சனி, 3 ஆகஸ்ட், 2019

வாங்க பேசலாம் – போக்சோ – சிறையில் அடைக்கப்பட்டவர்
அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மரணம் எந்த விதமாகவும் வரலாம். ஆனால், காரணம் மட்டும் கௌரவம் உடையதாக இருக்க வேண்டும்அலெக்சாண்டர் புஷ்கின்.


படம்: இணையத்திலிருந்து...

சரி இன்றைய பதிவிற்கு வருவோம். போக்சோ என்ற ஒரு சட்டம் 2012-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. சென்ற மாதம் இந்த சட்டத்தில் சில மேம்பாடுகள்/திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன – Protection of Children from Sexual Offences [POCSO] Act – குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் கொடுப்பவருக்கு மரண தண்டனையும் கொடுக்கலாம் என்ற திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. அதற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் சில குரல்கள் ஒலிக்கின்றன. தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் தவறுகள் குறையும் என ஒரு சாராரும், மரண தண்டனை குற்றங்களுக்குத் தீர்வு அல்ல என ஒரு சாராரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் பற்றியோ, அதிலும் அரசியல் செய்யப் பார்க்கும் நபர்கள் பற்றியோ இங்கே நாம் பார்க்கப் போவதில்லை. சமீபத்தில் இந்தச் சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்ட ஒரு நபர் பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு நபர் – வசதிக்காக பாபு என பெயர் வைத்துக் கொள்வோம் – மனைவி, பத்தாவது படிக்கும் மகள் என அளவான, அழகான குடும்பம். நிம்மதியான வாழ்க்கை – சொந்த வீடும் உண்டு. இந்தச் சொந்த வீடு வாங்கியதில் சில சிக்கல்கள் – கட்டிடத்தில் இருக்கும் எட்டு வீடுகளில் ஏழு பேர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். இவர் மட்டுமே அன்னியர்! அவர்கள் ஏழு பேரும் ஒரு பக்கம் – இவர் மட்டுமே தனியாளாக! இவர் வீட்டிற்குக் கீழே ஒரு கடை – அந்தக் கடையின் பெயர் பலகை இவரது பால்கனியில் பாதியை அடைத்துக் கொண்டிருக்க, அதைக் கொஞ்சம் கீழே இறக்கி வைக்க வேண்டும் என ஒரு பிரச்சனை! ஏழு பேரும் ஒன்று சேர்ந்து கொண்டு இவர் சொல்வது தவறு என இவரையே வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். பிரச்சனை பெரிதாகிவிட காவல்துறை வந்து சமாதானம் செய்து வைத்திருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விஷயத்திற்காக சண்டை நடப்பது தொடர்ந்திருக்கிறது.

அந்த வீடு இருக்கும் வளாகத்தில் ஒரு நேப்பாளி காவலாளி குடும்பம் – நான்கைந்து குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பம். அதில் பதிமூன்று வயது இளம்பெண்ணும் அடக்கம். நேப்பாளிகளில் ஒரு வழக்கம் – பெண்களுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். எங்கள் பகுதியில் கூட சில நேப்பாளி குடும்பத்தினர் வீடுகளில் இப்படி 15 வயது பெண்ணுக்குத் திருமணம் நடந்ததை கவனித்தது உண்டு – கேட்டால் பதினெட்டு வயதாகி விட்டது என்று சொல்வார்கள்! தந்தை அப்பகுதியில் காவலாளி – அவரது மனைவி, மகள் அந்தப் பகுதி வீடுகளில் வீட்டு வேலை செய்வார்கள் – பெரிய குடும்பத்தினைக் காப்பாற்ற பண வரவு வேண்டுமே! இப்படி வேலைக்குச் சென்ற அந்த பதிமூன்று வயது பெண்மணியிடம் சில்மிஷம் செய்ததாக பாபு மீது ஒரு புகார் வருகிறது. நேப்பாளி காவலாளி, பாபு வீட்டிற்கு வந்து தகராறு செய்கிறார். தான் அப்படிச் செய்யவே இல்லை என மறுக்கிறார் பாபு. மீண்டும் தகராறு, சமரசம் செய்து வைக்கிறார்கள் அப்பகுதியினர்.

