அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
தொடரின் சென்ற பகுதியில் உலகத்தில் இருக்கும் சிவாலயங்களிலேயே உயர்ந்த சிவாலயமாக போற்றப்படும் துங்க்நாத் ஆலயத்திற்கு, பனிச்சிகரங்கள் வழி பயணிக்க ஆரம்பித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்தப் பகுதியில் தொடர்ந்து பனிபடர்ந்த சிகரங்கள் வழி நடந்து அந்த ஆலயத்தினை அடைவது குறித்துப் பார்க்கலாம் வாருங்கள். துங்க்நாத் ஆலயம் அமைந்திருக்கும் மலையின் அடிவாரமான சோப்தாவிலிருந்து மொத்தமே 3.5 கிலோ மீட்டர் தான் நடக்க வேண்டும். அந்த 3.5 கிலோ மீட்டரில், நாங்கள் சென்ற ஃபிப்ரவரி மாதத்தில், 3 கிலோ மீட்டருக்கும் மேலாக பாதையில் பல இடங்களில் பனி உறைந்து கிடந்தது. முதல் அரை கிலோ மீட்டர் மட்டுமே பாதையில் பனி இல்லாமல் பக்கவாட்டில் மட்டும் பனி கிடந்தது. அதற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஆலயத்தினை அடையும் போது, சிவாலய வளாகமே பனி மூடிக் கிடந்தது. அதிலிருந்தே நாங்கள் எத்தகைய பாதையில் மலையேற்றம் செய்திருப்போம் என்பதை நீங்கள் உணர முடியும்.
முந்தைய நாட்களின் அதீத பனிப்பொழிவின் காரணமாக சிகரம் முழுவதுமே பனி படர்ந்திருந்தது. சுற்றி எங்கே பார்த்தாலும் வெள்ளிப் பனிமலைகள் தான். சுற்றிலும் பனி படர்ந்து இருப்பதால் தொடர்ந்து குளிர்காற்றும் அடித்துக் கொண்டிருந்தது. அதையும் தாண்டி, பனிச்சிகரத்தில் நடப்பதால் எங்களுக்கு கசகசவென இருந்தது. அதற்காக குளிருக்கான உடைகளை அகற்றவும் முடியாது. அந்தக் குளிர் நம்மைத் தாக்கி உடல் நலத்தில் பிரச்சனை உண்டாக்கக் கூடும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். நடுநடுவே பனியினை எடுத்து மேலே தூக்கிப் போட்டு விளையாடுவதும். பனியில் அப்படியே படுத்துக் கொள்வதும், தேவைப்படும் இடங்களிலெல்லாம் கிடைத்த பாறைகள் மீது அமர்ந்து ஓய்வு எடுப்பதும் என எங்கள் பயணம் சென்று கொண்டிருந்தது. ஒரு இடத்தில் பக்கவாட்டுப் பாறைகளில் இருந்த பனியில் அப்படியே படுத்துக் கொண்டோம் - சில நிமிடங்களில் முதுகுப் புறம் அப்படியே மரத்துப் போகும் அளவுக்கு பனி! அந்தப் பனிபடர்ந்த பாறைகளில், பல இடங்களில் Black Snow! காலணிகளில் Crampons அணிந்திருந்த போதிலும் வழுக்கியது. மிக மிகக் கவனமாக அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டியிருந்தது.
