புதன், 21 ஆகஸ்ட், 2019

ஆண்டாள் பாட்டி…


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளில் இப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்ஸ்வாமி விவேகாநந்தர்.

**** 


”ஏண்டா கடங்காரா… காலைல இருந்து நான் காட்டுக் கத்தலா கத்தறது உன் காதுல விழலையா? எந்நேரம் பார்த்தாலும் அந்தப் பொட்டியைத் தட்டிண்டு உட்கார்ந்திருந்தா வீட்டுல இருக்க வேலையெல்லாம் யார் பார்க்கறது?” ஆண்டாள் பாட்டி தீர்க்கமான குரலில் கத்திக் கொண்டிருந்தார். கடங்காரா என பாசமாக அழைத்தது அவர் சீமந்த புத்திரனான சீமாச்சுவை! ”நாளைக்கு ஸ்ரீஜெயந்தியாச்சே, வேணுங்கறதல்லாம் நேத்திக்கே சொல்லியாச்சு, இன்னும் நீ வாங்கிண்டு வரல. நீ போகலைன்னாலும் உன் பிள்ளையாண்டானை அனுப்பலாமே?” என்று அரற்றிக் கொண்டிருந்தாள் ஆண்டாள் பாட்டி.

அந்த வீட்டில் மொத்தமாக ஐந்து பேர் இருந்தாலும் வீட்டின் அனைத்து விஷயங்களும் ஆண்டாள் பாட்டியின் சொல்படி தான் நடக்கும். அவர் வைத்தது தான் சட்டம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார் – சமையலிலிருந்து வீட்டு வேலை வரை எல்லாம் அவர் தான். மருமகளும் பேத்தியும் ஏதோ கூட மாட ஒத்தாசை செய்யலாமே தவிர அவர்களாகவே செய்து விட முடியாது. செய்யவும் விடமாட்டார். “நான் இருக்கற வரைக்கும் நான் செய்துடறேன்… எனக்கப்புறம், எல்லாமே நீங்க தானே செய்யணும்” என்று சொல்லி விடுவார் மருமகளிடம். மருமகளுக்கும் இப்படி இருப்பது பிடித்து தான் இருந்தது. மாமியார் சமையல் தன் அம்மாவின் சமையலை விட இன்னும் அதிக ருசியுடன் இருக்க, அவருக்கு என்ன கவலை. சுத்து வேலைகளைப் பார்த்துக் கொண்டு அவருக்குப் பிடித்த மற்ற வேலைகளைச் செய்ய முடிகிறதே!

ஆண்டாள் பாட்டிக்கு இரண்டு பிள்ளைகள் – சீமாச்சுவும் பாச்சாவும். சீமாச்சு இந்தியத் தலைநகரில் இருக்க, பாச்சா அவன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில்! வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ வருவதோடு சரி. தான் பிறந்த வளர்ந்த திருவரங்கத்தினை விட்டு தில்லிக்கு வந்து 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது. அரங்கன் இருக்கும் ஊரில் தான் இருக்க வேண்டும் என ஆண்டாள் பாட்டி நினைத்தாலும் ஊரில் யாருமே இல்லை என்பதால் மகன் சீமாச்சுவுடன் தலைநகர் வாசம். தலைநகரில் இருந்தாலும் தன் பழக்க வழக்கங்களை விடாமல் இன்னமும் கட்டிக் கொண்டு காப்பவள் ஆண்டாள் பாட்டி. திருவரங்கத்தில் இவர்களுக்குச் சொந்தம் எனச் சொல்லிக் கொள்ள அரங்கனையும் உத்திர வீதியில் இருக்கும் ஒரு வீட்டையும் தவிர வேறொன்றுமில்லை. சொந்தங்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் ஐம்பது வருட தில்லி வாழ்க்கையில் பலதும் தொலைத்தவள்!


