சனி, 10 ஆகஸ்ட், 2019

காஃபி வித் கிட்டு – பிறந்த நாள் – ரோட்டல் – குடிபோதைகாஃபி வித் கிட்டு – பகுதி – 40

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள். பிரச்சனை என்று சொன்னாலே கவலையும் பயமும் கட்டாயம் கூடவே வரும்… எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள், தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்.

பிறந்த நாள் – மறக்க முடியாத தோழி:

கல்லூரியில் உடன் படித்தது மூன்றே வருடங்கள் என்றாலும் கல்லூரிப் படிப்பு முடிந்து, அவரவர் திருமணம் முடிந்தும் தொடர்ந்த நட்பு அந்தத் தோழியுடனானது. தோழி மட்டுமல்லாது அவருக்கு வந்த கணவரும், என்னுடன் நட்பு பாராட்டியவர். இதே நாளில் தான் தோழியின் பிறந்த நாள் – எத்தனை வருடங்கள் தொடர்ந்து வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருக்கிறேன் – வாழ்த்து அட்டையாகவோ, அல்லது குறுஞ்செய்தியாகவோ அல்லது அழைப்பின் மூலமாகவோ. இன்று அவர் பிறந்த நாள் என்றாலும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல முடியாத நிலை! ஏனெனில் காலன் அவரை விட்டு வைக்க வில்லை. நல்ல மனதுடைய அந்தத் தோழிக்கு அப்படி ஒரு பிணி வந்திருக்க வேண்டாம் – தொண்டையில் கான்சர். இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட நான் அவரிடம் பேசி இருக்கிறேன். அவரால் என்னிடம் பேச முடியவில்லை – வெறும் அழுகை சப்தம் மட்டுமே என்னால் கேட்க முடிந்தது. பேச முடியாமல், தனது நிலையைச் சொல்ல முடியாமல் அவர் புண்பட்ட தொண்டையிலிருந்து புறப்பட்ட அழுகைக் குரல் என் உயிர் உள்ளவரை மறக்காது…

ஹோட்டல் தெரியும் அது என்ன ரோட்டல்:


பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர் அப்படின்னு அடிக்கடி சொல்வது எனது வழக்கமாச்சே… பயணம் பற்றிய கட்டுரைகளும் படிப்பது பிடிக்கும். சமீபத்தில் அப்படி படித்த ஒரு கட்டுரை தான் இந்த ரோட்டல் பற்றியது. ரோட்டல் என்பது பேருந்திலேயே இருக்கும் ஹோட்டல் – 20 முதல் 40 பேர் வரை இதில் பயணிக்கலாம். பேருந்தில் படுக்கை வசதி, பாத்ரூம் வசதி, சமையலறை வசதி என அனைத்தும் உண்டு. சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு இத்தாலி, க்ரீஸ், துருக்கி, துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவின் ஜெய்பூர் வந்திருக்கிறார்கள். இங்கிருந்து சென்னை மற்றும் கோவா சென்று பிறகு அங்கிருந்து விமானம் வழியே ஜெர்மனி செல்லப் போகிறார்கள். போதிய வசதிகள் இன்றி நம் ஊரிலிருந்து பேருந்திலேயே பதினைந்து, இருபது நாள் என வட இந்திய பயணம் வருபவர்களையும் இங்கே நினைக்கத் தோன்றுகிறது. முழுக்கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்!

குடிபோதையிலும் நமஸ்தே சாப்:  

எங்கள் குடியிருப்பில் காவலாளியாக இருந்த ஒரு நேப்பாளி. இங்கே காவலாளியாக இருந்த வரை எனக்குத் தேவையில்லாத பொருட்களையும், உடைகளையும் அவருக்குத் தருவதை வழக்கமாக வைத்திருந்தேன் – அவருக்குப் பயன்படும் என்பதால். சில மாதங்களாக அதீத குடிபோதை என்பதால் குடியிருப்பிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். குடித்து விட்டு ஒரே கலாட்டா செய்வதோடு சின்னச் சின்ன சண்டை சச்சரவுகளும் செய்து வந்தார். நேற்று வீட்டிலிருந்து பால் வாங்கலாம் என கீழே இறங்க குடியிருப்பு வளாகத்தில் வாயிலில் இப்போதைய நேப்பாளி காவலாளியுடன் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார். நல்ல போதையில் உடையெல்லாம் அழுக்கு, முகத்தில் கீழே விழுந்தோ, இல்லை சண்டையிலோ அடிபட்டுக் கொண்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

