வியாழன், 7 மே, 2026

ஸ்ரீஅரவிந்தநாயகி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில், உத்தமர்சீலி - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் தொடரின் ஒரு பகுதியான பனிச்சிகரங்களில் மலையேற தயாராவோம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



ஆலயம் இருக்கும் இடம் சொல்லும் வரைபடம்...

திருச்சியை அடுத்த கல்லணைக்குச் செல்லும் போதெல்லாம் நடுவே வரும் கிராமத்தின் பெயர் என்னை ஈர்க்கும் - உத்தமர்சீலி (உத்தமசீலி என்பது வழக்கு மொழி!) எனும் அந்த கிராமம் குறித்து நிறைய தகவல்கள், செவி வழிச் செய்திகள் படித்ததுண்டு.  ஒவ்வொரு முறை அந்தப் பாதை வழி கல்லணைக்கோ, நேமத்திற்கோ செல்லும் போது ஒரு நாள் இந்த உத்தமர்சீலி கிராமத்திற்குள் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.  ஆனால் அந்த எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்க முடிந்ததில்லை.  சில நாட்கள் முன்னர் ஒரு விடுமுறை நாள் காலையில் வீட்டிலிருந்து எனது இரு சக்கர வாகனத்தினை எடுத்துக் கொண்டு உத்தமர்சீலி பயணிக்க முடிவு செய்து புறப்பட்டுவிட்டேன்.  எங்கள் வீடு அமைந்திருக்கும் பகுதியிலிருந்து உத்தமர்சீலி கிராமத்தில் இருக்கும்  ஸ்ரீஅரவிந்தநாயகி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் சுமார் 12.4 கிலோ மீட்டர் தொலைவு என்று கூகுள் ஆண்டவர் சொல்ல, பேருந்தில் செல்லாமல் இரு சக்கர வாகனத்தில் பயணப்பட்டேன்.  காவிரி ஆற்றின் வடகரையில் அருமையான பாதை வழி பயணித்தால் இந்த ஆலயம் அமைந்திருக்கும் உத்தமர்சீலியை எனது வீட்டிலிருந்து அரை மணி நேரத்தில் அடைந்து விடலாம்.


















கல்லணை செல்லும் சாலையில் இடப்பக்கம் பிரியும் குறுகிய சாலை வழி சில மீட்டர் தொலைவு பயணித்தால் நாம் பார்க்க வேண்டிய ஆலயம் - செங்கனிவாய்ப் பெருமாள் என்ற மாற்றுப் பெயர் கொண்ட வேணுகோபால சுவாமி ஆலயம் நம் கண்களுக்குப் புலப்படும்.  வெளியிலிருந்து பார்க்கும்போதே கோபுரங்களில் சவுக்கு மரங்களால் ஆன கட்டுமானங்கள் தெரிந்தன.  கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது போலும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்றால் வாசலில் நின்றிருந்த, ஆலயத்தினை சுத்தம் செய்யும் பெண்மணி, சில நாட்கள் முன்னர் தான் கும்பாபிஷேகம் நடந்தது, தற்போது மண்டல பூஜைகள் நடக்கிறது என்று தகவல் தந்தார்.  கூடவே மண்டலாபிஷேகம் நடக்கிறது, அதனால் நேரம் ஆகுமே என்று சொல்ல, எனக்கு ஒரு வேலையும் இப்போது இல்லை, அதனால் காத்திருக்கிறேன் என்று சொல்ல, முன்மண்டபத்தில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொள்ளச் சொன்னார்.  நான் திருமஞ்சனம் நடப்பதற்குள் சுற்றுப் பகுதிகளைப் பார்த்து வருகிறேன் என ஆலய வளாகத்திற்குள் சுற்றி வந்தேன்.  


