சனி, 23 மே, 2026

காஃபி வித் கிட்டு - 240 - Wasteland - Vitiligo - பீடி குடிக்கும் பாட்டி - தலைவா - ஒரு ரூபாய் - ஆமைக்கென்று ஒரு தினம் - Solo Trip to Sikkim


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சித்ரா பௌர்ணமி - நிலவொளியில் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ரசித்த இற்றை:  The Wasteland


முகநூலில் உலாவுவது என்பது பல சமயங்களில் நேர விரயம் மட்டுமே.  அதுவும் தொடர்ந்து ரீல்ஸ் பார்த்து நேரத்தினை வீணாக்குவது சரியல்ல! நான் ரீல்ஸ் தொடர்ந்து பார்த்தால், அம்மாவும், பெண்ணுமாகச் சேர்ந்து கொண்டு என்னை “ரீல்ஸ் ராஜா” என்று கிண்டல் செய்கிறார்கள்.  இருக்கலாம்! அது ஒரு தேவையற்ற பழக்கமே! இது குறித்து முகநூல் பிரபலமான திரு போகன் சங்கர் அவர்கள் இப்படி ஒரு இடுகையை எழுதி இருக்கிறார்! சரியாகத் தான் தலைப்பிட்டுருக்கிறார் - The Wasteland - என்று.  என்ன எழுதி இருக்கிறார்? படியுங்களேன்!  திரு போகன் சங்கர் அவர்களுக்கு நன்றியுடன்!


The Wasteland - போகன் சங்கர் :


சோசியல் மீடியாவில் நேரம் போவதே தெரிவதில்லை. ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் போல் போய் விடுகிறது. போன பிறகு காலத்தை வீணாகக் கழித்து விட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது. பிரச்சனை அது இல்லை. நம்முடைய மூளை அத்தோடு நிற்பதில்லை. சோசியல் மீடியாவுக்கும் முன்னால் நாம் காலத்தை வீணடித்த ஒவ்வொரு விஷயமாக நம்முன் எடுத்துப் போடுகிறது. சும்மா எந்தப் பலாபலனும் இல்லாமல் அந்த சந்தான லட்சுமி பின்னால் மூன்று வருடம் திரிந்து கொண்டிருக்கவில்லையா! இந்திய கிரிக்கெட்டில் சேர்ந்து அடுத்த ஸ்ரீகாந்த் ஆகப்போகிறேன் என்று நினைத்துக் கொண்டு நான்கு வருடங்கள் பாளையங்கோட்டை வெயிலில் நின்று கருத்துப் போகவில்லையா!சிவில் சர்வீஸுக்குப் படிக்கிறேன் என்று முழுதாய் இரண்டு வருடத்தை ஒழித்துக் கட்டவில்லையா! சாமியாராகப் போகிறேன் என்று  10 வருடம் கோவில், மடம், சுடுகாடு என்று திரியவில்லையா! கிடார் படிக்கிறேன் என்று  கிணற்றில் போட்ட இரண்டு வருடங்கள்?என்றெல்லாம் நினைவுகளை எடுத்து எடுத்துப் போடுகிறது. யோசிக்க யோசிக்க நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே வீணடித்து விட்டோம் என்றுதான் தோன்றுகிறது. மேலும் துக்கமாகி விடுகிறது. அந்தத் துக்கத்தை மறக்க இன்னும் ஒருமணி நேரம் ரீல்ஸ் பார்ப்பதைத் தவிர இப்போது வேறு வழியில்லை.


