செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

அலுவலக அனுபவங்கள் – அலங்கார பூஷிதை
அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உன் உலகம் தலைகீழாகத் திரும்பினாலும் கவலை கொள்ளாதே… மறுபக்கத்தில் இன்னும் அழகான உலகம் உனக்காகக் காத்திருக்கலாம்…படம்: இணையத்திலிருந்து.... 
கர்வா சௌத் பண்டிகை...

சரி இன்றைய பதிவுக்கு வரலாம்! 1991-ல் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தபோது எனது பிரிவில் நிறைய அலுவலர்கள் உண்டு – ஒரே ஒரு மலையாளி, மற்ற அனைவரும் பஞ்சாபிகள், ஹர்யான்விகள் என கலந்து கட்டி இருந்தார்கள். ஐந்து பெண்மணிகள்! அவர்கள் அனைவருமே என்னைவிட இருபது-இருபத்தி ஐந்து அதிகம் வயதானவர்கள். அவர்களில் ஒருவரைப் பற்றி தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம். அந்தப் பஞ்சாபி பெண்மணிக்கு வயது அப்போதே ஐம்பதுக்கும் மேலே. பெயர் Mrs.Bபத்ரா என வைத்துக் கொள்வோம்! ஆனால் அலங்காரம் செய்து கொள்வதைப் பார்த்தால் என்னவோ இருபது வயது பெண் போல அலங்காரம் செய்து கொள்வார்.

புடவைத் தலைப்பினை ஒற்றையாக விட்டுக் கொள்வது, மிகப் பெரிய பின் கழுத்து வைத்து சட்டை போடுவது, ஆளை அடிக்கும் வண்ணத்தில் – அவர் அணிந்திருக்கும் உடைக்குத் தகுந்த உதட்டுச் சாயம் பூசிக்கொள்வது, மற்றும் ஹை-ஹீல் வைத்த செருப்பு – நடக்கும்போது அது எழுப்பும் சப்தம் என அலங்கார பூஷிதையாக வலம் வருவார். பஞ்சாபிப் பெண்கள் பொதுவாகவே தைர்யசாலிகள். இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. எந்த விஷயத்தினையும் பயமில்லாது எதிர்கொள்ளக் கூடியவர் இந்தப் பெண்மணி. அவருக்கு ஆண்கள் பெயர் வைத்தார்களோ இல்லையோ சக பெண் பணியாளர்கள் பெயர் வைத்திருந்தார்கள். எங்கள் அலுவலகத்தில் இரண்டு Mrs.Bபத்ரா – இரண்டு பேருக்கும் பெயர் ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் என்பதால் இப்படி ஒரு பெயர் வைத்திருந்தார்கள். என்ன பெயர் – சுருக்கமாக DCB! விரிவாக்கம் என்ன என்பதை கடைசியில் சொல்கிறேன்.

முன்பு ”என் பெயர் ஜாலி” பதிவில் பார்த்த பஞ்சாபி பெண்மணிக்கும் இவர் தோழி! ஆனால் இவருக்கும் அவருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் – அவர் பொறுமையின் சிகரம் என்றால் இவர் அதிரடி! யாராவது இவரைப் பற்றி ஜாடை மாடையாகப் பேசினால் போதும், பிலுபிலுவென பிடித்துக் கொள்வார். அதுவும் எங்கள் பிரிவில் நிறைய பஞ்சாபிகள் – அவர்களில் ஒருவர் இந்தப் பெண்மணியிடம் ஏதோ எக்குத் தப்பாக பேசி விட அன்றைக்கு அவர் பஞ்சாபி மொழியில் பேசிய பேச்சில் அப்படி ஒரு அமைதி எங்கள் பிரிவில் – தப்பாக பேசியவரை வெளுத்து வாங்கி விட்டார். எனக்கு அடுத்த மேஜை தான் அவருடையது. கோபத்துடன் வந்து அமர்ந்த அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது. எப்போதும் எதையாவது அவரிடம் கேட்டுக் கொண்டே இருப்பேன் – ஆனால் அன்று மதியம் வரை ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு வித பயம் தான்!