இன்று காலையிலிருந்தே ஆண்டாள் பாட்டி தன்னிலையில் இல்லை! சமையலறை பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. எந்த வேலையும் செய்யாமல், தன் அறைக்குள்ளேயே கட்டிலில் அமர்ந்த படி குளிரையும் பொருட்படுத்தாது மூலையைப் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறாள். அப்படி என்ன ஆகிவிட்டது? நேற்று சீமாச்சு சொன்ன விஷயம் அப்படி. தன்னிடம் கூடக் கேட்காமல், திருவரங்கத்து வீட்டை, தன் கணவன் நினைவாக இருக்கும் ஒரே வீட்டை விற்கலாம் என முடிவு செய்து விட்டேன் என்று சீமாச்சு சொல்லக் கேட்டதிலிருந்தே ஆண்டாள் பாட்டி மனதொடிந்து போனாள். அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத மகன் சீமாச்சு தன்னிச்சையாக இப்படி முடிவு செய்து விட்டு சொன்னதை நினைத்து நினைத்து மருகிக் கொண்டிருக்கிறாள். என்றைக்கு இருந்தாலும், தன்னுடைய அந்திமக் காலத்தில் அரங்கனை தினம் தினம் தரிசித்து கொள்ளிடக் கரையில் தான் தன் கட்டை வேக வேண்டும் என்று நினைத்திருந்த ஆண்டாள் பாட்டியால் இந்த முடிவை ஜீரணிக்க முடியவில்லை.

எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்துண்டு இருக்கப் போற? நம்மளோ அங்கே போகறதே இல்லை. வீடும் பாழாகிண்டு போறது. வீதில இருக்க பழைய வீடுகளை எல்லாம் ஒவ்வொண்ணா இடிச்சு புதுசா கட்டிண்டு இருக்கா. நம்ம கோபு தான் அங்கே இப்ப பில்டிங் காண்ட்ராக்ட் எடுத்து பழைய வீட்டெல்லாம் இடிச்சு புதுசு புதுசா இப்பத்திக்கு தகுந்தா மாதிரி கட்டிக் கொடுக்கறான். நேத்து எப்படியோ என்னோட நம்பர் தேடிப் பிடிச்சு “நல்ல விலைக்கு நம்ம வீடு போகும்ணா… நீங்க சரின்னு சொன்னா முடிச்சுடலாம்”னு சொன்னான். இது நல்ல டீல்! அதனால தான் உன்னைக் கூட கேட்காம சரின்னு சொல்லி, ”பத்து நாள்ல வரேன், எல்லாம் ரெடி பண்ணி வை”ன்னு சொன்னேன் என்று சீமாச்சு சொல்லிக் கொண்டிருக்க, ஆண்டாள் பாட்டி ஒரு முடிவுடன் எழுந்தாள்.

“சரிடா… வீட்டை இடிக்கறதுன்னு நீங்க முடிவு பண்ணியாச்சு… அதை நீங்க மாத்திக்கப் போறதில்லை! ஆனா… எனக்காக ஒரே ஒரு உதவி பண்ண முடியுமா? உங்க முடிவை ஒரு வருஷத்துக்கு ஒத்தி வைக்கணும்! ஒரு வருஷம் நான் அரங்கனை தினசரி சேவிக்கணும் – நான் அங்கே போய் ஒரு வருஷம் முழுசா தங்கப் போறேன் – ஒவ்வொரு நாளும் எல்லா உற்சவமும், வீதி உலாவும் பார்க்கப் போறேன் – எனக்காக நீங்க யாரும் கவலைப் பட வேண்டாம். ஒரு வருஷம் நீங்களும் உங்க இஷ்டத்துக்கு இருக்கலாம்! ஒரு வருஷத்துக்கு அப்புறமும் நான் இருந்தா, இங்கே திரும்பி வருவேன்! அப்படி இல்லைன்னா கொள்ளிடக்கரைல நிம்மதியா போய் சேர்ந்துடுவேன். இது தான் என்னோட முடிவு! இதுல எந்த மாத்தமும் இல்லை! நாளைக்கே டிக்கெட் போடு – முடிஞ்சா என்னைக் கொண்டு திருவரங்கத்துல விடு! இல்லைன்னா நானே போயிடுவேன் – தெரியாத ஊரா என்ன?”  தீர்க்கமாகச் சொல்லி விட்டு தன்னுடைய ஒன்பது கஜ புடவைகளில் நான்கை எடுத்து பையில் வைக்க ஆரம்பித்தாள் ஆண்டாள் பாட்டி!

