திங்கள், 23 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – மூதாட்டி தந்த கனி


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எவரொருவரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் புரிந்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் இங்கே வாழ்வது உங்கள் வாழ்க்கையைத் தவிர ஒவ்வொருவரும் உங்களை புரிந்து கொள்வதற்காக அல்ல - புத்தர்.


கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:CHசித்குல் கிராம உலா முடித்து காலை உணவாக ஆலூ பராண்டாவும் தேநீரும் சாப்பிட்டு முடித்தோம். தங்குமிடம் திரும்பி தயாராகி பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்வது என்ற திட்டத்துடன் நானும் நண்பர் ப்ரமோத் அவர்களும் புறப்பட, மைக்கேல் மற்றும் ப்ரஷாந்த்-உம் அவரவர் தங்கிய இடத்திற்குச் சென்றார்கள். நாங்கள் தங்கிய அறைக்கான வாடகையைக் கொடுத்து விட்டு தங்குமிட உரிமையாளருக்கு நன்றி கூறி அங்கேயிருந்து முதுகுச் சுமையோடு பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னரே மைக்கேலும் ப்ரஷாந்த்-உம் வந்து சேர்ந்திருந்தார்கள். நாங்கள் புறப்பட வேண்டிய பேருந்தும் வந்திருக்க பேருந்தில் ஏறி இருக்கைகளைத் தேடினோம். முன்பக்கத்தில் இடம் இருந்தாலும், ஏனோ பிரமோத் பின் புற இருக்கைகளையே தேர்ந்தெடுத்தார். பின்புறத்தில் கடைசி இருக்கையில் ஆறு பேர் அமரலாம்!


ஆனால் எப்போதுமே ஏழு பேருக்கு மேல் தான் இடித்துப் பிடித்து அமர்கிறார்கள். மூன்று பேர் அமரும் இருக்கைகளிலும் நான்கு பேர் – குறிப்பாக பெண் ஒருவர் அமர்ந்திருந்தால், பக்கத்தில் நிற்கும் பெண்மணியை அழைத்து அட்ஜஸ்ட் செய்து அமர்ந்து கொள்கிறார்கள்! உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களாகவே இருப்பதும், குறைவான பேருந்துகள் மட்டுமே இருப்பதாலும் இப்படி நடக்கிறது. இருக்கும் பேருந்து வசதிகளை எந்தவித குறைகளும் சொல்லாமல் பயன்படுத்துவது இங்கே சகஜமான ஒன்று! நம் ஊர் மக்களுக்கு எத்தனை பேருந்து வசதிகள் இருந்தும் போதவில்லை என்ற குறை எப்போதுமே உண்டு! போதும் என்ற மனம் இருந்தால் எப்போதும் சந்தோஷமே! அன்றைக்கு நாங்கள் பயணிக்க வேண்டிய தொலைவு ஒன்பது கிலோமீட்டர் மட்டுமே என்பதால் இப்படி ஆறு பேர் இருக்கையில் ஏழு பேர் அமர்ந்து செல்வதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எழுந்து நின்று கொள்கிறேன் எனச் சொன்னபோது கையைப் பிடித்து மீண்டும் அமர்த்தினார்! விரைவில் இறங்கி விடுவோம் என்று சொல்லிக் கொண்டே! அவர்களுக்கு முன்னரே நாங்கள் இறங்கிவிட்டோம்.


ரக்chசம் கிராமம் – chசித்குல் கிராமத்தினை விடவும் சிறிய கிராமம் – ஆனால் இன்னும் அழகான கிராமம் – சுற்றுலாப் பயணிகள் வருகை இங்கே இன்னும் அதிகரிக்க வில்லை என்பதால் தங்குமிடங்கள் மற்றும் டெண்டுகள் குறைவு தான். ஆனாலும் இங்கேயும் சில தங்குமிடங்கள் புதிதாக வந்திருக்கின்றன. நாங்கள் பேருந்திலிருந்து இறங்கியதும் சாலையோரத்திலேயே சில வயல்கள் – வயல் முழுவதும் அழகான பூக்கள் – அந்தப் பூக்களைப் பார்த்ததும் மயங்கிப் போனோம். வயல்வெளிக்கு அருகே சென்று நிழற்படம் எடுக்கலாமா என்று அங்கே இருந்த கடையொன்றில் கேட்க, படம் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் அந்த செடிகளை மிதித்து பாழ்படுத்தி விட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்கள். ரக்chசம் முழுவதுமே இந்தப் பூக்கள் இருந்த வயல்கள் நிறைந்திருந்தன.  பச்சைப் பசேலன இருக்கும் நிலமகளின் மீது எங்கும் இந்த மலர்கள் தான் கம்பளி விரித்து வைத்தார் போல இருந்தது!


