வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

நாற்பத்தி இரண்டு நாள் பயணம் – பயணங்கள் முடிவதில்லை…


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்பதை, என் வலைப்பூவினை தொடர்ந்து படிப்பவர்கள் நன்கு அறிவார்கள். நான் சென்ற பயணம் பற்றிய பதிவு அல்ல இது. ஆனால் சமீபத்தில் பயணம் பற்றி படித்த இரண்டு கட்டுரைகளும், 31 பெண்கள் மட்டுமே சென்று வந்த ஒரு பயணம் பற்றிய தகவலும் தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர், இந்த நாளை இனியதோர் பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாமா! 


 
வாழ்க்கை வாழ்வதற்கே...

சுரேந்திரன் – 57 வயது. ராஜபாளையத்தினைச் சொந்த ஊராகக் கொண்டவர் – தன்னை நிலைநிறுத்தியது கோவையில். கட்டுமானத் துறையில் நல்ல வளர்ச்சி அடைந்த பிறகு 53-வயதில் அனைத்து பணிகளிலும் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஏன் என்ற கேள்விக்கான அவரது பதில்…

“இதே கேள்வியைத் தான் பலரும் கேட்டார்கள். பொதுவாகவே, `எனது சம்பாத்தியத்தில் எனக்கென 50 சதவீதம் கூட செலவளிக்க இயலவில்லையெனில், சம்பாதிப்பதில் என்ன அர்த்தம்’ என்று கேட்டுக்கொள்வேன். ஒரு கட்டத்தில் சம்பாதித்தது போதும், வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. தொழிலில் இருந்து விடைபெற்றுக்கொண்டேன்.   


படம்: இணையத்திலிருந்து...

சமீபத்தில் அவரது 42 பயணம் பற்றிய புத்தகம் ஒன்று வெளிவந்திருக்கிறது [புத்தகம் பற்றிய தகவல் கிடைத்தால் வாங்க வேண்டும்!]. அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், அசாம் என நான்கு மாநிலங்களில் ஏறத்தாழ 42 நாட்கள் பயணம் செய்தது குறித்து இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார். இதற்காக இரவல் டிஜிட்டல் கேமரா வாங்கி பயிற்சி எடுத்துக் கொண்டு பயணத்தில் 6200 படங்கள் எடுத்துத் தள்ளியிருக்கிறார்! பயணம் குறித்து இப்படி எழுதி இருக்கிறார்…

எழில் கொஞ்சும் இந்தியா...

உலகில் அதிகமான காண்டாமிருகங்கள் காணப்படும் போர்பிடோரா வனம், ஷில்லாங்கின் உமியம் ஏரி, பிரம்மாண்டமான பிரம்மபுத்திரா நதி, உலகில் அதிக மழை மொழியும் சிரபுஞ்சி பள்ளத்தாக்கு, மரத்தின் வேர்களால் இயற்கையாய் அமைந்த இரண்டடுக்கு பாலம், பிரம்மாண்ட பாறைகளால் ஆன ஆற்றுப்படுகை, டையந்த்லான் அருவி, இருபுறமும் பசுமை நிறைந்த சாலைகள், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகள், மெஞ்சுக்கா சியாங் நதியைக் கடக்க அமைக்கப்பட்டிருக்கும் தொங்கும் ஒற்றையடிப்பாலம், சீன எல்லையில் பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகள், யிங்கியாங்கிலிருந்து டியூடிங் செல்லும் வழியில் அமைந்துள்ள இரும்புப் பாலம், சாங்கே ஆற்றின் குறுக்கே 600 அடி நீளத்துக்கு, மரப் பலகைகளைக் கொண்டு ராணுவம் அமைத்த பாலம், புத்த மடாலயங்கள், லோஹித் நதியின் குறுக்கே 10 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்ட பாலம், இந்தியாவின் முதல் சூர்யோதயம் நிகழும் கிபித்து, சீனப் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவுச் சின்னங்கள், அழகு மிகுந்த பரசுராம் குண்ட் ஆறு என அற்புதம் நிறைய எண்ணற்ற பகுதிகளைக் கடந்தோம்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்!

