எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 30, 2016

குடிமகனே[ளே].... பெருங்குடிமகனே[ளே].....

படம்: இணையத்திலிருந்து......

சமீபத்திய நீயா நீனா நிகழ்ச்சியில் பெண்கள் மது அருந்துவது குறித்த ஒரு பெண்ணின் பேச்சு வலையுலகிலும், ஊடகங்களிலும் நிறைய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அது பற்றி சில பதிவுகளும் வந்திருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியினை மட்டுமல்ல, பொதுவாகவே நீயா நானா நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை – For that matter, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவுமே பார்க்க முடிவதில்லை – நேரப் பற்றாக்குறை மிக முக்கிய காரணம். கிடைக்கும் கொஞ்ச நேரமும் வலைப்பதிவுகள் படிப்பதற்கும், என்னுடைய பதிவுகள் எழுதுவதற்கும் சரியாக இருக்கின்றன. அதனால் அந்நிகழ்ச்சி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்பதிவில் நாம் பார்க்கப் போவது கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் இருக்கும்போது பார்த்த சில சாலைக் காட்சிகளைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

காட்சி-1புதுகை புதிய பேருந்து நிலையம்

பேருந்து நிலையங்களில் இருக்கும் கழிவறைகள் நிலை பற்றி சொல்லவே வேண்டாம் – சுத்தம் என்றால் கிலோ என்ன விலை என்ற நிலை தான் இந்தியா முழுவதுமே......  காசு வாங்கினாலும், கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம் அவற்றை நிர்வகிக்க குத்தகை எடுத்திருப்போர்களுக்குக் கொஞ்சம் கூட இல்லை. கழிவறைகள் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர்கள் தூரம் வரை அவற்றின் நாற்றம் வரும் நிலை தான். அங்கே இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கே பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும் – வேறு வழியில்லை என்பதால் தான் அங்கே செல்ல வேண்டியிருக்கிறது. 

அங்கே முகத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு உள்ளே சென்றபோது பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் சாராய பாட்டில்கள்...  மூத்திரம் கழிக்கும்போதே போதை ஏற்றிக்கொள்ளும் குடிமகன்கள் – எப்படித்தான் முடிகிறதோ?  என்னதான் போதைக்கு அடிமையாகிவிட்டாலும் இப்படியா?  ஒரு வேளை இந்த நாற்றத்தினை தவிர்ப்பதற்காகவே குடிக்கிறார்களோ?

தில்லியில் இருக்கும் ஒரு ஹரியானா நண்பர் சொல்வது நினைவுக்கு வருகிறது.....  அந்த நண்பர் எப்போதாவது குடிப்பது வழக்கம்.  அப்படிக் குடித்தால் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் நான்கு பூண்டுப் பற்களை பச்சையாகவே கடித்துத் தின்று விடுவார். பூண்டு வாசனையில் சாராய வாசனை குறைந்து விடும் எனும் நினைப்பு அவருக்கு. அப்படியும் அவர் வீட்டுக்குச் சென்றதும் அவர் மனைவி கண்டு பிடித்துவிடுவாராம். வீட்டுக்குள் நுழைந்ததும் கேட்கும் கேள்வி இன்னிக்கு திரும்பவும் மூத்திரம் குடிச்சுட்டு வந்துட்டியா?

காட்சி-2: திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்

நேற்று காரைக்குடி வரை செல்ல வேண்டியிருந்தது. அங்கிருந்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன்.  அங்கே நடைமேடையில் ஒருவர் வீழ்ந்து கிடந்தார். மடித்துக்  கட்டிய வேட்டி அப்படி ஒன்றும் அழுக்காக இல்லை. நன்றாகவே உடையணிந்து இருந்தார். வீழ்ந்திருந்த அவர், குடிபோதையில் தன் சுயநினைவில்லாது சிறுநீர் கழித்து ஒரு ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது உளறிக் கொண்டிருந்ததால் அவர் உயிருடன் இருப்பது மட்டும் தெரிந்தது.

