வியாழன், 21 மே, 2026

கதை மாந்தர்கள் - அட்வைஸ் ஆறுமுகம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - Weaver Ants - பலாப்பழ வாசனை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்கிறோம்.  அவர்களில் சிலரை மட்டும் நம்மால் மறக்க முடிவதில்லை.  அப்படி ஒரு மனிதர் - கதை மாந்தர் குறித்த பதிவு தான் இன்றைக்கு.  எதற்காக அந்த மனிதரைக் குறித்து “அட்வைஸ் ஆறுமுகம்” என்ற தலைப்பில் எழுத வேண்டும்? தலைப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும் காரணம் தான்!  அவரைச் சந்தித்தால் அப்படி ஒரு அட்வைஸ் மழையாகப் பொழிவார். அதுவும் கேட்கப்படுகிறதோ இல்லையோ, அதைப் பற்றிய கவலை எனக்கில்லை! நான் சொல்வதைச் சொல்லிக் கொண்டே இருப்பேன் என்று சொல்லும் நபர் அவர் - unsolicited advice தான் பெரும்பாலும்! இப்படி ஒரு பெயர் வைத்ததற்கான காரணம் என்ன, என்று என்னைக் கேட்டால் எத்தனை எத்தனை உதாரணங்கள் வேண்டுமானாலும் என்னால் காண்பிக்க முடியும்! எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டாம்.  ஒரு சில மட்டும் இங்கே சொல்கிறேன் - நீங்களே சொல்வீர்கள் - இப்படியான ஒரு பெயர் அவருக்கு மிகவும் பொருத்தம் என்பதை! 


காட்சி ஒன்று:  காய்கறி மார்க்கெட், ஐம்பதைக் கடந்த ஒரு காய்கறி வியாபாரி தனது காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். பல வருடங்களாக காய்கறி விற்பவர். அவரிடம் நம் கதை மாந்தர்….


“நீங்க ஒரு ஓரமா உட்கார்ந்து காய்கறி எல்லாம் ஒவ்வொண்ணா எடுக்கறீங்க! நடுவில உட்காரணும் - இடப் பக்கம் இரண்டு மூணு வகை காய்கறி இருக்கணும், வலப்பக்கம் இரண்டு மூணு வகை காய்கறி.  நடுவுல வெயிங் மெஷின், கல்லாப்பொட்டி எல்லாம் இருக்கணும்! அப்படி உட்கார்ந்தா தான் தேவையானதை எடுத்து, சரியா அளவு போட்டு, காசை வாங்கி கல்லால போட முடியும்! இங்கே பாருங்க, நான் எப்படின்னு சொல்றேன்!”    


இல்லீங்க, இது எனக்கு வசதியாதான் இருக்கு! ஒண்ணும் பிரச்சனை இல்லையே. 


“இல்லை, நீங்க நான் சொல்ற மாதிரி செய்யுங்க, உங்களுக்கு ரொம்பவே சுலபமா இருக்கும்! உங்களுக்குப் புரியலைன்னா, இன்னுமொரு தடவை கூட சொல்லித் தரேன்!”  அவர் விடுவதாக இல்லை!  


இதற்கு மேல் அந்த இடத்தில் நாம் இருந்தால் சரி வராது என்பதால் நான் நைசாக நழுவினேன்! எப்படியும் நான் சந்தை முழுக்க ஒரு ரவுண்டு அடித்து வந்தாலும், அவர் அட்வைஸ் மழை முடிந்திருக்காது என்பது தெரிந்த கதை! 


காட்சி இரண்டு:  பொது இடத்தில் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருக்கும் பெண்மணியிடம்….


“என்னம்மா, உனக்கு ஒழுங்காவே பெருக்கத் தெரியல! அந்தத் துடப்பத்தை வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் தள்ளக் கூடாது! இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் கொண்டு போனா தான் குப்பையெல்லாம் சரியாப் போகும்! இப்ப பாரு! சரியாவே குப்பை போகல! எப்படிப் பெருக்கணும்னு நான் சொல்லித் தரேன்… அந்தத் துடப்பத்தைக் கொண்டா!”   


ஐயா, எனக்கு வயசு நாப்பது! ஏழு வயசுலேயே எங்கம்மா என்கிட்ட துடப்பத்த கொடுத்து கூட்டிப்பெருக்க சொல்லிடுச்சு! முப்பது வருஷத்துக்கும் மேலே கூட்டிப்பெருக்கறேன்! இது வரை யாருமே சரியா பெருக்கலன்னு சொல்லலை! இப்ப நீ வந்து எப்படி பெருக்கணும்னு கிளாஸ் எடுக்கற! சும்மா போவியா!


மேலே சொன்ன இரண்டு காட்சிகள் தவிர இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் சொல்லப் போவதில்லை. உலகத்தில் அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை என்பது போல அத்தனை வேலைகளைச் செய்யும் நபர்களிடமும், அவர்கள் செய்யும் வேலைகளை இப்படித்தான் செய்ய வேண்டும், இப்படிச் செய்யக் கூடாது என்று அட்வைஸ் சொல்வதோடு, சில சமயங்களில் அந்த வேலைகளைத் தானே செய்கிறேன் பேர்வழி என்று புறப்பட்டுவிடுவார்.  பல சமயங்களில் அவை தாறுமாறான முடிவுகளைத் தந்துவிடும். ஆனாலும், தன் மீது தவறில்லை என்பதை எப்படியாவது நிலைநாட்டவே பார்க்கும் நபர் அவர். 



ஒரு சிலருக்கு இப்படித்தான் - வெளியே பலருக்கும் இப்படி அறிவுரைகளை அள்ளி வீசுவார்கள்.  வீட்டில் ஒன்றும் சொல்ல முடியாது! அவருக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொண்டு சென்றாலும், அவர் வீட்டில் அவர் பேச்சு எடுபடாது! அவர் “என் வழி தனி வழி” என்று தான் உண்டு தன் வேலையுண்டு என்று போய்க்கொண்டே இருந்துவிடுவார்.  அதனால் தான் இப்படி வெளியே எல்லோருக்கும் அட்வைஸ் சொல்லிக் கொண்டு இருக்கிறார் பாவம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. எது எப்படியோ, கதை மாந்தர் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுத ஒரு வாய்ப்பு - அதில் எனக்கு திருப்தி! என்ன ஒன்று, அவர் இந்தப் பதிவினை படிக்காமல் இருக்க வேண்டும்! யாரும் போட்டுக் கொடுத்துடாதீங்க ப்ளீஸ். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

21 மே 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....