செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

அலுவலக அனுபவங்கள் – ஹர்ஷத் மேஹ்தாவும் சாக்லேட் கிருஷ்ணாவும்
அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை சமீபத்தில் படித்து ரசித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக வருந்தாதே. ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் இதயத்தை அளிக்கப் போகிறதுயாரோ.

சாக்லேட் கிருஷ்ணா: எங்கள் அலுவலகத்தில் நான் பணிபுரிந்த பிரிவிலேயே கணக்கியல் உதவியாளராக பணிபுரிந்தவர் திரு கபூர் – செல்லமாக சாக்லேட் கிருஷ்ணா! எல்லோருக்கும் பிடித்தவர் – ஆங்கிலப் புத்தாண்டு வந்தால் போதும் – நீட்டாக கோட்-சூட்டில் அலுவலகம் வருவார். கோட் பாக்கெட்டில் நிறைய சாக்லேட்டுகள் வைத்திருப்பார். அனைவருக்கும் – பதவி, யார் எவர் என்ற வித்தியாசங்கள் இன்றி பார்க்கும் அனைவருக்கும் கை கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்வார் – கைகொடுக்கும்போதே இவர் கையிலிருக்கும் சாக்லேட் அடுத்தவர் கைக்கு மாறும்! வருடம் தவறினாலும் தவறும் இவர் இப்படி சாக்லேட் கொடுப்பது தவறியதே இல்லை! கூடவே கணினியில் மெனக்கெட்டு புத்தாண்டின் பன்னிரெண்டு மாதங்களுக்குமான படங்களுடன் சேர்த்து ஒரே காகிதத்தில் நாட்காட்டியைத் தயாரித்து அனைவருக்கும் வழங்குவார். அரசு விடுமுறை நாட்கள் எவை என்ற குறிப்பும் அதில் இருக்கும்.

ஹர்ஷத் மேஹ்தா:  1954-இல் குஜராத்தில் பிறந்தவர் – மும்பையின் லஜ்பத் ராய் கல்லூரியில் B.Com மட்டுமே படித்தவர். The New India Assurance Company-ல் விற்பனையாளராக வேலைக்குச் சேர்வதற்கு முன்னர் பல வேலைகளைச் செய்துள்ளார் – பனியன் விற்பதிலிருந்து வைரங்களை தரம் பிரிப்பது வரை! 1981-ல் விற்பனையாளர் வேலையை விட்டு ஒரு ஷேர் ப்ரோக்கரேஜ் கம்பெனியில் பணிக்குச் சேர்ந்தார். பத்து வருடங்களில் இந்திய ஸ்டாக் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தினையும் புகழையும் பெற்றார். வங்கித் துறையில் இருக்கும் சில ஓட்டைகளைப் பயன்படுத்தி நிறைய விளையாட்டுகள் விளையாடினார் – 200 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த சில கம்பெனி பங்குகள் மூன்றே வருடங்களில் ரூபாய் 9000/- வரை விற்றது – அவற்றில் ACC, Apollo Tyres, TISCO, Reliance, Hero Honda போன்ற கம்பெனி பங்குகளும் அடக்கம். இந்தச் சமயத்தில் பங்குகளில் முதலீடு செய்த பலருக்கும் நல்ல லாபம் – இன்னும் அதிகமாகும் என்ற ஆசையில்லாமல் நல்ல லாபத்திற்கு பங்குகளை விற்றிருந்தால்!   

