வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கடைசி கிராமம் – கல்பா எனும் கிராமத்தில் ஓர் இரவு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கவலைகளின் அளவு கையளவாக இருக்கும் வரைதான் கண்ணீருக்கும் வேலை. அது மலையளவு ஆகும்போது மனமும் மரத்துப் போகும்கவிஞர் கண்ணதாசன்.கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:கல்பா என்ற அந்தச் சிறிய கிராமத்தில் சில ஹோம்ஸ்டே வசதிகளும், சில தங்குமிடங்களும் இருந்தன. நாங்கள் முதுகுச் சுமையோடு அப்படியே நடந்தோம். அங்கே இருந்த புத்தமத வழிபாட்டுத் தலம் அருகே இருந்த Fort View Home Stay எங்களுக்குப் பிடித்திருந்தது. அறையும் அறையிலிருந்து தெரியும் காட்சிகளும் நிறையவே அழகாக, ரம்மியமாக இருக்க அறைக்கான ஒரு நாள் வாடகை பற்றிப் பேசினோம். அங்கே இருந்த திரு சஞ்சீவ் மேஹ்தா அவர்கள் ஒரு நாள் அறை வாடகை ஆயிரம் ரூபாய் என்று சொன்னார். அந்தச் சிறு கிராமத்திற்குச் சற்று அதிகம் என்று தோன்றியதால், கேட்டோம். நீங்கள் நேரடியாக வந்து இங்கே கேட்டதால் இந்த கட்டணம், ஏதேனும் இணையம் வழி முன்பதிவு செய்தால் 1400 ரூபாய்க்கும் குறைவாக இருக்காது என்று சொன்னார். அவர் சொன்னது சரிதான் என்று இணையத்தில் தேடியபோது தெரிந்தது! இப்போது சுற்றுலா பருவம் இல்லை என்பதால் இந்தக் கட்டணம், சுற்றுலா பருவத்தில் இன்னும் அதிகம் என்றார்!


சரி என்று ஒத்துக் கொண்டோம். நீண்ட பயணம் முடித்து வந்ததால் சுடச் சுட வெந்நீரில் நல்லதொரு குளியல்! அதன் பிறகு அப்படியே கீழே இறங்கி தங்குமிடத்தின் பக்கத்தில் இருந்த புத்த மத வழிபாட்டுத் தலத்தில் அமைதியாக அமர்ந்து சில நிமிடங்கள் பிரார்த்தனை. புத்தமத வழிபாட்டுத் தலம் என்றால் பிரார்த்தனை உருளைகள் இல்லாமலா? பிரார்த்தனை உருளைகளைச் சுற்றி “ஓம் மணி பத்மே ஹம்” என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்தோம். அந்த முன் மாலை நேரத்திலேயே ஊர் முழுவதும் அமைதிப் பாதையில் சென்றிருந்தது. தூரத்தில் எங்கிருந்தோ தன் இணையைத் தேடும் பறவையின் ஒலியும், பாய்ந்தோடும் Bபாஸ்pபா நதியின் ஒலியும் துல்லியமாகக் கேட்டது. மொழுமொழுவென இருந்த செல்லங்கள் எங்களுடன் வாலாட்டியபடி நடந்தன. அதிசயமாகத் திறந்திருந்த ஒரு சிறு கடையில் பிஸ்கெட்டுகள் வாங்கிக் கொண்டு நாங்களும் சாப்பிட்டு செல்லங்களுக்கும் தந்தோம்.
சுற்றிலும் மலை, சில்லென்று காற்று, மாசு இல்லாத சூழல் என மிகவும் ரம்மியமான கிராமம். மலைச்சிகரங்களில் ஒரு இடம் நோக்கி சில வழிப்போக்கர்கள் நின்று நிதானித்து வணக்கம் சொல்லிச் செல்கிறார்கள். அந்த இடம் என்ன? ஏன் அதற்கு வணக்கம் வைக்க வேண்டும் என நினைத்தபடியே நடந்தோம். அச்சிறு கிராமத்தின் காலியாக இருந்த பேருந்து நிலையம் அருகே சந்தித்த ஒரு ஹிமாச்சலப் பிரதேச காவல்துறை பணியாளரிடம் அடுத்த நாளின் பேருந்து நேரம் பற்றிய தகவல்கள் கேட்க, அவர் அந்த தகவல்கள் மட்டுமல்லாது, நாங்கள் செல்லும் இடங்களில் எங்கே தங்கலாம், என்னென்ன பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பல மேலதிகத் தகவல்களும் தந்தார். கூடவே தனது அலைபேசி எண்ணையும் தந்து, பயணத்தின் போதும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் வரையும், எந்த உதவி வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்றும் சொன்னார்.நகரங்களில் வசிக்கும் நமக்கு அடுத்த வீட்டில் இருப்பவரையே தெரியாது. இன்னும் இது போன்ற கிராமங்களில் மனிதம் தழைத்திருக்கிறது. ஒருவருக்கொருவர் உதவியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். எதிரே வரும் அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை – அவர்கள் புதிய மனிதர்களாக இருந்தாலும் கூட. எங்களிடமும் இப்படி புன்னகைத்து நலம் விசாரித்த, ராம் ராம் என்று வணக்கம் சொன்ன பலர் காரணமாக எங்களுக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது! பார்க்கும் அனைவரையும் பார்த்து ஒரு சிறு புன்னகை! எவ்வளவு மகிழ்ச்சி அவர்களது முகங்களில். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – அதுவும் அந்த சிறு கிராமத்தில் போதிய வசதிகள் எதுவுமே இல்லாத போதும்!