பஞ்சாபி பெண்மணி ஓவியம்... 
படம்: இணையத்திலிருந்து...

மதிய உணவு நேரம் சமயத்தில் எப்போதும் எனக்காக எதாவது சாப்பிடக் கொண்டு வருவார்கள் அவரும் இன்னுமொரு பஞ்சாபி பெண்மணியும். மௌனமாய் அமர்ந்திருந்த என்னிடம் எப்போதும் போலவே பாசத்துடன் “கீ ஹோயா புத்தர், ஆஜ் Bபdடே ஷாந்த் ஹோ?” [இன்றைக்கு என்ன ஆச்சு மகனே, ரொம்பவே அமைதியாக இருக்கிறாயே?] என்று கேட்டபடியே அவர் கொண்டு வந்த ரொட்டிகளில் இரண்டை என்னிடம் தட்டில் வைத்துத் தந்தார். கூடவே சர்சோன் கா சாக் சப்ஜியும்.  ”இல்லை கோபமாக இருந்தீர்கள் என பயப்பட்டேன்!” என்று சொல்ல, “புத்தர், கோபம் எல்லாம் அந்த சர்தார்ஜி மேலே… அவன் என்னைப் பற்றி தப்பாகப் பேசினான் அதனால் கோபம் கொண்டு திட்டினேன்... நீ என்ன தவறு செய்தாய் பயப்படும் அளவுக்கு?” என்று கேட்டு சாப்பிடச் சொன்னார். அதற்குள் மற்ற பஞ்சாபி பெண்மணியும் உணவுடன் வந்து சேர அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தோம்.

அலுவலகங்களில் பெண்களுக்கு பல பிரச்சனைகள் – குறிப்பாக சக ஆண் பணியாளர்களிடமிருந்து உண்டு. இப்போதாவது பரவாயில்லை. 90-களில் இன்னும் பிரச்சனை அதிகம் உண்டு. வெளியே சொல்லவும் முடியாமல் எத்தனையோ பெண்கள் தவித்ததுண்டு. ஆனால் Mrs.Bபத்ரா எப்போதும் அப்படி பிரச்சனை செய்யும் ஆண்களை விட்டு வைத்ததில்லை. ஒரு பிடி பிடித்து விடுவார். அதனால் அவரிடம் எப்போதுமே கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருப்பார்கள். என்னிடம் எப்போதுமே அவருக்கு ஒரு ப்ரியமும் பாசமும் உண்டு. தன்னுடைய மகன்/மகள் வயது தான் எனக்கு என்று அடிக்கடி சொல்வார். ”நான் அலங்காரம் செய்து கொள்வது என் விருப்பம். அதைக் கேட்க எவருக்கும் உரிமை இல்லை” என்று கறாராக பேசுவார். கூடவே அவர் சொன்ன வாக்கியம் இன்றைக்கும் நினைவில் உண்டு – “புற அழகை விட அக அழகு” எப்பவும் முக்கியம் – நான் மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைப்பதில்லை!” அதனால் என்றும் நான் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிறேன் என்று சொல்வார். படித்த ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது…

திடமான எண்ணமும் நல்ல குணமுமே வாழ்க்கையில் முக்கியமான அழகு. இவை ஒருவரிடம் இருந்து விட்டால் பிறரைக் கவரும் அழகு தானாகவே வந்து விடும் இந்த அழகு எந்த நாளிலும் மறையவே மறையாது.  

அது சரி சக பெண் அலுவலர்கள் Mrs.Bபத்ரா அவர்களுக்கு DCB என ஏன் பெயர் வைத்தார்கள் – அதன் விரிவாக்கம் என்ன என்று கடைசியில் சொல்வதாகச் சொல்லி இருந்தேன். பெரிய பின்கழுத்து வைத்து சட்டைப் போட்டுக் கொள்வதால் அவரை இந்த பெயரில் தங்களுக்குள் பேசுவது அவர்கள் வழக்கமாக இருந்தது! DCB – Deep Cut Batra! எப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்கள்!

