வியாழன், 14 மே, 2026

ஏப்ரல் மாதத்தில்… - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய பதிவு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட சந்த்ரஷீலா பனிச்சிகரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



ஏப்ரல் மாதத்தில்…! - 30.04.2026 : 





திருவரங்கம் அனலாய் தகித்துக் கொண்டிருக்கிறது! ஒரு மழை அடித்து பெய்து பூமியின் தகிப்பை குறைக்க கூடாதா! குளிர்ந்த காற்று வீசக்கூடாதா! என்று ஏங்குகிறது மனம்! 


மழையே மழையே வா வா!

மண்ணை நனைக்க வா வா!


ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் Dump என்ற பெயரில் phone gallery ல் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதிலும் ஒரு ஆனந்தம் இருக்கத் தான் செய்கிறது! அப்படி ஏப்ரல் மாதத்தில் என்ன தான் செய்தேன் என்று பார்த்ததில் சில விஷயங்கள் கண்ணுக்கு தென்பட்டன! அவை ஒவ்வொன்றையும் பற்றி சில வரிகள் இங்கே…


ஜோதி!


திருச்சியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் வாங்கிய 48 பக்கங்களே கொண்ட மிகச்சிறிய புத்தகம் இது! புஸ்தகாவின் வெளியீடு! வாரம் ஒரு புத்தகமாக வாசித்து வந்ததில் சுஜாதா சாரின் எழுத்தில் உருவான இந்தக் கதையையும் சில நாட்களுக்கு முன்பு வாசித்தேன்! 


ஒரு வீட்டில் சடலமாக கிடக்கும் பெண்ணைச் சுற்றி பயணிக்கிறது கதை! அவள் வாழ்வில் நிகழ்ந்தது என்ன! எதனால் இந்த முடிவுக்கு வந்தாள்! இந்த நிலைக்கு யார் அவளை தள்ளியிருக்கக்கூடும்! என்ற கோணத்தில் இருவிதமான அனுமானங்களுக்கு நம்மை ஆட்படுத்தி முடிவை நம்மிடமே தருவதாக இருந்தது! வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்!


குல்ஃபி!


அடிக்கிற வெயிலுக்கு ஜில்லென்று ஏதாவது சாப்பிட்டால் நன்றாகத் தானே இருக்கும்! அப்படி நினைத்து செய்தது தான் இந்த குல்ஃபி! வீட்டினருக்கும் மிகவும் பிடித்திருந்தது! சட்டென்றும் சுலபமாக செய்து விடலாம்!


ரம்மியமான சாகுந்தலம்!


பண்புடன் மின்னிதழில் வெளியான என்னுடைய மொழிபெயர்ப்பு கட்டுரை! மகாகவி காளிதாசர் இயற்றிய அமரகாவியம் தான் சாகுந்தலம்! அதன் அழகை ரசித்து மொழிபெயர்த்து கட்டுரையாக எழுதியதை பார்த்த என் ஆசிரியர் உள்பட எங்கள் வகுப்பிலுள்ள அனைவருமே பாராட்டினர்! எழுதியதை வாசித்தது மட்டுமல்லாமல் ஒருநாள் வகுப்பிலும் என் வார்த்தைகளிலேயே குறிப்பிட்ட ஒரு பகுதியைப் பற்றி சொல்லவும் வைத்தார்கள்!


வண்ணங்களின் சேர்க்கை!


மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வண்ணங்களின் சேர்க்கையில் உருவாகும் அழகான மண்டலா ஆர்ட்டுக்கு ஒரு பங்கு இருக்கிறது எனலாம்! மகள் அவளே வரைந்து வண்ணம் சேர்ப்பாள்! நான் வண்ணம் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்!


வாக்குரிமை!


இம்முறை என்னவரும் இங்கே இருந்ததால் நாங்கள் மூவரும் எங்கள் வாக்குரிமையை செவ்வனே செய்து விட்டு வந்தோம்! நல்லதே நடக்கட்டும்! நல்லதோர் தலைமை உருவாகட்டும்!


பூச்சாற்று உற்சவம்!


அரங்கனுக்கு வருடம் முழுவதுமே இங்கு விழா தான்! இந்தக் கோடையில் கோவில் மணல்வெளியில் பூச்சாற்று உற்சவம் நடந்து கொண்டிருக்க, வண்ணமலர்கள் சூழ அரங்கனின் அழகை பார்த்து ரசித்து வந்தோம்! 


நண்பர்களின் வருகை!


டெல்லியில் நாங்கள் வசித்த பகுதியில் இருந்த நண்பர்களுடன் அங்கே அவ்வப்போது சந்தித்துக் கொள்வதும், அரட்டை அடிப்பதும், ஒன்றாக சமைத்து உண்டு மகிழ்வதும் என இருந்த நாட்கள் பசுமையானவை! பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் அப்படியொரு தருணம் நிகழ்ந்தது! 


டைரி சகா!


வசீகரமான குரலுக்குச் சொந்தக்காரர்! ‘மரணத்தைப் பற்றி பேசிய ஒரு ஷோவில் கூட இவர், பட்டினத்தாரின் பாடலை குறிப்பிட்டுச் சொல்லி, டைரில பேசிட்டு இருக்கும் போதே நான் மரணிக்கணும்னு நினைப்பேன்! ஆனா வரப்போ தானே வரும்! இருக்கும் வரை தான் சகா! மரணித்த பின் பிணம் தான்! அடுத்த நிமிடம் சீக்கிரம் பாடியை எடுங்கன்னு தான் சொல்லுவாங்க! என்று சொல்லியுள்ள ஆடியோவை கேட்க நேரிட்டது! 


புற்றுநோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார் என்றாலும் அவர் கண்களிலும் முகத்திலும் அத்தனை உற்சாகம் இருந்திருக்கிறது!! 51 வயது தான் என்றாலும் தன் இறுதிக்கு முன் ஒரு குடும்பத் தலைவனாக தன் கடமைகளை எல்லாம் நல்லமுறையில் நிறைவேற்றி, சமுதாயத்திலும் பலரின் இதயத்திலும் மறக்க இயலாத மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது! சகா எனும் சகாப்தம்!


********


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

14 மே 2026



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....