ஹிமாச்சலப் பிரதேசத்து கிராமங்களில் வாழ்க்கை கொஞ்சம் கடினமானது தான். வருடத்தின் இரண்டு மூன்று மாதங்கள் [டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரை] பத்தடிக்கும் மேலாக பனிப் பொழிவு! எந்த வேலையும் செய்ய முடியாது. சுற்றுலாப் பயணிகளும் வர மாட்டார்கள். மழைக்காலங்களில் மலைச்சரிவு பிரச்சனை. மீதி இருக்கும் சில மாதங்களில் மட்டுமே உழைப்பு – அங்கே விளையக் கூடிய தானியங்களை விளைவிக்க வேண்டும். சம்பாதிக்க வேண்டும். அந்த சம்பாத்தியம் கொண்டு வருடம் முழுவதும் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்! எத்தனையோ கடினமான வாழ்க்கை என்ற போதும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். பலப் பல வசதிகள் இருந்தும், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற ஓட்டத்தில் வாழ்க்கையை வாழ மறந்து விடுகிறோம்! எதைத் தேடி இந்த ஓட்டம், அதுவும் இலக்கே இல்லாத ஓட்டம்!

அமைதியான கிராமத்து வீதிகளில் நடந்து தங்குமிடம் வந்து சேர்ந்த போது எங்களுக்காக, தங்குமிட உரிமையாளர்/பணியாளர் சஞ்சீவ் மேஹ்தா காத்திருந்தார். இரவு உணவு தயார்! சுடச் சுட ரொட்டி, மிக்ஸ் வெஜ் சப்ஜி மற்றும் தால்! அனைத்தும் சூடாக ஹாட் கேஸில் வைத்து இருக்க, எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்தோம். சிறிது நேரம் தங்குமறை கண்ணாடி ஜன்னல்கள் வழியே எந்த வித சலனமும் இன்றி அமைதி காக்கும் கிராமத்தினையும், மலைகளையும், தூரத்தில் ஓய்வே இல்லாமல் ஓடும் நதியின் ஓசையையும் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தோம். அச்சிற்றூர் வரையான பயணத்தின் அனுபவங்கள் பற்றி நானும் நண்பர் பிரமோத்-உம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு நித்ரா தேவி அழைக்க நிம்மதியான உறக்கம். அதிகாலை எழுந்திருந்த போது 05.30 மணி! காலை நேரத்து கிராமியக் காட்சிகள் ரம்மியமாக இருந்தன.தயார் ஆன பிறகு சஞ்சீவை அழைத்து சில விவரங்கள் கேட்க வேண்டும் என நினைத்தபடியே தயார் ஆனோம். பிறகு என்ன செய்தோம் என்பதை இப் பயணத் தொடரின் அடுத்த பகுதியில் சொல்கிறேன். அது வரை இந்தப் பதிவில் வெளியிட்ட படங்களை ரசிக்கலாம்! நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

 1. கண்ணதாசனின் அனுபவ வரிகள் அட்சரலட்சம்.