******

 

இந்த வாரத்தின் விளம்பரம் : Vitiligo - Harpal Anmol



சென்ற வருடத்தின் ஹோலி சமயத்தில் அன்மோல் பிஸ்கெட் விளம்பரம் ஒன்று வெளிவந்தது.  விளம்பரம் மட்டுமே நோக்கமாக இல்லாமல் Vitiligo எனும் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் ஒரு பிரச்சனை குறித்த விழிப்புணர்வையும் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட விளம்பரம்.  Vitiligo is a skin condition that causes your skin to lose its color or pigment. அப்படிப் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை பலரும் கிர்கிட் (பச்சோந்தி) என்று கிண்டல் செய்வதுண்டு! அப்படிச் சொல்லாமல் இருக்கச் சொல்லும் விளம்பரம்! பாருங்களேன்.


******


பழைய நினைப்புடா பேராண்டி : பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்



2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும் - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  ஹிமாச்சலப் பிரதேசத்தில் செய்த ஒரு பயணம் குறித்த தொடரின் பகுதியிலிருந்து சில வரிகள்!


தேவி மற்றும் லிங்க ஸ்வரூப சிவனின் தரிசனமும் கண்டு அங்கிருந்து வெளியே வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். அப்படி ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு மூதாட்டி மிகவும் ஸ்வாரசியமாக அனுபவித்து பீடியை வாயில் வைத்து புகை விட்டுக் கொண்டிருந்தார்.  அவரது முகத்தில் இருக்கும் சுருக்கங்களும், பற்கள் இல்லாது புகை இழுப்பதில் அவரது கன்னங்களில் ஏற்பட்ட பள்ளங்களும் அவரை புகைப்படம் எடுக்கத் தூண்டியது.


சரி அவரை புகைப்படம் எடுக்கலாம் என்றால் தெரியாத ஒருவரை, அதுவும் வேறொரு ஊரில் சுற்றுலா சென்றிருக்கும் போது அந்த ஊரில் இருப்பவரை புகைப்படம் எடுப்பதில் சில தொந்தரவுகள் வரலாம் என்பதால், ஒன்று அவரைக் கேட்ட பிறகு அவரது புகைப்படம் எடுக்க வேண்டும், அல்லது அவருக்குத் தெரியாமல் அவரது புகைப்படம் எடுக்க வேண்டும். அவரைக் கேட்டு அவரிடமிருந்து அனுமதி பெற்று புகைப்படம் எடுப்பது சாத்தியமல்ல என்று தோன்றியது.


பீடி பிடிக்கும் விதமும், அவர் இருந்த ஒரு மயக்க நிலையும், அவர் அவரது சுய நினைவில் இருப்பது போலத் தோன்றவில்லை. மேலும் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, ஏதோ பேசவும் செய்தார்.  நடுநடுவே, பீடியை வாயில் வைத்து, “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என சார்மினார் சிகரெட் விளம்பரம் போல ஒரு நீண்ட இழுப்பு – அதன் பின்னர் புகையை சில வினாடிகள் உள்ளிருத்தி, நன்கு அனுபவித்த பிறகு மேலே பார்த்தபடி அபரீதமான ஒரு திருப்தியோடு புகையை வெளியேற்றிக் கொண்டிருந்தார்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் : தலைவா…


ஒரு சிலர் இருக்கிறார்கள்.  அவர்களுடன் நாம் நட்பு பாராட்டினாலும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள்.  ஒரு வித கெத்துடன் தான் பேசுவார்கள், பழகுவார்கள்.  நாம் நட்புடன் இருக்க, அவர்களோ பாராமுகத்துடன் இருப்பார்கள். ஆனால் அவருக்கு நம்மிடம் ஒரு வேலை நடக்க வேண்டும் என்றால் என்றுமில்லாத புதுக் கதையாக, நம்மைத் தேடி நம் இடத்திற்கு வருவார்!  “தலைவா! உன்னைப் பார்க்கதான் வந்தேன்…  எப்படி இருக்க? வீட்டில் எல்லோரும் நலமா?” என்றெல்லாம் விசாரித்தால் நாம் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் நாம் தான் நட்பு தான் முக்கியம் என்று நினைப்பவர் ஆயிற்றே… அணில் என்னடா அம்மணமாக அலைகிறதே என்று பார்த்தால், அடுத்த விஷயம் வெளியே வரும்! “Thrift Society-ல நீ Member தானே, எனக்கு கடன் வாங்கணும், Surety போடு” என்பார்கள்.  இன்னும் ஒரு நாள் அவர் நம்மைத் தேடி வருவார். “உனக்கு இந்த ஆஃபிஸ்ல இருக்க Mr.X நண்பர் தானே, அவரிடம் ஒரு வேலை எனக்கு இருக்கிறது, அவரை அழைத்து கொஞ்சம் பேசு, எனது வேலையை முடித்துத் தரச் சொல்லி சிபாரிசு செய்!” என்று சொல்வார். நாமும் அவரது குணம் தெரிந்திருந்தாலும் நம்மால் முடிந்ததைச் செய்வோம்.  


