புதன், 4 செப்டம்பர், 2019

கடைசி கிராமம் – ரோகி – மலைப்பாதையில் நடைப்பயணம்அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடை போடுவார்கள்ரபீந்த்ரநாத் தாகூர்.
 
கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:


படம்-1: பனிபடர்ந்த இமயமலைத் தொடர்...


படம்-2: ஆப்பிள் தோட்டத்தின் நடுவே வீடு...


படம்-3: இந்தப் பழம் மருத்துவ குணம் சார்ந்ததும் - விவரங்கள் பிறகு...


படம்-4: பசுமைப் பொதிக்குள் ஒரு அழகிய வீடு...


படம்-5: சந்திரனா இல்லை சூரியனா... சூரியன் தான் - மேகத்தினுள்ளே மறைந்து விளையாடும் சூரியன்...


படம்-6: மலைச்சிகரங்களும் மரமும்...

கின்னர் கைலாஷ் தரிசனத்திற்குப் பிறகு நாங்கள் இருவரும் தயார் ஆனோம். முதல் நாள் காவல்துறை நண்பரிடம் பேசியதில் காலையில் ஒரு பேருந்து கல்பா கிராமத்தினை அடுத்த ரோghகி எனும் இடத்திலிருந்து ரெக்காங்க் பியோ வழியாக CHசித்குல் வரை செல்லும் என்பதைத் தெரிந்து கொண்டிருந்தோம். அந்தப் பேருந்து கல்பா வழி தான் செல்லும் என்றாலும், புறப்படும் இடமான ரோghகியிலிருந்தே பேருந்தில் பயணம் செல்லலாம் என்பது எங்கள் திட்டமாக இருந்தது – கல்பாவிலிருந்து ரோghகி வரையான தொலைவு – எட்டு கிலோமீட்டர் – கடுமையான மலைப்பாதை வழியே பயணித்துதான் வர வேண்டும் – நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து இந்த மலைப்பாதையில் தான் வரும் என்றாலும் நாங்கள் அந்த இடம் வரை முதுகுச் சுமையுடன் நடந்து சென்று காட்சிகளையும் ரசிக்கலாம் எனத் திட்டமிட்டோம்! அட எட்டு கிலோமீட்டர் நடப்பது பெரிய விஷயமா என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் அந்த மலைப்பாதையில் நடப்பது அவ்வளவு சுலபமல்ல!


படம்-7: மலைப்பாதையில் நடக்கும் நண்பர்...


படம்-8: வளைந்து நெளிந்து செல்லும் பாதை...

கல்பா கிராமத்திலிருந்து பொறுமையாக நடக்க ஆரம்பித்தோம். வழியெங்கும் ஆப்பிள், பாதாமி, தேவதாரு மரங்கள் அடர்ந்த தோட்டங்கள் தான். எட்டு கிலோமீட்டர் தொலைவினைக் கடக்க எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே ஆனது. வழியில் பார்த்த காட்சிகள் ஆஹா – எத்தனை அழகு – அதுவும் ஆபத்தான அழகு! ஒரு பக்கத்தில் கூர்மையான பாறைகளைக் கொண்ட மலைப் பகுதி என்றால் மறு பக்கம் அதலபாதாள பள்ளம்! வாகனங்கள் வரும்போது மலைப்பகுதியின் ஓரத்தில் நிற்பது தான் நல்லது என்று அந்தப்பக்கம் நின்றோம். ஒரு முறை பள்ளம் இருக்கும் பகுதியில் நிற்க வேண்டியிருந்தது – அந்தச் சில நொடிகள் இதயத் துடிப்பு கொஞ்சம் அதிகரித்ததோ என்று ஒரு எண்ணம் எனக்கு – நண்பரைக் கேட்க, அவரும் சிரித்தபடியே – எனக்கும் அதே உணர்வு தான் என்று சொன்னார்.


படம்-9: மரக்கிளைகளுக்கு ஊடாக நாங்கள் கடந்து வந்த பாதை...


படம்-10: கற்கள் நிறைந்த மலைப்பாதை...