இரண்டு பிரச்சனைகள் – ஒன்று வீட்டுப் பிரச்சனை – மற்றொன்று இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ஒரு குற்றப்பத்திரிக்கை. எனக்கே பத்தாவது படிக்கும் மகள் இருக்கையில் நான் அப்படியெல்லாம் செய்வேனா என்று பாபு சொல்கிறார். ஆனால் அவரை யாரும் நம்பத் தயாரில்லை. ஒரு முறை களங்கம் வந்து விட்டால் அதைத் துடைத்து எறிவது அவ்வளவு சுலபமில்லை. சில நாட்கள் வரை உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த இந்த விஷயம் மீண்டும் பெரிதாக வெடிக்கிறது. சமரசம் செய்து வைக்க வந்தவர்கள் பாபுவிடம் நிறைய பணம் கேட்கிறார்கள் – காவலாளி குடும்பத்தினருக்கு நிறைய பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் காவல் துறையினரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்று போகிறது பேச்சு வார்த்தை. செய்யாத தவறுக்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கேட்கிறார் பாபு. ”நெருப்பில்லாமல் புகையுமா?” என்று கேள்வி கேட்கிறது மக்கள் குழாம்.

இந்தச் சூழலில் காவல்துறை தன் கடமையைச் செய்ய உள்ளே நுழைகிறது – இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் பாபுவின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கிறது! போலீஸ் விசாரணை என்றால் சும்மாவா? நல்ல கவனிப்பு உண்டே! பிறகு ஜூடிசியல் கஸ்டடி – தற்போது காஜியாபாத் டாஸ்னா பகுதியில் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் பாபு. இந்த நடவடிக்கைகளுக்கு உடந்தையாக, காவலாளி குடும்பத்தினரை தூண்டி விட்டு பின்புலத்தில் இருப்பது வீட்டுப் பிரச்சனையில் வந்த குடும்பத்தினர் என்கிறார்கள் பாபுவின் குடும்பத்தினர். எதிரிக்கு எதிரி நண்பன் என்று ஒரு கருத்து உண்டே! இளம்பெண்ணிடம் பாபு தவறாக நடந்து கொண்டாரா இல்லையா என்பது நிரூபிக்கப் பட வேண்டும் – அதற்கு அந்தப் பெண்ணிடமும் நிறைய கேள்விகள் கேட்பார்கள்.

ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் அந்தப் பிஞ்சு நெஞ்சை நிறையவே பாதிக்கும்.  இது ஒரு புறம் இருக்க, தன் தந்தை மீது இப்படி ஒரு புகார் வந்துவிட்டதே என்ற கவலையுடன் விஷயம் தெரிந்த ஒவ்வொருவரும் தன்னை கீழ்த்தரமாக பார்ப்பார்களே என்ற பலவித கவலைகளுடன் சேர்ந்து இருக்கும் அந்த பத்தாவது படிக்கும் பெண்ணின் நிலையையும் மனம் சிந்திக்கிறது. கூடவே பாபுவின் மனைவி நிலையையும் யோசிக்க வேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதால் சங்கிலித் தொடராக நிறைய பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கும். பாபு அரசு ஊழியர் என்பதால், ஒரு நாள் சிறையில் இருந்தாலே அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து விடுவார்கள் – சம்பளம் முழுவதும் தராமல் 50% மட்டுமே கிடைக்கும் – Subsistence Allowance என்ற பெயரில்.

சில விஷயங்களை இங்கே சொல்லத் தோன்றுகிறது. உண்மையாகவே பாபு அந்த மாதிரி நடந்து கொண்டாரா இல்லையா என்பது பாபுவிற்கும் அந்தப் பதிமூன்று வயது பெண்ணுக்கும் மட்டுமே தெரியும். உண்மை எது என்பதை அவர்களாகவே ஒப்புக் கொள்ளும் வரை நம்மால் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்தப் பிரச்சனைகளால் பாபுவின் குடும்பத்தினர், நேப்பாளி காவலாளி குடும்பத்தினர் என நிறைய பேருக்கு பாதிப்பு. ஒவ்வொரு செயலுக்கும் எதிர் விளைவுகள் உண்டு என்பதை இப்படியான நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் குற்றங்களும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. எத்தனைச் சட்டங்கள் இயற்றினாலும், மனித மனம் திருந்தாத வரையில் குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க முடியாது என்று தோன்றுகிறது. பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் அந்தப் பெண்களுக்கு யார் ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்? பிரச்சனைகளிலிருந்து அக்குடும்பங்கள் எப்படி மீண்டு வரப் போகிறார்கள் என்று அடுக்கடுக்காக கேள்விகள் மனதில்…

