ஞாயிறு, 31 மே, 2026

காஃபி வித் கிட்டு - 241 - சம்சா எனும் சமோசா - Pakshi Jal Setu - யார் உண்மையான வாரிசு - Bholenath - ஐந்து வயது - Crispy Potato Rings - பயணங்களில் அலுப்பு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் தகவல் :  சம்சா எனும் சமோசா



சமோசாவும் சம்சாவும்...

சம்சா, சமோசா என இரண்டு விதமாக அழைக்கப்படும் இந்த சிற்றுண்டி, பெயரில் மட்டுமல்ல, உள்ளே வைக்கப்படும் விஷயத்திலும் வித்தியாசம் தான்.  வட நாட்டில் சமோசா, இங்கே சம்சா! விழுப்புரம் இரயில் நிலையத்தில் முன்பு தட்டில் சம்சாக்களைக் கொட்டி விற்றுக் கொண்டிருப்பார்கள் - தூசியும் படர்ந்து இருந்தால் கூட அந்த சம்சாவின் மீது மோகம் கண்ட பலர் வாங்கிச் சாப்பிடுவது பார்த்திருக்கிறேன். 



சம்சா விற்பனை தற்போது...

இந்த வாரம் சென்னைக்கு ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பிய போது விழுப்புரம் இரயில் நிலையத்தில் விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது அதில் கவனம் சென்றது. யாரோ ஒரு புண்ணியவான் செய்த வேலையால் இப்போது சம்சாக்கள் அழகிய பாக்கெட்டில் வருகின்றன - இப்போதே சொல்லி விடுகிறேன் - அவற்றின் சுவை குறித்தோ, அது எப்போது செய்யப்பட்டது என்பதோ எனக்குத் தெரியாது. ஆனால் அழகாய் Pack செய்யப்பட்டு, தூசிகள் இல்லாமல் வருகிறது. பாக்கெட் 25 ரூபாயாம். விற்பது சம்சாவாக இருந்தாலும், பாக்கெட்டில் சமோசா என்றே எழுதி இருக்கிறது.  இரயில் விழுப்புரம் நிலையத்தில் நின்றபோது சம்சா விற்றுக்கொண்டிருந்த பெரியவரின் அருகே அமர்ந்து எடுத்த படம் - அவருக்குத் தெரியாமல்! முதியவர், உழைப்பாளி!  பணம் கொடுத்து வாங்கலாம் என்பதோடு, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, QR Code Scan செய்தும் சம்சா வாங்கிக் கொள்ளலாம் - சில்லறைப் பிரச்சனை இல்லை! 


******

 

இந்த வாரத்தின் எண்ணம் : Pakshi Jal Setu



கோடையின் கொடுமை அதிகமாக இருக்கும் இந்த நாட்களில் மனிதர்களே திண்டாடும் போது பறவைகள் என்ன செய்யும்? தண்ணீர் இன்றி தவிக்கும் பறவைகளுக்கு உதவும் வகையாக குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத் நகரில் தற்போது ஏற்பாடு செய்திருக்கும் Pakshi Jal Setu மிகவும் சிறப்பான விஷயமாகத் தெரிகிறது.  அப்படி என்ன விஷயம் இது?  தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள சுட்டி வழி சென்று ஆங்கிலத்தில் இருக்கும் தகவலைப் படித்துப் பாருங்களேன்.


Solar-powered ‘Pakshi Jal Setu’ offers lifeline to birds amid scorching heat | Surat News - The Times of India


******


பழைய நினைப்புடா பேராண்டி : யார் உண்மையான வாரிசு


2018-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - யார் உண்மையான வாரிசு - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


”நிறுத்துங்க!”


”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்க்கிறார்கள்.


ஒரு வீட்டில் துக்க நிகழ்வு. இறந்தவரின் உடலை இடுகாடு வரை கொண்டு சென்று அங்கே ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தான் இப்படி ஒரு மனிதர் வந்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்று சொல்கிறார். இறந்தவரின் உடலை வைத்திருக்கும் கட்டிலைப் பிடித்துக் கொண்டு முடிவு தெரியும் வரை விட மாட்டேன் என்கிறார். இறந்து போனவர் எனக்கு 45 லட்சம் தர வேண்டும். அதைக் கொடுக்கும் வரை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டேன் என்று சொல்கிறார். இறந்து போனவருக்கு மூன்று மகன்கள். அவர்கள் அனைவரும் அந்த மனிதரைப் பார்க்கிறார்கள். அவர் இறந்து போன தங்கள் அப்பாவின் நண்பர் தான். இருவருக்கும் இப்படி கொடுக்கல் வாங்கல் உண்டு என்றாலும் 45 லட்சம்….


