வியாழன், 29 ஆகஸ்ட், 2019

கடன் அன்பை முறிக்கும் – சோமு அண்ணா


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்.

நீ எதைச் செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், ஆன்மா, முழுவதையும் அர்ப்பணித்து விடுஸ்வாமி விவேகாநந்தர்.


****

என்ன தம்பி எப்படி இருக்க? சில நாளாக ஆளையே காணோமே... வீட்டை விட்டு வெளியே வரதில்லையா?” என்று கேட்டபடியே வீட்டுக்கு வந்தார் சோமு அண்ணா.

எடை மெஷினில் நின்றால் “ப்ளீஸ் என்னை விட்டுடு... உன் எடையை என்னால் அளக்க முடியாது?” என்று கதறும் அளவுக்கு எடை சோமு அண்ணனுக்கு! நல்ல உயரம், 100 கிலோவுக்கும் அதிகமான எடை, பெரிய முட்டைக் கண்கள், Bபஜாஜ் ஸ்கூட்டரில் அவர் வரும்போது ஏதோ சின்னஞ்சிறு சைக்கிள் போல இருக்கும் அந்த ஸ்கூட்டர்! உடம்பும் எடையும் எவ்வளவு பெரியதோ, சோமு அண்ணனுக்கு அதே போல மனசும் பெரியது, விசாலமானது! சந்திக்கும் அனைவரிடமும் சகோதர பாசத்தினைப் பொழியும் நல்ல மனசு. யாரையுமே தவறாகப் பார்க்கும்/பேசும் பலரின் நடுவே இவர் ஒரு தனிப்பிறவி. யார் என்ன தப்பு செய்தாலும், “பாவம்டா, அவனுக்கு என்ன பிரச்சனையோ?” என்று தான் சொல்வாரே தவிர கடிந்து பேசியதில்லை. அனைவரையும் தொட்டுத் தொட்டுப் பேசும் அவரது பாணி சில பெண்களுக்குப் பிடிக்காது – அவரிடம் விகல்பம் இல்லை என்பது தெரியாதவர்களாக இருந்தால். 

சோமு அண்ணனுக்குத் திருமணம் முடிந்து ஒரே ஒரு மகன். அவரது மனைவியும் நல்ல வேலையில் இருந்தார். இவரும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரே மகனும் நல்ல படித்துக் கொண்டிருந்தான். சோமு அண்ணன் எவ்வளவுக்கு எவ்வளவு அனைவரிடமும் நட்பு பாராட்டுவாரோ அதற்கு நேர் எதிர் அவரது துணைவி. அவர் உண்டு அவர் வேலை உண்டு, அவர் குடும்பம் உண்டு என்று இருப்பவர். யாரிடமும் பெரிதாக ஒட்டுதல் இல்லை. என்னைப் போல சோமு அண்ணனின் சில நட்புகள் மட்டும் அவரது வீட்டுக்குச் சென்றதுண்டு. பெரிதாக வரவேற்பு இருக்காது. அதனாலேயே அவர் வீட்டுக்கு மற்றவர்கள் செல்வதை விட அவர் அடுத்தவர் வீடுகளுக்கு வருவது தான் அதிகம் நடக்கும். அவரைத் தெரிந்த எவருக்கும் அவரது பிரச்சனைகளை தெரிந்திருக்கவில்லை.

”வாங்க அண்ணே... உட்காருங்க... எப்படி இருக்கீங்க? வேலை அதிகம்ணே. அதான் எங்கேயும் வர முடியறதுல்ல! என்ன குடிக்கறீங்க? சாயா இல்லை காப்பியா?” பேசியபடியே அவருக்கான ஒரு இருக்கையை அவர் பக்கம் நகர்த்தினேன்.

“இல்லை தம்பி நான் கீழேயே உட்கார்ந்துக்கறேன். நம்ம எடையை இந்த ப்ளாஸ்டிக் Chair தாங்காது! ஏற்கனவே உங்க வீட்டுல ஒண்ணு உடைஞ்சு போச்சு நியாபகம் இருக்கே! நம்ம எடை அப்படி!” என்று சொன்னபடியே அவரது கனத்த சரீரத்தை கஷ்டப்பட்டு கீழே அமர்த்தினார். “கொஞ்சம் பேசணும் தம்பி. உட்காரு! சாய் அப்பறமா குடிக்கலாம். இன்னிக்கு மதிய சாப்பாடு கூட உங்கூடதான். காய் என்ன இருக்கு? அப்படியே கட் பண்ணிட்டே பேசலாம்” என்று சொல்ல, நானும் ”என்ன பேசணுமோ தெரியலையே?” என்று யோசித்தபடியே அமர்ந்தேன். எப்போதுமே இப்படித்தான் சோமு அண்ணா. நண்பர்களின் வீடுகளில் உரிமையோடு கேட்டு சாப்பிடுவார். சமையலில் தானும் உதவி செய்வார். இத்தனைக்கும் அவர் வீடு சில நிமிட நடை தூரத்தில் தான் என்றாலும், எங்கள் வீட்டில் சாப்பிட்டுச் செல்வார். பல நாட்கள் இப்படி எங்கள் Bachelor Room-ல் உணவு சாப்பிட்ட பின் சென்றதுண்டு.