என்னைப் பார்த்தவுடன் “நமஸ்தே சாப்… என்னை மறந்துட்டீங்களா? என்று கையைக் கூப்பி தள்ளாடியபடியே வந்தவரிடம் ஏதுவும் பேசாமல், சைகையாலேயே போகும்படிச் சொல்லி கடந்தேன். பால் வாங்கிக் கொண்டு திரும்பி வருகையிலும் அவரைப் பார்த்தேன் – வருபவர்கள் அனைவரிடத்திலும் தொடர்பில்லாமல் பேசிக் கொண்டிருந்தார் – இன்னும் நிறைய முறை கீழே விழுந்திருப்பார் போலும் – சட்டை முழுக்க சேறு – அது நான் கொடுத்த சட்டை என்பதை சேற்றைத் தாண்டியும் தெரிந்து கொள்ள முடிந்தது! என் வீட்டின் கீழே இருக்கும் வீட்டிற்கு வந்து அந்த வீட்டுப் பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்தார் – அவரும் மிரட்டிக் கொண்டிருந்தார் – “நீ ஒரு நிலையில இல்ல, ஒழுங்கா இங்கேயிருந்து புறப்பட்டு உன் இருப்பிடத்திற்குப் போகிறாயா இல்லை காவல் துறையினரைக் கூப்பிடவா” என்று!

குடியிருப்பின் இப்போதைய காவலாளி அவரை நெட்டித் தள்ளிக்கொண்டு செல்வதை என் வீட்டிலிருந்து பார்க்க முடிந்தது.  குடிபோதை ஒருவரை என்னவெல்லாம் செய்கிறது… அவருடைய குடும்பத்தின் நிலை நினைத்து வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

இந்த வாரத்தின் ரசித்த பாடல்:

இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ஒரு கன்னட திரைப்படப் பாடல். பாடல் மட்டுமே கேட்க வசதியாக காட்சி இல்லாத காணொளியைத் தேடி இங்கே தந்திருக்கிறேன் – காட்சியுடன் பார்த்து நான் கொஞ்சம் அதிர்ந்ததால்! விருப்பம் இருந்தால் இந்தப் பாடலை யூவில் காட்சியுடன் பார்த்து ரசிக்கலாம்! அது உங்கள் இஷ்டம்… பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!


பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2013-ஆம் ஆண்டு இதே நாளில் பகிர்ந்து கொண்ட ஒரு பதிவு என்ன தெரியுமா? 1957-ஆம் ஆண்டின் கல்கி தீபாவளி மலரில் வெளிவந்த சில விளம்பரங்கள் தான். தில்லி தமிழ் சங்கத்தின் நூலகத்திலிருந்து எடுத்து வந்து அவற்றின் படங்களை இங்கே பகிர்ந்திருந்தேன். அந்தப் பதிவில் கருத்துரைத்த பலர் இப்போது பதிவுலகில் இல்லை என்பதும் வருத்தம் தரும் விஷயம். பதிவை பார்க்காதவர்கள் பார்க்க ஏதுவாய் சுட்டி கீழே…


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

  வாசகம் மிக மிக அருமை. நான் தினமும் நினைத்துக் கொள்ளும் சாராம்சம். நம்மை நாமே உத்வேகப்படுத்திக் கொள்ள...

  காஃபியைச் சுவைக்க ஆரம்பித்து வரும் போது இரண்டாவது மனதை வேதனைப்படச் செய்துவிட்டது. அதுவும் பேச முடியாமல்....அந்தக் கடைசி வரிகள் என்னவோ செய்துவிட்டது ஜி.

  வெங்கட்ஜி உண்மையிலேயே நீங்கள் ஒரு அனுபவத்தைக் கூட உங்களால் கொஞ்சமே வரிகளில் அழகான உணர்ச்சிபூர்வமாகச் சொல்லும் நீங்கள் கதை எழுதலாம் ஜி...

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி...

   வாசகம் உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   இரண்டாவது விஷயம் - கடைசி வரிகள் - என்னை ரொம்பவே பாதித்த நிகழ்வு. எப்போதும் மனதின் ஓரத்தில் அந்த நாளின் அலைபேசி சம்பாஷணை கேட்டுக் கொண்டே இருக்கிறது.

   கதை - ம்ம்ம். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சி தருகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 2. ரோட்டல் பற்றி மகன் சொன்னான். சென்ற வாரம் தான் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். எனக்கும் பயணம் என்பது மிகவும் பிடிக்குமே. அவனுக்கும் மிகவும் பிடிக்கும்.

  குடிபோதை ஹூம் என்ன சொல்ல அதுவும் காவலாளியே குடித்தால்...எப்படிக் காவல் காக்க முடியும்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா ரோட்டல் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்களா? மகிழ்ச்சி.

   பயணம் பிடித்திருப்பது நல்ல விஷயம். பயணம் நல்லது - ஆதலினால் பயணம் செய்வீர்! ஹாஹா...