வழியில் ஆங்காங்கே நின்று நிழற்படங்களை எடுத்து, அப்படியே கொஞ்சம் இளைப்பாறி என நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். மலைப்பாதையில் வரும் வாகனங்களைப் பார்க்கும்போதே நாம் பயணிக்கும் போதும் இப்படித்தான் ஆபத்தான பயணமாக இருக்கும் என்பதை உணர்ந்தோம். வாகனங்களில் வரும் பலரும் நடந்து வரும் எங்களைப் பார்த்து, கையசைத்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தபடியே கடந்து சென்றார்கள். முன்னர் கடைசி கிராமம் பயணத்தொடரின் ஒரு பகுதியில் சொன்னது போல, இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாகவும், சக மனிதர்களிடம் – அவர்கள் தெரியாதவர்களாக இருந்தாலும் கூட – நட்புடன் பழகுகிறார்கள். இந்தப் பகுதிகளில் இருக்கும் கடுமையான பாதைகள், கொடுமையான குளிர் கால பனிப்பொழிவு, மழைக்காலத்தில் ஏற்படும் நிலச் சரிவுகள் என அனைத்தையும் சந்தித்தாலும் அப்படியான அனைத்து கஷ்டங்களையும் இயல்பாக எடுத்துக்கொள்ள பழகி இருக்கிறார்கள்.


படம்-11: கடந்து வந்த பாதை - சற்று தொலைவிலிருந்து...


படம்-12: நம்பிக்கை தந்த மரத்தின் வேர்கள்...

இயற்கை தான் எத்தனை எத்தனை விஷயங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது. மலைப்பாதையில் எட்டு கிலோமீட்டர் தொலைவினையும் நடந்து கடக்க முடியுமா என்ற சந்தேகம் நடுவே வந்தது – கால்கள் ஓய்வு கொடு என்று கெஞ்ச ஆரம்பித்த போது! ஆனால் வழியில் பார்த்த ஒரு பெருமரம் எங்களுக்கு நம்பிக்கை தந்தது – எத்தனை பெரிய பாறையானாலும், அதைத் துளைத்துக் கொண்டு வேர்களை ஊன்ற என்னால் முடியும் என்று எங்களுக்குச் சொல்லாமல் சொன்னது அந்த மரம் – பாறைகளைத் துளைத்து உள்ளே சென்றிருக்கும் வேர்களைப் பார்த்த போது, நம்பிக்கை இருந்தால் எந்த வித கடினமான பாதையையும் கடக்க முடியும் என்று எங்களுக்குப் புரிந்தது. மேலும் நடந்தோம்.  அழகான, வித்தியாசமான பூக்கள், மலை, கின்னர் கைலாஷ், ஆப்பிள் தோட்டங்கள், மலைச்சரிவுகள் என அனைத்தையும் ரசித்தபடியே ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த இடம் – தற்கொலை முனை!


படம்-13: மேகமூட்டம் வந்துவிட்டதால் பாதை கண்ணுக்குத் தெரிவது கடினமாக இருந்த போது...


படம்-14: குறுகிய சாலையில் எதிர்புறத்திலிருந்து வரும் வாகனம்...

கல்பாவிலிருந்து ரோghகி செல்லும் பாதையில் கிட்டத்தட்ட பாதி வழியில் வருகிறது இந்த தற்கொலை முனை – அந்த இடத்தில் இருக்கும் சரிவு – சுமார் இரண்டாயிரம் அடி பள்ளத்திற்கு உங்களை அனுப்பி வைக்கும்! அவ்விடத்தில் இருந்து பார்க்கும்போது கீழே ஓடும் நதி ஏதோ பாதாளத்தில் ஓடுவது போல இருந்தது. அங்கே ஓரத்தினை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று நிறைய படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். இந்த மாதிரி இடங்களில் “செல்ஃபி” எடுக்கிறேன் பேர்வழி என்று கீழே விழுபவர்கள் எண்ணிக்கை தான் இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது – தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வருபவர்களை விட இது மாதிரி செல்ஃபி மோஹிகள் தான் அதிகம் என்று தோன்றுகிறது. நாங்கள் அங்கே சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டு மேலே நடந்தோம்.


படம்-15: மலைப்பாதை ஓரமாக வளர்ந்திருக்கும் பூச்செடிகள்...


படம்-16: பாறைகள் உருண்டு விழும் பகுதி என்பதைத் தெரிவிக்கும் பதாகை...

