சனி, 9 மே, 2026

காஃபி வித் கிட்டு - 238 - பேருந்துகள் பராமரிப்பு - Dikha Battissi - காதலென்பது - அலுவலகக் கட்டிடம் - Vaksana Farms - எப்படி என்றாலும் - Stay Up all Night Day


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - துங்க்நாத் மலைச்சிகரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் எண்ணங்கள் :  பேருந்துகள் பராமரிப்பு



சமீபத்தில் ஒரு குளிரூட்டப்பட்ட பேருந்தில் ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு பயணிக்க வேண்டியிருந்தது. சுமார் 220 கிலோமீட்டர் தொலைவு பயணம் - மதியம் ஒரு மணி அளவில், அதிக அளவு வெப்பம் இருக்கும் சமயம் பயணிக்க வேண்டியிருந்ததால், AC பேருந்து - அதுவும் 1 to 1 பேருந்து என்றவுடன், யோசிக்காமல் அதில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஒலிபெருக்கியில் குரலைச் சேமித்து வைத்து, அதனை பேருந்தின் முன்பக்கம் மாட்டி வைத்து, 1 to 1 என்று கூவிக் கூவி அழைத்தார்கள்.  பேருந்தில் ஏறி அமர்ந்த போதே AC ஓடிக்கொண்டிருந்தது.  பெரிதாக அதன் தாக்கம் இல்லை - ஒரு வேளை கதவு திறந்திருப்பதால் அப்படி குறைவாக தெரிகிறது போலும் என்று நினைத்தேன்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லை - அதன் மொத்த நிலையே அது தான் என்பது பேருந்து புறப்பட்ட பிறகு தான் தெரிந்தது.  220 கிலோமீட்டர் பயணத்தில் AC இருந்தும் கசகசவென்று இருந்ததோடு, வியர்க்கவும் ஆரம்பித்தது! ஒரு சக பயணி, இப்படியெல்லாம் ஓட்டை பேருந்தில், AC எனச் சொல்லி, அதிக கட்டணமும் வாங்கிக் கொண்டு பேருந்தினை இயக்குவது சரியல்லவே, நான் Complaint தரப் போகிறேன் என்று சொன்னார். அதற்கு அந்த ஓட்டுனர் சொன்ன பதில்!


“எனக்கு என்ன பேருந்து இயக்கக் கிடைக்கிறதோ அதை நான் இயக்குகிறேன்.  ஓடற வரைக்கும் ஓட்டுவோம் என்று இந்த மாதிரி பழைய பேருந்துகளை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  பராமரிக்க காசும் இல்லை. அரசு கடன் வாங்கி புதிய பேருந்துகளை இயக்கினாலும், பழைய பேருந்துகளை சீர்படுத்த யாரும் கடன் தரமாட்டார்கள்! அதனால் இப்படித்தான் - ஓடற வரைக்கும் ஓடும்! எங்களைப் போன்ற ஓட்டுனர்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை.  ஓகே சார்.  நீங்க Complaint கொடுங்க!” என்று பொறுமையாக பதில் சொல்கிறார்.  ஒரு விதத்தில் அவர் சொல்வதும் சரிதானே! அரசு/பேருந்து நிர்வாகம் அவருக்குத் தரும் பேருந்தினை தானே அவர் இயக்க முடியும்! நல்ல பேருந்தினை வாங்கியா அவர் ஓட்ட முடியும்! இலவசம் என்ற பெயரில் பேருந்துகளை இயக்கினால், வருமானமே இல்லாமல் போனால் பேருந்துகளை எப்படி பராமரிப்பார்கள்?  அதுவும் பழைய பேருந்துகளை! “என்னவோ போடா மாதவா? ஏறி உட்கார்ந்தாச்சு! எல்லோரும் படும் அவஸ்தையை நீயும் படு!” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். வேறு வழி?


******

 

இந்த வாரத்தின் விளம்பரம் : Dikha Battissi…


Happydent White எனும் Chewing Gum - சில சமயங்களில் பேருந்துகளில் பயணிக்கும் சமயம் பயன்படுத்துவது உண்டு.  அவர்களது விளம்பரங்கள் வித்தியாசமாக, சமூகத்திற்கு ஒரு தகவலைச் சொல்லும் விதமாகவே இருக்கும்!  இந்த விளம்பரம் கூட அப்படித்தான்.  Ladies Seat - இல் அமர்ந்து பயணிக்கும் இரண்டு நபர்களுக்கு, அதுவும் ஒரு பெண் கேட்ட பிறகும் தராமல் பயணித்தவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக இருக்கும் இந்த விளம்பரம் - பாருங்களேன்…

******


பழைய நினைப்புடா பேராண்டி : காதலென்பது…


2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - காதலென்பது… - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. 


காதலுக்காகவும், காதலிக்காகவும் என்னென்ன செய்யலாம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது – ஏனெனில் கல்யாணத்துக்கு முன் நான் காதலித்ததில்லை. கல்யாணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலிக்கும் போதுதான் அதெல்லாம் எனக்குத் தெரிந்தது.


என்னடா இது என்னிக்கும் இல்லாம இத்தனை பதிவுகளுக்குப் பிறகு இவன் காதல் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டானே என்று கேட்பவர்களுக்கான பதில் – மேலும் படியுங்க புரியும்.