நண்பர்களே, இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

36 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட்.

  நம்பிக்கைகளை சொல்லும் பொன்மொழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   பொன்மொழி உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

  அழகான வாசகம். நேர்மறையான வாசகம். பெரும்பாலும் அப்படி நினைத்துக் கொண்டாலும் சில சமயம் மனம் தலைகீழாக நிற்கிறது..ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி!

   தலைகீழாக நிற்கும் மனம்! ஹாஹா... சில சமயங்களில் இதைத் தவிர்க்க முடிவதில்லை தான். ஆனாலும் நல்லதையே யோசிப்போம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ஐம்பது வயதுப்பெண்ணின் அலங்காரம் பற்றி படிக்கும்போது ஒன்று தோன்றும். சிறிய வயதில் பெரியவர்கள்போல காட்டிக்கொள்ளப் பிரியபப்டுகிறான் மனிதன். வயதாக ஆக, சிறியவர்கள் போல காட்டிக்கொள்ளப் பிரியப்படுகிறான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயதாக ஆக சிறியவர்கள் போல காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறான்! ஹாஹா... பெரும்பாலானவர்கள் இப்படித்தான்! சிலர் மட்டுமே விதிவிலக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. ஆம். இதுபோன்ற தொல்லை தருபவர்கள், ஜொள் விடுபவர்களிடமிருந்து பெண்கள் பலவிதங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நல்ல பெண்மணி... மிக நல்ல பெண்மணி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இப்படி பல தொல்லைகள்! வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து தொல்லைகள் ஆரம்பித்து விடுகிறது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. பஞ்சாபி பெண்மணி பத்ரா செம பெண்மணி! புற அலங்காரம் செய்து கொண்டாலும் அகமும் அலங்காரமாகவே இருக்கிறது.

  சிவப்பெழுத்து வரிகளைக் கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.

  அவர் கத்தியதில் தவறே இல்லை. ஆனால் அன்புடன் இருந்திருக்கிறாரே!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கன்னாபின்னாவென்று வழி மொழிகிறேன்! நன்றி கீதாஜி!

   கோபம் இருக்கும் இடத்தில் தான் பாசமும் இருக்கும்! இல்லையா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பொதுவாகவே வடமாநிலத்தில் பெண்கள் ஆடை, அலங்காரத்தில் கவனம் அதிகம் செலுத்துவார்கள். முன்னெல்லாம் பார்க்கவே ஆச்சரியமாய் இருக்கும். இப்போ அதை விட அதிகமாக இங்கேயே வந்துவிட்டது. அலங்காரத்தையோ ஆடையையோ பார்த்து ஒருவரின் குணாதிசயங்களை நிர்ணயிக்க முடியாது அல்லவா? அந்தப் பெண்மணி சரியாகவே நடந்து கொண்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். இங்கே பஞ்சாபிகள் ஆடை, அலங்காரத்திற்கும் உணவுக்கும் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். நம் ஊரிலும் இப்போது இப்பழக்கம் வந்து விட்டது என்பது உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 7. வேலைக்குச் செல்லும் பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் ஆண்கள் அப்போவும், இப்போவும், எப்போவும் இருப்பார்கள் போல! புற அலங்காரத்தை வைத்து ஒருவரை மதிப்பிடக் கூடாது என்பதற்கு இவர் ஓர் உதாரணம். நல்லதொரு பதிவு. பழைய பதிவைப் பார்த்தேனா, படித்தேனா எனப் போய்ப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய பதிவுக்கு நீங்கள் வரவில்லை! இனிமேல் தான் படிக்கணும் நீங்க கீதாம்மா...

