வெள்ளி, 8 மே, 2026

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - துங்க்நாத் மலைச்சிகரம் - பகுதி பதினெட்டு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஸ்ரீஅரவிந்தநாயகி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில், உத்தமர்சீலி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் தொடரின் முந்தைய பதிவில் எங்கள் அடுத்த மலையேற்றத்திற்காக தயார் ஆனது குறித்து எழுதி இருந்தேன்.  எங்கே எந்த மலையேற்றம் என்பதை அந்தப் பதிவில் எழுதவில்லை. இந்தப் பதிவில் அந்த விவரங்களைப் பார்க்கலாம் வாருங்கள்.  எங்கள் பயணத்தில் கடைசி நாள் (17-02-2025) அன்று நாங்கள் திட்டமிட்டிருந்த மலையேற்றம் பஞ்ச கேதார் என்று அழைக்கப்படும் கேதார்களில் ஒன்றான துங்க்நாத் என்ற ஆலயம் அமைந்திருக்கும் மலைச்சிகரத்திற்கானதாக இருந்தது.  பொதுவாக கேதார் என்று சொன்னாலே அனைவருமே கேதார்நாத் என்று நினைத்து விடலாம்.  ஆனால் பஞ்ச் கேதார் அதாவது ஐந்து கேதாரங்கள் என்று சொல்லும்போது, அதில் ஒன்று மட்டுமே கேதார்நாத்.  கேதார்நாத் போலவே ஐந்து சிவாலயங்கள் சேர்த்து மொத்தமாக பஞ்ச் கேதார் என்று அழைக்கப்படுகின்றது.  அப்படியான ஐந்து கேதாரங்களில் மட்டுமல்லாது உலகிலேயே மிக உயரமான சிவாலயம் என்று சொன்னால் அது துங்க்நாத் என்று அழைக்கப்படும் சிவாலயம் தான்.  பஞ்ச கேதார் என்பதும் பஞ்ச பாண்டவர்களுடன் சம்பந்தமும் உண்டு.  


ஒரு சமயம் பஞ்சபாண்டவர்கள் சிவபெருமானை தரிசிக்க வேண்டி அவரைத் தேடிச் சென்றார்கள். சிவபெருமானோ இவர்களுக்கு தரிசனம் தராமல் ஒரு காளையின் வடிவத்தினை எடுத்துக் கொண்டார். பீமன் அந்த காளையை அடக்க முயன்ற போது சிவபெருமான் தனது உடலை மறைத்துக் கொண்டாராம்.  பின்னர் தனது உடலை ஐந்து பாகங்களாகப் பிரித்து, உத்தராகண்ட் மாநிலத்தின் ஐந்து இடங்களில் காட்சி தந்ததாகவும் கதை.  அப்படியான ஐந்து இடங்கள் தான் தற்போது பஞ்ச் கேதார் என்று அழைக்கப்படுகின்றன.  சிவபெருமான் காளை வேடத்தில் இருந்தபோது இருந்த திமில் (முதுகுப் பகுதி) கேதார்நாத்திலும், கைகள் துங்க்நாத்திலும், வயிற்றுப் பகுதி மத்மஹேஷ்வர் எனும் இடத்திலும், முகம் ருத்ரநாத் என்ற இடத்திலும் தலையும் தலைமுடியும் கல்பேஷ்வர் என்ற பகுதியிலும் காட்சியளிக்க, அந்த இடங்கள் ஐந்திலும் பஞ்ச பாண்டவர்கள் ஆலயம் அமைத்து வழிபட்டார்கள் என்றும் கதை.  


இந்த ஐந்து கேதாரங்களையும் ஒன்று சேர தரிசிக்க சிலர் பயணிப்பது உண்டு. ஐந்து இடங்களுக்கும் பயணம் செய்ய குறைந்த பட்சம் 12 நாட்களாவது தேவை! கடுமையான மலையேற்றம் இருப்பதால் எல்லோராலும் இந்தப் பயணத்தினை மேற்கொள்ள சாத்தியமில்லை என்று சொன்னாலும் பலர் இந்தப் பயணத்தினை மேற்கொள்கிறார்கள்.  உத்திராகண்ட் மாநிலத்தில் இருப்பவர்கள் இப்படியான பயணத்தினை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  இந்த பஞ்ச் கேதார் பயணம் குறித்து பிறிதொரு சமயம் தனியாக பார்க்கலாம்.  இப்போதைக்கு பஞ்ச் கேதார் என அழைக்கப்படும் ஐந்து சிவாலயங்களில் சிவபெருமானின் கைகள் இருக்கும் இடமாகச் சொல்லப்படும் துங்க்நாத் சிவாலயம் குறித்தும், அங்கே செல்லும் போது எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் பார்க்கலாம்.  அதற்கு முன்னர் ஒரு தகவல் - இந்த ஐந்து சிவாலயங்களில் ஒரு சிவாலயம் (கல்பேஷ்வர்) மட்டும் வருடம் முழுவதும் திறந்திருக்கும். மற்ற சிவாலயங்கள் மே மாதம் முதல் அக்டோபர் வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 