தன் நிலை மறந்து இப்படி விழுந்து கிடக்கும் அளவிற்கு குடிப்பது அவசியமா? அவருடன் சேர்ந்து குடிக்க வந்த நண்பர்கள் அவரை இப்படி நடுவீதியில் விட்டுச் சென்றால் அவர்களது நட்பின் ஆழமா? இப்படி பல குடிமகன்களைக் காண்பதால் யாரும் அவரைப் பற்றி கவலை கொள்வதில்லை. அவரைக் கடக்கும்போது அவரை விட்டு விலகி நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.....  மனதிற்குள் நிச்சயம் அம்மனிதரைப் பற்றி கேவலமாக நினைத்துக் கொண்டுதான் கடந்திருப்பார்கள்.

காட்சி-3: திருச்சி டவுன் பஸ் ஒன்றில் பயணிக்கும் போது

நான் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னிருக்கை. அமர்ந்திருந்தது இரண்டு இளைஞர்கள். தங்களது வீரப் பிரதாபங்களைப் பற்றியும் சொத்து விவரங்களைப் பற்றியும் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவே அவர்கள் எங்கெங்கே குடித்தார்கள், எவ்வளவு குடித்தார்கள் என்பது பற்றியும். அதில் ஒருவர் முதன் முதலில் குடிக்க ஆரம்பித்தது பற்றியும் சொன்னார். நானு, புலம்பல் பாண்டியன், அஃப்சல், பீட்டர் என அனைவரும் ரூமில் இருந்தோம். அவங்க மூணு பேரும் தண்ணி அடிக்க, நான் மட்டும் சும்மா இருந்தேன்.

அவங்க மூணு பேரும் என்னை ரொம்பவே கிண்டல் பண்ணாங்க, உடனே கோவம் வந்து, விஸ்கி பாட்டில் எடுத்தேன், மடக் மடக்குன்னு தண்ணி/சோடா எதுவும் கலக்காம ராவா குடிச்சு பாட்டில கீழே வைச்சேன். அதுக்கப்புறம் கொஞ்சம் தண்ணியை மேலாக குடிச்சேன். ஆடிப் போயிட்டாங்க மூணு பேரும்..... இதுக்குத் தான் இத்தனை கிண்டலான்னு தோணிச்சு.  கொஞ்சம் நல்லாவும் இருந்துச்சு. அதிலேருந்து குடிக்க ஆரம்பிச்சிட்டேன்.  இப்பல்லாம் வீட்டுல இருக்கும்போது வீட்டுக்குத் தெரியாம தண்ணி சொம்புல சரக்க மிக்ஸ் பண்ணி குடிச்சுடறேன்! சரி சரி, சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு புலம்பல் பாண்டியன் வரன்னு சொல்லி இருக்கான். அங்கே இறங்கி மூணு பேரும் சரக்கு அடிச்சுட்டு அப்புறமா மத்த வேலையப் பார்க்கலாம்.......

இப்படி நிறைய சாலைக் காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்....  2015-ஆம் ஆண்டின் கடைசி நாள் – அன்று தில்லி நகரே கோலாகலமாக இருக்கும். இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நடந்து வந்து கொண்டிருக்கும்போது என்னை உரசும்படி ஒரு மகிழ்வுந்து வந்து நின்றது. கண்ணாடிக் கதவுகள் கீழிறங்க, மகிழ்வுந்தில் நான்கு பெண்கள் – எனைக் கேட்ட கேள்வி – இங்கே பக்கத்துல Pub எங்கே இருக்கு?