ஆண்டாள் பாட்டி முடிவு செய்து விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. தில்லிக்கு அவள் திரும்பி வருவாளா… அந்த அரங்கனுக்கே வெளிச்சம்.

***

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

  நல்ல வாசகம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. வெங்கட்ஜி வாவ்!!! அட்டகாசமான கதை!!!! மிக மிக ரசித்தேன் வெங்கட்ஜி!!!

  செமையா எழுதறீங்க...ஹையோ!!! அழகான நடை...

  பாட்டி செம. எனக்கு என் அம்மாவின் அம்மா நினைவுக்கு வந்தார். இப்படியே தான் பாட்டி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   இப்படி பார்க்கும் பல கேரக்டர்கள் நம் சொந்தங்களை நினைவுபடுத்தக் கூடியவை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. விவேகானந்தர் மொழி அட்சரலட்சம். குட்மார்னிங் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. கதை அல்லது சம்பவம் மிக அருமை. மிகத் தேர்ந்த எழுத்துகள், பாணி. ​சொல்ல வேண்டியதை சரியாக சொல்லி நிறுத்துகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை அல்லது சம்பவம் - கொஞ்சம் கற்பனையும் நிஜமும் கலந்தது ஸ்ரீராம்! பாராட்டும் உங்கள் நல்ல மனதுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம். கரெக்ட்டாக நூல் பிடித்துச் செல்வது போல பிசிறு இல்லாமல் மிக மிக அருமையாக தேர்ந்த எழுத்துளில் எழுதுகிறார் வெங்கட்ஜி! திறமையான கதாசிரியர் உருவாகிக் கொண்டு வருகிறார்.

   வெங்கட்ஜி உங்களின் இந்தச் சிறு கதைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கிவிடுங்கள் ஜி.

   பாராட்டுகளுடன் வாழ்த்துகளும்!

   கீதா

   நீக்கு
  3. காலையில் சொல்ல விடுபட்ட ஒன்று....

   படம் செமையாக இருக்கிறது...

   கீதா

   நீக்கு
  4. //திறமையான கதாசிரியர் உருவாகிக் கொண்டு வருகிறார்// தங்களது அன்பிற்கு நன்றி கீதாஜி! கதாசிரியர் எல்லாம் பெரிய வார்த்தை! ஏதோ சிறு முயற்சி அவ்வளவு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  5. //படம் செமையாக இருக்கிறது// முன்பு ஒரு ஸ்ரீரங்கம் பயணத்தில் எடுத்தது. பதிவு ஒன்றிலும் வெளியிட்டு இருக்கிறேன் கீதாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. ஆண்டாள் பாட்டி பலபேரை நினைவுபடுத்துகிறார். சங்கடமான நிலை. இரண்டுபேர் பக்கமும் நியாயம் இருக்கிறது. ஆண்டாள் பக்கம் அதிகமாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு பேர் பக்கமும் நியாயம் - உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. நல்லவேளையா நாங்க ஸ்ரீரங்கத்துக்கு எட்டு வருஷம் முன்னாடியே வந்துட்டோம். :))))) நல்லா எழுதறீங்க வெங்கட். ஆண்டாள் பாட்டி ஒன்பது "முழ"ப் புடைவைகளில் நான்கை என்றிருக்கும் இடத்தில் "ஒன்பது கஜப்புடைவை" என்று மட்டும் மாற்றிவிடுங்கள். மற்றபடி கதை ஓகே! வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முழம் - கஜம் :) சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மாற்றி விட்டேன் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. ஆண்டாள் பாட்டியின் கடைசி காலம் அரங்கனின் காலடியில் இருப்பதே உத்தமம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரங்கனின் காலடியில் - ஆண்டாள் பாட்டியின் விருப்பம் அது தானே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 8. மிகவும் அருமையான கதை. படிப்பவர்கள் எல்லோரும் தங்களுடய குடும்பத்தில் இந்த மாதிரி ஒரு நபரை பார்த்திருப்பார்கள் என்னையும் சேர்த்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... மகிழ்ச்சி. பல குடும்பங்களில் இது போன்று நிகழ்வது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 9. ஸ்வாமி விவேகாநந்தர். பொன்மொழி மிக அருமை.