மூன்று மகன்களும் அவரிடம் பேசுகிறார்கள். எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக் கொள்ளலாம், இப்போதைக்கு அவரது உடலை அடக்கம் செய்ய விடுங்கள். இறந்தவரின் உடலை இப்படி நீண்ட நேரம் வைத்திருப்பது நல்லதல்ல. நீங்கள் சொல்வது போல, உங்களுக்கு 45 லட்சம் கடன் தர வேண்டும் என எங்கள் அப்பா எங்களிடம் சொல்லவே இல்லை. ஏதோ ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்றால் பரவாயில்லை. இப்படி 45 லட்சம் கடன் நிச்சயம் வாங்கி இருக்க மாட்டார். என்னதான் வீடு வாசல், பணம் என இருந்தாலும் அதை எங்களால் உங்களுக்கு விட்டுத் தர முடியாது. நீங்கள் பணம் கொடுத்ததற்கு என்ன சாட்சி என்றெல்லாம் தகராறு செய்கிறார்கள். ஊரில் உள்ள பெரியவர்களும் சொல்லிப் பார்த்தாலும், கேட்பதற்கு யாருமே தயாராக இல்லை.


இப்படி இடுகாட்டில் நடந்து கொண்டிருக்கும் விஷயம் இறந்தவரின் வீட்டில் இருக்கும் அவரது மகளுக்கும் தெரிகிறது. மகன்கள் இங்கே சண்டை போட்டுக் கொண்டிருக்க, தனது அப்பாவின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இப்படி ஒரு நிலையா என வருந்தி, தன்னிடம் உள்ள அனைத்து நகைகளையும், பணத்தையும் கொடுத்து, அங்கே வந்திருக்கும் அப்பாவின் நண்பரிடம் சொல்லுங்கள், “இந்த நகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் – கிட்டத்தட்ட பத்து லட்சம் பெறும். மீதிப் பணமும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன் என்று உறுதியாகச் சொல்லுங்கள் – இப்போது இறந்த என் அப்பாவின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கச் சொல்லுங்கள்” என தகவல் அனுப்புகிறார்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் வாசகங்கள் : Bholenath


சமீபத்தில் ஹிமாச்சலப் பிரதேசம் சென்ற போது அங்கே சில வாகனங்களில் மற்றும் கடைகளில் எழுதி இருந்த வாசகங்கள், தலைப்புகள் கண்களைக் கவர்ந்தன.  ஹிமாச்சலப் பிரதேசம் தேவ்/தேவி பூமி என்றே அழைக்கப்படுகிறது.  இங்கே எப்படி சிவன் இஷ்ட தெய்வமோ அப்படியே ஹிமாச்சலிலும் கூட சிவன், தேவி, ஹனுமன் ஆகியோருக்கு நிறையவே பக்தர்கள் உண்டு. சிவபெருமானை Bholenath என்றே வடக்கில் அழைப்பதுண்டு. Bholenath உடன் இருந்தால் போதும், எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடிச் சொல்வார்.  அப்படி ஒரு பக்தர் தனது வாகனத்தின் பின்புறத்தில் இப்படி எழுதி வைத்திருந்தார் - Government of Bholenath!  சரியாகத் தானே சொல்லி இருக்கிறது! இங்கே நடப்பது அனைத்தும் அவன் அரசாட்சி அல்லவா!  


சரி, இந்த வாரத்தின் ஒரு புதிராக ஒரு வாசகம் - இது ஒரு உணவகத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் - THAKUR 22DA DHABA - இந்த வாசகம் சொல்ல வரும் விஷயம் என்ன - தெரிந்தால் சொல்லுங்களேன். யாரும் பதில் சொல்லவில்லை எனில் பின்னூட்டத்தில் சொல்கிறேன். 


