புதன், 27 மே, 2026

கதம்பம் - அவரும் நானும் - 25-ஆம் ஆண்டில்… - திருமண நாள் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

******


அவரும் நானும் - அச்சுப் புத்தகம் - 08 மே 2026 : 


இதுவரை எங்கள் இருவரின் எழுத்திலும் வெளிவந்த பகிர்வுகள் அனைத்தும் மின்னூல்களாக தான் வெளிவந்திருக்கின்றன! என்னமோ ஒரு ஆசை!! அவற்றில் ஒன்றாவது அச்சுநூலாக வெளிவரணும்! அதை நம் வீட்டு புத்தக அலமாரியில் உள்ள பொக்கிஷங்களோடு ஒன்றாக வைத்துக் கொள்ளணும் என்று…!!


சரி! இருவரின் எழுத்திலும் நிறைய மின்னூல்கள் இருக்கே! சமையலும், பயணமும் என்ற வரிசையில் அதில் எதை அச்சுப் பிரதியாக மாற்றுவது?? சரி! நான்கு வருடங்களுக்கு முன்பு உருகி உருகி,  ‘அவரும் நானும்'  என்ற தலைப்பில் எழுதிய எங்கள் இருவரின் வாழ்க்கை சரிதத்தையே அச்சுநூலாக மாற்றலாம் என்று ஏகோபித்த மனதுடன் முடிவு செய்தோம்!


திருமணமான 20 ஆம் வருடம் இந்தத் தொடரை எழுதியிருக்கிறேன்! அன்று இந்தத் தொடரை எழுதிய போது இருந்த மனநிலையும், அப்போதைய சூழல்களும் முற்றிலும் வேறு! காலம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது! பசுமையான நினைவுகளை அசைபோட்டு பார்ப்பதில் என்றுமே மகிழ்ச்சி தான் இல்லையா!


எங்களின் எண்ணத்திற்கு ஏற்றவாறு அழகான அச்சு புத்தகமாக எங்களுக்கு வடிவமைத்து தந்தவர் நம்ம Ganesh Bala  கணேஷ் சார்! மிக்க நன்றி சார்!  இதோ இன்றைக்கு வீடு தேடி வந்துவிட்டது அவரும் நானும் புத்தக வடிவில், அழகான புத்தகமாக……  பார்த்தபோது மனதுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி.


கணவன் மனைவி இடையேயான பரஸ்பர அன்பு மற்றும் புரிதலை பற்றிய இந்தத் தொடரை எழுதிய போது அப்போது சிலர் பின்னூட்டத்தில் கூட, அவரும் நானும் என்ற இந்த தொகுப்பை நாளை புத்தகமாக நீங்கள் மாற்றினால் திருமண மேடையில் மணமக்களுக்கு நீங்கள் பரிசாக தரலாம் என்று சொன்னார்க்ள்! உண்மை தான்!


நம்ம Rishaban Srinivasan ரிஷபன் சாரும், அன்புத்தோழி அப்பாவி தங்கமணி புவனா கோவிந்தும் மிகச்சிறப்பாக புத்தகத்துக்கு மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்! அட்டைப்படமாக ஆல் டைம் பேவரிட் என்று நாங்கள் சொல்லிக் கொள்ளும் ஸ்டூடியோவில் எடுத்துக் கொண்ட எங்களின் முதல் புகைப்படம்! தன்னுடைய படைப்புகள் பல இருந்தாலும் என்னுடைய ஆசையை நிறைவேற்ற என் படைப்பை வெளியிட்ட என்னவருக்கும், இறைவனுக்கும் இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


********


25-ஆம் ஆண்டில் - 24 மே 2026 :


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது!


‘இல்வாழ்க்கை’ எனும் அதிகாரத்தில் ‘வான்புகழ்’ வள்ளுவர் குறிப்பிட்டுச் சொல்வது என்னவென்றால் கணவன் மனைவிக்கிடையே நிறைந்த அன்பு மட்டுமல்ல, அறம் எனப்படும் மற்றவர்களுக்கு உதவும் குணமும், சிறந்த நல்லொழுக்கங்களும், கடமை உணர்வும் கொண்டவர்களாக இருப்பதே சிறப்பான இல்வாழ்க்கை என்று வெகு அழகாக வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார்!  


அனுபவங்களே ஒரு மனிதனுக்கு சிறந்த ஆசான் என்று ஆன்றோரும் சான்றோரும் சொல்வது எத்தனை உண்மை! இத்தனை வருடங்களில் நாங்கள் இருவரும் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப் பார்த்தால் அந்த பாதையெங்கும் ஒருவர் மீது மற்றவர் கொண்ட பரஸ்பர அன்பும், நம்பிக்கையும், புரிதலும், விட்டுக் கொடுத்தலும், பகிர்ந்து கொள்ளுதலும் என ஒவ்வொன்றும் வாழ்க்கைப் பாதையை வடிவமைக்கும் படிக்கற்களாக காட்சித் தருகிறது!