சாக்லேட் கிருஷ்ணா: எல்லோருக்கும் சாக்லேட் அளிக்கும் திரு கபூர் அவர்களுக்கும் பங்குச் சந்தை மீது கொஞ்சம் ஈடுபாடு உண்டு. அவ்வப்போது பங்குகளை வாங்கி விற்று என ஒரு குறிப்பிட்ட தொகை வைத்து விளையாடி லாபம் ஈட்டி வந்தார். ஹர்ஷத் மேஹ்தா பங்குச் சந்தையில் நிறைய லாபம் ஈட்டிய காலத்தில் இவரும் சில பங்குகளில் லாபம் ஈட்டினார். தினம் தினம் எகனாமிக் டைம்ஸ் போன்ற நாளிதழ்கள் படித்து பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் தன் முழுச் சேமிப்பையும் முடக்கினார். அவர் பங்குச் சந்தையில் பங்களிப்பது இல்லாமல் பலருக்கும் யோசனைகள் வழங்கி வந்தார். நல்ல நிலையில் தான் போய்க் கொண்டிருந்தது வாழ்க்கை. வந்த லாபத்தில் ஒரு வீடும், வாகனமும் கூட வாங்கினார். இப்படியாக இருந்த சமயத்தில் தான் பேரிடி விழுந்தது. லக்ஷக் கணக்கில் முதலீடு செய்திருந்த பங்குகளின் விலை மளமளவென சரியத் துவங்கியது.

ஹர்ஷத் மேஹ்தா: இவர் எதைத் தொட்டாலும் பொன்னாக மாறிய காலம். 12000 சதுர அடியில் கடல் பார்த்த மாதிரி வீடு, இரண்டு டஜன் வாகனங்கள் என அசுர வளர்ச்சி. பங்குச் சந்தையின் அமிதாப் பச்சன் என்ற பட்டம் வைத்து அழைக்கும் அளவிற்கு வளர்ச்சி. 26 கோடி ரூபாய் அட்வான்ஸ் டேக்ஸ் கட்டி அந்த நாட்களில் அதையும் பிரபல செய்தியாக்கினார் ஹர்ஷத். 1992 – அந்த நாட்களில் ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள Toyoto Lexus வாகனத்தில் ஸ்டேட் பாங்க் வாசலில் வந்து இறங்கியவரைப் பார்த்த சுசேதா தலால் என்ற பத்திரிகையாளருக்கு “எங்கோ தவறு நடக்கிறது” என்று பொறி தட்டியது. என்ன தவறு, எங்கே ஓட்டைகள் எனத் துருவித் துருவி விசாரித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் 23 ஏப்ரல் 1992 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டார். பங்குச் சந்தை மளமளவென சரிந்தது. ஒரு வருடத்திற்குள் 2000 புள்ளிகளுக்கு மேலாக சரிவு. ஹர்ஷத் மேஹ்தாவின் மிகப் பெரிய சாம்ராஜ்யம் வீழ்ந்தது. நவம்பர் 1992-ல் அவரது சகோதரர்களுடன் சிறை வைக்கப்பட்டார். Bail-ல் வெளி வந்தும் பங்குச் சந்தையில் சில காலம் இருந்தார். 2001-ல் மீண்டும் கைது செய்யப்பட்டு அதே வருடத்தில் தில்லியின் திஹார் சிறையில் மாரடைப்பினால் இறந்தார்.

சாக்லேட் கிருஷ்ணா: பங்குச் சந்தை சரிய ஆரம்பித்த போதே தன் முதலீடுகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்திருந்தால் கூட திரு கபூர் அவர்கள் தப்பித்து இருக்கலாம். ஆனால் நஷ்டத்திலிருந்து தப்பிக்க எண்ணி, ப்ரேக் ஈவன் செய்வதற்காக இன்னும் கொஞ்சம் பணம் பங்குகளில் போட பலத்த அடி. அந்த அடியிலிருந்து மீள்வது ரொம்பவும் கடினம் என்ற நிலைக்கு ஆளானார்! சில மாதங்கள் பித்து பிடித்தது போல இருந்தார் – சரியான உடை அணியாமல், தலை கலைந்து எதையோ பேசிய படியே அலுவலகத்திற்கு வந்து போவார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருந்தார். நல்ல வேளையாக திரு கபூரின் இல்லத்தரசி வீட்டினர் கொஞம் பணம் படைத்தவர்கள் என்பதால் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. மொத்தமாக அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது! ரொம்பவே பாதிப்பு அவருக்கு என்பதால் அலுவலகத்தில் இருந்த பலரும் அவருக்கு கனிவான வார்த்தைகள் சொல்லித் தேற்றினோம்!

அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை! என்ற ரஜினி பட பஞ்ச் டயலாக் தான் நினைவுக்கு வருது. சில வருடங்களுக்கு முன்னர் பணி ஓய்வு பெற்ற திரு கபூரை அதற்குப் பிறகு நான் சந்திக்கவில்லை!

நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  வாசகம் அருமை.

  சாக்கலேட் மனிதர்! புன்சிரிக்க வைத்தார்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

   சாக்லேட் மனிதர் - :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. புன்சிரிக்க வைத்தவர் பாவம் இறுதியில் கஷ்டத்தில் போய்விட்டாரே.

  இந்தப் பங்குச் சந்தை ஒரு சாராரை ரொம்பவே ஓட்டுகிறதுதான். ஹர்ஷ்த் மேத்தா என்றதும் முதலில் உங்கள் அலுவலகத்தவரா என்றுதான் தோன்றியது அப்புறம் அதே பெயரில் வேறு ஆளே இருக்கமாட்டாங்களா என்ன என்றும் தோன்றி வாசிக்கத் தொடங்கினால்...அந்த ஹர்ஷ்த் மேத்தா வேதான்.

  பங்குச்சந்தை பொருளாதாரம் ஒரு சிலரை பைத்தியமே பிடிக்க வைக்கிறது. தினமும் விலை என்ன ஏறியிருக்கு குறைந்திருக்கு இன்னும் பார்க்கலாம் ஏறும் என்று அதிலேயே மனம். ஒரு சிலர் நட்டம் அடைவதையும் பார்க்க நேரிடுகிறது.

  இதன் பக்கம் எல்லாம் நம்ம மனம் போகவே போகாது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புன்சிரிக்க வைத்தவர் கஷ்டத்தில் - மாற்றங்கள் கொண்டது தானே வாழ்க்கை கீதாஜி!

   பங்குச் சந்தை எப்போது ஒருவரை ஏற்றி விடும் எப்போது இறக்கி விடும் என்பதை எளிதில் சொல்லி விட முடிவதில்லை. இதில் நிறைய சித்து விளையாட்டுகளும் உண்டு. அதிகம் இந்தப் பக்கம் சென்றதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 3. எதையும் தாங்கும் இதயத்துக்கான பலமான அஸ்திவாரம் இப்போது எனக்கு போடப்பட்டுக்கொண்டிருக்கிறது!!

  குட்மார்னிங் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம்.

   உங்கள் பிரச்சனைகள் விரைவில் தீர எனது பிரார்த்தனைகள் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஹர்ஷத் மேத்தா போன்றவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை நல்ல வழியில் செயல்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் லாபம், நாட்டுக்கும் லாபம்... ஹூ....ம்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்திசாலித்தனத்தை நல்வழியில் செலுத்தவும் சிலருக்கு மட்டுமே தோன்றும். பலர் தனக்கும் தன் வீட்டுக்கும் மட்டுமே நல்லதை யோசிக்கிறார்கள். நாடு எக்கேடு கெட்டுப் போனால் என்ன!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. கொஞ்சம் லாபம் வர ஆரம்பிக்கிறது என்றதும் உடனே முழுப்பணத்தையும் அதி முடக்காமல் இருந்திருந்தால் நஷ்டமும் பெரிய அளவில் இருந்திருக்காது! ரஜினி டயலாக் (எழுதியவர் யாரோ) சரிதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்கெட்ட பின்னே சூரிய உதயம் - இந்த விஷயத்தில் திரு கபூர் அவர்களுக்கும் இதே தான் நடந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. அந்த காலத்தில்தான் டில்லியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். ஆரியசமாஜ் ரோடு முழுவதும் எந்தக் கடையிலும் ஷேர் வாங்கி விற்கலாம். அந்த அளவுக்கு டில்லியர்கள் ஷேர் ஷேர் என்று அலைந்தார்கள். அவரோடு தொடர்புடைய ரத்னாகர் (முன்னாள் கனரா வங்கி தலைவர், இந்திரா காந்திக்கு வேண்டியவர்) வங்கிகளை எல்லாம் இந்த மோசடிக்குள் இழுத்துவிடக் காரணமாக இருந்தார். எனக்கு மிகவும் தெரிந்த ஒரு வங்கி அதிகாரி, அக்காலத்தில் ஹர்ஷத் மேத்தா அக்கவுண்ட் வைத்திருந்த போர்ட் பாம்பே கிளையில் பணிபுரிந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிபிஐ விசாரணையில் சிக்கி, அவரது குடும்பமே சீரழிந்தது. கடைசியில் வெளிவந்தார். இப்படி ஹர்ஷத்மேத்தாவால் இந்தியாவில் பல குடும்பங்கள் அழிந்தது மறக்கமுடியாத உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டில்லியர்கள் ஷேர் ஷேர் என்று அலைந்தார்கள்.... உண்மை தான். பலரும் இதில் இறங்கித் தத்தளித்தார்கள்.