  ஆண்டாள் பாட்டி முடிவு நல்ல முடிவு கொஞ்ச காலம் பாட்டியின் ஆசைபடி உற்சவங்களை கண்டு களிக்கட்டும், அப்புறம் பார்த்துக்கலாம் டெல்லி வருவதைப்பற்றி.

  கதை போல் தெரியவில்லை அவ்வளவும் உண்மையான உணர்வுகள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //க்தை போல தெரியவில்லை. அவ்வளவும் உண்மையான உணர்வுகள்// நன்றி கோமதிம்மா...

   //அப்புறம் பார்த்துக்கலாம் டெல்லி வருவதைப் பற்றி// திருவரங்க நிகழ்வுகளை இதன் தொடர்ச்சியாக எழுத முடியுமா என டெல்லி தோழி ஒருவர் கேட்டு இருக்கிறார். பார்க்கலாம் எழுத முடிகிறதா என!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. கோவிலும், தேரும் கண்ணை கட்டி போடுது அதை மட்டுமே பார்க்கச்சொல்லி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவிலும் தேரும் - மகிழ்ச்சிம்மா... நேரில் இன்னும் அதிக ஈர்ப்பு கோமதிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. அருமை...

  உங்களின் புதிய அவதாரம் தொடரட்டும்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //புதிய அவதாரம்// ஹாஹா... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தனபாலன். இப்படியும் எழுத ஒரு முயற்சி அவ்வளவு தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. ஸ்ரீரங்கத்தில் உத்தரவீதிலலாம் வீடுகள் விற்கமுடியுமா? சமீபத்தில் அங்கு ஒரு தங்குமிடம் கட்டப்பட்டிருந்தது. அதனால் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயிலைச் சுற்றிய வீதிகளின் வீடுகள் எல்லாவற்றிற்குமே தெற்கு கோபுரம் வரை, வடக்கே வடக்கு கோபுரம், கிழக்கே கிழக்கு கோபுரம், மேற்கே மேல கோபுரம் வரை அல்லது அடைய வளைஞ்சான் தெரு வரை உள்ள வீடுகள் எல்லாமே கோயிலைச் சார்ந்தவை! அரங்கன் பெயரிலேயே உள்ளவை. அங்குள்ள மக்கள் பரம்பரையாக அதில் வாழ உரிமை பெற்றவர்கள். முன்னால் எல்லாம் வீட்டை இடிக்க உரிமை இல்லாமல் இருந்தது. பின்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதோ என்னமோ இடித்து மாற்றி அமைக்கவும், வாடகைக்கு விடவும் வேறொருவர் பெயருக்கு மாற்றவும் உரிமை உண்டு எனச் சொல்லப்பட்டதாக நினைவு. ஆனாலும் யார் வாங்குகிறோமோ அவர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ய முடியாது என்றே நினைக்கிறேன். இதே போல் மாயவரத்திலும்.

   நீக்கு
  2. //உத்திரவீதியிலலாம் வீடுகள் விற்க முடியுமா?// முடியும். விற்கிறார்கள். உங்கள் பெயரில் Registration இல்லாமல் Power of Attorney மூலம் விற்கிறார்கள்! கோவில் சார்ந்த வீடுகள் என்றாலும் இப்போதெல்லாம் இப்படி மாற்றிக் கட்டுவது, தங்குமிடம்/குடியிருப்புகள் கட்டுவது என்றெல்லாம் நடக்கிறது. சில வீடுகள் நான் கூட பார்த்தேன் - Registration கிடையாது என்பதால் வாங்கவில்லை. அதுவும் தவிர பிடிக்கவும் இல்லை.

   விரிவாக கீதாம்மாவும் உங்கள் கேள்விக்கு பதில் எழுதி இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  3. விரிவான பதில் தந்தமைக்கு நன்றி கீதாம்மா... நிறைய வீடுகள் இப்போது இடித்து/மாற்றம் செய்து கட்டுகிறார்கள். உத்திரவீதியிலிருந்து அடையவளஞ்சான் வரை மூன்று தெருக்களிலும் நான்கு திசைகளிலும் இப்படி கட்டுவது தொடர்ந்து நடக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  4. //அரங்கன் பெயரிலேயே உள்ளவை. அங்குள்ள மக்கள் பரம்பரையாக அதில் வாழ உரிமை பெற்றவர்கள்.// - இதை மாற்றாமல் இருப்பதுதான் நல்லது.

