எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 9, 2016

முதுகுச் சுமையோடு ஒரு பயணம்......வெளிநாட்டவர்கள் பலருக்கு ஒரு வழக்கம்.  வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடத்திற்கொரு முறையோ தங்கள் நாட்டினை விட்டு வெளியூர்களுக்குப் பயணம் புறப்பட்டு விடுவார்கள்.  ஒன்றிரண்டு நாள் பயணமாக இல்லாமல் நீண்ட நெடிய பயணமாக இருக்கும். முதுகுச் சுமையாக ஒரு பை மட்டும் கொண்டு உலகையே சுற்றி வர ஆசைப்படுகிறார்கள். தில்லியில் இப்படி பலரைப் பார்க்கமுடியும். தலைநகரின் [p]பாஹர்[ட்] [g]கஞ்ச் பகுதியில் இப்படி வரும் சுற்றுலா வாசிகளுக்கென்றே பல தங்கும் விடுதிகள் உண்டு.

ஹரித்வார், ரிஷிகேஷ், ஆக்ரா, மதுரா, ஷிம்லா, என வடக்கில் பல இடங்களுக்குச் செல்லும்போதும் இப்படி முதுகுச் சுமையோடு வெளிநாட்டுப் பயணிகளைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.  கையில் புகைப்படக் கருவியும், Lovely Planet India புத்தகமும் வைத்துக் கொண்டு, முதுகில் சுமையோடு இவர்கள் சுற்றாத இடமே இல்லையா எனத் தோன்றும் அளவுக்கு இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணிக்கும் இவர்களைக்கண்டு பிரமிப்பும், சற்றே பொறாமையும் தோன்றும் – பிரமிப்பு அவர்களது பயணிக்கும் ஆர்வம் கண்டு.....  பொறாமை – இப்படி நம்மால் பயணிக்க இயலவில்லையே எனும் எண்ணத்தில்!சில பயணங்களில் இப்படி வரும் Backpackers சிலருடன் பேசும் அனுபவம் உண்டு. அவர்களுக்காக சில புகைப்படங்கள் எடுத்துத் தரச் சொல்லிக் கேட்க, அப்படியே அவர்களது அனுபவங்கள் பற்றி அளவளாவியதுண்டு. பெரும்பாலும் அதிக செலவு செய்யாது, தாங்களாகவே பல இடங்களைச் சுற்றி வருவது அவர்களுடைய பழக்கம். உள்ளூர்வாசிகளைப் போலவே பேருந்துகளிலும், ரிக்‌ஷா, ஆட்டோ, ரயில், குதிரை வண்டி, ஒட்டக வண்டி என அனைத்து வகையிலும் பயணித்து எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விடுவார்கள்.  மிகக் குறைவான வாடகையில் கிடைக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி, ஒரு மாதம் இரண்டு மாதம் என ஊர் சுற்றி பிறகு தங்களது நாட்டிற்குத் திரும்புவது இவர்களது வழக்கமாக இருக்கிறது.

வருடம் முழுவதும் உழைத்து, சம்பாதித்ததில் ஒரு பகுதியைச் சேமித்து, அதில் இப்படி நீண்ட பயணம் செய்வார்கள். பிறகு தங்கள் ஊருக்குச் சென்று மீண்டும் ஏதோ வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிக்கிறார்கள். இப்படி நம் ஊரில், யாரும் நினைப்பதில்லை.  பயணத்திற்காகவே வேலையை விட்டு விட முடியுமா? இல்லை இரண்டு, மூன்று மாத விடுமுறை எடுத்து பயணிக்க முடியுமா?  ஒரு வார விடுமுறை, அதுவும் பயணத்திற்காக விடுமுறை என்றாலே மூக்கைச் சிந்தி அழுகின்ற மேலதிகாரிகள் பலரை நான் சந்தித்ததுண்டு!இப்படி வரும் பல Backpackers 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், யுவதிகள் ஆக இருக்கிறார்கள்.  வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே பல இடங்களைச் சுற்றிப் பார்த்து விட வேண்டும் – வயதான பிறகு நம்மால் போக முடியுமோ முடியாதோ என இளமையிலேயே பல இடங்களுக்கும் சென்று வருகிறார்கள். இந்தியர்களால் இப்படி வருங்காலத்திற்கான கவலை இல்லாது பயணிக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சமீபத்தில் இக்கேள்விக்கு ஒரு பதில் கிடைத்தது!