   வேலைக்குப் போகும் பெண்களுக்கான தொல்லைகள் - அதிகம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 8. எனது டில்லி அனுபவம் வேறுமாதிரியாக இருந்தது. பார்ப்பதற்கு ராஜ கம்பீரமாக இருந்த பஞ்சாபிப் பெண்கள் கூட மாமியார்க் கொடுமைகளை சமாளிக்க முடியாமல் ஆபீசில் வந்து அழுததைப் பார்த்திருக்கிறேன். ஒரு பெண் தற்கொலையே செய்துகொண்டார். ஆனால் ஆடை அலங்காரங்களில் குறை வைக்கமாட்டார்கள். அது அவர்களின் பாரம்பரிய குணம்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   நீக்கு
 9. புற அழகை , அவர்கள் ஆடை அலங்காரங்களை வைத்து முடிவு செய்து விடக்கூடாது .
  //புற அழகை விட அக அழகு”//
  அவர் சொல்வது சரிதான் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 10. பெண்கள் அலங்கரித்துக் கொள்வதில் தவறில்லை ஆனால் அதற்க்கான வயது வறம்பு இருக்கிறது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
  2. கில்லர்ஜி, நீங்க இப்போவே இப்படிச் சொல்கிறீர்களே! அந்தக் காலங்களிலேயே நான் பார்த்து வியந்திரு க்கிறேன். நம்மவரிடம் அவங்க எல்லாம், "உங்க மனைவியால் உங்களுக்குச் செலவு இல்லை!"எனச் சொல்லிக் கேலி செய்வார்களாம். சொல்லுவார்! :)))) நான் பவுடர் கூட எப்போதேனும் அதிசயமாய்! அதுவும் இப்போது சுத்தமாக இல்லை/

   நீக்கு
  3. "உங்களுக்கு ஒரு வட இந்திய பெண்மணி மனைவியா அமைந்திருந்தால் தெரியும் எவ்வளவு செலவுன்னு" என்று என்னையும் கலாய்ப்பதுண்டு. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
  4. கில்லர்ஜி...எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை. அலங்கரித்துக்கொள்வது, உடை அணிவது, நகை அணிவது என்பது ஒவ்வொருவர் மனதைப் பொருத்த விஷயம். அதற்கு வயது கிடையாது. 80+ ஆனாலும், அவங்க விருப்பப்பட்டால் Dye அடிப்பதோ, அலங்காரம் செய்வதோ லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வதோ செய்வதில் நமக்கு என்ன ஆட்சேபணை இருக்கக்கூடும்?

   லிப்ஸ்டிக் - இதைப் பற்றி எழுதணும்னு ரொம்ப நாளா நினைக்கிறேன். இயல்பா பெண்களுக்கு உதடு அழகா இருக்கணும். காலக்கிரமத்தில் அப்படி இல்லாததால், வெளி பெயிண்ட் அடிச்சுக்கறாங்க.. அதுபோல நாணத்தில் முகம் சிவக்கணும். அப்படி ஒண்ணு அவங்களுக்கு இப்போல்லாம் கிடையாது என்பதால் ரோஜ் பூசிக்கிறாங்க. ஹா ஹா. (எத்தனை பெண்கள் என்னைத் திட்டப்போறாங்களோ)

   நீக்கு
  5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  சுவையான நினைவுகளுடன் கூடிய பதிவு. முதல் வாசகம் நன்றாக உள்ளது. தங்களுடன் பணிபுரிந்தவர் தன்னை அழகாக வைத்துக் கொண்டவர் மட்டுமின்றி அழகான எண்ணங்களும் உடையவர். ஆண்,பெண் யாராக இருந்தாலும் தைரியசாலியாக இருந்தால்தான் வெளியில் செல்லும் போது எந்த பிரச்சனையையும் சமாளிக்க முடியும். அவரைப்போன்ற தைரியம் எனக்கில்லையே என வருத்தப்படுகிறேன். "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்பது பழமொழி. தவறுகள் நடக்கும் சமயங்களில் தட்டிக் கேட்பதில் தவறில்லை. பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் - உண்மை தான் கமலா ஹரிஹரன் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. அப்படீன்னா உங்க பேரு DSV ஆவா? (Drum Stick Venkat)
  Jayakumar​​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனையோ பெயர்களில் அழைத்து விட்டார்கள். கூட இதுவும் ஒன்று இருந்து விட்டுப் போகட்டுமே! ஹாஹா... பெயர்க் குழப்பங்கள், பேரைச் சொல்லவா என்ற தலைப்பில் இரண்டு பதிவுகள் என் பக்கத்தில் உண்டு! தேடிப்பார்த்தால் குழப்பங்கள் ரசிக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
  2. பார்த்தேன்