   நீக்கு
  5. அதே போல் ஶ்ரீரங்கத்தில் ராகவேந்திரா மடம் இருக்கும் தெருவிலும் குறிப்பிட்ட எல்லையில் உள்ள வீடுகளின் மனைகள் எல்லாம் மடத்தைச் சேர்ந்தவை. எங்கள் உறவினர் ஒருவர் மடத்துக்கு எதிரில் உள்ள மனையை யாரோ விற்றார்கள் என வாங்கிப் பெரிய வீடாகக் கட்டிவிட்டுப் பின்னர் அதை மறுபடி விற்கும்போது தான் பிரச்னை தெரிந்தது. உச்சநீதிமன்றம் வரை போனார்! தீர்ப்பு மடத்துக்குச் சாதகமாகத் தான். ஆனால் வீட்டை அவரும் வாரிசுகளும் அனுபவிக்கலாம். விற்க முடியாது! பெயர் மாற்றிக் கொடுக்க முடியாது!

   நீக்கு
  6. //இதை மாற்றாமல் இருப்பது தான் நல்லது// நிறைய மாறி விட்டது நெல்லைத் தமிழன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  7. ஆமாம். ராகவேந்திரா கோவில் அருகேயும் மடத்தின் சொத்து உண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 13. என்னதான் வசதியாக மகனுடனும், பேரப்பிள்ளைகளுடனும் இருந்தாலும் பூர்வீக வீட்டை தன்னுயிர் இருக்கும் வரை யாரும் விற்கவோ இடிக்கவோ ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆண்டாள் பாட்டி மட்டும் விதிவிலக்கா என்ன?

  ஒரு வயதான தாயின் ஆதங்கத்தையும், உணர்வுகளையும் அருமையான சிறுகதை மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பூர்வீக வீட்டை தன்னுயிர் இருக்கும் வரை யாரும் விற்கவோ இடிக்கவோ ஒப்புக்கொள்ள மாட்டார்கள்// உண்மை தான் வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 14. சார் ரொம்ப அருமையான கதை, பாட்டி விருப்பப்படி அந்த வீட்டில் தங்கி அவர் விருப்படி (இருந்தமாதரி) இருந்தார் என்று கதையை கொண்டு சென்றிருந்தால் என் போன்ற அன்பு உள்ளங்களுக்கு இன்னும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இது நிஜவாழ்கை கதையாகவே உணருகிறேன் என்பதால், மனதில் பட்டதை எழுதியுள்ளேன். வாழ்த்துக்கள் பல, மேலும் இதுபோல் நெறைய எழுதுங்கள் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்பது கஜ புடவைகளை எடுத்து வைத்துக் கொண்ட போதே அவர் புறப்பட்டதாகத் தான் அர்த்தம்! அதன் பிறகு நடந்ததையும் எழுதலாம்! அது பிறிதொரு சமயத்தில்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி!

   நீக்கு
 15. வெங்கட்ஜி மிக மிக அருமையாக உள்ளதுகதை.

  அழகாக எழுத வருகிறது உங்களுக்கு. நல்ல அனுபவ கதை சொல்லியின் திறன் உள்ளது. எழுத்தும், நடையும் அப்படியே. பாராட்டுகள், வாழ்த்துகள்.

  தொடர்ந்து எழுதுங்கள் வெங்கட்ஜி!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. அன்பு கீதா ஆர்.

  அத்தனை அழகு மா இந்த இடம். தாவர்வியல் தெரிந்தவர்கள்
  விளக்கிக் கொண்டிருந்தார்கள்.
  எனக்குத்தான் நிற்க நேரமில்லை.

  எத்தனை பாடுபட்டு அமைத்திருக்கிறார்கள்.
  கொள்ளுத் தாத்தாவின் கொள்ளுப் பேத்தி இப்போது
  பார்த்துக் கொள்கிறாள்.

  அத்தனை வண்ணங்களிலும் மலர்களைப் பார்த்தாச்சு மா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பதிவில் வர வேண்டிய பதில் இங்கே மாற்றி வந்து விட்டது போலும் வல்லிம்மா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....