எங்கள் மலையேற்றத்தின் போது நாங்கள் பார்த்ததில் நூற்றுக்கு 95 பேர் இளைஞர்கள் தான். எங்கள் மூவரைத் தவிர ஐம்பதைக் கடந்த வேறு இருவரை மட்டுமே பார்க்க முடிந்தது. இளைஞர்களில் பலர் மலையேற்றம் செய்ய முடியாமல் அமர்ந்து கொள்ள, சிலர் திரும்பிவிட, அசராமல் மலையேறிய எங்களைப் பார்த்து பலருக்கு ஆச்சர்யம். எங்களிடம் சில இளைஞர்களும் யுவதிகளும் பேச்சுக் கொடுத்தார்கள். யுவதிகளுடன் பேசுவதில் நண்பர் இந்தர்ஜீத் அதிக ஆர்வம் காட்டுபவர்! அதனால் அவருடன் சில பெண்கள் பேசிக் கொண்டே நடந்தார்கள். நானும் மற்ற நண்பர்களும் அவரை கொஞ்சம் எச்சரித்துக் கொண்டே இருந்தோம். அதுவும் தானாகவே வலிந்து போய் பேசினால், அது பிரச்சனையை உண்டாக்கலாம் என்பதையும் நண்பர் பிஷ்ட் அவரிடம் சொல்லிக் கொண்டு வந்தார். பிரச்சனைகளை நாமாகவே தேடிக் கொள்வதில் என்ன லாபம் இருக்கப் போகிறது! அதிலும் சில இளைஞர்கள் ஒரு வித மயக்கத்தில் மலையேற்றம் செய்து கொண்டிருக்க, அவர்களால் பிரச்சனை வரலாம் என்பதை அவருக்குப் புரிய வைத்தோம். ஏற்கனவே சிகரெட் பிடித்த ஒரு நபருடன் அவர் வாக்குவாதம் செய்திருந்தார். தேவையற்ற வாக்குவாதம் தான்!
கொஞ்சம் கொஞ்சமாக நடந்து நாங்கள் முன்னேற, எங்கள் கண்ணெதிரே தெரிந்த காட்சி - பனிப் பொழிவில் மூடிக் கிடந்த துங்க்நாத் சிவாலயம் - ஆஹா என்னவொரு அழகு! பாதைகள் முழுவதும் மூடிக்கிடக்க, ஆலயமும் மூடியே இருந்தது. முந்தைய பகுதி ஒன்றில் சொன்னது போல பஞ்ச கேதார் என்று அழைக்கப்படும் ஐந்து சிவாலயங்களில் ஒரே ஒரு கேதார் - கல்பேஷ்வர் மட்டுமே வருடத்தின் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும். மற்ற நான்கு கேதார்களும் வருடத்தில் ஆறு மாதங்கள் மூடியே இருக்கும் - அதீத பனிப்பொழிவு காரணமாக அந்த ஆலயங்களை திறந்து வைக்க முடியாது - ஆலயத்தின் பெரும்பகுதியை பனி மூடிக் கொள்ளும் என்பதால் அங்கே வழிபாடுகள் செய்ய இயலாது. நாங்கள் சென்ற ஃபிப்ரவரி மாதம் பனிப்பொழிவின் ஊடே தெரியும் ஆலயத்தின் சில பகுதிகள் - கோபுரம் உட்பட - மட்டுமே காண முடியும். உள்ளே சென்று சிவபெருமானை தரிசிக்க முடியாது என்றாலும், அந்த மலையே சிவன் ரூபமாக நினைத்து வெளியே நின்றபடி அவனை வணங்குவது தான் வழி.
வெளியே ஒரு இடத்தில் நாங்கள் கொண்டு சென்ற பூஜைப் பொருட்களை சமர்ப்பித்து, மனம் உருக, தெரிந்த மந்திரங்கள் சொல்லி, அனைவருடைய நலனையும் வேண்டிக்கொண்டு அங்கேயே சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தோம். உலகத்தின் உயரமான சிவாலயத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்ற அந்த எண்ணமே மனதிற்கு அமைதியையும் மகிழ்வையும் ஒருசேர தந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் இருக்கும் போது அலைபேசியில் கொஞ்சம் சிக்னல் கிடைக்க, வீட்டிற்கும் நண்பர்களுக்கும் வாட்ஸப் வழி அழைத்து நாங்கள் கண்ட காட்சிகளை அவர்களுக்கும் காண்பித்தோம். நம்மால் செல்ல முடியும் இடங்களிலிருந்து, மற்றவர்களால் செல்ல முடியாத அந்த இடங்களை அவர்களுக்கு அலைபேசி வழி காண்பிக்க முடிந்தால் ஒரு வித மகிழ்ச்சி தானே. கல்லூரி நண்பர்கள் சிலரை WhatsApp Conference Call வழி வீடியோ காலில் அழைத்து நான் பார்த்துக் கொண்டிருந்த காட்சிகளை அவர்களுக்கும் காண்பித்தேன்.