ஆனால் ஒரு விஷயம், அவரிடம் நமக்கு ஒரு வேலை இருக்கிறது என்று சென்றால், நிச்சயம் செய்ய மாட்டார். அந்த வேலை அவர் செய்ய முடிந்த வேலை தான். ஆனாலும் கெத்தாக “அதெல்லாம் முடியாது!” என்று முகத்திலடித்தார் போல சொல்வார்! அடுத்த முறை நம்மிடம் வரும்போது நாமும் இப்படிச் சொல்ல வேண்டும் என்று நினைப்போம் - ஆனால் நம்மால் அப்படிச் செய்ய முடியாது! ஏனெனில் நம் குணம் அப்படிச் செய்ய விடாது! இப்படியான சிலர் என் நட்பு வட்டத்தில் உண்டு! உங்கள் நட்பு வட்டத்தில் உண்டா?


******


இந்த வாரத்தின் குறும்படம் - ஒரு ரூபாய் :


ஒரு ரூபாயை வைத்து என்ன செய்து விட முடியும்?  சொல்ல வரும் விஷயத்தினை இன்னுமொரு பிரதான கடமையை நினைவு படுத்தும் விதமாக எடுத்திருக்கிறார்கள் இந்தக் குறும்படத்தினை!  இன்றைய காலகட்டத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் ஒன்றின் மகிமையைச் சொல்லும் விதமாகத்தான் இருக்கிறது.  குறும்படம் உங்களுக்கும் பிடிக்கலாம்… பாருங்களேன்.


******


இந்த நாள் இனிய நாள் :  ஆமைக்கென்று ஒரு தினம்



ஆமைகளுக்கென்றே ஒரு தினம் கொண்டாடுகிறார்கள் - அந்த நாள் - 23 மே - அதாவது இன்று!  ஆமைகள் - அத்தனை பெரிய முதுகுச் சுமையுடன் இருப்பதைப் பார்த்தால் எனக்கு வியப்பு தான்.  என்னதான் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ள ஒரு அரண் போலவே அந்த ஓடு இருந்தாலும், எப்போதும் அதனை முதுகுடன் சுமந்து இருப்பது என்பது ஒரு வித வேதனை தான் இல்லையா?  இறைவன் படைப்பில் இதுவும் ஒரு வித அதிசயம் தான். பல பயணங்களில் குட்டி முதல் பெரிய, வயதான ஆமைகளைப் பார்த்திருக்கிறேன். ஆமையின் வகையைப் பொறுத்து அவற்றின் உயிர் வாழும் காலம் இருக்கும் என்றும் சில வகை ஆமைகள் நூறு வருஷங்கள் கூட உயிர் வாழும் என்று சொல்கிறார்கள். நூறு வருஷம் முதுகுச் சுமையுடன் இருப்பது ஒரு விதத்தில் வேதனை என்றே தோன்றுகிறது! 100 நிமிடங்கள் முதுகுச் சுமை எனும் Backpack வைத்துக் கொண்டு இருக்க முடிவதில்லை நம்மில் பலரால்!  எதற்காக இந்த ஆமைகளுக்கென்று ஒரு தினம் கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள நினைத்தால் தேடிப் பாருங்களேன்! 