இது என்ன மலர்கள்? என்ன பயிர் செய்திருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள ஆவல் உங்களுக்கும் உண்டல்லவா? எங்களுக்கும் ஆவல் வர கிராமவாசிகளிடம் கேட்டோம். அவர்கள் கேட்ட பதில் கேள்வி “குட்டு கா ஆட்டா உங்களுக்குத் தெரியுமா?” எனக்குத் தெரிந்தது தான் இந்த குட்டு கா ஆட்டா – ஆனால் நண்பர்களுக்குத் தெரியாதது. குட்டு கா ஆட்டா வட இந்தியாவில் நவராத்திரி சமயங்களில் பயன்படுத்தக் கூடிய ஒரு வகை ஆட்டா அதாவது மாவு! கோதுமை மாவிற்கு பதிலாக இந்த குட்டு கா ஆட்டாவை பயன்படுத்தி ரொட்டி போன்ற பதார்த்தங்கள் செய்வார்கள். பொதுவாக நவராத்திரி சமயத்தில் அதிகம் பயன்படுத்தினாலும், மற்ற சமயங்களிலும் இந்த மாவை பயன்படுத்தி உணவு தயாரிக்கலாம். புரதச் சத்து நிறைந்த மாவு இது. அந்த குட்டு கா ஆட்டா தயாரிப்பது இந்த செடிகளில் உருவாகும் தானியங்களிலிருந்து தான் என்று சொல்லி எங்களை அந்த வயலுக்கு அனுப்பி வைத்தார் கிராமவாசி.


ஆஹா எத்தனை அழகான வயல். இந்த மாதிரி வயல்கள் ஊர் முழுவதும் இருக்கிறது. வயலுக்கு நடுவில் சென்று சில படங்கள் எடுத்துவிட்டு, நாங்கள் ஆற்றங்கரை செல்லலாம் என நினைத்தோம். அச்சிறு கிராமம் மைக்கேலுக்குப் பிடித்து விட அங்கேயே இரண்டு நாட்கள் தங்கப் போவதாகச் சொல்லி தங்குமிடம் தேடிச் சென்றார். அவர் வரும் வரை நாங்களும் கிராமவாசிகளிடம் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு வகை புற்களை வெட்டி, அதனை கொடிகளில் காய வைத்திருந்தார்கள். பல வீடுகளில் இப்படியான புற்கள் காய்ந்து இருப்பதைப் பார்க்க முடிந்தது. அது என்ன, எதற்கு இப்படிச் செய்கிறார்கள் எனக் கேட்டபோது குளிர்காலத்தில் பசு போன்ற விலங்குகளுக்கு உணவே கிடைக்காது இங்கே! அதனால் கிடைக்கும்போது புற்களை இப்படிக் காய வைத்து வைத்துக் கொண்டால் பனிக்காலத்தில் பசுக்களுக்கு உணவாகத் தர முடியும் என்று சொன்னார்கள்.


பனிக்காலத்தில் தேவையானதை தனக்கு மட்டும் சேமித்து வைத்துக் கொள்ளாமல் தாங்கள் வளர்க்கும் பசுக்களுக்கும் சேமித்து வைக்கும் நல்ல எண்ணம் பாராட்டுக்குரியது தானே. நாங்கள் அங்கே காத்திருந்த போது ஆற்றங்கரைக்கான வழியையும் கேட்டுக் கொண்டோம். மைக்கேல் தனக்கான இடத்தினைப் பார்த்து இரண்டு நாட்கள் தங்க வசதி செய்து கொண்டு திரும்பினார். நாளொன்றுக்கு ஐநூறு ரூபாய் வாடகையில் ஒரு அறை கிடைத்தது என்று சொன்னார். அவரும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ள ஆற்றங்கரை நோக்கி நடந்தோம். ஆற்றின் குறுக்கே ஒரு இரும்புப் பாலம். பாலத்தினைத் தாண்டியதும் ஒரு சிறு வழி – அதன் வழியே சென்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் சமவெளி! அங்கே முழுவதும் குட்டு கா ஆட்டா வயல்கள்! மேலே மலைமீதும் சரிவுகளில் அதுவே! பார்க்கவே ரம்மியமாக இருந்தது அந்தக் காட்சிகள்.