இப்படி பாதையெங்கும் வாழ்க்கைப் பயணம் அனுபவங்களால் சமதளமாக சென்று கொண்டிருந்தால் எப்படி! சற்று நின்று நிதானமாக கவனத்துடன் செல்ல, பயணத்தில் சற்று சுவாரசியத்தை தரும் விதமாக ஆங்காங்கே  அவ்வப்போது தோன்றும் ஊடல், குறைகள், கோபம் என்று ஏற்ற இறக்கங்களும் நிறைந்தது தானே நம் நிறைவான வாழ்க்கை! 


மேடும் பள்ளங்களும் கொண்ட இந்தப் பாதையை அவ்வப்போது நாங்கள் செப்பனிட்டுக் கொண்டே தான் செல்ல வேண்டும்! என்றாவது ஒருநாள் அதை திரும்பிப் பார்க்கும் போது கண்களுக்கு குளிர்ச்சியாக பூத்துக் குலுங்கும் பூங்காவனமாக காட்சித் தர வேண்டும்! அப்படிப்பட்ட அழகான பாதையை உருவாக்கும் விதத்தை தான் இறைவன் ஒவ்வொரு நாளும் பலவித அனுபவங்களால் கற்றுத் தருகிறார்!


वागर्थाविव सम्पृक्तौ वागर्थप्रतिपत्तये ।

जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ ॥


வாகர்த்தா விவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்த-ப்ரதிபத்தயே

ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேஸ்வரௌ


தன்னுடைய ‘ரகுவம்ச’ காவியத்தை மகாகவி காளிதாசர் இப்படித்தான் துவக்குகிறார்! 


வாக்கும் அதாவது ஒரு சொல்லையும் அதன் அர்த்தத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ, அப்படி எப்போதும் இணைந்தே இருக்கும் உலகத்தின் தாய் தந்தையரான பார்வதி பரமேஸ்வரனை நான் வணங்குகிறேன் என்று! எத்தனை அழகான, அர்த்தம் பொதிந்த வரிகள்!!


திருமண வாழ்க்கையில் 25வது  ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாங்கள் இருவரும் எந்தவொரு சூழலிலும், சொல்லும் அதன் பொருளும் போல ஒருமித்த சிந்தனையுடனும், மனதுடனும் இந்த வாழ்க்கைப் பாதையை நல்ல ஆரோக்கியத்துடன் கரம்கோர்த்து பயணிக்க உலகத்தின் தாய் தந்தையரான பார்வதி பரமேஸ்வரன் அனுகிரகிக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்!


நல்லதே நடக்கணும்! எல்லாம் நன்மைக்கே!


இன்றைய நாளில் என் நட்புவட்டத்தில் உள்ள அன்பான உள்ளங்களான உங்கள் வாழ்த்துகளும் கிடைக்கப் பெற்றால் மிகவும் மகிழ்வோம்! பெரியோர்களுக்கு எங்கள் இருவரின் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்!


திருமண நாள் - 24 மே 2026:



எங்கள் திருமணம் என்பது முற்றிலும் பெற்றோர்களால் நிர்ணயிக்கப்பட்டது! 24 ஆண்டுகளுக்கு முன் அன்றைய நாளில் திருமண மேடையில் எங்கள் இருவரின் பெற்றோர்களும் மனதார அட்சதை தூவி, ஆசி வழங்கி மிகச்சிறப்பாக கோவை ராஜவீதியில் உள்ள திருமணச் சத்திரத்தில் நடைபெற்றது! 


இன்றைய நாளில் எங்கள் இருவரின் பெற்றோர்களும் வானில் நட்சத்திரங்களாய் காட்சித் தருகின்றனர்! எப்போதுமே என்னவரின் பக்கம் தான் இருதரப்பு பெற்றோரும் பரிந்து பேசுவார்கள் என்றாலும், இப்போது அப்படி எடுத்துச் சொல்லவும், அதிகாரம் பண்ணவும் நிஜமாகவே யாரும் இல்லாத உணர்வைத் தருகிறது!


இன்று காலை ‘அம்மான்’ என்றழைக்கப்படும் தாய்மாமாவின் வாழ்த்துகளும் ஆசிகளும் கிடைத்த போது அம்மாவிடமே ஆசி கிடைத்த உணர்வை ஏற்படுத்தியது!❤️ 


ஏதாவது ஒரு கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்ற போது இன்று என்னவர் என்னை அழைத்துச் சென்றது மும்மூர்த்திகளின் ஸ்தலமான உத்தமர் கோவிலுக்கு! அப்பா இந்தப் பகுதியில் வசித்த போது அப்பாவுடன் காலாற நடந்து சென்று வந்த நினைவு மனதில்!❤️ நிதானமாக நின்று தரிசித்து வந்தோம்!