தில்லியில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த ஒரு இளம் ஜோடி – தேவப்ரியா ராய் மற்றும் சௌரவ் ஜா....  காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தினைச் சேர்ந்த ஜாவின் மூதாதையர் காலத்திலேயே மேற்கு வங்கத்திற்கு இடம் மாற்றமாகி தங்கிவிட்டவர்கள்.  தேவப்ரியாவும் மேற்கு வங்கத்தினைச் சேர்ந்தவர் தான். இரண்டு பேருமே தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். படிக்கும் காலத்திலேயே காதல் வயப்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவருக்குமே பயணம் பிடித்தமான விஷயம்.  சௌரவ் பல அரசியல் கட்டுரைகள், குறிப்பாக பாதுகாப்பு விஷயங்கள் குறித்த கட்டுரைகள் எழுதுபவர். தேவப்ரியாவும் எழுத்தாளர் தான்.  Backpackers போல இந்தியாவினைச் சுற்றி வர இவர்களுக்கும் ஆசை.  பணி புரிந்து சேமித்த பணத்தினைக் கொண்டு இந்தியாவைச் சுற்றி வர முடிவு செய்து விட்டார்கள்.  தங்கியிருந்த வீட்டினைக் காலி செய்து, பொருட்களை எல்லாம் கொல்கத்தாவில் பெற்றோர் வீட்டில் வைத்துவிட்டு, முதுகுச் சுமையோடு பயணத்தினை துவங்க முடிவு செய்தார்கள்.

பயணத்திற்கு இவர்களது திட்டம் – இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும், இந்த நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும் என்ற பட்டியல் ஏதும் கிடையாது. எந்த ஊரிலும் ஒரு இரவுக்கு மேல் பெரும்பாலும் தங்கக் கூடாது, நாளொன்றுக்கு ஐந்நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்யக் கூடாது [தங்குமிடம், பயணச் சீட்டு, உணவு அனைத்தும் சேர்த்து!], போன்ற முடிவுகளோடு,  இவர்களது பயணம் துவங்குகிறது – தில்லியின் பிகானேர் ஹவுஸிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கிப் பயணிக்கும் ஒரு சாதாரண கட்டணப் பேருந்தில்!

இப்படி ஆரம்பித்த பயணத்தில் இவர்கள் சென்ற இடங்கள், சந்தித்த விதம் விதமான மனிதர்கள், கிடைத்த நட்புகள், நடுநடுவே இவர்களுக்குள் நடக்கும் ஊடல்கள் என எத்தனை எத்தனை அனுபவங்கள்.... அத்தனை விஷயங்களையும் சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைத்துக் கொண்டே வருகிறார்கள் – இருவரும் தனித்தனியே!  தொடர்ந்து பயணித்து, பல மாநிலங்கள் கடந்து இவர்கள் பயணம் தொடர்கிறது.  தில்லி, ராஜஸ்தான், குஜராத், உத்திரப் பிரதேசம், ஹரியானா, என பல இடங்களுக்குப் பயணிக்கிறார்கள். 

இவர்கள் பயணிப்பதற்கு முன்பே ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு அவர்களும் பயணித்திற்கான தொகையில் ஒரு பங்கை அளிக்கிறார்கள்.  அந்த அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டு இருப்பது சமீபத்தில் தெரியவர, எனக்கும் பயணம் பிடிக்கும் என்ற காரணத்தினால் உடனேயே இணையம் மூலம் புத்தகத்தினை வாங்கி படித்து முடித்தேன்.  The Heat and Dust Project – the broke couple’s guide to Bharat என்பது தான் புத்தகத்தின் தலைப்பு. Harper Collins வெளியீடு.  புத்தகத்தின் விலை ரூபாய் 250/-. Amazon.in தளத்தில் 160 ரூபாய்க்குக் கிடைத்தது!  இந்தப் புத்தகம் கிண்டில் கருவிகளிலும் தரவிறக்கம் [காசு கொடுத்து தான்!] செய்து படிக்க முடியும்.புத்தகத்தின் சில பகுதிகள் சற்றே இழுவையாக இருந்தாலும், பயணம் பிடித்த எவருக்கும் இப்புத்தகம் பிடிக்கும் – அவர்கள் பயணித்த பல இடங்களில் இருந்த உழைப்பாளிகள், சக மனிதர்கள் சொன்ன கதைகள், பாரம்பரிய உணவுகள், கலாச்சாரம், வழிபாட்டுத் தலங்கள், பார்க்க வேண்டிய இடங்கள் என பலவற்றையும் சொல்லிப் போவதால் தொடர்ந்து படித்து முடித்து விட முடிகிறது. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகமும் வரப் போவதாக தெரிகிறது.  ஆனால் அதை நான் வாங்குவேனா என்பது தெரியாது!