அப்படியே ஒற்றையடிப் பாதைகள் வழியே வயல்களுக்கு மத்தியில் நடந்தோம் – மலைகள் மீதும் ஏறினோம்.  விட்டால் மலையுச்சிக்குச் சென்று விடும் ஆர்வம் வந்தது! ஆனால் சரியான உபகரணங்கள் இல்லாமல் மலையேற்றம் சரியல்ல! ஓரளவு உயரம் வரை சென்று அங்கே இருந்து பார்த்தால் ரக்chசம் கிராமமும் வயல்வெளிகளும் தெரிந்தன. வயல்வெளியில் வேலை செய்ய வந்தார் ஒரு மூதாட்டி. அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். காலை நேரமே வந்து வேலை பார்த்துக் கொண்டு மாலையில் வீடு திரும்புவாராம். அழகான மலைப்பகுதியில் இருப்பது உங்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். பனிக்காலங்களில் இங்கே இருப்பது ரொம்பவும் கடினம் என்றும் ஆனால் எங்களுக்கு அது பழகி விட்டது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த மூதாட்டி.   


மூதாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரை நிழற்படம் எடுக்க ஆசை வந்தது. கேட்காமல் எடுப்பது சரியல்ல என்பதால், அவரிடம் உங்களுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொள்ளலாமா? என நண்பர் கேட்க, அவருக்கு ஒரே வெட்கம்! அந்த மூதாட்டி வெட்கப்பட்டது அப்படி ஒரு அழகு! ஆஹா… படம் எடுக்க முடியவில்லையே என்று மனது அடித்துக் கொண்டது! ஆனால் படம் எடுக்க அந்த மூதாட்டி ஒப்புக் கொள்ளவில்லை! சரி பரவாயில்லை என படம் எடுக்காமல் விட்டோம். அந்த மூதாட்டி எங்களுக்கு அவர் கையிலிருந்த ப்ளம் பழம் கொடுத்தார். சுவைத்த போது வாழ்நாளில் இந்த மாதிரி சுவையான ப்ளம் பழம் சாப்பிட வில்லை என்று தோன்றியது! அப்போது தான் பறிக்கப்பட்ட ப்ளம் பழம் என்பதால் அத்தனை சுவை. பொதுவாக நகரங்களுக்கு வந்து சேர்வதற்குள் அதன் சுவையே மாறி விடுகிறது! பதப்படுத்தப்பட்டு வருவதால்!வயல்வெளிகளை விட்டு வர மனமே இல்லை! ஆனால் வெளியே வந்து தானே ஆக வேண்டும். கீழே ஆற்றங்கரை ஓரமாக சில டெண்டுக் கொட்டகைகள் இருக்க, அங்கே ஒரு உணவகமும் இருந்தது. அங்கே தேநீர் அருந்தலாம் எனத் தோன்றியது. மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்க இறங்க மழை பெய்ய ஆரம்பித்தது.  வேறு வழியில்லை. அந்த கொட்டகைகள் இருந்த இடத்திற்குச் சென்று விட வேண்டியது தான்! தேநீரும் அருந்தலாம் என முடிவு செய்தோம். ஆற்றங்கரை ஓரமாக அந்தத் தங்குமிடம் நோக்கி நடந்தோம். பிறகு என்ன செய்தோம் என்பதையும் வேறு சில விவரங்களையும் அடுத்த பகுதியில் சொல்கிறேன். இந்தப் பகுதியில் தந்திருக்கும் படங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

 1. நம் வாழ்க்கையை நாம் வாழ்ந்தால் மற்றவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளமாட்டார்களோ...-  நாம் அவர்களைப்புரிந்து கொள்வதுபோல...

  காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   அப்படியும் ஆகலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பராண்டாவும் பராத்தாவும் ஒன்றா?   ஏற்கெனவே கேட்டு விட்டேனா?   கடைசி இருக்காய் என்றால் தூக்கித் தூக்கிப் போடாதோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பராத்தாவைத் தான் ஒவ்வொரு பெயரில் ஒவ்வொரு மாநிலத்தில் சொல்லுவார்கள். சில மாநிலங்களில் பராந்தா, பரான்டா,பராத்தா, பராட்டா என்றெல்லாம் சொல்லுவது உண்டு. ஹரியானாவில் சிலர் இதை தவா பூரி என்றும் சொல்லுவார்கள். ஆனால் நம்ம தமிழர்கள் தான் அழுத்தம் திருத்தமாக BHuபுரோட்டா என்பார்கள். அதுவும் மைதாவில் செய்ததை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  2. இரண்டும் ஒன்றே ஸ்ரீராம். இங்கே Bபுரோட்டா எனச் சொல்வது மைதா. அது கோதுமை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. ஆமாம் கீதாம்மா... ஹரியான பக்கம் தவா பூரி. சிலர் எண்ணையில் பொரிப்பது உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. மலர்ப்படுக்கைகளின் பின்னே மலைச்சாரல்..     அதிலிருந்து வழியும் மேகக்கூட்டம்.....   அற்புதம்.


  சுழித்தோடும் ஆறு... அழகிய காட்சி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பசுக்களுக்கும் உணவு சேமித்து வைப்பது உயர்ந்த எண்ணங்களே ஜி
  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 5. >>> படம் எடுத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் அந்த செடிகளை மிதித்து பாழ்படுத்தி விட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்கள்...<<<

  அருமை.. அருமை..

  வழக்கம் போல அழகு.. அழகு..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 6. பொன் மொழி போல இருக்க முடியுமா. எப்போதும் மற்றவர்களின் எண்ணத்தை ஒட்டியே வாழாவிட்டால் ஹார்மனி கிடைக்காதேம்மா.

  இனிய காலை வணக்கம் வெங்கட்.

  மலையும்,வயலும், நதியும், கிராமமும், பழம் கொடுத்த பாட்டியும் அருமை.

  கொடுத்து வைத்த பயணம். யாரும் பின் சீட்டில் அமரமாட்டார்களே.
  தூக்கிப் போடும்.
  குற்றம் சொல்லாத மனிதர்களைச் சந்திப்பதே பேறு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 7. குட்டு கா ஆட்டாப் பூக்கள் பரந்து மலர்ந்திருந்து கவர்கின்றன. மலைசாரவும் பசிய வயல் வெளியும் அழகு கொஞ்சி நிற்கின்றன.பார்துகொண்டே இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 9. உங்களுடனேயே நானும் இந்த கிராமங்களையெல்லாம் பார்த்து வருகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஐயா.

   நீக்கு
 10. இப்படி ஊருக்குள் ஜன்னலோரம் பஸ்ஸில் இருந்து போவதில் ஒரு சுகம்..... அழகிய கிராமப் படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 11. மிகவும் அழகான கிராமம். பூக்கள் நிறைந்த வயல் அருமை்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 12. புத்தர் சொன்னது போல் எல்லோரும் இருக்க முடியாது. ஒரு சொலர் இருக்கிறார்கள்.
  படங்களும், செய்திகளும் அந்த இடத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 13. குட்டு கா ஆட்டா வயல்கள பற்றி இப்போது தான் கேள்வி படுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 14. மேகங்கள் உரசும் மலைகளும் சலசலக்கும் ஆறும் பூக்கள் படர்ந்திருக்கும் வயல்களும் அப்படியே மனதை கிறங்க வைக்கின்றன. அவற்றையும் உங்கள் அனுபவங்களையும் அழகாய் விவரித்திருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 15. மிக அழகான இடம். கிராமங்கள் பதிவு அனைத்தையும் இன்னொரு நாள் படிக்க வேண்டும். குட் கா ஆட்டா வில் செய்த ரொட்டியை சாப்பிட்டிருக்கின்றீர்களா வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாப்பிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   நீக்கு
 16. நவராத்திரியின் பயன்படுத்தும் "குட்டு கா ஆட்டா" பற்றியும், அந்த வயல்கள் பற்றியும் இப்போத் தான் கேள்விப் படுகிறேன். வயல்களும் பூக்களின் நிறமும் கண்களையும் மனதையும் கவர்கிறது. மிக அழகான இடங்கள். அருமையாகத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 17. மிகவும் ரம்யமான காட்சிகள். மக்களின் விரிந்த மனமும் இயல்பான வாழ்க்கையும் வியக்கவைக்கின்றன. படங்கள் மூலமாகவே கிராமத்தின் அழகை ரசித்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....