******


இந்த வாரத்தின் பயணம் - Solo Trip to Sikkim :



Solo Trip என்று சொல்லப்படும் தனி நபர் பயணங்கள் தற்போது அதிகரித்திருக்கிறது.  இந்த விஷயத்தில் நம் பதிவுலக நண்பர் அமுதா கிருஷ்ணா அவர்கள் ஒரு வித முன்னோடி.  தனியாக இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வருகிறார்.  சமீபத்தில் கூட உத்திராகண்ட் குறித்து என்னிடம் சில தகவல்கள் கேட்டு இருந்தார்.  எனக்குத் தெரிந்த விஷயங்களை நானும் பகிர்ந்து கொண்டேன்.  இன்றைக்கு சிக்கிம் பகுதியில் இருக்கும் Zuluk என்கிற இடத்திற்குச் செல்லும் பயணம் குறித்து Raajwrita Dutta என்பவர் எழுதிய கட்டுரை ஒன்று, உங்கள் தகவலுக்காக கீழே!


Solo Trip to Zuluk Sikkim in 3 Days Under Rs 8000 | Budget Guide 


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

23 மே 2026


11 கருத்துகள்:

  1. ரீல்ஸ் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லைதான்.  சுவாரஸ்யமாகவும் இருக்கிறதே...

    சிறிய விழிப்புணர்வுடன் விளம்பரம் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  2. பழைய நெனப்புடா பேராண்டியில் பதிவையும், என் கமெண்ட்டையும் மீண்டும் படித்து வந்தேன்.  அந்தக் கிழவியின் முகத்தில் இருக்கும் பேரானந்தம்...

    பதிலளிநீக்கு
  3. இந்த வார எண்ணங்களின் அனுபவங்கள் எனக்கும் உண்டு.  ரிஷியும் நீரில் மாட்டிக்கொண்ட தேளும் கதை நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. அந்தக் காலத்தில் ஒரு ரூபாயில் என்னென்ன வாங்கி இருக்கிறேன் தெரியுமா?  சொன்னால் நம்ப மாட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  5. ஆமைகளுக்கென்று ஒரு தினமா..  அட...   முயலாமை, இயலாமையை வெற்றி கொள்வோம்! - சொல்லி வைப்போமே...!

    பதிலளிநீக்கு
  6. பிரபலமான திரு போகன் சங்கர்//

    இந்தப் பெயர் தான் நேற்று எபியில் குறிப்பிடக் கிடைக்காமல் குழம்பினேன்!!!!!

    எங்க ஊர்க்காரர்.

    மிகச்சரியான வரிகள்தான் ஆனால் waste land ஐயும் productive ஆக மாற்றும் திறமை நமக்கிருந்தால் மாற்றிவிடலாம். ரீல்ஸ் சில நல்ல விஷயமாகவும் இருக்கின்றன. எனவே நேர மேலாண்மையை நாம் சரிப்படுத்திக் கொண்டால் போதும் என்றும் சொல்லலாம்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. விளம்பரம் நல்ல அழகான விழிப்புணர்வுடன். ரசித்தேன், ஜி

    பீடி மயக்கத்தில் சிரிக்கும் அந்தப் பாட்டியின் படம் ரொம்ப அழகு! நிழலான நினைவு வந்தது பதிவு பாத்திருக்கமோ என்று காரணம் ஹிமாச்சல்!!!! பயணம். பதிவின் சாராம்சம் சட்டென்று பிடிபடவில்லை. எனவே சுட்டியும் பார்த்துவிட்டேன்...நாய்க்குட்டி அழகு!