ஆலய வளாகத்தில் கிழக்குத் திருச்சுற்றில் நம்மாழ்வார், உடையவர் சன்னதிகளும், தென் மேற்கு மூலையில் ஸ்ரீ அரவிந்த நாயகி தாயார் தனிச்சன்னதியிலும், வடக்குச் சுற்றில் விஷ்வக்சேனர் சன்னதியும் அமைந்திருக்கிறது.  ஆலய வளாகத்தில் சுதைச் சிற்பங்கள் சிலவும் மண்டபத்தின் மேலே அழகுற அமைந்துள்ளது.  சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்று இருப்பதால் வண்ணங்கள் பூசிய கோபுரங்கள் கண்களைக் கவரும் வண்ணம் இருந்தன.  தெற்குப்புற சுற்றில் சிறிய நந்தவனமும் அமைந்துள்ளது.  இருந்த நேரத்தில் அங்கே இருந்த பூக்கள், கோபுரம், சுதைச் சிற்பங்கள், யாகசாலை என முடிந்தவற்றை மட்டும் எனது அலைபேசிக்குள் நிழற்படங்களாகச் சிறை வைத்தேன். தாயார் சன்னதிக்கு உள்ளே செல்ல அவள் அங்கே ஏகாந்தமாக வீற்றிருந்தாள்.  அம்பாள் சன்னதிக்கு வெளியே தனியாக வேணுகோபாலின் சிலை ஒன்று இருந்தது.  பிறகு அதற்கான காரணம் தெரிந்தது. அந்தச் சிலை தான் முன்பு பிரதான சன்னதியில் இருந்த சிலை என்றும் பின்னப்பட்டதால் அதனை எடுத்து இங்கே தாயார் சன்னதிக்கு வெளியே வைத்திருக்கிறார்கள் என்றும் தெரிந்தது.  பிரதான சன்னதியில் இருக்கும் இறைவனின் சிலையை படம் எடுக்க முடியாது என்பதால் அங்கே இருந்த வேணுகோபாலனை படம் பிடித்துக் கொண்டேன்.  


திருமஞ்சனம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த ஆலயம் குறித்த சில செவி வழி செய்திகளைப் பார்த்துவிடலாம்.  சோழமன்னர்களில் ஒருவரான பராந்தக சோழன் (வீர சோழன், வீர நாராயணன், குஞ்சரமல்லன் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் கொண்ட மன்னன்) இந்தப் பகுதியில் ஆட்சி புரிந்தவர் என்றும், அவரது நான்கு புதல்வர்களில் ஒருவரான உத்தமசீலி என்று அழைக்கப்படும் புதல்வரின் பெயராலேயே இந்த ஊர் உத்தமர்சீலி என்றும் உத்தமசீலி சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.  கல்லணை கட்டப்பட்ட காலத்தில் இந்த ஊரில் தான் கட்டுமானப் பணியாளர்கள் தங்கியிருந்தார்கள் என்றும் நம்பிக்கை - ஊரில் சில செவிவழிச் செய்திகள் இருப்பதாக ஆலயத்தில் இருந்த ஒரு முதியவருடன் பேசியபோது சொல்லிக் கொண்டிருந்தார்.  சுற்றிலும் தோப்பும், தென்னை மரங்களும், மாமரங்களும் இருக்க நல்ல காற்று! அழகான சூழலில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்திலும் பூரண அமைதி. நான் சென்றது காலை நேரம் என்பதால் ஒன்றிரண்டு பக்தர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் உள்ளூர் பக்தர்கள் தான் வருவார்கள் போலும் என நினைக்க, சிலர் சிற்றுந்துகளில் வந்தார்கள். 


கும்பாபிஷேகம் சமீபத்தில் தான் நடந்தது என்பதால் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் என்றும் இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் செங்கனிவாய்ப் பெருமாளை குலதெய்வமாகக் கொண்ட நபர்கள் இந்தச் சமயத்தில் மண்டலாபிஷேகம் செய்விக்க பணம் கட்டியிருப்பதாகவும் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் தெரிந்தது.  முன் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு அந்த மனிதர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  எத்தனையோ பேச்சுகள் இருந்தாலும் ஆலயம் குறித்து பேசவில்லை. அங்கேயும் அரசியல் - ஆலய நிர்வாகம் அரசினிடத்தில் இருப்பதால் ஒரு வேளை தீபம் போடுவதற்கு, மாதத்திற்கு இரண்டு லிட்டர் தீபத்திற்கான எண்ணை வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது என்றார் சிப்பந்தி.  அதனால் இப்போது வரும் பக்தர்களிடமே சொல்லி அவர்கள் தருகிறார்கள் என்றும், பக்கத்தில் இருக்கும் ஒரு எண்ணை மில்லில் வேலை செய்யும் உள்ளூர் மக்களிடம் மில் முதலாளி, ஆலயத்திற்குத் தேவையான எண்ணையை மாதாமாதம் கொடுத்து விடுவார் என்றும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  