சென்ற வாரத்தில் அலுவலகத்தில் ஒருவர் திடீரென உடல் நிலை சரியில்லாமல் போக, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கவும், நலம் விசாரிக்கவும் சென்றேன். அவருக்கு உடல் நிலை சற்று தேறிவிட்டதாகக் கூறி “பணம், சம்பாத்தியம் என்று எதுவுமே நிலையில்லை, உடல் நிலை கெட்ட பிறகு இப்படிப் படுத்துக் கொள்வது தான் நிலை!” என்றெல்லாம் பேசிவிட்டு, பக்கத்து படுக்கையில் இருந்த ஒருவரைக் காண்பித்தார். அங்கே...


24-25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் – ஜீன்ஸ் பேண்டும், மேலே பட்டன் போடாத சட்டையுமாய் படுத்திருந்தார். உடலில் மூன்று நான்கு இடங்களில் கட்டு, முகத்திலும் தலையிலும் பெரிய கட்டு. அவரைச் சுற்றி உறவினர்கள் அழுதபடி நின்றிருந்தார்கள். அவருடைய தாய் பொங்கி வரும் அழுகையை அடக்கியபடி, அவருக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்.


அவரைக் காண்பித்து, அவர் கதையைக் கூற ஆரம்பித்தார்


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் பகிர்வு : அலுவலகக் கட்டிடம்



இப்படியிருந்தது....


இப்படி ஆகியிருக்கிறது....

கடந்த ஃபிப்ரவரி மாதம் எனது பதிவொன்றில் நான் மத்திய அரசுப் பணியில் சேர்ந்த, பல வருடங்கள் பணிபுரிந்த அலுவலக வளாகம் இனிமேல் இருக்கப் போவதில்லை என்ற தகவலை எழுதி இருந்தேன்.  கடந்த வாரத்தில் அந்தக் கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கப்படுவது குறித்து நண்பர்கள் WhatsApp குழு வழியாக தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு படம் மனதை மிகவும் வருத்தியது! பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்த படம் தான் அது!  என்ன தான் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும், குழுவில் இருந்த நண்பர்கள் அனைவருமே அவரவர் வாழ்க்கையில், அந்த கட்டிடத்திற்கும் அவர்களுக்கும் இருந்த உறவை, அந்தக் கட்டிடம் தந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.  ஒவ்வொருவருக்கும் அந்தக் கட்டிடம் குறித்த ஒரு தகவல், ஒரு கதை இருந்தது.  தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் இந்தக் கட்டிடம் குறித்தும் அது இடிக்கப்படுவது குறித்தும் நினைவுகளையும், படங்களையும், காணொளிகளையும் பகிர்ந்து குழுவில் இருந்த அனைவரையுமே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  என்ன செய்வது?  ஒரு சில மாற்றங்களை மனது ஒப்புக் கொள்வதில்லை - நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்ற போதும்! சில படங்கள் மட்டும் இங்கே இணைத்திருக்கிறேன். இடிபாடுகள் உள்ள படம் பார்க்கும்போதே மனதில் ஒரு வித வலி! மொத்தமாக 35 வருடங்கள் பணிபுரிந்ததில், அந்த கட்டிடத்தில் தான் 27 வருடங்கள் பணிபுரிந்திருக்கிறேன் எனும்போது வலி இருக்கத்தானே செய்யும்! எத்தனை எத்தனை நினைவுகளைத் தந்த அலுவலகம் இல்லையா?


******


இந்த வாரத்தின் செய்தி - Vaksana Farms :



இப்போது பல குடும்பங்களில், மேல் தட்டு குடும்பங்களில் பால் எங்கேயிருந்து வருகிறது, அரிசி எங்கேயிருந்து கிடைக்கிறது என்று தெரியாத குழந்தைகள் உண்டு. பால் டெட்ரா பாக்கெட்டுகளில் கிடைக்கும், அரிசி மரத்தில் வளரும்… என்று சொல்லும் குழந்ந்தைகள் உண்டு.  அப்படியானவர்களுக்கும், மற்ற குழந்தைகளுக்கும் உதவும் வண்ணம் ஒரு விஷயத்தினைச் செய்து வருகிறார்கள் Vaksana Farms உரிமையாளர்கள். இதனைச் செய்பவர்கள் இரண்டு பெண்கள். இது குறித்த ஒரு பதிவு சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்தில் இருக்கும் செய்தி இது - முடிந்தால் கீழே உள்ள சுட்டி வழி படித்துப் பாருங்களேன். 


This 14-Acre Tamil Nadu Farm Lets Your Child Live a Farmer’s Life for 24 Hours


******


இந்த வாரத்தின் Quote :  எப்படி என்றாலும்….


எங்களது ஒவ்வொரு பதிவிலும் தொடக்கத்தில் வெளியிடும் வாக்கியத்திற்காக சில சமயம் தேடுவது உண்டு.  அப்படித் தேடும்போது சில வாக்கியங்கள் மனதைத் தொடும் விதமாக அமைந்து விடுவது உண்டு.  சில வாக்கியங்களை தனியாகவே வெளியிடத் தோன்றுவதும் வழக்கம்.  அப்படி தனியாகவே வெளியிட வேண்டிய ஒரு Quotation தான் இன்றைக்கு இங்கே வெளியிடுகிறேன்…. படித்துப் பாருங்களேன்! உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கலாம்!



******


இந்த வாரத்தின் தகவல் - Stay Up all Night Day :



இன்று, 2026 ஆம் ஆண்டின் மே 9-ஆம் தேதி Stay Up all Night Day என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது என்பது தான் தகவல். இதற்கென சில தகவல்களைச் சொல்கிறார்கள்.  ஆனால் இதெல்லாம் நாங்க ரொம்ப காலமா செய்யறோமே - மஹா சிவராத்திரி நாளில்! - என்று எனக்குத் தோன்றியது! எதற்கு இந்த நாளை இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! 



******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

9 மே 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....