    இப்ப இன்னும் ரகசிய கேமராக்கள் நிறைய இருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  8. தலைவா - இப்படியானவர்களை ஓர் எல்லைக் கோட்டில் வைக்க வேண்டும். மற்ற நாட்களில் நட்புடன் உண்மையான அன்புடன் இல்லாமல், நம்மைக் கண்டுக்காமல் வேலையாக வேண்டும் என்று வருபவர்களிடம் நாம் கவனமாக இருத்தல் நலம். எல்லைக் கோடு மிக மிக முக்கியம் இவர்களிடம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அட! ஒரு ரூபாயின் மதிப்பு என்று பார்த்தால் கடைசியில் ட்விஸ்ட்!!! நிஜமாகவே ஒரு ரூபாயின் மதிப்பு பெரிதே. இப்பவும்! அந்த ஒரு ரூபாய் மீதி தராமல் சாக்லேட் மிட்டாய் கொடுத்தால் நோ என்று சொல்லிவிடுவேன்! ஏனென்றால் அடுத்த முறை சில்லறை கொடுக்க எனக்கு வேண்டுமே! சாக்லேட்டா கொடுக்க முடியும்?

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஆமை தினம் என்றதும் ஆமைகளின் பருவகாலமான நவம்பர் டிசம்பர், ஜனுவரி சென்னையில் turtle walk என்று ஓர் அமைப்பு இரவு அவர்களுடன் சென்று ஆமைகள் கரைக்கு வந்து மண்ணில் தங்களின் வீடு அமைப்பது அதில் முட்டை இடுவது கடலுக்கு மீண்டும் செல்வது என்ற சுழற்சியில் ஏதேனும் ஒன்று நம் கண்ணில் பட வாய்ப்புண்டு. நானும் மகனும் சென்றிருக்கிறோம். அந்த அமைப்பில் பதிந்து கொண்டு. அப்படிச் சென்ற போது ஆமை கட்டிய வீட்டிற்குள் அறைகளில் இருந்த முட்டைகளைப் பார்த்தோம். ஓர் ஆமை கடலுக்குச் செல்வதையும் பார்த்தோம். இந்த முட்டைகள் மனிதர்களால் பாதிக்கப்படுவதால் இந்த அமைப்பு அவற்றைச் சேகரித்து, கிட்டத்தட்ட 90 முதல் 108 ....என்று பொறுக்கி அதை நீலாங்கரையில் இருக்கும் centre ல் ஆமை அமைப்பது போன்ற மணல் வீடு அடியில் கட்டி அதில் வைத்து பொரித்து ஓர் மூங்கில் தட்டில் குஞ்சுகளை வைத்துக் கடலில் விடுவாங்க இப்ப இன்னும் முன்னேறி இருக்கிறது.

    அப்ப கிட்டத்தட்ட 25 வருடங்கள் முன்னர், நானும் மகனும் மூங்கில் தட்டுகளில் ஆமைக் குஞ்சுகளை எடுத்து வைத்துக் கொண்டு கடலில் விட்டோம்!

    அந்த அமைப்பு இரவு 11 மணிக்கு பெசன்ட் நகரில் நடக்கத் தொடங்கி நீலாங்கரை வரை செல்ல வேண்டும் ஆங்காங்கே விளக்கிக் கொண்டே வருவார்கள். காலை 3.30- 4 மணி அளவில் சென்றடைந்தோம் கரையிலேயே பெட்ஷீட் விரித்து அக்குளிர்க்காற்றில் படுத்துக் கொண்டு விடிந்ததும் வீடு வந்து சேர்ந்தோம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ஆஹா !! solo trip....என் தங்கை பெண் தனியாக தாய்லாந்தின் வட பகுதிக்குச் சென்று வந்தாள்! எனக்கிருப்பவை சின்ன சின்ன ஆசையா என்ன!! பெரிய பெரிய ஆசை! ம் என்று பெருமூச்சுடன்!

    நெல்லை சிக்கிம் போய் வந்தார் ஆனால் solo trip அல்ல.

    சுட்டி சென்று பார்க்கிறேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....