கிட்டத்தட்ட 5000 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டிய ஒரு மலைக்கோவில், இரவு பத்து மணிக்கு மேல் மதுரா நகரின் யமுனை நதியில் ஒரு படகுப் பயணம், அப்படகோட்டி சொல்லும் காதல் கதை, ஜுனாகர்[ட்] கோட்டை, அதன் பின்னே இருந்த அரசியல், பலாப்பழம் பேருந்தில் கொண்டு வந்தால் கெட்டது நடக்கும் என நம்பும் கிராமத்து மக்கள், எளிய மனிதர்கள் காட்டும் அன்பு, வெளிநாட்டவர்களிடம் நம்மவர்கள் நடத்தும் கொள்ளைகளும், அவலங்களும் என பல விஷயங்கள் பற்றி இப்புத்தகத்தில் படிக்க முடிந்தது!

நமது நாட்டில் தான் எத்தனை எத்தனை இடங்கள், எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான பண்பாடுகள், உணவு வகைகள்.....  எல்லாவற்றையும் பார்த்து, ரசித்து, அனுபவிக்க ஆசை இருந்தாலும், பலவிதமான தளைகளால் கட்டுண்டு கிடக்கிறோம்.  எனக்கும் இப்படி பயணம் செய்ய ஆசை உண்டு – முதுகுச் சுமையோடு, அலைபேசி, மின்னஞ்சல், அலுவலகம் என அனைத்தையும் மறந்து ஊர் ஊராக, பல இடங்களுக்குச் சென்று, அங்கே கிடைக்கும் உணவினை உண்டு, கிடைத்த இடத்தில் தங்கி, பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து, புகைப்படங்களை எடுத்து, அனுபவங்களைக் குறித்துக் கொண்டு.......  

ஆசை தான்.........   ஆனாலும் இதுவரை அப்படி அமையவில்லை.  இரண்டு மாதங்கள் வேண்டாம், இரண்டு மூன்று நாட்களாவது இப்படி பயணிக்க வேண்டும் என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன்.  என்றேனும் இப்படி பயணிக்கலாம்! அப்படி பயணித்தால் நிச்சயம் உங்களிடம் சொல்லாமலா இருக்கப் போகிறேன்......

மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

44 comments:

 1. >>> முதுகுச் சுமையோடு வெளிநாட்டுப் பயணிகள் <<<

  இப்படியான சுற்றுலாப் பயணிகள் நிறைய பேரை - தஞ்சையில் பார்த்திருக்கின்றேன்..

  நல்ல விவரங்கள் + அழகான படங்களுடன் இனிய பதிவு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஜி!

   Delete
 2. வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே பல இடங்களைச் சுற்றிப் பார்த்து விட வேண்டும் – வயதான பிறகு நம்மால் போக முடியுமோ முடியாதோ என இளமையிலேயே பல இடங்களுக்கும் சென்று வருகிறார்கள்.//
  இந்த எண்ணத்தில்தான் என் கணவர் ,குடும்பத்தோடு பல ஊர்களுகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அழைத்துச்சென்றார்..

  அருமையான நினைவலைகளில் மகிழ்ச்சிப்படுத்திய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நினைவலைகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியது என்பதில் எனக்கும் மகிழ்ச்சி......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. அழகிய பதிவு. தொடர்பதிவுக்காக எழுதியதா, இல்லை அமு தனியாக வருமா?

  இளமையிலேயே பயணங்களைச் செய்து விடுவது நல்ல உத்தி. வயது ஏற, ஏற புத்தகங்கள் கூடப் பொறுமையாகப் படிக்க முடிவதில்லை. நல்ல அனுபவங்கள் கிடைக்கும். கொடுத்து வைத்தவர்கள்.