ரோghகி கிராமம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை! அங்கிருந்து பேருந்து புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது – ஆனால் அந்தப் பேருந்து எங்களைக் கடந்து தான் அங்கே செல்ல வேண்டும் என்பதால் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது – பேருந்து வந்தால் கை காண்பித்து ஏறிக் கொள்ளலாம் என்றும் நினைத்தோம். இந்த ஊர்களில் எங்கே கை காண்பித்தாலும் பேருந்து ஓட்டுனர்கள் நிறுத்துகிறார்கள் – மலைப்பகுதிகளில் வரும் பேருந்துகள் மிகவும் குறைவு என்பதால் இந்த மாதிரி ஒரு வசதி – பெரும்பாலான கிராமவாசிகளுக்கு பேருந்து ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் தெரிந்திருக்கிறது – அவர்களுக்கு மட்டுமல்லாமல் சுற்றுலா வாசிகள் கை காண்பித்தாலும் நின்று ஏற்றிக்கொள்கிறார்கள் அந்த நல்லுள்ளம் படைத்தவர்கள். ஆனால் அந்தப் பேருந்து வந்த பாடில்லை.


படம்-17: கடந்து வந்த ஒரு வளைவு - கொஞ்சம் தவறினாலும் கீழே..


படம்-18: முன்பே வெளியிட்ட படத்தின் இன்னுமொரு கோணம்...

நாங்கள் எட்டு கிலோமீட்டர் தூரத்தினையும் நடந்தே கடந்து வந்து ரோghகி கிராமத்தினை அடைந்தோம். அங்கே chசித்குல் வரை செல்லும் பேருந்திற்காக பலர் காத்திருந்தார்கள்!  காலையிலிருந்து தண்ணீரைத் தவிர வேறு ஒன்றும் குடிக்கவில்லை. தேநீருக்காக மனதும் வயிறும் கெஞ்சியது. சற்றே குளிர் என்றாலும் நடந்து வந்ததில் குளிர் தெரியவில்லை. நாங்கள் சிரமப்பட்டு நடந்த அந்த மலைப்பாதையை உள்ளூர் வாசிகள் சுலபமாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள் – அவர்களுக்கு இந்த கடினமான பாதைகளில் நடந்து பழகி இருந்ததால்! சில கிராமவாசிகள் எங்களை நோக்கி புன்னகை சிந்த நாங்களும் பதிலுக்கு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம். தேநீர் இங்கே கிடைக்குமா எனக் கேட்டபோது – இன்னும் கடை திறந்திருக்காது என்று சொன்னபோது நேரம் காலை ஒன்பது மணி!


படம்-19: மர வீடு! ஒரு ஆள் நிற்கும் அளவுக்கு இடம் உண்டு...


படம்-20: வெட்டப்பட்ட பிறகும் இரு பறவைகளுக்கு அடைக்கலம் தரும் மரம்...

பேருந்து இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. கிராமத்தில் பார்க்க என்ன இருக்கிறது, பேருந்து வருவதற்குள் அந்த இடத்திற்குச் சென்று வர முடியுமா என்று அந்த கிராமவாசிகளிடம் விசாரித்தோம்.  கொஞ்சம் கீழே படிகள் வழி நடந்தால் ஒரு அழகான இடம் பார்க்கலாம் – பேருந்து வந்தால் சிறிது நேரம் காத்திருக்கும் என்று சொல்ல, அந்த இடம் நோக்கி நடந்தோம் – அந்த இடம் என்ன? அங்கே என்ன பார்த்தோம்? என்ன செய்தோம்? எங்களுக்குப் பேருந்தில் பயணிக்க முடிந்ததா போன்ற தகவல்களை வரும் சொல்கிறேன். இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

 1. பசுமை பொதிக்குள் அழகிய வீடு... கவர்ச்சியாகவும் இருக்கிறது. பயமாகவும் இருக்கிறது!

  குட்மார்னிங்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை 🙏 ஸ்ரீராம்.