நான் கொண்டு வந்த உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொண்டே இருந்தார். அவராக என்ன பிரச்சனை என்று சொல்வார் என்று நானும் காத்திருந்தேன். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் சிரத்தையாக தயார் செய்த பின் கிச்சனுக்குள் நுழைந்தார். சமையல் செய்தபடியே நாட்டு நடப்பு பலவற்றையும் பேசிக் கொண்டிருந்தார்.  சமையல் முடியும் வரை அவருடைய சொந்தப் பிரச்சனை பற்றி எதுவுமே பேசவில்லை. நாங்களும் கேட்கவில்லை. மதிய உணவு நேரம் வந்ததும், ”அண்ணே… சூடா சாப்பிட்டுடலாம்” என்று சொல்ல அனைவரும் ஒன்றாக கீழே அமர்ந்து சாப்பிட்டு முடித்தோம். உருவத்தின் காரணமாக தட்டை கீழே வைத்து சாப்பிடுவது அவருக்கு முடியாத காரியம். கைகளில் பிடித்துக் கொண்டு அவரது தொப்பையை முட்டுக்கொடுத்து தான் சாப்பிடுவார். அன்றைக்கும் அப்படியே…

எப்போது வீட்டுக்கு வந்தாலும், சாப்பாடு தவிர சின்னதாய் ஒரு தூக்கம் போடுவதும் உண்டு! உட்கார்ந்தபடியே, எங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டு, தூங்க ஆரம்பித்து, நல்ல குறட்டையோடு உறங்க ஆரம்பித்து விடுவார். பிறகு அப்படியே படுத்தும் உறங்கிவிடுவார். சில நாட்கள் காலை பத்து மணிக்கு வந்தால், மாலை ஐந்து, ஆறு மணி வரை கூட எங்களுடன் இருந்ததுண்டு. அன்றைக்கும் உணவுக்குப் பிறகு எதை எதையோ பேசிக் கொண்டிருந்தவர் உறங்க ஆரம்பித்தார். நாங்களும் உறங்கி எழுந்து, தேநீர் தயாரிக்க, அவரும் எழுந்து எங்களுடன் தேநீர் குடித்த பின், “தம்பி என்னமோ பேசணும்னு வந்துட்டு, சப்பாடு, தூக்கம்னு நேரம் போயிடுச்சு. அப்புறமா இன்னோரு நாள் வரண்டா… வீட்டுல தேடுவாங்க” என்று சொல்லி புறப்பட்டார் சோமு அண்ணன்.

அன்று வந்து சென்ற பிறகு ஒரு வாரத்திற்கும் மேலாக எங்கள் வீட்டுக்கு வரவே இல்லை சோமு அண்ணன். பொதுவாக எங்கேயாவது வெளியிலோ, மற்ற நண்பர்கள் வீட்டிலோ அவரைப் பார்க்க முடியும். ஆனால் இந்த முறை அவரை பார்க்கவே இல்லை. பத்து நாட்கள் கழித்து அவர் வீடு வழியே அலுவலகத்திலிருந்து வந்த போது அவர் வீட்டு வாசலில் ஒரு பெரிய லாரி நின்று கொண்டிருக்க, வீட்டிலிருந்த சில சாமான்கள் மட்டும் அதில் ஏறிக் கொண்டிருந்தது. அண்ணி தான் அங்கே இருந்தார். “என்ன அண்ணி, திடீர்னு? வீடு மாற்றலா?” என்று கேட்க, “ஆமாம் தம்பி வேற இடத்துக்குப் போறோம்” என்று சொல்லி உள்ளே சென்று விட்டார். ஏன் எதற்கு என்று ஒன்றும் புரியவில்லை. நானும் வீடு சென்று விட்டேன். இரவு 10 மணிக்கு மேல் சோமு அண்ணன் வீட்டுக்கு வந்தார். கண்களில் அப்படி ஒரு சோகம்…

