செவ்வாய், 26 மே, 2026

கதம்பம் - சித்திரைத் தேர் - இற்றைகள் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட கதைக்களம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******



சித்திரைத் தேர் - 14 மே 2026 : 









ரங்கனுக்கு வருடம் முழுவதும் திருநாள் தான்! ஒவ்வொரு திருநாளிலும் பல்வேறு வாகனங்களில் பலவித அலங்காரத்துடன் பவனி வரும் போது அதை காணக் கண்கோடி வேண்டும்! அப்படி இந்த சித்திரை மாதத்தில் நடைபெறும் விருப்பன் திருநாளின் ஒன்பதாம் நாளான இன்று இங்கு திருத்தேர்!


காலை 6 மணியளவில் திருத்தேரின் சப்பரத்தில் அமரும் அரங்கன் நான்கு சித்திரை வீதிகளிலும் பொதுமக்கள் வடம் பிடித்து ‘ரங்கா! ரங்கா! என்றும் கோவிந்தா கோவிந்தா' என்றும் விண்ணை முட்டும் வகையில் ஒலி எழுப்பி இழுத்து வர அழகுற பவனி வருவார்!


தேர் இப்போ எங்க இருக்காம்?


மேலவாசல் வந்துட்டதா யாரோ சொல்லிட்டு போனா!


மேல போனா வடக்குவாசல்ல வடம் பிடிச்சயான்னு என்ன கேட்பானே ரங்கன்! வரட்டும்! வரட்டும்! 


திருத்தேரை காண வடக்கு வாசலில் காத்திருந்த போது எங்களின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணி தான் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்! ஆழ்ந்த நம்பிக்கையும், பற்றும் தானே இப்புவியை இன்னமும் இறையுணர்வோடு இயக்க வைக்கிறது!


‘தம்பி! அப்பா சட்டைய இறுக்கி பிடிச்சுட்டு வாப்பா! 


கையில் மற்றொரு குழந்தையை சுமந்து செல்லும் அப்பாவின் சட்டையை பிடித்துக் கொண்டு கும்பலில் செல்லும் சிறுவன்! 


அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்து கும்பல் கும்பலாக வண்டி கட்டிக் கொண்டு வந்து, வீதிகளில் படுத்துறங்கி இன்றைய நாளில் தங்களின் குலதெய்மான ரங்கநாதருக்கு காணிக்கை செலுத்த, நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற வந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்! மனதை உருக்கும் விதமான பிரார்த்தனைகள்! 


இந்த கட்டுக்கடங்காத கும்பலை கட்டுப்படுத்தும் காவல்துறை ஒருபுறம்! ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர், பானகம் விநியோகம் செய்து கொண்டிருக்கும் மக்கள் ஒருபுறம்! அதை வாங்கி சாப்பிடும் மக்கள் ஒருபுறம்! சாப்பிட்டு விட்டு வீசியெறிந்த பாக்கு மட்டை தட்டுகளால் ஆன கூடாரம்! அதை சுத்தம் செய்து கொண்டிருக்கும் துப்புரவு பணியாளர்கள் ஒருபுறம்! 


திருவிழா என்றால் கடைகள் இல்லாமலா! பலாச்சுளைகள், உப்பு காரம் போட்ட மாங்காய்த்துண்டுகள், கண்ணாடி வளையல்கள் என்று கடை விரித்திருக்கும் வியாபாரிகள்! ஜனநெரிசலில் நின்று கொண்டிருக்கும் போது யாரேனும் விசறி விட்டால் எப்படி இருக்கும்? பெரிய பெரிய விசறியால் விசிறி விட்டு சேவை செய்வோர்! ராமனும், கிருஷ்ணனும் கண்முன்னே வந்து நிற்பதைப் போல வேடமிட்டு வலம் வருபவர்கள்!


அப்பா! எனக்கு வேணும்ப்பா! என்று அழுது அடம்பிடித்து ‘டிரம்ஸ்’ ஒன்றை வாங்கிக் கொண்ட சிறுவன்! குழந்தை ஒன்றை தோளில் சுமந்து வந்திருக்கும் தந்தை! இறையுணர்வோடு கணீரென்ற குரலில் கடவுளின் நாமாவை சொல்லிக் கொண்டிருந்தார்! இப்படி எங்கு நோக்கினும் ஜனத்திரள் தான்!


ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த விதத்தில் ஆடலோடும் பாடலோடும் இறைவனை துதித்து சந்தோஷத்துடன் வலம் வருவதை பார்த்து மகிழ்ந்து ரங்கனும் தன் புன்சிரிப்பில் அனைவரையும் காத்து ரட்சிக்கட்டும்! தேரோடிய வீதியில் மாலை முடிந்தால் வீதி பிரதட்சணம் செய்து விட்டு வரணும்!