31 வருடங்கள் 31 பெண்கள்:

பள்ளிப் படிப்பை முடித்து 31 வருடங்கள் கழித்து 31 பெண்கள் மட்டும் தங்கள் குடும்பத்தினர் எவரும் இல்லாமல் இந்தியா/உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்து கொல்லிமலையில் இரண்டு நாட்கள் தங்கி சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்.  பள்ளி/கல்லூரி மாணவ/மாணவிகள் இப்படிச் சந்திப்பது இப்போது நிறைய நடக்கிறது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டது எங்கள் ஊர் நெய்வேலி பள்ளி மாணவிகள். என் கல்லூரியில் எங்கள் வகுப்பிலும், நாங்கள் படித்த அதே ஆண்டில் வேறு வகுப்பிலும் படித்த மாணவிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள். இப்படி வருடத்திற்கு ஒரு முறை சந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். சென்ற வருடம் கோவையை அடுத்த ஒரு இடத்தில் சந்தித்தார்கள். வருடா வருடம் இப்படி சந்திப்பது சிறப்பான விஷயம். தினமலர் நாளிதழில் இச் சந்திப்பு பற்றிய செய்தி வந்திருக்கிறது.

உலகம் சுற்றும் மீனாட்சி


படம்: இணையத்திலிருந்து...
 
இந்தியாவிலிருந்து சாலை வழிப் பயணமாக ரஷ்யா வரை பயணிக்க இருக்கிறார் கோவையைச் சேர்ந்த மீனாட்சி. ஏற்கனவே கோவையிலிருந்து இங்கிலாந்திற்கு காரில் சாகசப் பயணம் மேற்கொண்ட இவர் வரும் 7-ஆம் தேதி அன்று கோவையிலிருந்து ரஷ்யாவிற்கு காரில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பெண்கள் எல்லோராலும் சாதிக்க முடியும். முதலில் வீட்டிலிருந்து வெளியுலகத்துக்கு வாருங்கள். தயக்கத்தை தூர எறியுங்கள்; சாதனைபடைக்கத் தயாராகுங்கள்” என்கிறார் இவர். இங்கிலாந்து சென்றபோது கிடைத்த அனுபவம் ஒன்றினை இப்படிச் சொல்கிறார்….

கடும் குளிரால் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. சுடுநீர் ஊற்றி பம்ப்களை சரி செய்து, பின்னர் புறப்பட்டோம். ஏறத்தாழ 180 கிலோமீட்டர் தொலைவுக்கு, பனிமலையில் பயணித்தோம். பனி, மோசமான சாலை காரணமாக மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்துக்குமேல் பயணிக்க முடியவில்லை. வழி முழுக்க ஒரு மனிதரைக்கூட பார்க்க முடியவில்லை. ஒரு வழியாக பனிமலையைக் கடந்தோம். ஏறத்தாழ 1,000 கிலோமீட்டர் தொலைவு கூடுதலாகப் பயணித்து, எல்லையைத் தாண்டினோம். அந்த ஆபத்தானப் பயணத்தை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது. 

படிக்கவே த்ரில் அனுபவம் தான் இல்லையா? அடுத்ததாகச் செல்லப் போகும் கோவை – ரஷ்யா பயணமும் சிறப்பு தான். அவருடைய பயணம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். இவர் பற்றிய முழு கட்டுரையையும் கீழேயுள்ள சுட்டி மூலம் படிக்கலாம்!


பயணம் செய்வது நல்லது! பயணங்கள் நல்ல பல விஷயங்களை நமக்குக் கற்றுத் தரும், நிறைய அனுபவங்களைக் கொடுக்கும். ஆதலினால் பயணம் செய்வோம்!

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

 1. நல்ல பொன்மொழி. சுவாரஸ்யமான இரண்டு புத்தகங்கள் பற்றி எழுதி இருக்கிறீர்கள் போல்...

  குட்மார்னிங் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய மாலை வணக்கம் ஸ்ரீராம்.