   ப்சுமைப் பொதிக்குள் வீடு - தனிமை விரும்பிகளுக்குப் பிடிக்கலாம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. மலைப்பாதையை நடந்தே கடக்கும் தீர்மானம் பல அழகிய காட்சிகளைக்காட்டியிருக்கும். அழகில் எப்போதுமே ஆபத்தும் உண்டே! காகணங்கள் வரும்போது மலைக்கு எதிர்புறம் நின்ற அனுபவம் படித்தால் முதுகுத்தண்டு சிலீரிடுகிறது.​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலைப்பாதையில் இன்னும் அதிக தொலைவு வரை நடக்க திட்டம் இருந்தது - வேறு பாதையில். ஆனால் அங்கே சென்ற பிறகு திட்டம் மாறிவிட்டது. பல அனுபவங்களை தந்த நடை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நம்பிக்கை தந்த மரத்தின் வேர்கள். அபாரம். எட்டு கிலோமீட்டர் தூரம் ஒரு மணி நேரத்தில் என்பது வெகுசீக்கிரம் இல்லையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு மணி நேரத்திற்கு மேல் சில நிமிடங்கள்.... நடுவே நிற்காமல் நடந்து இருந்தால் இன்னும் குறைவான நேரத்தில் கடந்து இருப்போம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. மழைபெய்தால் அந்த மரவீட்டிற்குள் ஒரு ஆளோ, இரண்டு ஆளோ ஒடுங்கி, ஒதுங்கி நின்று கொள்ளலாம்!

  சாகசப் பயணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அந்த மரப் பொந்தில் இரண்டு பேர் சுலபமாக நிற்க முடியும் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அருமையான புகைப்படங்கள் உங்களுடைய எழுத்துக்கு அழகு சேர்க்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி ஜோசஃ ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அழகாய் இருக்கிறது ஆனால் பயமாய் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான பயம்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

   நீக்கு
 7. மிக அழகிய படங்கள், ஆனாலும் இப்படி இடங்களுக்கு எதுக்குப் போகிறீங்கள் எனத்தான் கேட்கத் தோன்றுகிறது... பார்க்க படுபயங்கரமாக இருக்கே.. உங்களுக்கு முசுப்பாத்திபோல இருந்தாலும், குடும்பத்துக்கு நெஞ்சு வலிக்கும் எல்லோ இப்படங்கள் பார்க்க.
  பஸ்ஸில்ல் காரில் போனாலும் பயம்தானே.. அங்கு வாழ்பவர்கள் வேறு வழியின்றி, பழக்கப்பட்டு வாழலாம்.. நாம் எதுக்கு வலியப் போய்.. தேவையில்லாப் பிரச்சனைகளை வாங்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கை அழகை ரசிக்க, அழகிய சூழலில் இருக்க, என நிறைய காரணங்கள் உண்டு இப்படி சில பயணங்கள் செய்ய. பெரும்பாலான பயணங்கள் பிரச்சனை இல்லாதது. தங்கள் கனிவான வார்த்தைகள் மகிழ்ச்சி தந்தன அதிரா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பாதைகளின் காட்சிகள் வெகு திகிலாகவே உள்ளது ....

  படங்கள் அனைத்தும் கதை சொல்லுகின்றன ...அத்துனை அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 10. அழகான படங்களுடன்,நாங்களே உடன் பயணிப்பது போன்ற அனுபவத்தைத் தரும் பயண வர்ணனை.
  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன்.

   நீக்கு
  2. அன்பு வெங்கட், பாதைகள் அழகாக இருந்தாலும்
   ஆபத்துகள் எல்லை இல்லாமல் இருக்கின்றது.
   அந்தக் குறுகிய வளவைப் பார்க்கும் போதே மனம் வாய்க்கு வந்து விட்டது. பொறுமையாக ரசித்துக் கடந்திருக்கிறீர்கள்.
   பனி மூடிய பாதையில் இன்னும் எச்சரிக்கை தேவை. எத்தனை
   அழகான ஆபத்துகள்.
   வீட்டிலிருந்து மறுப்பு ஏதும் வரவில்லையா.
   எங்கள் சின்ன மகனும் ட்ரெக்கிங்க் செய்வதில் ஆர்வமிக்கவன்.
   அவனும் நண்பருமாகப் பல இடங்கள் சென்றிருக்கிறார்கள்.

   ஸ்விஸ் இது போன்ற ஏற்ற இறக்கம் கொண்ட இடம்.
   ஆனால்
   பாறைகள் மணல் சரிவு என்று பலவித சந்தர்ப்பங்களில் முன் கூட்டியே சொல்லி விடுவார்கள்.

   உங்கள்+நண்பரின் இந்த அட்வென்ச்சர் சிலிர்க்க வைக்கிறது.

   மழைக்கு ஒதுங்க மரம். அபாரம். அடுத்த அத்தியாயத்திற்குக் காத்திருக்கிறோம்.

