செவ்வாய், 5 மே, 2026

கதம்பம் - மண்டலா - திக்!...திக்!...திக்!.... - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ரோஷ்ணி கார்னர் - மண்டலா : 


மகள் சமீபத்தில் வரைந்த மண்டலா ஓவியம் ஒன்றும் வண்ணம் தீட்டிய மண்டலா ஓவியம் ஒன்றும் உங்கள் பார்வைக்கு!



டிசைன் வரைந்து வண்ணம் தீட்டியது...


புத்தகத்தில் உள்ள டிசைனில்  வண்ணம் தீட்டியது...

********



திக் திக் திக் - வாசிப்பனுபவம் - 16-04-2026 : 



சமீபத்தில் நான் வாசித்த அமானுஷ்ய த்ரில்லர் புத்தகம் தான் திக்..திக்..திக்…! ஆசிரியர் நம்ம ‘காலச்சக்கரம் நரசிம்மா’ சார். இவரின் கதைகளில் வரலாறு மட்டுமல்ல பல அமானுஷ்யங்களும் கொட்டிக் கிடக்கும் என்பது நமக்கெல்லாம் தெரியும்! அப்படி இந்தப் புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன! செல்வத்துள் எல்லாம் தலை! மற்றொன்று வசு வாசி வசீ! இரண்டு கதைகளுமே வாசிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது!


செல்வத்துள் எல்லாம் தலை!!


‘சுந்தர காண்டம் வாசிக்கும் போது பிறந்ததால் தன்னுடைய தாத்தா தனக்கு ‘சுந்தர ஜானகிராமன்’ எனப் பெயரிட்டதாகவும், அதை இப்போது ‘சுஜன்’ என்று வேலை வாய்ப்புக்காக தன் பெயரை மாற்றிக் கொண்டதாக செய்தித்தாளில் விளம்பரம் செய்கிறான் கதாநாயகன்! தன் வயதான பெற்றோரை மருத்துவரிடம் காண்பிக்க அழைத்துச் செல்லும் போது மருத்துவர் அனந்தசயனம் சுஜனின் நிலையை பார்த்து அவனுக்காக ஒரு வேலையை ஏற்பாடு செய்து தருகிறார்!


ஊட்டியின் வெலிங்ட்டன் பகுதியில் உள்ள வென்லாக் பங்களாவில் வசிக்கும் 90 வயதான ஏகாம்பரம் தாத்தா! அவரின் சொத்தையும், 80 கோடி மதிப்புள்ள புதையலையும் கைப்பற்ற காத்துக் கிடக்கும் அவரின் நெருங்கிய உறவினர்கள்! இந்த நிலையில் ஏகாம்பரம் தாத்தாவை கவனித்துக் கொள்ள ஒரு ஆண் நர்ஸாக அங்கு வருகிறான் கதாநாயகன் சுந்தர ஜானகிராமன் என்கிற சுஜன்! 


சுஜனின் பெயர் மாற்ற விளம்பரத்தை பார்த்ததால் தான் அவனுக்கு இந்த வேலை தரப்பட்டதாக தாத்தா அவனிடம் சொல்கிறார்! அவன் உள்பட அந்த பங்களாவில் வசிக்கும் அனைவருமே அதிலிருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயல்கிறார்கள்! ஒருவேளை புதையலுக்கும் விளம்பரத்துக்கும் சம்பந்தம் இருக்குமோ???


ஏகாம்பரம் தாத்தாவின் சொத்தையும் புதையலையும் உறவினர்கள் கைப்பற்றினார்களா?? சுஜன் தாத்தாவின் நம்பிக்கையை பெற்றானா? தாத்தா மறையும் நிலையில் சுஜனின் காதில் சொல்லிச் சென்ற ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்ற திருக்குறளில் அவர் சுஜனுக்கு சொன்ன செய்தி தான் என்ன??


இப்படி பலப்பல திருப்பங்களும், விடுகதை போன்ற மர்ம முடிச்சுகளும் நிறைந்த கதை இது! வாசித்துப் பார்த்தால் தான் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நம்மால் உணர முடியும்!


பின் குறிப்பு: இந்த கதை குறித்து ஏற்கனவே என்னவர் எழுதிய பதிவு இங்கே!


வசு..வாசி..வசீ…!


விக்ரம் ஷோபி இருவரும் காதலர்கள்! விக்ரமின் தங்கை வசுந்தராவுக்கு மனோதத்துவ நிபுணர் வாசுதேவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவளின் இயல்பான குணாதியங்களில் நிறைய நிறைய மாற்றங்கள் உருவாகிறது! இதைக் கண்டு அதிர்ச்சி கொள்ளும் விக்ரமும் ஷோபியும் அவளின் இந்த நிலையை குறித்த ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள்!


ரஞ்சித் தாக்கர் சென்னையின் பிரபலமான ஆர்கிடெக்ட்டாக வளர்ந்து வரும் சூழலில் அவரின் கனவுப் பிராஜெக்ட்டான ‘மில்கி வே’யை அடுத்த நாள் காலை  உரியவரிடத்தில் ஒப்படைக்கப் போகும் சூழலில் ஒரு பதற்றமான நிலை உருவாகிறது! அவன் கட்டிய அந்த உயரமான 20 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் உச்சியில் நின்று ஒரு பெண் குதிக்க முற்படுகிறாள்!


வசுந்தராவின் செய்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?? எதனால் அவள் அப்படி நடந்து கொள்கிறாள்? ரஞ்சித்தின் மில்க் வேயில் திடீரென்று ஏன் அந்த பதற்றமான சூழல் ஏற்பட்டது?? விக்ரமும் ஷோபியும் கண்டுபிடிக்கும் விஷயங்கள் தான் என்ன??


முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த கதை தான் வசு..வாசி..வசீ…! 


வாய்ப்புக் கிடைத்தால் வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலை வாசித்துப் பாருங்களேன்!


********


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

5 மே 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....