எனக்குத் தெரிந்த நண்பர் மூலம் இந்த விஷயங்களைக் கேள்விப்பட்டதிலிருந்தே அந்த இரண்டு இளம் பெண்கள் – காவலாளி மகள் மற்றும் பாபுவின் மகள் – இரண்டு பேரின் நிலை மட்டுமே கவலை அளிப்பதாக இருக்கிறது. இவ்வளவு சிறு வயதில் எத்தனை பிரச்சனைகள் – இருவருடைய பிரச்சனைகளும் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? பாபு வெளியே வருவாரா, திருத்தப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதால் பாபுவிற்கு என்ன தண்டனை கிடைக்கும் [மரண தண்டனையும் தரலாம் என சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது] என்றெல்லாம் யோசிக்கிறது மனது. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

 1. சட்டம் பெரும்பாலானவர்களுக்கு நன்மையாக இருந்தாலும் சிலர் தவறாக பாதிப்படைந்துவிடுகிறார்கள்.

  எப்போவும் போலீசுக்குப் போகும்போது, இரு பக்கத்துக்குமே பிரச்சனை வரும், இழப்புகள் வரும். இது யோசனையில்லாமல் செயல்படுவதால் வரும் தவறு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வண்க்கம் நெல்லைத் தமிழன்.

   யோசனையில்லாமல் செயல்படுவதால் வரும் தவறுகள்... உண்மை. சில விஷயங்கள் சரியல்ல என்று மனது சொன்னாலும், பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செய்து விட்டு திண்டாடுவது பலருக்கும் நடப்பது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. தனிப்பட்ட வகையில் மனித ஒழுக்கம் பேணப்படாதவரை இந்த அவலங்கள் நீடிக்கும்.

  எனக்கும் அந்த இருபெண்கள் மீதும் பரிதாபம் ஏற்படுகிறது.

  பாபு போன்ற கொடூரன்களும் உண்டு.
  அப்பாவிமீது பழி சுமற்றும் கேடுகெட்ட ஜென்மங்களும் உண்டு.

  இறைவனே அறிவான் ஆனால் இன்று இறைவன் மனிதர்களை விட்டு வெகுதூரம் போய் விட்டானோ... என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இறைவன் மனிதர்களை விட்டு வெகுதூரம் போய் விட்டானோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது// எனக்கும் இப்படி தோன்றுவதுண்டு கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ஏழு குடும்பம் சேர்ந்து செய்யும் சதியோ! இறைவனே அறிவான்.
  நல்ல தீர்ப்பு நியாமான தீர்ப்பு கிடைக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் சதி உண்டா இல்லையா என்பதை அவனே அறிவான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 4. ரொம்பவும் தர்மசங்கடமான நிலை. பாபு பலிகடா ஆக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்ற சாத்தியக்கூறு அதிகம் என்று தோன்றுகிறது. நீங்கள் சொன்ன அதே உனர்வுகள் என்னிடமும். படிக்கும்போதே அந்தப் பெண் குழந்தைகளின் நிலைதான் யோசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாபு பலிகடாவா இல்லையா என்பதை காலம் சொல்லும். அந்தப் பெண் குழந்தைகள் நிலை தான் ரொம்பவே யோசிக்க வைத்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. // மனித மனம் திருந்தாத வரையில் குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க முடியாது... //

  100% ஒப்புக் கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. சிக்கலான விஷயம் தான் மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. ஒரு விஷயத்தை எவ்வளவு தெளிவாக எடுத்து விளக்கிச் சொல்கிறீர்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எழுதி பிறருக்குச் சொல்லி தெளிவேற்படுத்துவது என்பது ஒரு கலை தான். அந்தக் கலை உங்களுக்கு கைவந்திருக்கிறது என்று வாழ்த்தத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எழுதி பிறருக்குச் சொல்லி தெளிவேற்படுத்துவது என்பது ஒரு கலை தான். அந்தக் கலை உங்களுக்குக் கைவந்திருக்கிறது என்று வாழ்த்தத் தோன்றுகிறது// மகிழ்ச்சி ஐயா. என் எழுத்து பற்றி எப்போதும் எனக்கு ஒரு குறை உண்டு - நிறைய விஷயங்கள் சொல்ல நினைத்தாலும் சரியாகச் சொல்ல வரவில்லை எனும் குறை..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