********


இற்றைகள் - 19 மே 2026 : 



என்னக்கா! ஆளையே காணோம்? என்னாச்சு??


நேற்றைய பொழுது வாரசந்தைக்கு சென்ற போது வழக்கமாக நாங்கள் காய்கறிகள் வாங்குபவரிடம் சென்ற  போது தான் இப்படி விசாரித்தார்! சில நாட்களாக நான் சந்தைக்கு போவதே இல்லை! அப்பாவும் மகளுமாகவே சென்று வருவதால் என்னைப் பார்க்க முடிவதில்லை என்று உரிமையோடு விசாரித்தனர்!


ஜாடி மோகம்:


திருவரங்கத்து சித்திரைத் தேர் பற்றி பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம்! தேரோடிய நான்கு சித்திரை வீதிகளிலும் வீதி பிரதட்சணம் செய்வது சிறப்பு என்று சொல்வதுண்டு! தேரன்று மாலை மகளும் நானும் வீதி பிரதட்சணம் செய்து வந்தோம்! வழியில் சில பெரியவர்கள் கும்பலாக விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்னவாறு வீதி பிரதட்சணம் செய்வதை பார்க்க முடிந்தது!


தேர் நின்று கொண்டிருந்த நிலை அருகே மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டதையும் பார்க்க முடிந்தது! தேர்த் திருவிழா என்றால் அதையொட்டி கடைகள் இல்லாமலா! கீழச் சித்திரை வீதி என்று சொல்லப்படுகிற அந்த வீதி முழுக்க சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் போடப்பட்டிருந்தன! இரும்பு பாத்திரங்கள், காதணிகள், வளையல்கள், உணவுப் பொருட்கள், பூ ஜாடிகள்,பீங்கான் ஜாடிகள் என்று பார்க்க முடிந்தது!


அதில் இந்த முறை எங்களை பெரிதும் ஈர்த்தது என்றால் பலப்பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் அங்கு தென்பட்ட பீங்கான் ஜாடிகள் தான்! சிறிதும் பெரிதுமாக  கண்ணை பறிக்கும் விதமாக அழகுற காட்சி தந்தது! என்னிடம் சிறிதும் பெரிதுமாக நிறைய ஜாடிகள் இருக்கின்றது! நானும் எல்லாவற்றையும் உப்பு, புளி, ஊறுகாய் போட என்று பயன்படுத்தி வருகிறேன் என்றாலும் இங்கு அழகான ஜாடிகளைப் பார்த்ததும் வாங்கலாமே என்று தோன்றிவிட்டது…:)


ஒரு வியாபாரியிடம் ஒரே மாதிரி இரண்டு ஜாடிகளும், அழகான ஊதுபத்தி ஸ்டாண்ட் ஒன்றும் வாங்கிக் கொண்டேன்! மகள் வழக்கம் போல் காதணிகள் சிலவற்றை வாங்கிக் கொண்டாள்! இப்படியாக அன்றைய நாளில் பார்க்கவும் கேட்கவும் நிறைய விஷயங்கள் இருந்தது! நாங்கள் இருவரும் நடந்த தொலைவு Google fitல் 7கிமீ காண்பித்தது!


முகவரி:


2000 வது வருடத் துவக்கத்தில் நான் கல்லூரி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்த போது வெளியான திரைப்படம்! பாடல்கள் அனைத்துமே ஹிட்! நல்லதொரு குடும்பக் கதை! ஃபீல் குட் மூவி! அந்த சமயத்தில் தான் Y2k பிரச்சினைகள் உலகெங்கும் இருந்தது! அஜித், ஜோதிகா, ரகுவரன், சித்தாரா என்று இவர்களின் நடிப்பில் வெளியான அழகானத் திரைப்படம்!


ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இந்தப் படத்தை நேற்று மகளோடு சேர்ந்து இணையத்தில் பார்த்தேன்! Y2k பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி அவளிடம் சொன்னேன்! கூகுளாண்டவரிடமும் கேட்டுச் சொன்னேன்! 2k kid ஆன அவளிடம் நான் போன நூற்றாண்டிலும் இருந்தேன்! இந்த நூற்றாண்டிலும் இருக்கிறேன்! என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டேன்…:)


நேற்று இந்தத் திரைப்படத்தை பார்த்த போது கிளைமாக்ஸை இன்னும் கூட சிறப்பாக செய்திருக்கலாமே! ஹீரோயின் அவள் வீட்டில் எப்படி சமாளித்திருப்பாள்? ஹீரோவுக்கு வாய்ப்புகள் எப்படி கிடைத்தது? என்று சில கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது! நேரக் கெடுவாலும் அல்லது பணப் பிரச்சனையாலும் கூட இப்படி இருக்கலாம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்!


********


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

26 மே 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....