   மூன்று தகவல்கள் மட்டும்! புத்தகம் வெளிவந்தது பற்றிய தகவலும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  அழகான அர்த்தமுள்ள பொன்மொழி!

  இப்பெண்களின் பயணம் குறித்து அறிந்திருக்கிறேனே...எங்கேயோ வாசித்த நினைவு. பயணம் என்றால் நானும் விடமாட்டேனே...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை வனக்கம் கீதாஜி!.

   பொன்மொழி பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இரண்டு பயணங்களும் சாகசப்பயணங்கள் போல.. கொடுத்து வைத்தவர்கள். நேரமும் வசதியும் இருக்கிறது. பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரமும் வசதியும் இருந்தால் மட்டுமே இந்தப் பயணங்கள் சாத்தியம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பயணம் செய்த பெண்கள் அதேதான் நான் வாசித்த ஒன்றுதான்.

  முதல் செய்தியின் சுட்டி கட்டுரை வாசிக்கின்றேன். டிஜிட்டல் கேமரா வாடகைக்கு எடுத்து அதை இயக்க கற்றுக் கொண்டு வாவ்! வாசிக்க வேண்டும்..

  உலகம் சுற்றும் மீனாட்சியும் வாசிக்க வேண்டும்..

  நேற்றைய பின்னோக்கிச் சுட்டியும் இன்னும் வாசிக்கவில்லை ஜி. வாசித்துவிடுகிறேன்.

  நேற்றைய பாடல் கேட்டேன் ஜி...முன்பும் கேட்டிருக்கிறேன். அருமையான பாடல்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் முன்பே வாசித்த செய்தி.... தமிழ் இந்துவில் கட்டுரையாக இச்செய்தி வந்திருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 5. இரு பயணங்களுமே அருமையான த்ரில்லிங்க் பயணங்கள். பயணத்தில் ஆர்வமும் காதலும் இருந்தாலும் கூட எல்லோருக்கும் இப்படியான வாய்ப்பு கிடைப்பதில்லை. அதிர்ஷ்டக்காரர்கள் அதுவும் பெண்கள்!!நிஜமாகவே லக்கி தான். அதற்கான வசதியும், வீட்டினரின் ஒத்துழைப்பும், விட்டமின் எம் மும் வேண்டுமே!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைத்தான் நானும் நினைத்தேன் கீதா மா.

   நீக்கு
  2. இன்றைய பழமொழி இனிய செய்தியைக் கொடுக்கிறது.

   மலையைப் பார்த்து மலைக்காமல்
   முன்னேற வேண்டியதுதான்.
   42 நாட்கள் பயணம் செய்தவரின் முயற்சியை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

   கொல்லி மலையில் சந்தித்த பெண்களுக்கும் வாழ்த்துகள்.
   குடும்பத்தைவிட்டு இரண்டு நாட்கள் வந்தார்களே.
   பாராட்டுகள்.

   கோவையில் எப்பொழுதும் மோட்டார் வாகனங்களுக்குத் தனி
   பெருமை உண்டும். செல்வந்தர்களாக இருப்பதும்
   ஒரு காரணம். கார்ப்பந்தயங்கள் அங்கே நிறைய நடக்கும்.
   பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருமதி மீனாட்ச்கிக்கு வாழ்த்துகள்.
   உண்மையிலேயே சாகசம் தான்.

   நீக்கு
  3. த்ரில்லிங் பயணங்கள் தான். நீங்கள் சொல்வது போல ஆசை இருந்தாலும் இப்படி பயணங்கள் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
  4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
  5. ஒவ்வொரு செய்தியையும் உள்வாங்கி உங்கள் கருத்துரைகளை தந்தமை மகிழ்ச்சி தந்தது வல்லிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. மத்தியானமா வந்து படிக்கணும். இப்போக் கொஞ்சம் வேலை இருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது வந்து படியுங்கள் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. 6200 படங்களா? நம்பவே முடியவில்லை. அரிய சாதனைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் அம்மாவை பஹ்ரைனுக்கு அழைத்துச் சென்றபோது எல்லா இடங்களையும் கூட்டிச் சென்று காண்பித்தேன். அவர்கள் வந்திருந்த 4 முறையிலும் மொத்தம் 10,000க்கும் மேற்பட்டு படங்கள் எடுத்திருக்கிறேன். அவர்களை அங்கு அரசியல் பிரச்சனை இருந்தபோது, இராணுவ டாங்கி அருகில் வைத்து படமெடுக்கணும் என்று பிரயத்தனப்பட்டேன். அதுக்கு இராணுவம் ஒத்துக்கொள்ளவில்லை.