  குட்மார்னிங் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். கண்ணதாசனின் வரிகளுக்குக் கேட்க வேண்டுமா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இது மாதிரி இயற்கை அழகு நிறைந்த மழைப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு வீசிங் போன்ற தொந்தரவுகள் இருக்காது என்பார்கள். எந்த அளவு உண்மையோ... சுத்தமான காற்று சுவாசிக்கக் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சுத்தமான காற்று சுவாசிக்கக் கிடைக்கும்// உண்மை தான் ஸ்ரீராம். அவ்வளவு சுத்தமான காற்று, இயற்கை அழகு எனும் போது வீசிங் தொல்லைகள் இருப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வசதிகள் வந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையும் மாறிவிடும். உலகம் சுருங்கி விடும். முகமன் கூறும் மக்களும், அந்த போலீஸ்காரரும் போற்றத்தகுந்தவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வசதிகள் வந்து விட்டால்.... உலகம் சுருங்கி விடும்.// உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. எத்தனை அமைதியான இடம். எத்தனை அழகான மலைக் காட்சிகள். உண்மையிலேயே நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் வெங்கட்.
  நல்ல நண்பர் அமைந்ததும் அதிர்ஷ்டமே.

  இது போலச் சூழலில் புத்தகம் படிக்கக் கூடத் தோன்றாது.
  அந்தக் கிராம மக்களின் மகிழ்சி வாழ்க்கையை நீங்கள் விவரித்திருக்கும்
  விதம் மிக இனிமை.

  கண்ணதாசன் வரிகள் நம் வாழ்க்கையில்
  எப்பொழுதும் முக்கியத்துவம் பெறும். நன்றி.
  அந்தப் பெண் நின்று கும்பிடும்
  விதத்தைப் பார்த்தால் ஏதோ தெய்வத்தை நினைத்து தான்
  வழிபடுகிறாள் என்று தோன்றுகிறது.
  அவர்களது காவல் தெய்வங்களே மலைகள் தானே.
  அவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
  மிக மிக நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நல்ல நண்பர் அமைந்ததும் அதிர்ஷ்டமே// கிட்டத்தட்ட பத்து வருடப் பழக்கம் வல்லிம்மா...

   புத்தகம் படிக்கத் தோன்றாது என்பதும் உண்மை - இயற்கையை ரசிக்கவே நேரம் போதவில்லையே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. கிராமங்களில் மனிதம் தழைத்திருக்கிறது. ஒருவருக்கொருவர் உதவியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். எதிரே வரும் அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை – அவர்கள் புதிய மனிதர்களாக இருந்தாலும் கூட. எங்களிடமும் இப்படி புன்னகைத்து நலம் விசாரித்த, ராம் ராம் என்று வணக்கம் சொன்ன பலர் காரணமாக எங்களுக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது! பார்க்கும் அனைவரையும் பார்த்து ஒரு சிறு புன்னகை////// This should last for ever,🙏🙏🙏🙏🙏🙏

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியே தொடர்ந்தால் மகிழ்ச்சி தான் வல்லிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. கூடவே தனது அலைபேசி எண்ணையும் தந்து, பயணத்தின் போதும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் வரையும், எந்த உதவி வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்றும் சொன்னார்.//// இது போல இன்னும் வாழ்ந்து வருகிறார்கள்
  என்பதே மிக மிக ஆனந்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இது போல இன்னும் வாழ்த்து வருகிறார்கள் என்பதே மிக மிக ஆனந்தம்// ஆமாம் வல்லிம்மா... சக மனிதர்களுடன் நட்பு பாராட்டும் மனிதர்களை இந்த நகரங்களில் பார்ப்பது அரிதாகி விட்டதைப் பார்த்த நமக்கு, அந்தப் போலீஸ்காரர் போன்றவர்களைக் கண்டாலே மகிழ்ச்சி தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. மிக அருமையான இடம், அதை விட அருமையான படங்கள். பின்னர் வருகிறேன். அமாவாசை என்பதால் கடமை அழைத்துக்கொண்டே இருக்கிறது.:))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது வாருங்கள் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. அழகிய இடங்கள் புன்னகையோடு வாழும் மக்கள் அழகாகவும் இருப்பார்கள் ஜி.
  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /புன்னகையோடு வாழும் மக்கள் அழகாகவும் இருப்பார்கள் ஜி// உண்மை தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. திருப்தியோடு வாழும் அவர்களின் வாழ்க்கை மிகவும் பிடித்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. தங்குமிடம் எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் போயிருக்கீங்க.