   குடிபோதை - என்ன சொல்ல? இவர்களைத் திருத்த முடியாது! விற்கும் அரசாங்கத்தினையும் திருத்த முடியாது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 3. அந்த ப்ரெண்ட் நான்தானே?!! காஃபி வணக்கம் வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வணக்கம் ஸ்ரீராம்!

   அந்த ஃப்ரண்ட் - நீங்களும் தான்! இப்படி நிறைய கப் இருக்கிறது! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நல்லது. இனி சவால் என்றே மனதுக்குள் சொல்லிக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சவால்களை சமாளிக்கக் கற்றுக் கொண்டால் எல்லாம் சுகமே! உங்களுக்கான சவால்களை நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள எனது வாழ்த்துகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. பாடல் மற்றும் பின்னோக்கிச் சுட்டி பார்த்துவிட்டு அப்புறம் வருகிறேன்.

  சில சமயம் வாசித்து, கேட்டாலும் கூட பின்னர் வர முடியாமல் போகிறது...இன்று வர இயலும் என்று நினைக்கிறேன் கேட்டுவிட்டு வருகிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடல் மற்றும் பின்னோக்கி - முடிந்த போது பாருங்கள் கீதாஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. தோழி - வருத்தமான செய்தி. இதே நிலை ஆரோக்கிய சமையல் ஹேமாவின் ஆஸ்தான ஆட்டோக்காரருக்கும்.அவரைப் பார்க்கும்போதெல்லாம் வருத்தம் மேலிடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஸ்தான ஆட்டோக்காரர் - வேதனை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. >>> பிறந்த நாள் – மறக்க முடியாத தோழி <<<

  மனதை கலங்கச் செய்கிறது...

  நோயில்லா வாழ்வு வேண்டும் இறைவா!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நோயில்லா வாழ்வு வேண்டும் இறைவா....// இறைவன் அனைவருக்கும் நல்லதையே கொடுக்கட்டும் என்று எப்போதும் ஒரு பிரார்த்தனை செய்வதுண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 8. ரோட்டல் வசதி இந்தியாவிலும் வந்தால் நன்றாயிருக்கும். போதை, மனிதர்களை பேதையாக்குகிறது. பாடல் பின்னர் கேட்க வேண்டும். பழைய பதிவில் என் கமெண்ட் கண்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரோட்டல் வசதி - இங்கே வருவதற்கு பல காலம் ஆகலாம்! வராமலும் போகலாம்...

   பாடல் முடிந்த போது கேளுங்கள் ஸ்ரீராம். பின்னோக்கி பதிவில் உங்கள் கருத்துரை - மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. ரோட்டல் கேள்விப் பட்டதே இல்லை. முதல்முறையாகக் கேள்விப் படுகிறேன். உங்கள் சிநேகிதியின் நிலைமையும் அவர் இப்போது இல்லாததையும் படிக்கையில் மனம் நொந்து போனது. ஆண்டவனுக்குக் கண்ணில்லையா எனக் கேட்கத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரோட்டல் - உங்களுக்கு புதிய செய்தி என அறிந்தேன்.

   சிநேகிதி - ஆண்டவனுக்குக் கண்ணில்லை! என்ன சொல்ல முடியும் கீதாம்மா... அவரின் நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. அந்தப் பாடல்!!!!!!!!!! யூ ட்யூபில் பார்த்தே ஆகணும் என்னும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்! இஃகி,இஃகி! ஆனால் இப்போ முடியாது! மத்தியானம் நினைவிருந்தால் பார்க்கிறேன்.

   நீக்கு
  3. அந்தப் பாடல் யூ ட்யூபில் பார்த்தே ஆகணும் - ஹாஹா... பார்த்து ரசிக்க வாழ்த்துகள் கீதாம்மா...

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  4. நீங்க வேறே! மீள் வருகை எல்லாம் இல்லை. உங்கள் தளத்திலேயே தான் இருந்தேன். திறக்க அத்தனை நேரம் எடுத்துக் கொண்டது. பழைய பதிவில் நான் இருக்கேனானு போய்ப் பார்க்கிறேன். :)

   நீக்கு
  5. ஹாஹா... சில சமயங்களில் இப்படித்தான் இணையம்/சில வலைப்பூக்கள் ரொம்பவே படுத்துகிறது! பழைய பதிவில் - பாருங்கள் பாருங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 10. ரசித்த வாக்கியம் நன்றாக இருக்கிறது.

  தோழியின் பிரிவு மனதை கனக்க செய்து விட்டது, பேசமுடியாமல் அவர் பட்ட அவதி மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது. இந்த மாதிரி செய்தி போடும் நாளில் பதிவு பிடித்து இருக்கா? என்று கேட்காதீர்கள் வழக்கம் போல் வெங்கட் . (சோக செய்தி பகிரும் நாளில் மட்டும் வேண்டாமே)

  தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்த வாக்கியம்... மகிழ்ச்சிம்மா...