“வாங்கண்ணே… இந்த நேரத்துல வந்து இருக்கீங்க… என்ன விஷயம்?” என்று கேட்க, “தம்பி, பசிக்குதுடா… சாப்பாடு இருக்கா?” என்று கேட்க, மனது ரொம்பவே கஷ்டமானது. உடனே சப்பாத்திக்கு மாவு பிசைந்து இருந்த சில காய்கறிகளைச் சேர்த்து மிக்ஸ் வெஜ் சப்ஜியும் சப்பாத்தியும் செய்தேன். மூன்று நான்கு சப்பாத்தி உள்ளே போனது. கொஞ்சம் ஆஸ்வாஸப்படுத்திக் கொண்ட பிறகு பேச ஆரம்பித்தார். “கொஞ்சம் நாளாவே வீட்டுல பிரச்சனை டா. கொஞ்சம் கடன் அதிகமா ஆயிடுச்சு. வீட்டு செலவு முழுசும் என்னுதுதான். அவளோட சம்பாத்யம் வீட்டுச் செலவுக்குக் கொடுக்க மாட்டா. வீட்டை நிர்வாகம் செய்யறது ஆம்பளையோட வேலை. வீட்டோட எல்லா செலவுக்கும் ஆம்பளை தான் சம்பாதிக்கணும். என்னோட சம்பளம் செலவுக்கு அல்ல. சேமிப்பிற்கு மட்டுமே” என்று சொல்வது அவள் வழக்கம்.

வீட்டு செலவு, அப்பா உடம்பு சரியில்லாம போக அப்போது மருத்துவ செலவு, நாலு தடவை தமிழ்நாடு ஃப்ளைட்ல போனது, குடும்பத்தோட கோவா போன செலவுன்னு கொஞ்சம் கொஞ்சமா கடன் அதிகரிச்சுக்கிட்டே போச்சு! கிட்டத்தட்ட இரண்டு மூணு வருஷமா க்ரெடிட் கார்டுல குறைந்த பட்ச அளவு மட்டும் பணம் கட்டி, அசலும் வட்டியுமா சேர்ந்து ரொம்பவே கடன் அதிகமா ஆயிடுச்சு. எல்லாம் சேர்ந்து கழுத்த நெறிக்க ஆரம்பிச்சுது. சரி இந்தக் கடனை எல்லாம் அடைக்க பெர்சனல் லோன் போட, அதுக்கு வட்டி, அசல்னு எல்லாம் சேர்ந்து பெரிய கடன். ஆஃபீஸ்ல ஒருத்தனுக்கு கடன் கொடுத்திருந்தேன். அவனும் ஏமாத்திட்டாண்டா. மொத்தமா இன்னிக்கு பத்து லட்சம் கடன்! எப்படி புரட்டினாலும் முடியலடா… இப்படி கடன்காரனோட குடும்பம் நடத்தறது கஷ்டம். என்னிக்கு உன்னால, உன் சம்பாத்யத்துல குடும்பத்த நடத்த முடியலையோ, அப்புறம் வாழ்க்கையில என்ன இருக்கு? அப்படின்னு அவ தனி வீடு வாங்கிட்டு போயிட்டாடா…

தினம் தினம் சண்டை, சச்சரவுன்னு என்னாலையும் இருக்க முடியலடா… எல்லாக் கடனையும் சீக்கிரமா அடைக்கிறேன் பார்னு சொன்னாக்க, அவ சொல்றா, எல்லாக் கடனையும் அடைச்சிட்டு வா, உனக்காக என் வீட்டுக் கதவுகள் திறந்து இருக்கும்னு பையனையும் அழைச்சுட்டு வேற வீட்டுக்குப் போயிட்டா… சீக்கிரமா கடனை அடைக்கணும்… இன்னும் நாலு வருஷம் இருக்கு பணி ஓய்வுக்கு. அதுக்குள்ள கடனை அடைச்சிடுவேண்டா” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அப்படியே தூங்க ஆரம்பித்தார். எத்தனை கஷ்டம் மனிதனுக்கு. கஷ்டம் என்று வரும்போது அவருடன் இல்லாமல் இப்படி தவிக்க விட்டு விட்டார்களே என்று நினைத்தபடி நாங்களும் உறங்கினோம். சில வருடங்கள் ஆன பிறகும் அவர் கடன் முழுமையாக அடைக்க முடியவில்லை. பணி ஓய்வு பெற்று வந்த பணத்தில் கடனை அடைத்து விட்டு தனது சொந்த கிராமத்திற்குச் சென்று விட்டார். கடைசி வரை அவரது மனைவி அவரை சேர்த்துக் கொள்ளவே இல்லை!

