திங்கள், 12 ஆகஸ்ட், 2019

நூற்றாண்டு உறக்கம் - கவிதைகள் – கிண்டில் வாசிப்புஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லைசிசரோ.சுந்தர்ஜி, மோகன்ஜி, பத்மநாபன், ரிஷபன் ஜி, சிவகுமாரன் என பலரும் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை. மோகன்ஜி அவர்கள் பதிவில் வரும் கருத்துரைகள், பதில்கள் என அனைத்துமே படிக்கப் படிக்க ஆனந்தம் தந்தவை. சிறப்பான உரையாடல்களும், கவிதைகளும் இடம் பெறும் அந்தப் பதிவுகள் இப்போது வருவதில்லை என்பதில் எனக்கு ஆதங்கம் உண்டு. சுந்தர்ஜி வேறு வேலைகளில் இறங்கி விட்டார். மோகன்ஜி மற்றும் ரிஷபன்ஜி இருவருமே முகநூலில் மூழ்கிவிட்டார்கள். பத்மநாபன் அவர்கள் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. நான் முகநூலிலிருந்து வெளிவந்து விட்டதால் இப்போது அவர்களுடைய பதிவுகளைப் படிக்கவும் வாய்ப்பிருப்பதில்லை. சமீபத்தில் சுந்தர்ஜி அவர்களின் “நூற்றாண்டு உறக்கம்” கவிதைகள் தொகுப்பினை கிண்டிலில் தரவிறக்கம் செய்து கொண்டேன். தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இங்கே ஒரு புத்தக அறிமுகமாக…

மாய இசை

வீணை உருவாக்கும் ஒரு தச்சுப்பட்டறையை
இப்போது நீங்கள் கடக்கிறீர்கள்.
வாருங்கள்.
உங்களுக்கு அவகாசம் இருப்பின்
என்னுடன் அமர்ந்து கொள்ளலாம்.
எங்கோ என்றோ வளர்ந்த
ஒரு பலா மரத்தின் நீள்துண்டு அது.
ஒளிந்திருக்கும் வீணையை
இழைப்புளியால் தேடி எடுத்துவிடுவோம்
என்று சிரித்தபடியே சொல்கிறார் தச்சர்.
செதில் செதிலாக மரத்தை இழந்து
நளின லாவகமாகப் பிறக்கிறது வீணை.
தன்னை மீட்ட இருக்கும் விரல்கள் எதுவென
தந்திகளுக்குக் காத்திருக்கும்
அந்த வீணைக்கு இப்போது தெரியும்
தன்னில் ஒளிந்திருக்கும் மாய இசையை
அப்போது அந்த விரல்களுக்குப் பரிசளிக்கும்.

அந்த வீடு

மறைந்து போனது
யாருமில்லா அவ்வீட்டின் ஆதிநிறம்
நிச்சயம் மகன் வருவான்
அவனின் வர்ணத்துடனோ
வீட்டை அழிக்கும் வரைபடத்துடனோ
  
ஒரு யானை என்பது

ஒவ்வொரு தலையிலும்
துதிக்கை
பதிக்கும்போதும்
யானை
தன் காட்டை
நினைக்கிறது.
பாகன்
தன் வீட்டை
நினைக்கிறான்.

பொம்மைகளின் அம்மா

முதலாவது சொன்னபடிக்குப்
பாடம் படிக்கவில்லை.
அடுத்ததோ
சாப்பிடுவதற்குப் பிடிவாதம்.
‘இரண்டையும்
வைத்துக் கொண்டு
எப்படித்தான்
சமாளிக்கப் போகிறேனோ?’
அலுத்துக் கொண்டது
அம்மா வெளியில்
போயிருந்தபோது –
பொம்மைகளின்
அம்மாவாகியிருந்த
குட்டிப் பெண்.

பலூனுள்

கடற்கரை பலூன்களில்
ஒளிந்திருக்கிறது
குழந்தைகளின் கனவு.
மறுக்கப்பட்டவற்றில்
விற்பவனின் உயிர் மூச்சு.

மலர்ந்த சருகு

உறக்கமற்ற நள்ளிரவில்
புரட்டிக் கொண்டிருந்த அந்தப் புத்தகத்தின்
இடையில் இருந்தது
நீ சூடித் தந்த மலர்.
ஓர் உயிரின் கூடு போல
ஒரு நினைவின் சாட்சி போல
சருகாகிக் கிடக்கிறது அந்த மலர்.
உன் இதழில் பதித்த ஈரம்
உறைந்து கிடக்கிறது
அதன் நினைவில்.
கரைந்து போன காலம்
ஒளிந்து நிற்கிறது அதன் மடியில்.
நீ மட்டுமே உணர்ந்த
முத்தம் ஒன்றை
நான் அதன் சருகில் மெல்லப் பதிக்க
மீண்டும் மலரானது அந்தச் சருகு.