இப்படி ஆணோ, பெண்ணோ மது அருந்துவது அவர்கள் உரிமை என்று சொன்னாலும், தொடர்ந்து மது அருந்தி தன்னை அழித்துக் கொள்வதோடு மட்டுமல்லாது தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தினரையும் அழித்து விடுகிறார்களே....  எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறார்களோ? மதுவெனும் அரக்கனை ஆண் அருந்தினாலும், பெண் அருந்தினாலும், அவை ஏற்படுத்தும் பாதிப்பு இருவருக்குமே உண்டு.  இதில் ஆண் என்ன பெண் என்ன?

தொடர்ந்து சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து......

38 comments:

 1. யதார்த்த நிகழ்வுகள் அனைத்தும் உண்மைதான் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. குடிமகனோ - குடிமகளோ!..

  நம்ம வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போவோம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. துக்கம் ஏற்பட்டாலும் குடிக்கிறார்கள். சந்தோஷம் ஏற்பட்டாலும் குடிக்கிறார்கள். இதுபற்றிய ஓர் நகைச்சுவைப்பேச்சினை சமீபத்தில் கேட்டேன்.

  குடி வெறியர்கள், அதனால் தனக்கும், பிறருக்கும், குடும்பத்தாருக்கும் ஏற்படும் பல்வேறு தீமைகளை அவரவர்களாக உணர்ந்து திருந்தினால் மட்டுமே உண்டு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 4. அளவோடு என்று ஆரம்பிக்கும் பழக்கம்தான் ஆளையே வீழ்த்தி விடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. அப்படியும் அவர் வீட்டுக்குச் சென்றதும் அவர் மனைவி கண்டு பிடித்துவிடுவாராம். வீட்டுக்குள் நுழைந்ததும் கேட்கும் கேள்வி ”இன்னிக்கு திரும்பவும் மூத்திரம் குடிச்சுட்டு வந்துட்டியா?”//


  என்னத்தை தின்னாலும் பேசும் ஸ்லாங் வச்சி வீட்டுல கண்டுபிடிச்சிருவாங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 6. கழிவறைகள் நிலைமை மிகவும் மோசம்தான். இதில் வாங்கும் பணம் எவ்வளவு என எழுதவில்லையே? ஐந்து ரூபாய் முதல் அவர்கள் நினைத்தபடி. பல இடங்களில் இந்த ஐந்து ரூபாய் கொடுத்து ஏன் செல்லவேண்டும் என்று திறந்த வெளி அசிங்கம் வேறு. பேருந்து நிலையம் முழுதும் மூச்சுத்திணறல் தான். இது என்று மாறுமோ தெரியவில்லை. மாறுமா?

  ReplyDelete
  Replies
  1. ஐந்தும் பத்தும் வாங்கும் அவர்கள் சுத்தம் பற்றி யோசிக்காதது கொடுமை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அன்பு.

   Delete
 7. ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் கிடப்பதையே பார்க்க சகிக்கவில்லை. இதில் பெண்களும் குடித்துவிட்டு அலங்கோலமாக வீதியில் கிடந்தால் எப்படி சகிக்க முடியும்? அந்தப் பெண்ணின் குழந்தைகள் தாயை இப்படிப் பார்த்தால் அவர்கள் மனம் எப்படி வாடிப் போகும்? எனது உரிமை என்று தவறான திசையை நோக்கிதான் பெண்கள் செல்கிறார்கள். இது எப்போது மாறுமோ..!
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   யார் குடித்தாலும் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தீங்கு என்பது அவர்களுகுப் புரியவதில்லை.

   Delete
 8. //அங்கே முகத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு உள்ளே சென்றபோது பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் சாராய பாட்டில்கள்... மூத்திரம் கழிக்கும்போதே போதை ஏற்றிக்கொள்ளும் குடிமகன்கள் – எப்படித்தான் முடிகிறதோ? என்னதான் போதைக்கு அடிமையாகிவிட்டாலும் இப்படியா? ஒரு வேளை இந்த நாற்றத்தினை தவிர்ப்பதற்காகவே குடிக்கிறார்களோ?// பல குடிநோயளிகள் அலுவல் நேரத்தில் குடிக்க இருக்கும் பெரும் புகலிடம் ஐயா அது.. புதுகை ஓர் உணவகத்தின் கழிவரையில் பார்த்திருக்கிறேன் பாட்டில்களை..