கோவிலில் உள்ள ஒரு சன்னிதியில் அப்பா வயதில் ஒருவர் ஏழ்மையான நிலையில் கையேந்தி அமர்ந்திருந்தார்! அவரிடம் பணம் தந்ததும், என்னை அருகே அழைத்து ‘இவரு யார் உனக்கு?? என்று கேட்டார்! ‘என் வீட்டுக்காரர்’ என்றேன்! உடனே எங்கள் இருவரையும் அருகருகே சேர்ந்து நிற்கச் சொல்லி அருள்வாக்கு போல சொல்ல ஆரம்பித்தார்! அவர் சொன்ன எல்லாமே நல்ல வார்த்தைகளாக தான் இருந்தது! என் தலையில் கை வைத்து ஆசீர்வாதமும் செய்தார்!


அவர் ஒன்றும் சித்தர் இல்லை! ஏழ்மை நிலையில் பிழைப்புக்காக அவர் எல்லோருக்குமே அப்படித்தான் சொல்வாராக கூட இருக்கும்! ஆனாலும் நம் மனநிலைக்கு ஏற்றவாறு அதை எப்படி வேண்டுமானாலும் நல்லவிதமாக எடுத்துக் கொள்ளலாம்! இன்றைய நாளில் எங்களுக்கு கிடைத்த இறைவனின் ஆசியாக, முன்னோர்களின் ஆசியாக எடுத்துக் கொண்டேன்!


கோவில் தரிசனத்துக்குப் பின் வீட்டிற்கு வந்து வீட்டு வேலைகளுடன் அன்றாட சமையல்! இன்றைய ஸ்பெஷலாக கேரட்டுடன் முந்திரி சேர்த்து அரைத்து செய்த சேமியா பாயசம் நாவினில் தித்தித்தது! இது மாம்பழ சீசன் என்பதால் கொஞ்சம் மாம்பழ ஐஸ்கிரீமும் நேற்றிரவு செய்து செட் செய்திருக்கிறேன். கொண்டாட்டம் என்றால் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் மட்டுமல்ல இனிப்புகளும் தான்…:)


அன்பு சூழ் உலகில் காலை முதல் எங்கள் இருவரையும் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்! இன்றைய நாள் இனிய நாள்!


********


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

27 மே 2026


8 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    தங்களின் திருமண நாளுக்கு என் இனிதான, அன்பான நல்வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அவரும், நானும் தொடர் பதிவு அச்சுப்புத்தகமாக வெளிவந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. திருமண நாளுக்கு செய்த சேமியா பாயாசம், ஸ்வீட், சமையல் என அனைத்தும் அருமை. பதிவில் நன்றாக சொல்லியுள்ளீர்கள். மீண்டும் உங்களிருவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. அருமை.  அருமையான ஐடியா.  அச்சுப்புத்தகமாக கொண்டு வந்திருப்பது சிறப்பு.  வாழ்த்துகள்.

    உங்கள் திருமண நாளுக்கு மீண்டும் எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. சூப்பர், ஆதி. உங்கள் எழுத்தை அச்சுப்புத்தகமாகக் கொண்டு வந்ததற்கு வாழ்த்துகள்!

    ஆஹா!! மே 24 திருமணநாளா! வாழ்த்துகள் மனமார்ந்த வாழ்த்துகள் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வெங்கட்ஜி ய கல்யாண ஃபோட்டோல பார்த்ததும் என்னை அறியாமல் புன்சிரிப்பு...சின்ன பையானாக!!! நீங்களும் அப்படியே இருக்கீங்க!

    //அவர் ஒன்றும் சித்தர் இல்லை! ஏழ்மை நிலையில் பிழைப்புக்காக அவர் எல்லோருக்குமே அப்படித்தான் சொல்வாராக கூட இருக்கும்! ஆனாலும் நம் மனநிலைக்கு ஏற்றவாறு அதை எப்படி வேண்டுமானாலும் நல்லவிதமாக எடுத்துக் கொள்ளலாம்!//

    நேர்மறைச் சொற்கள் எப்படிக் கிடைத்தால் என்ன இல்லையா? தேவதைகள் ததாஸ்து என்று சொல்லுமாமே! அப்படியே உங்கள் எல்லோருக்கும் நல்லதே நடந்திடட்டும்! நடக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பத்மநாபன்27 மே, 2026 அன்று 11:34 AM

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!

    இருவர் பயணமும் அழகிய புத்தகமாக வெளிவருவது மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் புவனா & கிட்டு.இருவரும் ஆனந்தமாக ஆரோக்கியமாக நீண்டநாள் வாழ வாழ்த்துக்கள். திருமணப் பரிசாகக் கிடைத்த மகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
    விஜி.

    பதிலளிநீக்கு
  7. இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள். வாழ்க நலமுடன் வளமுடன். இருவருக்கும் நல்லாசிகள்.

    "அவரும் நானும் " புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள். இனிய உங்கள் நினைவுகளை தொடராக பகிர்ந்தபோது படித்துள்ளோம்.

    பதிலளிநீக்கு
  8. இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள். வாழ்க நலமுடன் வளமுடன். இருவருக்கும் நல்லாசிகள்.

    "அவரும் நானும் " புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள். இனிய உங்கள் நினைவுகளை தொடராக பகிர்ந்தபோது படித்துள்ளோம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....