   நீக்கு
  2. 6200 படங்கள்! - இப்போது டிஜிட்டல் கேமரா என்பதால் இப்படி நிறைய படங்கள் எடுப்பது வழக்கமாகி இருக்கிறது. எனது பயணங்களில் கூட இப்படி எடுத்தது உண்டு - 15 நாட்கள் வடகிழக்கு மாநிலப் பயணத்தில் நான் எடுத்த படங்கள் கிட்டத்தட்ட 3000! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
  3. பஹ்ரைனில் உங்கள் அம்மாவுக்கு பல இடங்களையும் சுற்றிக் காண்பித்தது நல்ல விஷயம். அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 8. இவ்வளவு படங்களையும் பார்ப்பதற்கே ஒரு வாரம் வேண்டும் போலயே... ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி எடுக்கும் படங்கள் ஒரு வகையில் பொக்கிஷம் - ஒரு வாரம் கூடப் போதாது. எல்லாவற்றையும் நின்று நிதானித்து பார்க்க நிறைய நாட்கள் கூட ஆகலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 9. சுரேந்திரனின் பயண தாகம்... நல்லது. மற்றவர்களைப் பற்றிப் படித்த நினைவு இருக்கு.

  மாணவிகளின் (31 பெண்களின்) சந்திப்பு என்று படித்ததும் ஆதி வெங்கட் எழுதியதோ என்று யோசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுரேந்திரனின் பயண தாகம் - ஆமாம் இது ஒரு வரை தாகம் தான் - பலருக்கும் தாகம் தீர்வதில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. வாழ்க்கைப்பயணம் எளிதானால், எந்தப்பயணமும் சாத்தியமே...!

  சொந்தமாய் ஒரு சூரியன் - அந்த வானத்தைக்கேட்டால் என்ன...?
  இல்லையேல் நாம் சொந்தமாய் - ஒரு வானத்தை செய்தால் என்ன...?
  ஏ பூவே பூவே - என்ன சிரிப்பு...?
  உன் வாசம் எல்லாம் வீட்டுக்கனுப்பு...
  சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்னப்புள்ளிகளே..!
  காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுப்புள்ளிகளே...!

  வானம் என்ன வானம் - தொட்டுவிடலாம்...
  வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்...
  வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்...
  அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்...
  நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வாழ்க்கைப் பயணம் எளிதானால், எந்தப் பயணமும் சாத்தியமே// நூற்றுக்கு நூறு உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. திண்டுக்கல் தனபாலன் பகிர்ந்த பாடல் போல்// காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுப்புள்ளிகளே...!// என்று எங்கும் பயணிக்கலாம், சகல வசதிகளும் மனமும் இருந்தால் .

  பயணம் செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கும் பயணிக்கலாம் - சகல வசதிகளும் மனமும் இருந்தால்! உண்மை தான்மா... வசதி மட்டும் இருந்தால் போதாது - மனமும் வேண்டும்! வசதி இருப்பவர்களிடம் மனம் இல்லை! மனம் இருந்தால் வசதி இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 12. பயணங்கள் ...என்றும் அலுப்பது இல்லை ...


  இன்னும் இன்னும் என்னும் ஆவலை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு பூதமோ...


  இனிய பயண தகவல்கள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இன்னும் இன்னும்.... ஆவலை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு பூதமோ// ஹாஹா... பயணம் என்றும் அலுப்பதே இல்லை எனக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம்ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....