  ReplyDelete
  Replies
  1. உணவகம், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்திலும் பாட்டில்களைக் கண்டிருக்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 9. வணக்கம் தோழர்,
  இரண்டாவது புதுகை விஜயத்தில் தங்களைச் சந்திக்ககாது போனது வருத்தமே...
  இந்தப் பதிவை ஒரு ரெகுலர் பதிவாக கடக்க முடியவில்லை
  தமிழகத்தின் இழி நிலையை போகிற போக்கில் போட்டுத் தாக்கி விட்டு போய்விட்டீர்கள்..
  வருத்தங்கள்தான்.

  எல்லாம் ஓர் சக்கரம் போல மீண்டும் குடியற்ற தமிழகம் வரும் என்றே நம்புகிறேன் ..
  அப்புறம்
  தம +

  ReplyDelete
  Replies
  1. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இப்படி பார்த்து இருக்கிறேன் தோழரே....

   இரண்டாம் முறை வரும் போது உங்களைச் சந்திக்க முடியவில்லை என்பதில் எனக்கும் வருத்தம் தான்..... அடுத்த தமிழகப் பயணத்தின் போது சந்திப்போம்.....

   Delete
 10. இதுதான் 'தூய்மை இந்தியா 'வின் மாறாத நிலை :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 11. அதானே! நல்லதுக்கு போட்டிபோடலாம், இந்த நாதாரிதனத்துக்கு போட்டி எதுக்கு?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.....

   Delete
 12. //ஆணோ, பெண்ணோ மது அருந்துவது அவர்கள் உரிமை என்று சொன்னாலும், தொடர்ந்து மது அருந்தி தன்னை அழித்துக் கொள்வதோடு மட்டுமல்லாது தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தினரையும் அழித்து விடுகிறார்களே//

  உரிமையோ உரிமையென்று
  ஊரெங்கும் மேடை போட்டார்
  கடமையோ கடமையென்று
  காரியம் செய்தாலென்ன?
  காரியம் செய்தாலென்ன?
  சொல்லாதே யாரும் கேட்டால்
  எல்லோரும் தாங்க மாட்டார்

  :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணா....

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete

 14. //இங்கே பக்கத்துல Pub எங்கே இருக்கு?//

  நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. இப்போதும் முன்பும், குடிப்பதை விட, குடித்து விட்டு ஊளையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து காவளித்தனம் செய்யும், குடித்தால் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று என்னும் கேடு கேட்ட தனத்தை தமிழகம் அளவிற்கு வேறு எங்கும் நான் காணவில்லை.


  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி iK Way.

   Delete
 16. கடந்த நான்குநாட்களாக இணைய இணைப்பு
  ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு விட்டது ஐயா
  சில பதிவுகளைப் பார்க்காமல் இருந்திருப்பேன்
  இனி தொடர்வேன்
  த்ம =1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 17. எதுஎதுக்கு போட்டி சம உரிமைன்னு விவஸ்தையே...இல்லாம போச்சு..

  தம.கக

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 18. ஆணென்ன பெண்ணென்ன...உண்மைதான் இந்தியா முழுவதுமே இப்படித்தான். அதுவும் பேருந்து, ரயில் பயணங்களிலும் கூட குடித்துவிட்டுப் பயணிக்கின்றார்கள். சிலர் வாந்தியும் எடுப்பார்கள். காணச் சகிக்காது....தர்மசங்கடமான நிலைகள் பல நேர்ந்துள்ளது. எப்போது இதற்கெல்லாம் விடிவு வருமோ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 19. வேதனை தந்த பதிவு! அதிலும் பெண்கள் இப்போதெல்லாம் மிகவும் முன்னேறி விட்டார்கள்! :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....