கடன் அடைந்த பிறகு கூட சேர்த்துக் கொள்ளவில்லை என்பதில் அவருக்கும் வருத்தம் தான். கடைசி காலத்தில் குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்ற கவலை அவருக்கு நிறையவே இருந்தது. பல நண்பர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்தவருக்கு உதவி செய்ய யாருமே இல்லை. கடன் அன்பை முறிக்கும் என்று அவ்வப்போது படித்த வரிகள் மனதுக்குள் வந்து போனது.

சில நாட்கள் முன்னர் ஊரிலிருந்து அழைப்பு. எங்கள் இருவருக்குமே தெரிந்த நண்பர் அழைத்திருந்தார்.

“டேய் சோமு அண்ணன் செத்துட்டார்டா…”

****

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

பின்குறிப்பு: சென்ற சில வாரங்களாக எழுதி வரும் அலமேலு மாதிரி வருமா..., பாசத்தின் வாசம், ஆண்டாள் பாட்டி, பதிவுகளை படித்திருக்கலாம்! இந்தப் பதிவுகள், சும்மா ஒரு சிறுகதை மாதிரி எழுதும் முயற்சி தான். கேரக்டர் கதைகள் என்று கூட சொல்லலாம்! இன்றைய பதிவும் அப்படி ஒரு முயற்சி தான். நிறை குறைகள் இருந்தால் சொல்லுங்களேன்... வெங்கட், புது தில்லி.

30 கருத்துகள்:

 1. அர்ப்பணிப்புடன் செய்யும் எந்த வேலையுமே சிறக்கும். குட்மார்னிங்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   அர்ப்பணிப்புடன் செய்யும் வேலை அனைத்தும் நல்ல பலன் தரும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. பாவம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. குறைகள் எதுவும் இல்லைப்பதிவில். நிறைகள்தான். நன்றாக எழுதுகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஏதோ உண்மை நிகழ்வு போல் இருக்கிறது ஜி சோமு அண்ணன் மனதில் நிலைத்து விட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல கதைகள் கற்பனை கலந்த உண்மை தானே கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. சோமு அண்ணன் மனதை கனக்க வைத்து விட்டார்.

  //எங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டு, தூங்க ஆரம்பித்து, நல்ல குறட்டையோடு உறங்க ஆரம்பித்து விடுவார். //

  இப்படி கவலை உள்ளவருக்கு இறைவன் கொடுத்த வரம் தூக்கம் போலும் ! உடனே தூங்கி விடுகிறார்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் கொடுத்த வரம் தூக்கம். இருக்கலாம் கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 7. கதை அம்சம் கம்மி.சோமு காரக்டர் விலாவரியாக நன்றாக வருகிறது. அப்படியானவர் அகலக் கால் வைத்துக் கடனில் மூழ்குவது ஒத்துவரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை அம்சம் கம்மி. சரி தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமன் ஜி.

   நீக்கு
 8. அந்த விசாலமான மனதை, அவரின் மனைவி புரிந்து கொள்ளவில்லை என்கிற வருத்தம் வருகிறது...

  கடைசி வரையிலும் மனைவி, துணைவியாக மாறவில்லை...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 9. கதை நல்லா வந்திருக்கு. நீங்க சொன்னமாதிரி கேரக்டர் நல்லா எழுதியிருக்கீங்க.

  குடும்பத் தலைவன்னா, அந்த பொறுப்பை சரியாச் செய்யணும். இல்லைனா மனைவி பிரிவைத் தவிர்க்க முடியாது. மத்தவங்களை பாதிக்கும் எந்தச் செயலையும், ஒரு குழுவாத்தான் தீர்மானிக்கணும். தன்னிச்சையா தீர்மானித்தா வாழ்க்கை விளங்காது என்பதைச் சரியாச் சொல்லியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. கடன் பட்டாற் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கைவேந்தன்... ஆகவே முடிந்தவரை கடனே கூடாது என்று எங்கள் ஆத்தா அடிக்கடி கூறுவார். அதனை நினைவுபடுத்திய பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகவே சொல்லி இருக்கிறார் உங்கள் ஆத்தா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 11. ஓ இது கற்பனைக் கதைதானோ? அப்பாடா என இருக்குது இப்போதான், நான் ஏதும் உண்மைக் கதையோ என நினைச்சிட்டேன்.