அதிலும் முன்னேற்பாடில்லாமல் அங்கேயிருந்து திடீரென்று அழைத்து அந்த சிவாலயத்தினையும் பனிபடர்ந்த சிகரங்களையும் அவர்களுக்குக் காண்பித்ததில் எனக்கும் ஒரு திருப்தி - பார்த்த அவர்களுக்கும் மனதில் மகிழ்ச்சி - ஏதோ நம்மால் ஆனது என்ற எண்ணம் தோன்றியது. முன்னேற்பாடில்லாமல் அழைத்ததால் நான்கு ஐந்து நண்பர்களால் மட்டுமே அந்தக் காட்சிகளை அப்போது காண முடிந்தது. அதனால் சில காணொளிகளை எடுத்து அப்போதைக்கு அப்போதே குழுவில் பகிர்ந்து கொள்ள, பார்த்த அனைவருமே, அடடா, அலைபேசி வழி நேரடியாக பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார்கள். வீட்டிற்கும் காணொளி வழி காட்சிகளை அனுப்பியதோடு, WhatsApp Video Call செய்து அந்தக் காட்சிகளை பகிர்ந்து கொண்டேன். அந்தச் சூழலில் சில நிமிடங்கள் அமர்ந்து, அந்த அனுபவங்களை மனதிற்குள் உள்வாங்கினோம்.
அந்த இடத்தில் பல இளைஞர்களும் யுவதிகளும் பாறைகளின் பக்கவாட்டில் அமர்ந்திருக்க, ஒரு சிறு சமதளப்பகுதியில் நிறைய பேர், கிடைத்த இடத்திலெல்லாம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். மலையேற்றம் செய்த பிறகு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வது அவசியம் தானே! 360 டிகிரியில் சுற்றிப் பார்த்தால் எல்லா இடங்களிலுமே கண்களுக்குப் புலப்படுவது பனிபடர்ந்த சிகரங்கள் மட்டுமே - எங்கே பார்த்தாலும் வெள்ளிப் பனிமலை. அப்படியான காட்சிகள் பாரதியை நினைவுக்குக் கொண்டு வந்தன. “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” என்று அப்போதே பாடி வைத்தவனாயிற்றே பாரதி! அவன் சொன்னது போல வெள்ளிப் பனிமலையின் மீது உலாவினோம். வாழ்க்கையில் எப்போதாவது மட்டுமே இது போன்ற அனுபவங்கள் நமக்குக் கிடைக்கும். அப்படியான அனுபவங்களைப் பெற நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும் என்று நான் நினைப்பேன்.
சில மணித்துளிகள் அங்கே அமர்ந்திருந்த பிறகு மீண்டும் எங்கள் மலைப்பயணம் துவங்கியது. எங்கே சென்றோம், அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதையெல்லாம் அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
11 மே 2026













பனியில் விளையாட்டு படம் புன்னகைக்க வைத்தது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇரண்டாவது காணொளி அபாரம். என்ன ஒரு பிரம்மாண்ட இயற்கை...
நம்மூர் அரசியல்வாதிகள் கண்ணில் பட்டால் ஏக்கமாகப் போய்விடும் அவர்களுக்கு
"ஹும்.. இது நம்மூரில் இருந்தால் இந்நேரம் வெட்டி காசு பார்த்திருக்கலாமே.."
மீம்ஸ் போட உதவும் காணொளி புன்னகைக்க வைத்தது. சிவாலய காணொளி பிரமாதம்.
உலகத்தின் உயரமான சிவாலயம்.. ஆஹா... கைலாஷை விட உயரமா வெங்கட்? கோவிலுக்குள் செல்லவில்லையா? அப்படியே கிளம்பி விட்டது போல எழுதி இருக்கிறீர்கள்?
பதிலளிநீக்கு