வியாழன், 19 செப்டம்பர், 2019

இதை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை சமீபத்தில் படித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

”என்னை ஏன்னு கேட்க ஆளே இல்லை”! – இந்த வாக்கியம் வயதுக்கு ஏற்ப மாறும்… இளமையில் கர்வமாக! முதுமையில் பரிதாபமாக!சமீபத்தில் பார்த்த இரண்டு காட்சிகள் மேலே சொன்ன வாக்கியத்துக்குப் பொருத்தம்! இரண்டும் இரண்டு விதமான காட்சிகள்.  இரண்டும் சென்ற வாரத்தில் பார்த்த காட்சிகள். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்…

காட்சி-1: 522-ஆம் எண் கொண்ட பேருந்து – இந்திரபுரியிலிருந்து அம்பேத்கர் நகர் வரை செல்லும் பேருந்து – அந்தப் பேருந்துத் தடத்தில் என்னுடைய இல்லமும் அலுவலகமும் உண்டு என்பதால் சில நாட்களில் அப்பேருந்தில் செல்வது உண்டு. சென்ற வாரத்தில் அப்படிச் செல்லும் போது பேருந்தில் கைப்பையுடன் ஒரு முதியவர் – முகத்தில் இருக்கும் சதைகளில் நிறைய சுருக்கங்கள். ஏதோ நரம்புப் பிரச்சனை இருக்கலாம் என்பதை அவரது முகத்தில் அவ்வப்போது ஏற்படும் இழுப்புகளில் [Twitches] உணர முடிந்தது. பேருந்தில் ஏறியவர், ஓட்டுனரின் அருகே இருந்த கம்பியில் வாகாய் சாந்து கொண்டு ”Bபாயோ… ஔர் Bபெஹனோ….” என்று ஆரம்பித்தார்…    

காட்சி-2: வீட்டின் அருகே இருக்கும் CNG Pump-ல் வாயுவை நிரப்ப ஒரு புறம் ஆட்டோக்களும் மற்றோர் புறம் கார்களும் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன. புதிதாக வரும் வாகனங்கள் வேகமாக ஒரு U-turn அடித்து வரிசையில் இடம் பிடிக்கும். வாகனங்கள் வரும் வரிசையில் ஓர் இடத்தில் கும்மிருட்டு. அங்கே ஏதோ குவியலாகக் கிடப்பது போலத் தோன்றுகிறது. இருட்டு பழகிய பிறகு பார்த்தால் சாலையில் கிடப்பது ஒரு இளைஞர் – நல்ல குடிபோதையில் இருக்கிறார் என்பதை அவரது பிதற்றல்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. சாலையில் பாதியும், நடைமேடையில் பாதியுமாகக் கிடக்கிறார். எப்போது வேண்டுமானாலும், வேகமாக வரும் வாகனம் அவரை முட்டி மோதி காயப் படுத்தலாம் அல்லது உயிருக்கே ஆபத்தாகக் கூட முடியலாம்! அவரது பிதற்றல் - ”ப்ளீஸ் இதை மட்டும் செய்யாதீங்க!”

காட்சி-1 தொடர்ச்சி: ”Bபாயோ… ஔர் Bபெஹனோ….” இது கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும். முன்பெல்லாம் இப்படி தகரத்தில் தான் வந்தது. இப்போது எவர்சில்வரில் தயாரிக்கிறோம். இந்த ஒரு பொருளால் மூன்று வித வேலைகளைச் செய்யலாம் என்று வரிசையாக தான் விற்கும் பொருளைப் பற்றிச் சொல்கிறார் – அவர் கையில் இருப்பது ஒரு சாதாரண Peeler! ஒரே பீலரில் மூன்று விதமான பயன்பாடுகள் என்று ஒவ்வொன்றையும் காய்கறியை தோலுரித்து, மெல்லிய இழைகளாக நறுக்கி, கொஞ்சம் தடிமனாக நறுக்கி சிப்ஸ் ஆகப் பொரிக்க என மூன்று விதங்களாகச் செய்யலாம் என்று சொல்லி விற்பனை செய்கிறார் – காய்கறியிலிருந்து சீவி எடுக்கும் தோலைக் கூட அவர் கையிலிருக்கும் பையில் போடுகிறாரே தவிர கீழே போடுவதில்லை! அத்தனை ஈடுபாடு…  