   உங்களுக்குத் தெரிந்த வங்கி அதிகாரியின் அனுபவம் - பாவம்... செய்யாத தவறுகளுக்கு சிறை வாசம் அனுபவித்தது கொடுமை. இப்படி வெளிவராத பல சம்பவங்கள் இந்தச் சமயத்தில் நடந்தேறியது. இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை - மகிழ்ச்சி இராய செல்லப்பா ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. இன்று கபூர் எங்கிருந்தாலும் நல்ல மனநிலையுடன் வாழ வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 8. இது மிகவும் பெரிய மூளைக்காரர்களின் விளையாட்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் கில்லர்ஜி. எல்லோருக்கும் இந்த விளையாட்டு சுலபமாக வந்துவிடுவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. //உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக வருந்தாதே. ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் இதயத்தை அளிக்கப் போகிறது – யாரோ.//

  எதையும் தாங்கும் இதயம் கிடைத்தால் நல்லதுதான்.

  நான் மகிழ்ச்சியாக இருந்த காலத்தில் மனம் விரும்பி படித்த மனவளக்கலைதான் இப்போது வந்து இருக்கும் பிரச்சனைகளை தாங்கும் சக்தியை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

  அனுபவித்து கழிக்க வேண்டியவைகளை கழித்துதான் ஆக வேண்டும் என்ற பக்குவத்தை கொடுத்து கொண்டு இருக்கிறது.

  கபூர் அவர்கள் தன் ஓய்வு காலத்தை மனநிம்மதியுடன் கழிக்க இறையாற்றல் துணை நிற்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனவளக்கலை உங்கள் பிரச்சனைகளை தாங்கும் சக்தி தருகிறது என்பதில் மகிழ்ச்சி கோமதிம்மா... //அனுபவித்து கழிக்க வேண்டியவைகளை கழித்து தான் ஆகவேண்டும்// உண்மை தான். இதில் எவருக்கும் விலக்கில்லையே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  மனக்கவலை தீரும் வாசகம் ரசிக்க வைத்தது.

  அனைவருக்கும் புது வருடத்தன்று பிரியமுடன் இனிப்பு வழங்கி வாழ்த்தி வந்த சாக்லேட் நண்பரின் வாழ்க்கை இப்படியாக வேண்டுமா? அத்தனைக்கும் அளவு கடந்த ஆசைகளும், அதன் பிண்ணனியான பணமும்தான் காரணமோ எனத் தோன்றுகிறது. பாவம்...! அந்த திரைப்பட வாசகம் சரியானபடிதான் இருந்திருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 11. அளவுக்கு அதிகமாக ஆசை பட்டவர்கள் வாழ்க்கை ....மற்றயவர்களுக்கு படிப்பினைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....