   நீக்கு
 8. பொன்மொழி அசத்தல் வெங்கட்ஜி! பதிவு அதை ஒட்டியது போல!!

  இனிய மாலை வணக்கம் ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை வணக்கம் கீதாஜி!

   பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை முடிந்த போது சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. வெங்கட்ஜி இதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது இல்லையா?

  பெண் குழந்தைகள், பாபுவின் மனைவி என்று நீங்கள் சொல்லியிருக்கும் அதே உணர்வுகள் வந்தது.

  பாபு ஏற்கனவே அந்த 7 குடும்பங்களுடன் தகராறு செய்திருப்பதால் மாட்டப்பட்டுவிட்டாரோ? நேபாளி மனிதரையும் இவர்கள் கைக்குள் போட்டுக் கொண்டு என்றும் தோன்ற வைக்கிறது.

  ஒரு சிலருடன் வம்புக்குப் போகாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது. பாபுவிற்கு அக்குடும்பம் ஒத்துவரவில்லை என்றால் பேசாமல் வேறு வீடு மாறியிருக்கலாம் வாடகைக்கேனும்...

  எல்லாம் பிந்தைய சிந்தனைகள். விதி வந்து தன் கைப்பிடிகளை இறுக்கும் போது அதிலிருந்து யாரும் தப்ப முடியாதே. உண்மை அவர்கள் இருவருக்குமே வெளிச்சம்...இறைவனுக்கும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 10. //எல்லாம் பிந்தைய சிந்தனைகள். விதி வந்து தன் கைப்பிடிகளை இறுக்கும்போது அதிலிருந்து யாரும் தப்ப முடியாதே. உண்மை அவர்கள் இருவருக்குமே வெளிச்சம்... இறைவனுக்கும்!// விதி வலியது கீதாஜி. அந்தப் பெண்களின் நிலை தான் தொடர்ந்து மனதில்.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனை சங்கடமடா வாழ்வில்.
   நிம்மதியான குடும்பத்தை வாழ விடாமல் செய்து விட்டார்களே.

   வீட்டுக்குள் காலெடுத்து வைக்கும் போட்ஹே சிக்கல் என்று தெரிந்திருந்தால்
   அந்த மனிதர் வெளியேறி இருப்பாரோ.

   ஆனால் தில்லி போன்ற இடங்களில் வேறு இடம் கிடைப்பதும் பிரச்சினை தான்.
   பெண்களுக்கு நீதி வேண்டும்.
   நல்லவர் என்றால் பாபுவுக்கும் விடுதலை வேண்டும்.
   நல்லதொரு பகிர்வு வெங்கட். நன்றி.

   நீக்கு
  2. சங்கடங்கள் வரும்போது இப்படி ஒன்றாக வருவது கொடுமை. பெண்களுக்கு நீதி வேண்டும். //நல்லவர் என்றால்// அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 11. மிகவும் கடினமான ஒரு வழக்கு. நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடினமான வழக்கு தான் இராமசாமி ஜி!. நல்ல தீர்ப்பாக வரட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. ஏழுபேர் செய்த சதி வேலையில் நேப்பாளி மகளை உடந்தையாக்கி பாபுவை‌ பலிகடாவாக்கியிருப்பதாகவே உணரமுடிகிறது. சிக்கலான விஷயம்.

  பதிலளிநீக்கு
 13. சிக்கலான விஷயம் தான் ரங்கராஜன் ஜி.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 14. கடினமான நேரம் இரு குழந்தைகளுக்கும் ...மற்றும் குடும்பத்தினருக்கும் ...

  யார் தவறு செய்தது ...அவர்களுக்கே வெளிச்சம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யார் தவறு என்பது அவர்களுக்கே வெளிச்சம்.... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம்ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....