  கொடுத்து வைத்தவர்கள் லிஸ்ட்டில் உங்களையும் சேர்க்க வேண்டும். பயண மன்னன் ஆச்சே...

  ஒரு வேலையை விட்டு, பயணம் ஒன்று செய்து, மறுபடியும் வேறு வேலையில் சேருவது என்பது நம்ம நாட்டில் அவ்வளவு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது!

  ReplyDelete
  Replies
  1. தொடர்பதிவுக்காக எழுதியது அல்ல..... வாசிப்பனுபவம் மட்டுமே. தொடர்பதிவு எழுத வேண்டும் - இரண்டு நாட்களுக்குள்!

   வயது ஏறஏற புத்தகங்கள் கூட படிக்க முடியவில்லை - உண்மை.

   வேலையை விட்டு பயணம் செய்வது நம் நாட்டில் முடியாத விஷயம். உண்மை தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. ஒரு தமிழ் பதிப்பகம் காசு கொடுத்து, இப்படி என்னை ஊர் சுற்றச் சொன்னால் நானும் தயார் !(யாரும் தரமாட்டார்கள் என்ற தைரியம் :)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பயணிக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 5. என்றேனும் இப்படி பயணிக்கலாம்! அப்படி பயணித்தால்...,
  >>>>
  எனக்கும் இந்த ஆசை உண்டு. நானும் வரேன்ண்ணா! என்னையும் கூட்டி போங்க..

  ReplyDelete
  Replies
  1. பயணிக்கும் நேரத்தில் சொல்கிறேன் சகோ....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 6. பயணம் எனக்கு என்றுமே பிடித்த விடயமே ஜி எனது கடைசி காலத்தை பயணத்தில் கழித்திடவே எனக்கு விருப்பம் உள்ளது அதற்கான திட்டங்களும் என்னிடம் இருக்கிறது பயணப் புத்தகம் வாங்கு ம் ஆவலைத் தூண்டியது தங்களது பதிவு நன்றி ஜி

  ReplyDelete
  Replies
  1. கடைசி காலத்தினை பயணத்தில் கழித்திட விருப்பம்...... நல்ல விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி......

   Delete
 7. பயணங்களில் எனக்கும் ஆர்வம் உண்டு என்றாலும் சூழ்நிலைக் கைதியாக உள்ளேன். ஒரு பறவையாக பிறந்திருப்பின் உலகம் முழுதும் பறக்கலாம் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. சூழ்நிலைக் கைதிகள்..... நாம் எல்லோருமே அப்படித்தான் நண்பரே......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.....

   Delete
 8. பயணங்களும், பயண அனுபவங்களும், படங்களும், செய்திகளும் படிக்கப்படிக்க நானும் சேர்ந்து பயணம் மேற்கொண்டது போன்றதோர் உணர்வு ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றிகள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி......

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 10. //என்றேனும் இப்படி பயணிக்கலாம்! அப்படி பயணித்தால் நிச்சயம் உங்களிடம் சொல்லாமலா இருக்கப் போகிறேன்//

  நிச்சயம் நீங்களும் பயணிக்கப் போகிறீர்கள். நாங்களும் தங்களின் பயண கட்டுரையை படிக்க காத்துக்கொண்டு இருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. பயணித்தால் நிச்சயம் அது பற்றி எழுதுவேன்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. நல்ல அனுபவப்பகிர்வு. தாங்கள் கூறுவதுபோல இளம் வயதிலேயே தேடலை ஆரம்பித்தால் நம் பண்பாடு, மக்கள், பழக்கவழக்கம் என்ற நிலைகளில் பலவற்றை நாம் அறிந்துகொள்ளலாம். இவ்வ்றான பழக்கத்தை நம் சந்ததியினருக்கும் கொண்டு செல்லவேண்டும். கோயில் பதிவு எழுதும்போது என்னிடம் மாற்றுக்கருத்து கூறும் நண்பர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். நீங்கள் கடவுளை நம்புகின்றீர்களோ இல்லையோ நமது கலையை ரசியுங்கள் என்பேன். கோயிலுக்குப் போகமாட்டேன் என்று கூறிக்கொண்டு பல நூறாண்டுகள் ஆன நம் கலைகளை ரசிக்கப் பலர் தவறிவிடுகின்றார்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். சில இடங்களுக்குப் போகும்போது நமக்கு நமது பாரம்பரிய கலைகள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 12. பயணங்களால் கிடைக்கும் அனுபவங்களும் பாடங்களும் வாழ்க்கைக்கு அவசியமானவை. நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பயணமும் தரும் அனுபவங்கள் ஏராளம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 13. நீங்கள் எல்லோரும் சென்று வந்து சொல்லுங்கள். நான் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சென்றால் அது பற்றி நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 14. பயணம் செய்வது எனக்கும் பிடித்தமானது.வெளிநாட்டவாகள் போலநம்மால் முடிவதில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
  2. அருமையான பகிர்வு! படிக்கப்படிக்க மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது! தேடல்கள் எல்லாவற்றிற்கும் இளமைக்காலமே சிறப்பானது. வயதாக ஆக, ரசிப்பதற்கும் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் கட்புலன்களின் தொந்தரவுகள் அதிகம் இருக்கும்! இளமைக்காலத்திலேயே ஆசைப்பட்டதை செய்து விட வேண்டும்!!

