புதன், 20 மே, 2026

நடை நல்லது - Weaver Ants - பலாப்பழ வாசனை - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதை எழுதுங்கள் - பரிசு பெறுங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


Weaver Ants - 04-05-2026 : 







பல வருடங்களுக்குப் பிறகு சிகப்பு கட்டை எறும்பு என்று நாங்கள் அழைத்த Weaver Ants கூடு ஒன்றினை காலை நேர நடையின் போது பார்க்க முடிந்தது.  பொதுவாக இந்த வகை எறும்புகள் தரையில்/மண்ணை நோண்டி தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்வதில்லை.  இவை பெரிய இலைகள் கொண்ட மரங்கள் மீது தான் கூடுகளைக் கட்டுகின்றன.  ஒரு குழுவாக வேலை செய்யும் இந்த எறும்புகள் இலைகளைப் பிடித்துக் கொள்ள அதனை இணைக்க ஒரு வித பசையை வெளிப்படுத்தி - Glue Gun போல அதன் மூலம் அந்த இலைகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டச் செய்து, அதனுள்ளே தங்களது முட்டைகளை வைத்து இனப்பெருக்கம் செய்கின்றன.  ஒரு கூட்டின் உள்ளே நூற்றுக்கணக்கில் எறும்புகள் இருக்கும்.  கை தவறி அந்தக் கூட்டின் மீது நம் கைகளோ, கால்களோ பட்டுவிட்டால் பல முனைத் தாக்குதல் நடத்திவிடும்! 


நெய்வேலி நகரில் இருந்தவரை எங்கள் வீட்டில் ஒரு நாட்டு மாங்காய் வகையின் மரம் இருந்தது.  அதன் மீது ஒரு பெரிய ஓட்டை போன்ற வடிவம் இருக்கும் - அதனால் நாங்கள் அதனை ஓட்டை மரம் என்றே அழைப்போம்.  சிறிது சிறிதான மாங்காய் தான் காய்க்கும் - ஆனால் தோல் பச்சையாக இருந்தாலும், பழுத்து விடும். பல சமயங்களில் மரத்திலேயே பழுத்து, அணில்கள், பறவைகள் போன்றவை கடித்துவிடும்.  அதனால் அவ்வப்போது மரத்தில் ஏறி காய்களை பறித்து விடுவது வழக்கம்.  வழமை போலவே எங்கள் வீட்டின் எந்த மரமாக இருந்தாலும், அதன் மீது ஏறுவது என் வேலை.  இந்த மரத்திலும் ஏறி நிறைய பழங்களை பறித்து விடுவேன். அப்படி அந்த மரத்தில் ஏறும்போதெல்லாம் கை, கால்களில் விபூதியைப் பூசிக்கொண்டு ஏறுவது வழக்கம் - ஏனெனில் அந்த மரத்தில் இந்த வகை சிவப்பு எறும்புகளின் கூடுகள் நிறைய இடங்களில் இருக்கும். கொஞ்சம் கவனப் பிசகாக இருந்தாலும், கடித்துக் குதறிவிடும். இறங்குவதற்குள் ஆங்காங்கே தடிப்புகள் தோன்றி உடல் முழுக்க மீட்டி, வாசிக்க ஆரம்பித்து விடுவோம்!  விபூதி பூசிக்கொண்டு ஏறினால் எறும்புகள் கடிக்காது என்று அம்மா சொல்வார்!


பல வருடங்களுக்குப் பிறகு அந்த சிவப்பு எறும்புகளையும் அதன் கூட்டையும் காலை நேர நடைப்பயிற்சியில் பார்க்க முடிந்தது.  ஒரு தேர்ந்த Architect போல தனது கூட்டை வடிவமைத்து, அந்த வடிவத்தினை இலைகள் கொண்டு உருவாக்குவது சுலபமான வேலையா என்ன? எத்தனை திறமை இந்த எறும்புகளிடம் என்று எப்போதும் வியப்பதுண்டு. எல்லா ஜீவராசிகளிடமும் இப்படியான பல திறமைகள் - மனிதர்கள் மட்டுமே திறமையை சரியான விதத்தில் பயன்படுத்துவது இல்லையோ என்று எனக்குத் தோன்றும்.  இது போன்ற கூடுகளை இல்லத்தரசி பார்த்ததில்லை என்பதால் அவரிடம் அதனைக் காண்பித்து, கூடவே எனது சிறு வயது அனுபவங்களையும் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தேன்! எத்தனை விதங்களில் உயிர்களைப் படைத்தாய் இறைவா என்று தோன்றியது!  நடைப்பயிற்சியில் பார்க்கும் அனைத்தும் ஏதோ ஒரு வித நினைவுகளைத் தூண்டுவதாகவோ, ஒரு மனிதரை நினைவூட்டுவதாகவோ அமைந்து விடுகிறது.  நடைப் பயிற்சி நடுநடுவே செல்ல முடியாமல் போவது தான் கொஞ்சம் வேதனை தருவதாக இருக்கிறது.  தொடர்ந்து நடக்கத்தான் ஆசை - பார்க்கலாம்! 