சோப்தா என்ற இடத்திலிருந்து மலையேற்றம் செய்து இந்த துங்க்நாத் சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்.  அடிவாரத்திலிருந்து சுமார் மூன்றரை கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.  மூன்றரை கிலோமீட்டர் தானே, பதினைந்து இருபது நிமிடங்களில் நடந்து விடலாம் என்று நினைக்க முடியாது - இது மலையேற்றம்! அது மட்டுமல்லாது பனிப்பொழிவு தொடர்ந்து இருப்பதால், பாதைகளில் பல இடங்களில் பனி உறைந்து கிடக்கும்.  அதிலும் மேலும் மேலும் பனிப் பொழிவும், அது பாதி கரைந்து அதன் மீதே மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டு, பலமுறை இப்படி நடந்த பிறகு சில இடங்களில் Black Snow என்று அழைக்கப்படும் கடுமையான பனிப்பாறை உருவாகி விடும்.  அந்தப் பாறையில் காலை வைத்தால், என்னதான் Crampons உள்ள காலணிகள் இருந்தாலும் கொஞ்சம் பிசகினால் கூட வழுக்கி விழ வேண்டியது தான்.  அப்படிப் பனிப்பாறையில் வழுக்கி விழுந்தால் கால்களோ, இடுப்போ அல்லது கைகளிலோ எலும்பு முறிவு நிச்சயம்.  


மொத்தமாக மூன்றரை கிலோமீட்டர் தொலைவு தான் மலையேற்றம் என்றாலும் கடினமான மலையேற்றம் - அதிலும் முதலில் சாதாரணமாக பக்கவாட்டில் மட்டும் இருந்த பனி, கொஞ்சம் கொஞ்சமாக பாதை முழுவதுமாக பனி மூடிக் கிடக்க, அந்தப் பாறைகளில் ஏறுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.  சுமார் ஏழு மணிக்கு ஆரம்பித்த எங்கள் மலையேற்றத்தில் ஒரு சில நிமிடங்களிலேயே மூச்சு வாங்க ஆரம்பித்து இருந்தது.  அனைவருமே மெதுவாக நடந்து செல்வதும், ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் இயற்கையின் அழகை அலைபேசி வழி சிறைபிடிப்பதும், அப்படியான நேரங்களில் கொஞ்சமாக ஓய்வு எடுத்துக் கொள்வதும் என்று தொடர்ந்து கொண்டிருந்தோம்.  மூன்றரை கிலோ மீட்டர் தான் என்றாலும் எங்களுக்கு சற்றேறக்குறைய மூன்று மணி நேரம் ஆகியிருக்கலாம்.  எப்போதும் மலையேற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயம் - நம் உடல் நமக்குத் தரும் சிக்னல்களையே!  “போதும்பா! கொஞ்சம் ஓய்வு கொடு” என நமக்கு உடல் தரும் சிக்னலை மதித்து, கொஞ்சம் ஓய்வு தந்தால், தொடர்ந்து மலையேற்றத்தில் பிரச்சனை இருக்காது. ஆனால் ரொம்பவும் அதனைக் கட்டாயப்படுத்தினால் அதீத பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. 




கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டிருந்தோம். பொதுவாக பனிப்பொழிவு இல்லாத நாட்களில் செல்லும் பாதையில் கடைகளும் உண்டு.  ஆனால் ஆலயம் மூடியிருக்கும் காலங்களில் இந்தப் பகுதியில் கடைகள் ஏதும் இருப்பதில்லை - ஆனாலும் பனிப்பொழிவு சமயத்தில் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் தான் - கடைகளை திறக்கும் அளவிற்கு சூழல் இருப்பதில்லை என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் கடைகளில் கிடைக்கும் தேநீர் போன்றவற்றை பருகி, கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொண்டு தான் பயணிக்க வேண்டியிருந்தது.  இப்படி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம் - சில இடங்களில் சக பயணிகள் முடியாமல் திணற அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தோம்.  ஒரு சிலர் உடலை வருத்தி, தொடர்ந்து மலையேற்றம் செய்ய, மூச்சு இறைத்து, மேலே செல்ல முடியாது என அப்பகுதியிலேயே அமர்ந்து கொள்கிறேன் என்று சொல்வதும் நடந்தது.  



முதல் சில மணித்துளிகளில் எடுத்த படங்கள் மற்றும் காணொளிகளை இந்தப் பகுதியில் இணைத்திருக்கிறேன்.  இணைத்த காணொளிகளில் நான் பேசும்போது மேல்மூச்சு வாங்க பேசியிருப்பது தெரியும்.  அதிலிருந்து எத்தனை கடுமையான மலையேற்றம் என்பதும் உங்களுக்குத் தெரியலாம். இது இப்படி இருக்க, அந்த இடத்தில் உல்லாசப் பயணம் போல வந்திருந்த சில இளைஞர்கள் அந்த பனிச்சிகரங்கள் இருந்த இடங்களில் இருக்கும் தூய்மையைச் சிதைக்கும் வண்ணம் புகைப் பிடிப்பதும், கேன்களில் இருந்த பீர் அருந்துவதும், ரகளை செய்வதுமாக இருந்தார்கள். கொஞ்சம் கூட அறிவில்லாமல் இயற்கையாக நமக்குக் கிடைத்த பொக்கிஷத்தினைக் கெடுப்பது போல புகைப்பதும், மது அருந்துவதுமாக இருந்தவர்களை என்னவென்று சொல்ல! அனைவருமே இளைஞர்கள் - சொல்லியும் பயனில்லை எனும்போது நாம் அந்த இடத்தினை விட்டு அகல்வதைத் தவிர வேறு வழியில்லை. அந்த இளைஞர்கள் இருந்த இடத்திலிருந்து விலகியே இருந்தோம். இந்த மலையேற்றத்தில் தொடர்ந்து எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களையும் வேறு சில விஷயங்களையும் வருகின்ற பகுதிகளில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே. 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

8 மே 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....