வெள்ளி, 22 மே, 2026

சித்ரா பௌர்ணமி - நிலவொளியில் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதை மாந்தர்கள் - அட்வைஸ் ஆறுமுகம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் அவர்களது இல்ல வளாகத்தில் சமீபத்தில் சித்ரா பௌர்ணமி அன்று செய்த ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணமும் அதன் தொடர்ச்சியாக உணவு என குழுவாக மகிழ்ந்த விஷயங்கள் குறித்த பதிவு - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


CGV சித்ரா பௌர்ணமி ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்  01.05.26 :



சித்ரா பௌர்ணமிக்கு எங்கள் apartment terrace-க்குப் போய் அடியார்கள் குருப் ladies எல்லாம் சேர்ந்து லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது. இது மஹாபெரியவா சொன்ன விஷயம் தான். பௌர்ணமி அன்று நிலவில் அம்பாள் இருக்கிறதாக தியானம் பண்ணி லலிதா சஹஸ்ரநாமம் சொல்வது மிகவும் விசேஷம் என்று சொல்லியிருக்கிறார். 


முதலில் பாராயணம், பின் நிலா பாட்டு தொடர்ந்து அந்தாக்ஷரி என்று  பண்ணலாமா என்று என் எண்ணத்தைச் சொன்னவுடன் Apt ஜெயஶ்ரீ உடனே தாராளமாகப் பண்ணலாமே என்றாள். அப்போது prgm இல் சாப்பிடுவது பற்றிய idea இருந்திருக்கவில்லை (எனக்கு இருந்தது😊).


அடியார்கள் குரூப்பில் இதைச் சொன்னவுடன் பாராயணம் முடிந்து கண்டிப்பாக நைவேத்யம் பண்ணனும். நான் பொங்கல் பண்ணிக் கொண்டு வருகிறேன் என்று ஒருவர் சொல்ல, சிலர் வேறு food items-ம் எடுத்துக்கொண்டு போய்  சாப்பிடலாமே என்றார்கள் (அட பரவாயில்லையே நமக்கு ஜோடி யாரோ இருக்கிறார்கள் என்கிற சந்தோஷம் எனக்கு!) அப்போ ஒரு பெண்மணி, நான் பிறந்தது சித்ரா பௌர்ணமியன்றுதான் அதனால் என் பிறந்தநாள் என்பதால் நான்

Eggless கேக் பண்ணி எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்ல மளமளவென்று யார் யார் என்னென்ன கொண்டு வருவது என்று முடிவானது (பாராயணம் எப்படி,என்ன விவரம், எப்போ ஆரம்பிப்பது, மற்ற  பூஜை items, தேவி படம் பற்றி எதுவும் அப்போது நாங்கள் பேசவில்லை, அதுவா முக்கியம்?😁) 


ஒரு பெண்மணி எனக்கு பேரன் பிறந்திருக்கான் அதனால் எல்லாருக்கும் ஐஸ்கிரீம் treat கொடுக்கிறேன் என்று சொன்னார். 


அதெல்லாம் முடிவானபின் மற்றபடி பூ, படம், தாம்பூலம், பூஜை பாத்திரங்கள் etc யார் யார் கொண்டு வருவது என்று முடிவாயிற்று. 


அனைவரும் சித்ரா பௌர்ணமி  அன்று (1.5.26) இரவு எட்டு மணிக்கு apartment terrace க்கு வந்து விட வேண்டும் என்று சொல்லிவிட்டோம்.


அதுக்கு முதல் நாள் இரவு நான் terrace க்கு போனபோது சரியாக எட்டு மணிக்கு கருமேகம்  திரண்டு லேசாக தூறல் ஆரம்பித்தது..  நிலவைக் காணோம். நானும் வா வெண்ணிலா🌝 மற்றும் நிலாவே வா🌙 என்றெல்லாம் பாடிக் கூப்பிட்டேன்.  ம்ஹும்… வரவில்லை.... (ஒழுங்காகத்தான் பாடினேன்...😌) இறுதியாக நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா என்றும் பாடியாயிற்று. (சுசீலாவுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்! நான் பாடினா அதுக்குப் பிடிக்குமா என்ன?😏)


எனவே மழை வந்து எங்கள் program, பாராயணம் தடைபட வேண்டாம் (சாப்பாடும் நனைய வேண்டாம்!) என்று எங்கள் venue வை banquet hall-க்கு மாற்றினோம்.



அன்று பௌர்ணமி நிலவு தக தகவென்று வானில் வலம் வர சரியாக banquet ஹாலில் 8.10 pm க்கு சஹஸ்ரநாம பாராயணம் ஆரம்பித்து 8.35 pm க்கு இனிதாக முடிந்தது. அனைவரும்  ஒரே அலை வரிசையில் (starting trouble சற்று இருந்தாலும்) படித்தது நிறைவாக இருந்தது. ஹால் முழுவதும் நல்ல vibration பரவிற்று🙏🏻. அதன் பின்னர்  தேவியைப் பற்றி இருவர் அழகான இரு கீர்த்தனைகள் பாடினர். 


பின் நைவேத்யம், கற்பூர ஆரத்தி முடிந்து அனைவருக்கும் தாம்பூலம் கொடுக்கப்பட்டது. 