   தோழியின் பிரிவு கனக்க வைத்த விஷயம் தான் கோமதிம்மா...

   //இந்த மாதிரி செய்தி போடும் நாளில் பதிவு பிடித்து இருக்கா? என்று கேட்காதீர்கள் வழக்கம் போல் வெங்கட் . (சோக செய்தி பகிரும் நாளில் மட்டும் வேண்டாமே). தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.// தவறே இல்லை கோமதிம்மா...

   பதிவில் தவறாக இருப்பின் நிச்சயம் சுட்டிக் காட்டுங்கள். இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது.

  தாங்கள் ரசித்த வாசகம் என்னையும் ரசிக்க வைக்கிறது. பிரச்சனைகளை தூர விலக்கி வைத்தாலும், அதுவே ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது. இனி அப்படி நினையாமல் சவால் என்று வைத்துக்கொண்டால், தாங்கும் தைரியமும், போராடும் பக்குவமும் வரும் என்பதை படித்ததே ஒரு தன்னம்பிக்கையை தருகிறது. காலை நேரத்தில் ஒரு நல்ல வாசகம் தந்தமைக்கு நன்றி.

  தோழியின் பிறந்த நாள் நினைவுகள் மனதை வருந்த வைக்கிறது மிகவும் வருத்தத்துடன் மனதை கலங்கவும் வைத்த செய்தி. ஆண்டவன் நல்லவர்களை மிகவும் சோதிப்பான் போலும். வேறு என்ன சொல்வது.!

  குடி பழக்கம் மனிதர்களின் வாழ்வை சிதைக்கும் தன்மை கொண்டது. மக்கள் அவர்களாக உணர்ந்து திருந்தினால் நல்லது. அந்த வாட்ச்மேனின் வீட்டு நிலைமை நினைத்துப் பார்க்கவே மிகவும் கஸ்டமாக உள்ளது.

  ரோட்டல் பற்றிய செய்தி சுவாரஸ்யமாக உள்ளது. இங்கும் புழக்கத்தில் வந்தால் பயணம் செய்பவர்களுக்கு பயனுடையதாக அமையும்.

  பாடல் பிறகு கேட்கிறேன். பின்னோக்கிச் சென்று அந்த பதிவையும் ரசிக்கிறேன்.
  கதம்பம் நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி!

   பிரச்சனைகள் பற்றிய வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தோழியின் பிறந்த நாள் - சில நிகழ்வுகளையும் மனிதர்களையும் மறக்கவே முடிவதில்லை.

   குடிப் பழக்கம் என்ன சொல்ல. அவர் குடும்பத்தினர் நிலையை நினைக்கும்போது இன்னும் வேதனை.

   ரோட்டல் - இந்தியாவில் புழக்கத்திற்கு வந்தால் - வருவது சந்தேகம் தான்.

   பாடலையும், பின்னோக்கி பதிவும் முடிந்த போது கேளுங்கள்/பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. ரோட்டல் செய்தி அருமை.நீங்கள் சொல்வது போல் ஒரு வசதியும் இல்லாமல் பேருந்திலேயே வட இந்தியர்களும் இங்கு வருகிறார்கள், நம்மவர்கள் அங்கு போகிறார்கள். அதுவும் மிகவும் கடின பயணம். பாடல் கேட்டேன் இது மாதிரி தமிழ் பாட்டு கேட்டு இருக்கிறேன், நினைவுக்கு வரவில்லை.

  காவலாளி ஏன் இப்படி ஆனார் வேலையும் போய் அவர் குடும்பத்தை நினைத்தால் மனது கஷ்டப்படுகிறது.


  பழைய பதிவு படித்தேன், நானும் கருத்து சொல்லி இருக்கிறேன்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரோட்டல் - ஒரு வசதியும் இல்லாமல் வட இந்தியர்களும் நம் ஊருக்கு வருவதைப் பார்க்கிறேன் - ஸ்ரீரங்கத்தில் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலிருந்து பேருந்திலேயே வருபவர்கள் நிறையவே.

   காவலாளி குடும்பம் பற்றி நினைத்து தான் எனக்கும் மனக் கஷ்டம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 13. மது உள்ளே போனால் மதி வெளியே போய் விடும் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மது உள்ளே மதி வெளியே... உண்மை கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. தோழியின் மறைவு மனதை கனக்கச் செய்தது...

  ரோட்டல் - புதிய செய்தி...

  போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்... சேர்த்தாலும் ம்... ஒன்றும் சொல்வதற்கில்லை...

  சவாலே சமாளி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போதை மறுவாழ்வு நிலையத்தில் சேர்த்தாலும்.... திருந்துவது அவர்கள் கையில்....
   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....