இந்த மின்னூலில் இருக்கும் பல கவிதைகள் ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்குபவை. ஒவ்வொன்றும் உங்களது எண்ண ஓட்டங்களை அதிகரிக்கச் செய்யும் கவிதைகள் – நின்று நிதானித்து வாசிக்க வேண்டிய கவிதைகள்.  அமேசான் கிண்டில் தளத்தில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. விலை ரூபாய் 390/-.  Kindle Unlimited [மாதத்திற்கு ரூபாய் 169/-] கொடுத்து சந்தாதாரராக இருந்தால் விலையில்லாமல் கிடைக்கும். தன்னைப் பற்றிய அறிமுகமாகச் சொல்லி இருக்கும் வரிகளை இங்கே அப்படியே கொடுத்திருக்கிறேன்.

தமிழில் நல்ல கவிதைகளை எழுத முயற்சித்திருக்கிறேன். என் கவிதைகளின் தரம் உங்களுக்கு மிக நெருக்கமானதாகவும், செறிவானதாகவும் இருக்குமாயின், அதற்கு தமிழின் சங்க காலம் தொடங்கி, சமய இலக்கியம், நீதி இலக்கியம் போன்ற கடந்த கால சாதனை எழுத்துக்களே ஆதாரம். அதே நேரத்தில் நான் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் என் நீங்கள் உணரக்கூடுமாயின், கவிதை குறித்த எனது ஞானத்தின் போதாமையே. கடந்த முப்பதாண்டுகளாக இடைவெளிகளுடன் எழுதி வரும் என் எழுத்தும், என்னுடைய பரிணாம வளர்ச்சியை ஒத்து, பல தளங்களில் இயங்குவதை நீங்கள் உணர முடியும். இந்த எழுத்து, அரிசியை உள்ளடக்கிய நெல்லா, வெறும் சாவியா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட்.

  பொன்மொழியை ஒரு சிறுமாற்றம்... கொஞ்சம் ஆர்வமும் தேவை! ஹா.. ஹா... நேரம் தேவை என்று சொல்ல மாட்டேன்... ஆர்வமிருந்தாலனேரம் தானாக அமையும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   ஆர்வமும் தேவை - உண்மை தான். ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக நேரமும் தானாகவே அமையும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. ஆமாம்... பத்மநாபன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆர்வமுள்ள வாசகர். உங்கள் தளத்தில் வரும் பத்மநாபன் கமெண்ட் வரும்போதெல்லாம் எனக்கு அவர் நினைவு வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட உங்களுக்கும் அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியாதா ஸ்ரீராம். முகநூலில் முன்னர் இருந்தார். இப்போதும் இருக்கிறாரா எனத் தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பகிரப்பட்டிருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் முத்து.

  உண்மை.

  பல்வேறு சிந்தனைகளை நம்முள் கிளறி விடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல்வேறு சிந்தனைகளையும் கிளறும் கவிதைகள் தான் - தொகுப்பில் இப்படி நிறையவே உண்டு ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  உங்கள் பக்கம் 5.30 லிருந்து இறங்கிக் கொண்........டே.............இருந்து இப்போதுதான் வடிவமாக வந்துள்ளது!!!...ராஜியின் கனவுகள் இன்னும்வந்து சேர்ந்தபாடில்லை!! சும்மா தளம் சும்மாவே சுற்றிக் கொண்டிருக்கு ஹா ஹா ஹா ஹா..

  கவிதைகள் வாசித்துவிட்டு வருகிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி!

   எனக்கு தளம் விரைவில் திறக்கிறதே! இணைய வேகம் காரணமா? என்னுடைய பக்கத்தில் தேவையில்லாத விட்ஜெட் எதுவும் இல்லையே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. நூலகம், தோட்டம் இரண்டுமே ரசனைக்குரியவையே! சுந்தர்ஜியின் இந்தப் புத்தகம் பற்றி மோகன் ஜி எழுதினாரோ? பொம்மைகளின் அம்மா கவிதை மனதைக் கவர்ந்தது. கிட்டத்தட்ட இப்படித் தான் நேற்றுக் குட்டிக் குஞ்சுலு விளையாடிக் கொண்டிருந்தது. அதிலும் இரண்டு பொம்மைகளை வைத்துத் தான்! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்புத்தகம் பற்றி மோகன் ஜி எழுதி இருக்கலாம். நினைவில்லை.

   உங்கள் பேத்தியும் பொம்மைகளுடன் விளையாடியதில் மகிழ்ச்சி. பொம்மை விளையாட்டில் இருந்த ஆர்வம்... அது ஒரு தனி உலகம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. "அந்த வீடு" கவிதை இன்றைய யதார்த்தத்தைச் சொல்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீடு கவிதை உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. எல்லாக் கவிதைகளும் அருமை. யதார்த்தம் பேசுகின்றன...