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 16. எனது நீண்ட நாள் கனவே இப்படி பயணிக்க வேண்டும் என்பதுதான்
  கவலைகள் யாவற்றையும் மறந்து பயணிக்க வேண்டும்
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆசையும் இது தானா..... பதிவர்கள் அனைவரும் இப்படி ஒரு பயணம் போகலாம் எனத் தோன்றுகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா....

   Delete
 17. நானும் இவர்களைப் பார்த்து பெரும் ஆச்சரியாயப் பட்டிருக்கிறேன். ஹம்பி உத்சவில் இவர்களை அதிகமாக காண முடிந்தது. முதுகுக்கு பின்னும், வயிற்றுக்கு முன்னும் என்று இரண்டு பெரிய பேக்குகள். எப்படித்தான் தூக்கிக்கொண்டு நடக்கிறார்களோ? நான் வெகு காலம் எழுதவேண்டும் என்று நினைத்திருந்த பதிவு.
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் எழுதுங்கள் செந்தில்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 18. இப்ப மட்டுமென்ன ஊர் சுற்றாமலா இருக்கிறீர்கள்!!!!!?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.... நல்ல கேள்வி புலவர் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 19. வெங்கட்ஜி அருமையான புத்தகத்தைப் பற்றிய அழகான தங்கள் வார்த்தைகளில் ரசித்துப் படித்தோம். நான் கூட பெரும்பாலும் முதுகுப் பையுடன் தான் பயணம் மேற்கொள்வது வழக்கம். இவர்களைப் பற்றி அறிந்ததுண்டு. வியந்ததுண்டு. ஏனென்றால் நீங்கள் இறுதியில் சொல்லியிருக்கும் வரிகள் தான். ஆம்! எனக்கும் இந்த ஆசை உண்டு...ஆனால்??!!! ....ம்ம்ம் எனக்கும் மிகவும் பிடித்த விஷயம் பயணம்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 20. பெரும்பாலும் வெளிநாட்டினருக்கு கமிட்மெண்ட் இருப்பதில்லை.. பிள்ளைகளுக்காக சேர்த்துவைப்பதோ, பெற்றவர்களைப் பேணுவதோ, உடன்பிறந்தவர்களைக் கரையேற்றும் கடமையோ எதுவும் இருப்பதில்லை. பதினெட்டு வயதுக்குப் பிறகு தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். அதனால்தான் பல அட்வென்ச்சர்களில் அவர்களால் துணிந்து ஈடுபட முடிகிறது. நம்மால் அப்படி முடிகிறதா? எங்கே வெளியூர் போனாலும் மனம் வீட்டைப்பற்றியேதான் சிந்தித்துக்கொண்டிருக்கிறது.

  நூலறிமுகத்துக்கும் நூலாசிரியர்கள் பற்றியக் குறிப்புக்கும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. எங்கே வெளியூர் போனாலும் மனம் வீட்டைப் பற்றியேதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 21. முதுகுச் சுமையோடு பயணிக்கும் பலரை இங்கும் நான் பார்த்திருக்கிறேன்.

  பயணம் செய்தாலும் சம்பாரிக்கும் வழியையும் கடைபிடிக்கும் ஜோடிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....