  கிராமத்து வாழ்க்கை மனதைக் கவர்கிறது 3 மாதம் பனிப்பொழிவு-ரொம்பவும் எதிர்பார்க்கவைக்கிறது. அங்க கிரவுண்ட் என்ன விலை என்றும் கேட்டு வந்திருக்கலாம் நீங்க. ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்... தங்குமிடம் எப்படியும் கிடைக்கும் என்று நம்பிக்கை தான்.

   ஹிமாச்சலத்திலும் வெளிமாநில மக்கள் சொத்து வாங்க முடியாது. Section 118 of the Tenancy and Land Reforms Act 1972 prohibits outsiders from purchasing property in HP. However you can take on lease or rent.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. அழகான, அன்பான மக்கள் உள்ள இயற்கையான இடம் .
  படங்கள் அழகு.
  கண்ணதாசன் சொல்வது உண்மை, மரத்து போகுதோ இல்லையோ பழகி போகிறது.
  கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு என்று அவர் சொன்னபாதையிலே மனம் போகிறது காரியத்தை பார்க்க.

  ஊர் சுற்றி பார்த்து விட்டு களைத்து போய் வரும் போது உணவு சூடாக கிடைப்பது எவ்வளவு மகிழ்ச்சி!

  பதிவு நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. களைத்து போய் வரும் போது உணவு சூடாகக் கிடைப்பது மகிழ்ச்சி தான் கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. உங்களின் ஒவ்வொரு வட இந்திய பதிவுகளும் நாம் எப்போது இந்த இடத்திற்குச் செல்வோம்? என்று எண்ணத் தோன்றுகின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் உங்களுக்கு வட இந்திய பயணம் அமையட்டும் ஜோதிஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. பனிப் பொழிவுடன் மகிழ்சியான கிராமம் கேட்கவே ஆனந்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 14. படங்களைப் பார்க்கும் பொழுதே தாங்கள் வசிக்குமிடத்தை எவ்வலவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. முதுகில் ஒரு பையுடன்-- உங்கள் பயண அனுபவங்கள் சுவாரஸ்யம். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் சுத்தமாகவே - குறிப்பாக கிராமங்கள் - இருக்கின்றன ஜீவி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. //கவலைகளின் அளவு கையளவாக இருக்கும் வரைதான் கண்ணீருக்கும் வேலை. அது மலையளவு ஆகும்போது மனமும் மரத்துப் போகும் – கவிஞர் கண்ணதாசன்.//

  கண்ணதாசன் அங்கிளின் பேச்சுகு மறு பேச்சு இருக்காது... அப்படியே தத்துவம் புட்டு புட்டு வைப்பார்.. சூப்பராக இருக்கு.

  படங்கள் மிக அழகு வெங்கட், ஆனா மிகவும் பின் தங்கிய இடமாக இருக்கிறதே.. அங்கு அடிப்படை வசதிகள் நன்கு கிடைக்கிறதோ உல்லாசப் பயணிகளுக்கு?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணதாசனின் தத்துவங்கள் சிறப்பானவை - பெரும்பாலானவர்களுக்குப் பிடித்தவை.

   பின் தங்கிய இடம் - சிறு கிராமம் தானே அந்த இடம். அடிப்படை வசதிகள் உண்டு - ஆனால் நகரத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அங்கே எதிர்பார்க்கக் கூடாது அதிரா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. வசதி வாய்ப்புக்களுடன் மனித மனங்களிலிருக்கும் அன்பும் வற்ற ஆரம்பித்து விடுமோ? கிராமங்கள் இன்னமும் வாழ்கின்றதென அறிவதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வசதிகள் வந்துவிட்டால் அன்பு வற்றிவிடுமோ? இருக்கலாம் நிஷா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....