  முடிவு கொஞ்சம் மாற்றி அமைச்சிருக்கலாமோ. எனக்கு ஒரு விசயம் பிடிப்பதில்லை, வெளிநாடுகளில் எப்பவும் இல்லாத மெண்டாலிட்டி நம் நாட்டினரிடம் அதிகம் இருக்கு. அதாவது ரிரயேட் ஆகும் வயசை அடைஞ்சிட்டால், இனி என்ன வயசாகிட்டுது, இனி மரணம்தான் என்பதுபோலவே மக்கள் ஒருவரைப் பார்க்க வெளிக்கிடுகின்றனர். பிள்ளைகள் கூட, அப்பாவுக்கு வயசாகிட்டுது, அவருக்கு சுற்றுலா எல்லாம் வர முடியாது, இப்படிச் சொல்லிச் சொல்லியே வருத்தக்காரர் ஆக்கி விடுகின்றனர். இது எவ்வளவு தப்பான கருத்து.

  வெளிநாடுகளில் ரிரயேட் ஆன பின்புதான் மிகவும் ஜாலியாக வாழ ஆரம்பிக்கின்றனர்... புதுமணத் தம்பதிகள்போல பொறுப்புக்கள் ஏதுமின்றி சுத்தக்கூடிய தருணம் அதுதானே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் கற்பனை - நிறைய உண்மை அதிரா.

   முடிவு - உண்மையில் நடந்ததை அப்படியே எழுதி இருக்கிறேன்.

   வெளிநாடுகளில் ரிரயேட் ஆன பின்பு தான் மிகவும் ஜாலியாக வாழ ஆரம்பிக்கின்றனர்... நல்ல விஷயம் தான் அதிரா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. அழியாத கோலங்கள் திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ​கௌரி டீச்சர் இறந்த செய்தியுடன் கடிதம் வரும், அது போலத்தான் இந்தக் கதையும். ஆனால் செய்தி கடைசியில்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. பாவம் தான், இந்த க்ரெடிட் கார்டால் எத்தனை பேர் வாழ்க்கை கடன் தொல்லையில் மூழ்கிப் போயிருக்கிறது! கொஞ்சம் சுதாரித்துக் கொண்டிருக்கலாம். அல்லது அவர் மனைவியாவது கடன் வாங்கியெல்லாம் செலவு செய்ய வேண்டாம் எனச் சொல்லி இருக்கலாம். தன் சம்பளத்தை அப்படியே வைத்துக் கொண்டு எல்லா அதிகப்படிச் செலவுகளையும் கணவனைப் பண்ணச் செய்த அவர் மனைவியும் குற்றவாளியே! பல பெண்களும் இப்படித் தான் கணவனுக்குக் கடன் என்று வந்த மாத்திரம் நீயாச்சு உன் கடனுமாச்சு. அதைத் தீர்த்துவிட்டு என்னைச் சேர்த்துக் கொள் என்று போய்விடுகிறார்கள். சுகம், துக்கம் இரண்டும் அனுபவிக்கத் தானே வாழ்க்கை, கல்யாணம் எல்லாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. க்ரெடிட் கார்ட் - கொஞ்சம் ஆபத்தானது தான். சரியான விதத்தில் பயன்படுத்தவில்லை என்றால் பிரச்சனைகள் தருவது.

   மனைவியும் குற்றவாளியே - ம்ம்ம்ம்... இரண்டு பேரிடமும் தப்பு இருக்கிறது என்பது தான் உண்மையும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 14. மனம் கனக்கும் கடன் தொல்லை. மனைவியும் தவிக்க விட்டது கொடுமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 15. கதை போலுமொரு நிஜம். கற்பனை போலும் சில சம்பவங்கள். சோமு அண்ணா பாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. அவர் மனைவி சொன்ன சொல்லை தவறவிடுவது அவருக்கு அதீத அனுதாபத்தைப் பெற்றுத் தருகிறது. அவரின் உன்னதமான குணம் அந்த மனைவியையும் மன்னித்து விடுகிறது. சோமு அண்ணாவுக்காக கதை படித்த நாங்களும் வருந்தினோம்.

  தொடர்ந்து மனதை விட்டகலாத சம்பவங்களை கதைகளாக்குங்க சகோ. மகிழ்வான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி நிலாமகள் சகோ.

   மனதை விட்டகலாத சம்பவங்களை கதைகள் ஆக்கலாம்! முயற்சிக்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....