அதிசயமாக அன்று  மழை பெய்யவில்லை. முழுநிலவும் தன் முகத்தைக் காட்டி மின்னியது! இது நிச்சயமாக அம்பாளின் அனுக்கிரஹமின்றி வேறொன்றும் இல்லை🙏🏻 🙏🏻



பின்னர் ஹாலிலிருந்து வெளியே வந்து நீச்சல் குளத்தருகே நின்று பின்புலத்தில் ஆகாயத்தில் நிலவு தெரியும்படியாக  photo எடுத்துக் கொண்டோம் (proof வேண்டுமல்லவா?).



எங்களின் முழு நிலவையொத்த வதனங்களின் எழில் கண்டு நிலவு வெட்கி தன் முகத்தை மேகக் கரங்களால் மூடிக் கொண்டது...🫣☺️. (இப்படியெல்லாம் நாங்களே சொல்லிக் கொண்டால்தான் உண்டு. பொறாமை நிறைந்த உலகமிது...🤨)


பாட்டெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், முதலில் வயிற்றுக்கு ஈவதைப் பார்ப்போம் என்று களத்தில் இறங்கினோம்.  தம் பிடித்து நாபிக் கமலத்திலிருந்து குரலெழுப்பி பாராயணம் செய்தோம் அல்லவா? அதனால்தான்🙂. மற்றபடி நாங்கள் என்றுமே அப்படியெல்லாம் உணவுக்குப் பறந்ததில்லை.. பறக்கவும் மாட்டோம்… இல்லையா friends?🙂


திருப்தியாக சாப்பிட்டபின்  நிலா பாட்டு பாட சற்று அவகாசம் தேவைப்பட்டது.. (உள்ளே போன சமாசாரங்கள் அப்படி + அத்தனை...)


பின்னர் ஒரு பெண்மணி (இதுவரை யாருமே கேட்டிராத புதுமையான, அபூர்வமான!!???) ஒரு நிலா பாடலுடன்  நிகழ்ச்சியைத் தொடங்கினார். அதாங்க… நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா...😁 சும்மா சொல்லக் கூடாது, வரிகள் மாறாமல் பாடினார்...


அதன் பின்னர் நாங்கள் ஒவ்வொருவரும் பலப் பல நிலாப் பாடல்களை பொழிந்து தள்ளினோம். ஒரு பாடலை ஒருவர் ஆரம்பிக்க அதைப் பலரும்  சேர்ந்திசைத்தோம்.. ஒரு பெண்மணி நிலாப் பாடல்களை எல்லாம் மொபைலில் பட்டியல் போட்டுக் கொண்டு வந்து பாடி அசத்தினார்...


எங்களோடு இருந்த ஒரு வட இந்தியப் பெண்மணி இந்தியில் நிலவைக் கொஞ்சினார், கெஞ்சினார், அழைத்தார்… பாடலும், அவர் குரலும் இனிமையாக இருந்தன. இறுதியில் சந்திரசேகர ஸ்தோத்திரமும் படித்தார். (சுலோகத்தின் பெயரில் சந்திரன் என்று வந்ததாலிருக்கலாம்).


அந்தப் பெண்மணியுடன் நான் (2 வருஷம் கழித்து) என் ஹிந்தியை தூசி தட்டி எழுப்பிக் கதைத்தேன்… பின்னர் இந்தியில் சொன்னேன், நீங்கள் அடுத்த முறை எங்களை சந்திக்கும்போது தமிழில் பேசக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று. அதற்கு அவர் சொன்ன பதில்தான் hilight : எனக்கு தமிழில் பேச மட்டுமல்ல படிக்கவும், எழுதவும்கூடத் தெரியும், தமிழ் இலக்கணம் தான் தெரியாது என்று! (அது நமக்கே தகராறு...😟) அதைக் கேட்டு என் முகத்தில் ஈ, எறும்பு, கொசு எதுவும் ஆடவில்லை😫.


மெதுவாக, நீங்கள் எவ்வளவு காலமாக இங்கு (தமிழ்நாட்டில்) இருக்கிறீர்கள் என்று கேட்க, அவர் 29 வருஷங்களாக என்று சொன்னாரே பார்க்கலாம்… சே, ஆனாலும் அப்பெண்மணி தமிழ் தெரியாதது மாதிரியே முகத்தை வைத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்திருக்க வேண்டாம்....😒பரவாயில்லை என் இந்திப் பறவை கூட்டை விட்டு சற்று நேரம் சுதந்திரமாக பறந்து செல்ல இது ஒரு வாய்ப்பு! (Always think positive..😊)


இவ்வாறாக படித்து, உண்டு, பேசி, பாடி, சிரித்து அன்றைய பௌர்ணமியைக் கொண்டாடினோம். இன்னும் எங்களால் பாடப்படாத பல நிலாப் பாடல்கள் அடுத்த பௌர்ணமிக்காக காத்திருக்கின்றன… நிலவுக்கும் அன்றைய இரவு மறக்காது என்றுதான் தோன்றுகிறது… நிலவு தூங்கினாலும் (என்றும்) நம் நினைவு தூங்கிடாது....😇🥰😍


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

22 மே 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....