நான் ஆலயத்திற்குச் சென்று அரை மணிக்கும் மேலாக காத்திருந்த பிறகு திருமஞ்சனம் முடிந்து தரிசனம் செய்ய அழைத்தார்கள்.  உள்ளே சென்றால் - ஆஹா… என்ன அழகு! பாமா ருக்மணியுடன் காட்சி தரும் வேணுகோபால சுவாமி - முகத்தில் ஒரு புன்னகை - அந்தப் புன்னகையே போதும் நம் மனதிலிருக்கும் பாரங்களை நீக்குவதற்கு! அதனால் தானோ என்னவோ செங்கனிவாய் பெருமாள் என்று அவரை அழைக்கிறார்களோ என்னவோ?  மண்டலாபிஷேக உபயதாரர்களுடன் நானும் நின்றிருந்ததால் நின்று நிதானித்து அர்ச்சனாதிகள் முடியும் வரை இறைவனை தரிசித்து மகிழ்வுற முடிந்தது.  அங்கே பூஜைகள் முடிந்து தாயார் சன்னதியிலும், மகா மண்டபத்தில் இருக்கும் தும்பிக்கையாழ்வார், ஹனுமன் சன்னதிகளிலும், முன்மண்டபத்தில் இருக்கும் பெரிய திருவடியான கருடன் சன்னதியிலும் பூஜைகள் முடிந்து பிரசாதம் கிடைத்தது.  எல்லா பூஜைகளும் முடிந்த பிறகு சிறு தொன்னையில் நெய் வடியும் அக்கார அடிசல்……  ஆண்டாளின் முழங்கை வழிவார பாசுரம் நினைவுக்கு வந்தது.  


தெற்குப் பக்கத்தில் நந்தவனத்திற்கு அருகே உள்ள கூடையில் தொன்னையைப் போட்டு அருகே வைத்திருந்த தண்ணீரில் கை அலம்பிக் கொண்டு உள்ளே முன் மண்டபத்திற்கு வந்தால், அங்கே இருந்த பெண் சிப்பந்தி வாழைப்பழம் நீட்டுகிறார்! கிராமத்தில் உள்ள ஏதோ ஒரு விவசாயி, தனது நிலத்தில் விளைந்த வாழையிலிருந்து ஒரு தார் வாழைப்பழங்களை ஆலயத்தில் கொடுத்து, வரும் பக்தர்களுக்குத் தரச் சொன்னாராம்! என்னே ஒரு நல்ல மனம்! அந்த நல்ல மனம் வாழ்க என்று வாழ்த்திவிட்டு வெளியே வந்தேன்.  வெளியே வந்ததும் சுற்றுப் புறத்தில் இன்னும் சில படங்களையும் எடுத்துக் கொண்டேன். அப்போது அங்கே வந்த அந்தச் சிப்பந்திக்கு, ஆலயத்தினை தூய்மையாக வைத்திருக்கும் அவருக்கு ஒரு சின்ன அன்பளிப்பினை வழங்கிய போது வேண்டாமென மறுத்தார்.  ஆனாலும் அவர் கையில் கொடுத்தேன்.  ஊரிலேயே இன்னும் ஒரு சிவன் கோயிலும் இருக்கிறது என்று வழி சொன்னார். ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் ஆலயம் - வீடுகளுக்கு நடுவே அமைந்திருக்கும் அந்த ஆலயத்திற்கு வண்டியில் சென்று சேர்ந்த போது ஆலயம் பூட்டி இருந்தது.  ஆலயத்தின் அர்ச்சகர் காலையிலேயே வந்து பூஜைகள் முடித்துச் சென்று விட்டார் போலும். பிறிதொரு முறை அந்த ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அங்கிருந்து வீடு திரும்பினேன்.  


ஒரு விடுமுறை நாளில் இப்படி ஒரு அழகான ஆலயத்திற்குச் சென்று வந்ததில் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது.  மீண்டும் வேறொரு ஆலயத்திற்குச் சென்று வந்த அனுபவத்துடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

7 மே 2026




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....