காட்சி-2 தொடர்ச்சி: ”ப்ளீஸ் இதை மட்டும் செய்யாதீங்க!” என்று சொல்கிறார்?  பக்கத்தில் இருக்கும் கடை உரிமையாளர் – இந்த இளைஞர் இப்படிக் கீழே விழுந்து கிடக்கிறாரே, ஏதேனும் வாகனத்தில் அடிபட்டு விடுமோ என்கிற அக்கறையில் இவரை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறார். கூப்பிட்ட குரல்களுக்கு பெரிதாக பதில் இல்லை. ஒரு குடுவையில் கொண்டு வந்த தண்ணீரை பிதற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் தலையில் ஊற்றி மது மயக்கத்தினை மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதற்காகத் தான் இளைஞர் - ”ப்ளீஸ் இதை மட்டும் செய்யாதீங்க!” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் – என்னை அடிக்கலாம், உதைக்கலாம், திட்டலாம் – இப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், தலையில் தண்ணீர் மட்டும் ஊற்றாதீர்கள் என கையெடுத்துக் கும்பிடுகிறார்! ஏன் இப்படி?

காட்சி-1 தொடர்ச்சி: முதியவர் கையில் வைத்திருக்கும் பீலரின் விலை – அதிகமில்லை ஜெண்டில்மேன் – பத்தே ரூபாய் தான்! முதியவரே தொடர்கிறார் – இதன் மேம்படுத்தப்பட்ட தரத்திற்கு இருபது ரூபாய் கூட வாங்கலாம் – கடைகளில் பிளாஸ்டிக் பிடியோடு இருப்பதை நூறு ரூபாய்க்குக் கூட விற்பார்கள் – ஆனால் நான் விற்பனை செய்வது பத்து ரூபாய் மட்டுமே – வாங்கிக் கொண்டால் உங்களுக்கு நல்லது, எனக்கும் நல்லது என பேருந்தில் இருக்கும் அனைவரிடமும் சொல்கிறார். பேருந்தில் இருக்கும் பெண்கள் யாரும் வாங்கவில்லை – ஒரே ஒரு ஆண் மட்டும் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்! – வீட்டில் அவர் தான் சமையல் போலும்! பத்து ரூபாயில் அந்த முதியவருக்கு எவ்வளவு லாபம் கிடைத்து விடும்? ஆனாலும் உழைத்தால் தான் அவருக்குச் சாப்பாடு… அதனால் தான் முதுமையிலும், பேருந்து பேருந்தாக ஏறி இறங்கி ஒரு சாதாரண பொருளை விற்பனை செய்கிறார். நாள் முழுவதும் விற்பனை செய்தாலும், அன்றைக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை யார் அறிவார்… இப்படியும் அவருக்கு வாழ்க்கை ஓடுகிறது.  

காட்சி-2 தொடர்ச்சி: காசு கொடுத்து குடித்து அதன் மயக்கத்தில் இருக்கும் என்னை இப்படி தண்ணீர் விட்டு எழுப்பினால் நான் மீண்டும் சென்று குடிக்க வேண்டும்! என்னால் குடிக்காமல் இருக்க முடியாது என்று சொல்லும் இளைஞர் – வீட்டுக்குப் போய் குடி, இங்கே விழுந்து கிடக்காதே என்று சொன்ன கடைக்காரரிடம், மயக்கம் தீர்ந்ததும் நானே போவேன் – எனக்குத் தெரியும், இப்போதைக்கு என் மயக்கத்தினை மாற்றாதே - ”ப்ளீஸ் இதை மட்டும் செய்யாதீங்க!” என்று தொடர்கிறார். ஒரு வழியாக நகர்ந்து, நடைபாதையில் முழுவதுமாக படுத்துக் கொண்டு தன் பிதற்றலைத் தொடர்கிறார் - ”ப்ளீஸ் இதை மட்டும் செய்யாதீங்க!”.  கடைக்காரரும் – இவனை எல்லாம் திருத்த முடியாது – ஆண்டவன் விட்ட வழி – வாகனத்தில் இவன் அடிபட வேண்டும் என்று இருந்தால் மாற்றவா முடியும் என்றபடியே செல்கிறார். நானும் அங்கிருந்து நடக்கிறேன்.  