*******


பலாப்பழ வாசனை - 05-05-2026 :





நடைப்பயணத்தில் மேலூர் கிராமம் நோக்கிச் செல்லும்போது நடுநடுவே தோப்புகள் உண்டு.  தென்னை, மா, பலா, கொய்யா என பலவித மரங்கள் அந்த தோப்புகளில் உண்டு.  தென்னை எப்போதும் பார்க்க முடியும் என்றால், மா, பலா போன்றவற்றை அதற்கான பருவங்களில் மட்டுமே பார்க்க முடியும்.  இந்தப் பருவத்தில் இரண்டுமே தோப்பில் உள்ள மரங்களில் காய்த்துத் தொங்குகின்றன.  சில பலா மரங்களில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பலாக்கனிகள் இருக்கின்றன.  தோப்புக்காரர் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் மரத்திலேயே கூட இந்தப் பலாப்பழங்கள் பழுத்து விடுவதுண்டு.  காலை நேரம் நடந்து செல்லும்போது தோப்பின் அருகே வந்ததும் நல்ல பழுத்த பலாப்பழத்தின் வாசனை வர அப்படியே நாவில் நீர் சுரக்க ஆரம்பித்து விடுகிறது.  என்னதான் நெய்வேலி நகர வாழ்க்கையில் நாங்கள் சாப்பிட்ட பலாப்பழங்களுக்கு அளவே இல்லை என்றாலும், அந்த வாசம் வந்ததும் பலாப்பழம் சாப்பிட ஆசை வந்து விடுகிறது. 


காலை நேரம் என்பதால் தோட்டக்காரர் அங்கே இருக்கமாட்டார். இருந்தால் அவரிடம் ஒரு பழம் விலைக்கு வாங்கி வரலாம் என்று கூடத் தோன்றும். ஆனால் ஒரு முழு பழம் வாங்கினால், நாங்கள் மூவர் எத்தனை சுளைகள் சாப்பிட்டு விட முடியும். என்னதான் நண்பர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் கொடுக்கலாம் என்றாலும், இங்கே இருக்கும் அக்கம் பக்கத்தினர் யாரிடமும் பேச்சுக் கொடுப்பது கூட இல்லை. நாமே சென்று பேசினால் கூட அதனை அவர்கள் விரும்புவது இல்லை. விட்டு விலகியே இருக்கிறார்கள்.  என் இயல்பிற்கு இப்படியான மனிதர்கள் ஒத்து வரமாட்டார்கள்.  சரி விருப்பம் இல்லையெனில் விட்டுவிடுவோம் என்று நானும் நகர்ந்து விடுகிறேன். தில்லியில் இருந்தவரை என் நட்பு வட்டம் மிகமிகப் பெரியது.  எல்லோரையும் நட்பு வட்டத்தில் வைத்திருப்பதோடு, அனைவருடனும் பழகுவேன். அலுவலகத்தில் கூட அப்படித்தான்! நண்பர்கள் சூழ தான் இருக்க விருப்பமாக இருக்கும்!  அது சரி பலாப்பழத்திலிருந்து விடுபட்டு வேறு எங்கேயோ செல்கிறது பதிவு!  பலாப்பழம், அதன் கொட்டை என ஒவ்வொன்றும் பயன்படுத்திவிடுவோம். மீதி இருக்கும் சக்கைகளை மாட்டுக்குப் போட்டுவிடுவோம்.  அதிலும் விதம் விதமான வகைகளில் அந்த கொட்டையை பயன்படுத்தி இருக்கிறோம். 


இப்போதைக்கு சந்தையில் விற்கும் பலாச்சுளைகளை வாங்கி சாப்பிட்டு திருப்திபட வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அலுவலகத்தில் நண்பர் ஒருவர், வீட்டில் காய்த்தது என்று பத்து சுளைகள் கொண்டு வந்து எல்லோருமாக பகிர்ந்து உண்டோம்.  இப்போதைக்கு அது போதும் என்று தோன்றுகிறது.  பலாச்சுளை - தில்லியில் பழுத்த பழங்கள் கிடைக்காது என்பதால் அங்கே சாப்பிட வழியில்லாமல் இருந்தது.  இங்கே வந்ததால் பழமாகவும் கிடைக்கிறது - அதனால் அடிக்கடி சாப்பிடலாம்! நெய்வேலியில் இருக்கும் நண்பர் ஒருவர் கூட, “இங்கே வாயேன் - வந்து எங்களையும் பார்த்துட்டு, ஒரு பலாப்பழம் எடுத்துட்டுப் போவியாம்!” என்றார்!  பலாப்பழத்திற்காக நெய்வேலி போக வேண்டாம் என்பதால் போகவில்லை! "இந்த நாக்கு இருக்கிறதே, நாக்கு!" என்று அதனை அடக்கி வைத்து, எந்த ஒரு சுவைக்கும் அடிமையாகக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்!  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

20 மே 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....