்டலிலேயே கட்டிப் போட்டுவிட்டது. பயணத்தை ரசிக்கமுடியாமல் போய்விட்டது.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. வட இந்தியாவில் தென்னிந்திய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது! பல இடங்களில் வாயில் வைக்க முடியாத அளவு கேவலமாக இருக்கும். உடல் நலத்திற்கும் கேடு..... செய்த சட்னியை பத்து நாட்களுக்குக் கூட Deep Freezer-ல் வைத்திருந்து தருவார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   Delete
 10. அருமையான படங்கள். ஒருவேளை ஆப்பிள் காய்க்கும் காலமாக இருந்திருந்தால் அந்த ஆப்பிள் மரங்கள் இன்னும் அழகாய் இருந்திருக்கும். தொடர்கிறேன் அடுத்த இடம் பற்றிய அறிய.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு விதமான பழங்கள் இங்கே. ஆப்பிள்கள் காய்த்திருக்கும் பருவத்தில் அத்தனை பனிப்பொழிவு இருக்காது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. ஆஹா மிக அருமையான இடம்.. பார்க்க மனதுக்கு சாந்தம் கொடுக்குது, அந்தக் கடசியில் இருக்கும் ரோஜா போன்ற பிங் பூ, இங்கு எங்கள் வீட்டிலும் இருக்கு, இப்போதான் பூக்கும் சீசன், நிறைய மொட்டுக்கள் வந்திருக்குது, பூத்ததும் படங்கள் போடுறேன்...

  வோட்டுப் போட்டிட்டேன்ன் கையைப் பாருங்கோ மை இருக்கு:).

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் வாக்கு - அட மை இருக்கா! நல்லது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா....

   Delete
 12. பனித்துளியுடன் கூடிய மலர் அழகோ அழகு. எப்படி இம்ம்மாதிரி புகைப்படங்கள் எடுக்கிறீர்கள் ரசனையோ ரசனை

  ReplyDelete
  Replies
  1. எப்படி எடுக்கிறேன்? காமிரா வைத்து தான்! :) சில படங்கள் ரொம்பவே அழகாய் அமைந்து விடுவதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 13. ஆலு ஜீரா, அயோத்திப் பயணத்தை நினைவூட்டியது. பெரும்பாலும் மலைப்பிரதேச ஓட்டல்களில் மட்டும் வாளியில் தால் தருவாங்க போல! நாங்க பத்ரிநாத் போனப்போவும் தேவப் பிரயாக், கர்ணப் பிரயாக் ஆகிய இடங்களில் இப்படித் தான் கொடுத்தாங்க.

  ReplyDelete
  Replies
  1. குஜராத்தில் கூட இப்படி பக்கெட்டில் தால் தந்தார்கள். பெரும்பாலான வட இந்திய நகரங்களில் ஆலு ஜீரா தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....