******


இந்த வாரத்தின் விளம்பரம் - ஐந்து வயது :


இந்தியாவின் பல பகுதிகளில் Infant Mortality மிக மிக அதிகம். காரணம் பல உண்டு.  அதனைச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட ஒரு சோப் விளம்பரம் - லைஃப் பாய் சோப் விளம்பரம் - கிட்டத்தட்ட 15 வருடங்கள் முன்னர் எடுக்கப்பட்ட விளம்பரமாக இருக்கலாம் - ஆனால் ஒரு சிறு காணொளி மூலம் சிறப்பான ஒரு விஷயத்தினைச் சொல்லி இருக்கிறார்கள். பாருங்களேன்.


******


இந்த வாரத்தின் உணவு :  Crispy Potato Rings



உருளைக் கிழங்கு - வடக்கே பிரதானமான காய்கறிகளில் ஒன்று.  தினம் தினம் ஏதோ ஒரு விதத்தில் உருளையைச் சேர்த்து விடுகிறார்கள் உணவில். சமீபத்து ஹிமாச்சலப் பிரதேசப் பயணத்தில் பத்து நாட்களும் ஏதோ ஒரு வகையில் உருளை சாப்பிட வேண்டியிருந்தது.  உருளையப் பார்த்தாலே கொஞ்சம் வெறுப்பு கூட என்னுடன் பயணித்த ஒரு நண்பருக்கு வந்ததாகச் சொன்னார்.  ஆனால் வடக்கத்தி நபர்களையும் உருளையையும் நிச்சயம் பிரித்துவிட முடியாது! அப்படி அவர்களோடு ஒன்றிவிட்ட ஒரு விஷயம் இந்த உருளை.  உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான குறிப்பு தந்திருக்கிறார் கீழ்க்கண்ட காணொளியில்! சில நாட்கள் முன்னதாகவே இல்லத்தரசிக்கு இந்தக் காணொளியை அனுப்பி இருந்தேன் வாட்ஸப் வழி! இன்னும் சுவைக்கக் கிடைக்கவில்லை! 🙂 அதனால் காணொளி வழி பார்த்து ரசித்ததுடன் சரி! வேறு யாரேனும் முயற்சித்து சுவைத்துப் பாருங்களேன்!

******


இந்த வாரத்தின் எண்ணங்கள் - பயணங்களில் அலுப்பு :


வியாழன் அன்று புறப்பட்டுச் சென்று, வெள்ளி அன்று இரவு திரும்பும் விதமாக ஒரு சென்னைப் பயணம் இந்த வாரத்தில்! என்னதான் பயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்றாலும் தற்போது இந்த மாதிரி தமிழகத்தில் இரயில்களில் பயணம் செய்ய கொஞ்சம் அலுப்பு வருகிறது! மக்கள் ரீல்ஸ், அலைபேசி மோகத்தில் வீழ்ந்திருப்பது நன்றாகவே தெரிகிறது.  ஐந்து, ஐந்தரை மணி நேர பயணம் முழுவதுமே ரீல்ஸ் பார்ப்பதில் செலவிடும் பலரை இந்தப் பயணங்களில் பார்க்க முடிகிறது - சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் சத்தமாக ரீல்ஸ் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். முன்பெல்லாம் இரயில் பயணங்களில், முன்பின் தெரியாத சக பயணிகளுடன் சில வார்த்தைகளேனும் பேசுவார்கள். கொஞ்சம் பழகிவிட்டால், முகவரி, தொடர்பு எண் என எல்லாவற்றையும் பரிமாறிக் கொண்டவர்கள் கூட உண்டு.  அந்த அளவிற்கு இருக்கத் தேவையில்லை என்றாலும், கொஞ்சம் கூட தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள்.  நேற்று ஒரு பயணி, சக பயணியைத் தொட்டு கூப்பிட்டு, பரிசோதகர் அழைக்கிறார் என்று சொன்னபோது தொட்டுக் கூப்பிட்டவரை முறைத்துப் பார்த்தார் - அவர் அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தபோது தொல்லை தந்து விட்டாராம்!  எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை. இந்த மாதிரி மனிதர்களை பார்க்கும்போது பயணங்களில் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது எனக்கு! உங்கள் அனுபவங்கள் என்ன, சொல்லுங்களேன்!


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

31 மே 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....