   நீக்கு
  3. //வீட்டிலிருந்து மறுப்பு ஏதும் வரவில்லையா.//

   வல்லிம்மா சொல்லிக் கேட்கிற ஆளா இவர்கள்..:) பிரமோதின் மனைவி ராக்கியும் என்னைப் போல் தான் நினைப்பார்கள்..:) கடவுள் தான் காப்பாற்றுகிறார்..காணொளி பார்த்துக் கூட சொன்னேன், எப்படியோ பத்திரமாக வந்தீங்களே! இல்லைனா எங்கே போய் தேடறது என்று..:)

   எப்போதுமே எங்கேயாவது பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவரிடம் என்ன சொல்வதும்மா..:)))

   நீக்கு
  4. //வீட்டிலிருந்து மறுப்பு ஏதும் வரவில்லையா?// ஹாஹா... நல்ல கேள்வி வல்லிம்மா... பெரும்பாலும் பயணங்கள் ஆபத்தில்லாத வகை பயணங்கள் தான்மா... இந்தப் பயணம் இப்படி அமைந்து விட்டது. தங்கள் அக்கறைக்கு நன்றிம்மா...

   இங்கேயும் பனிப்பொழிவு, மழை போன்ற தகவல்கள் முன்னரே கிடைக்கிறது - Accuracy இருக்காது என்பது ஒரு குறை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  5. //சொல்லிக் கேட்கிற ஆளா இவர்கள்// அதானே... நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் பயணம் செய்வோம் என்பது இரண்டு பேருடைய துணைவிகளுக்கும் தெரிந்தது தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. காணற்கரிய படங்களுடன் இன்றைய பதிவு...
  எத்தனை கஷ்டங்கள்... அத்தனையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மக்கள்...

  மகத்தான மனிதர்கள்... வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போதோ சென்று வருவதே கஷ்டமாக நாம் நினைக்க, அவர்களுக்கு இந்த கடின வாழ்க்கை பழகிவிட்டது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 12. படங்கள் எல்லாம் அழகு.
  மழை காலத்தில் மலை மேலிருந்து தண்ணீர் வந்து பாதையில் ஓடும்.
  கற்கள் மலைமேல் இருந்து உருண்டு ஓடி வரும்.
  பனி மூட்டம் சமயம் பயணம் செய்வது கடினம்.

  ஆனாலும் போக ஆசைதான்.பாறையில் முளைத்த மரங்கள் , இரண்டு பேர் நிறகலாம் என்ற மரம், பாதையில் உள்ள பூக்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பனிமூட்டம் சமயத்தில் நடந்து போவது கடினமல்ல. வாகனம் என்றால் இன்னும் நிதானம் தேவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  ஆபத்தான பயணம்.நடந்து சென்ற பாதைகள் மிக ஆபத்தாக உள்ளது. உங்கள் இருவருக்கும் இதயம் வேகமாய் துடித்த இடம் பற்றி விவரித்திருந்தீர்கள். பனி மூடிய மலைகளும், வளைந்து நெளிந்தபடி இருக்கும் சாலைகளும், பார்க்க ரம்யமாக இருந்தாலும், "திக்" "திக்" என்ற உணர்ச்சி தங்கள் பதிவை படிக்கும் போது முழுதாக வே எனக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

  மலையில் இருக்கும் கின்னர் கைலாஷ் போன்ற இடங்கள் தாங்கள் சொல்லித்தான் நான் அறிகிறேன்.

  மரங்கள், வேரை நம்பி படர்ந்திருக்கும் மரம், வீடாக பயன்படும் மரம் எல்லாமே மிக அழகாக உள்ளது. பறவைகளுக்கு அடைக்கலம் தரும் மரம் நன்றாக இருக்கிறது. அந்தப்பறவைகள் காகங்களா?

  படங்கள் அனைத்துமே மிக அழகாக இருக்கின்றன. ரிஸ்க் எடுத்து பயணம் செய்திருக்கிறீர்கள். பயண அனுபவம் குறித்து எங்களிடமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திக் திக் உணர்வு - உண்மை தான். ஆனாலும் அந்த இடத்தில் இருக்கும்போது எங்களுக்குப் பெரிதாக பயம் வரவில்லை! படங்களை நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. பாறைகள் விழும் பகுதி அபாயமான இடம் நடைபாதையில் திகில்தான்.கடந்து ரசித்து எங்களுக்கும் காண கொடுத்துள்ளீர்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாறைகள் விழுகிறதா என்று மேலே அவ்வப்போது பார்த்தபடியே கடந்து விட்டோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....