முதியவரும் இளைஞரும் – இரண்டு பேருடைய செயல்களும் வேறு விதம் – முதியவர் தன் வயிற்றுப் பிழைப்பை முதுமையிலும் தொடர, இளைஞரோ இந்த வயதிலேயே குடித்துச் சீரழிகிறார். முதுமையில் வறுமை கொடியது! இளமையில் ஏற்படும் மதுப் பழக்கமும் கொடியது தான்! ஆனால் மதுப் பழக்கத்தை மாற்றுவது இளைஞர் கையில் தான்! மது விற்பனையில் அரசுக்கு பணம் கிடைக்கிறது என்றாலும், எத்தனை குடும்பங்களை இந்த மது சீரழிக்கிறது? மது அரக்கன் என்றைக்கு வீழ்வானோ?

நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

 1. ஆரம்ப வரிகள் உண்மையான வரிகள். சோகம்.

  குட்மார்னிங்.

  பதிலளிநீக்கு
 2. மாற்றி மாற்றி சொல்லியிருக்கும் விதம் ரசிக்க வைத்தது.  முதல் காட்சியில் அந்த முதியவர் சகோதர சகோதரிகளே என்று ஆரம்பித்ததும் நான் யாசகம் கேட்கப்போகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

  மன்னித்துக்கொள்ளுங்கள் பெரியவரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றி மாற்றி எழுதியது பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இது மாதிரி இந்திய 'குடி' மக்களை யாரால் திருத்த முடியும்?  கொடுமை.  இவர்களைவிட, இவர்கள் வீட்டில் இருப்பவர்களுக்குத்தான் அதிக சிரமம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களே திருந்தினால்தான் உண்டு. வீட்டில் இருப்பவர்கள் தான் பாவம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. முதுமையிலும் உழைத்துப் பிழைக்கும் முதியவரோடு ஒப்பிட்டால் குடித்துச் சீரழியும் இளைஞன் அவமானச் சின்னம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவமானச் சின்னம் - அதேதான் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. இந்தியா போன்ற நாட்டில் இந்த மாதிரி நிகழ்வுகள் நாள்தோறும் நடந்துக்கொண்டுதான் இருக்கும். இவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜோசப் ஐயா. தினம் தினம் நடக்கும் கொடுமை தாப்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பொன்மொழி அருமை ஜி
  இந்த நாடு சீரழிந்து கொண்டு இருப்பதற்கு குடிகாரர்கள் காரணமல்ல பெட்டிக்கடை போல மதுக்கடைகளை திறந்து விட்ட அரசே காரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோழி முதலில் வந்ததா இல்லை முட்டையா கதை தான் கில்லர்ஜி. நீ குடிப்பதால் நான் விற்கிறேன்: நீ விற்பதால் நான் குடிக்கிறேன் என மாற்றி மாற்றி சொல்லிக் கொள்ள வேண்டியது தான். அரசு விற்பனை செய்யாத ஊர்களில் கள்ளச் சாராயம் பேரல் பேரலாய் விற்கிறது. அதைத் தடுக்கச் செல்லும் காவல்துறை நண்பர் லஞ்சம் வாங்காதவராக இருந்தால் கொலை மிரட்டல். வாங்குபவராக இருந்தால் இன்னும் அதிகம் காய்ச்சலாம். இது மிகப் பெரிய மாயச் சங்கிலி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. குடும்பத்தையே அழிக்கும் குடி.

  முதுமையிலும் உழைப்போர் ..காணும்போது மனதுக்கு துன்பம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 8. இரண்டு செய்திகளும் உணர்த்துவது பாடம்.
  உழைத்து பிழை . குடித்து சீர் அழியாதே!

  முதியவர் பெருமை, சிறியவர் சிறுமை.

  பொன்மொழி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா. இப்போது முட்டிவலி பரவாயில்லையா?

   நீக்கு
 9. இதில் முதன்மை இடம் திருப்பூர்... அசராமல் உழைக்கிறார்கள், அனைத்தும் இரு நாட்களில் வீண்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருநாட்களில் வீண்... சோகம் தான் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 11. ஹா ஹா ஹா இதை மட்டும் செய்யாதீங்க வெங்கட் பிளீஸ்ஸ்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 12. எந்த ஒரு நாட்டிலும் முதுமை பலஹீனம் கொண்டவர்கள் அந்த நாட்டின் அரசாங்கத்தால் பாதுகாக்கப் படவேண்டும்.
  அவ்வளவு தள்ளாத வயதிலும் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உலகத்திற்கே வெட்கக்கேடு.இது பெருமையல்ல.
  பாதுகாப்பு உத்திரவாதம் உள்ள இதமான சூழலை உணர்கின்றவர்கள் மதுவிலோ,போதையிலோ வீழ்வதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருள்மயம் - உங்கள் முதல் வருகையோ? மகிழ்ச்சி நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....