   என்னோட பெயர் போட்ட முத்திரை செய்யணும்னு ஒரு கடைல போய் பேரு, விலாசம் எல்லாம் சரியா பெரிய எழுத்துல எழுதிக் குடுத்துட்டு வந்தேன். இரண்டு நாள் கழித்து கடைக்குப் போய், நல்லா வளைச்சு வளைச்சு எழுதிய எழுத்துக்கள்ல போட்டு இருந்த என் முத்திரையை வாங்கிட்டு வந்தேன்.

   வீட்டுக்கு வந்து பேப்பர்ல முத்திரை போட்டா, அறை நண்பர்கள் எல்லாம் படிச்சுட்டு, விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு, “டேய் உனக்கு சரியாதான் பெயர் வச்சுருக்கான்” அந்த முத்திரைக்காரன்னு சொல்லி. என்னடான்னு புரியாம படிச்சா, “Venkataraman” அப்படின்னு எழுதும்போது, T போடறதுக்கு பதிலா Y போட்டு வைச்சுடுச்சு பயபுள்ள.

   எல்லா நண்பர்களும், ”வெங்கடராமன்”னு கூப்பிடறதுக்கு பதிலா ”வெங்காயராமன்”னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. பேசாம இந்த ஊர்ல இருக்கற வரைக்கும் இந்த ஊர்க்காரங்க வாய்ல நுழையறமாதிரி வேற பெயர் எதையாவது வச்சிக்கலாமான்னு யோசனையா இருக்கு! நீங்க என்ன சொல்றீங்க?

   பார்த்தேன்

   என்னோட பெயர் போட்ட முத்திரை செய்யணும்னு ஒரு கடைல போய் பேரு, விலாசம் எல்லாம் சரியா பெரிய எழுத்துல எழுதிக் குடுத்துட்டு வந்தேன். இரண்டு நாள் கழித்து கடைக்குப் போய், நல்லா வளைச்சு வளைச்சு எழுதிய எழுத்துக்கள்ல போட்டு இருந்த என் முத்திரையை வாங்கிட்டு வந்தேன்.

   வீட்டுக்கு வந்து பேப்பர்ல முத்திரை போட்டா, அறை நண்பர்கள் எல்லாம் படிச்சுட்டு, விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு, “டேய் உனக்கு சரியாதான் பெயர் வச்சுருக்கான்” அந்த முத்திரைக்காரன்னு சொல்லி. என்னடான்னு புரியாம படிச்சா, “Venkataraman” அப்படின்னு எழுதும்போது, T போடறதுக்கு பதிலா Y போட்டு வைச்சுடுச்சு பயபுள்ள.

   எல்லா நண்பர்களும், ”வெங்கடராமன்”னு கூப்பிடறதுக்கு பதிலா ”வெங்காயராமன்”னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. பேசாம இந்த ஊர்ல இருக்கற வரைக்கும் இந்த ஊர்க்காரங்க வாய்ல நுழையறமாதிரி வேற பெயர் எதையாவது வச்சிக்கலாமான்னு யோசனையா இருக்கு! நீங்க என்ன சொல்றீங்க?
   அது தான் சொல்லிட்டேன்
   Jayakumar

   நீக்கு
  3. ஆஹா முந்தைய பதிவும் வாசித்து கருத்து சொன்னதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 15. பெண்களுக்கு அலுவலகம் ஒரு ரிலீஃப் என்று நினைக்கிறேன். அதிலும் 'ஆணாதிக்கமுள்ளவர்கள்' இருந்தால், இந்தப் பஞ்சாபிப் பெண் போல கட் அண்ட் ரைட் ஆகத்தான் இருக்கணும். எனக்கென்னவோ அந்தப் பெண்ணின்மீது மதிப்பு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....