  என்னென்னவோ சிந்தனைகள் வருகிறது..

  அருமை அனைத்தும். சுந்தர்ஜி அவர்களின் தளம் சென்ற நினைவு இருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதைகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதாஜி. சிந்தனையைத் தூண்டும் கவிதைகள் என்பது உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 9. அருமையான கவிதைகள் .
  //பொம்மைகளின்
  அம்மாவாகியிருந்த
  குட்டிப் பெண்.//

  மனதை கவர்ந்தாள்.
  வீடு கவிதை உண்மையை சொல்கிறது.
  பலூன் கவிதை பெருமூச்சை வரவழைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேர்ந்தெடுத்து இங்கே பகிர்ந்த கவிதைகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. அவர்களது பதிவுகள் இப்போது வருவதில்லை என்பதில் எனக்கும் ஆதங்கம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. //ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை// - மனைவி கூட வேண்டாமா? யாரு சோறு பொங்கிப் போடுவது? நல்லா இருக்கே பழமொழி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மனைவி கூட வேண்டாமா? யாரு சோறு பொங்கிப் போடுவது?// :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  2. ஏன்? மனைவிக்கும் ரசனைகளே இருக்கக் கூடாதா நெ.த.? சோறு பொங்கிப் போடத்தான் மனைவியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆணாதிக்கம், ஆணாதிக்கம்! :P :P :P

   நீக்கு
  3. நெல்லைத் தமிழரே... வந்து பதில் சொல்லுங்க...:)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
  4. ஹிஹிஹி, இப்போ மறுபடி வெங்கட்டோட பதிலைப் படிக்கிறச்சே, ஏன் சமையலுக்கு ஆள் போடக் கூடாதா எனத் தோன்றியது! நெ.த. இன்று வசமாக மாட்டிக் கொண்டார்!

   நீக்கு
  5. ஹாஹா.... நெ.த. இன்னமும் காணோம்.... அவர் வந்து தான் பதில் சொல்லணும். கீதாம்மாவுடன் சேர்ந்து நானும் பதிலுக்காக் காத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
  6. கீசா மேடம்... என் தனிப்பட்ட எண்ணம். அவரவர்களுக்கு எது ரொம்ப நல்லா வருமோ அதைச் செய்வதுதான் உத்தமம். நான் நிறைய தடவை சமையல் செய்வேன். ஆனா மனைவி சமையல் செய்து சாப்பிடும்போதுதான் பல சமயம் திருப்தி வரும் (நானே செய்து சாப்பிடும்போது அவ்வளவாக திருப்தி வருவதில்லை). மத்தபடி 'ஆணாதிக்கம்' - ஹா ஹா... பிறந்ததிலிருந்து இருக்கும் குணம், சட்னு போயிடுமா?

   //சமையலுக்கு ஆள் போடக் கூடாதா // - முன்னமே எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். முன்பு ஒரு தடவை நீயா நானாவில் ஒரு வேலைக்குப் போகும் பெண் (27-30க்குள்தான் இருக்கும் வயது), வீட்டில் சமையலுக்கு ஆள் வைத்திருக்கிறேன், நான் ஆபீஸ் விட்டு வந்தவுடன் ரெடியாகி, கணவர் வரும்போது அவருடந்தான் இருப்பேன். அவர் 'கேட்டால்', 'இன்னைக்கு வேண்டாம், டயர்டா இருக்கு' என்றெல்லாம் சொல்லக்கூடாது என்பது என் எண்ணம். வயது ஆகிவிட்டால் இது செகண்டரி ஆகிவிடும். ஆனால் தற்போது அப்படி அல்ல. அதனால் அதற்குத்தான் முக்கியத்துவம் என்று பேசினார்.

   நீக்கு
  7. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 12. அருமையான, பாராட்டத்தக்கப்பட வேண்டிய முயற்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 14. அந்த வீடு, ஒரு யானை என்பது, பொம்மைகளின் அம்மா - ஆகா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  இனிமையான வாசகம் அருமையாக இருந்தது. உண்மைதான்.. தோட்டப்பராமரிப்பும், நூலகத்தின் அருமையான பயன்பாடும், இருந்து விட்டால் ஒரு மனிதருக்கு அதை விட வேறெதுவும் வேண்டாம்.

  கவிதைகள் அருமையாக இருக்கிறது. அந்த வீடு, யானை, பொம்மைகளின் அம்மா, பலூன் முதலிய எல்லா கவிதைகளும் மிகவு‌ம் அழகாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கனலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 17. சிறப்பாண கவிதைகளை பகிர்ந்தமைக்கு நன்றி. நல்ல கவிதைகளை வாசித்தல் மட்டுமல்ல பகிர்வதும் சுகமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....