திங்கள், 18 ஜனவரி, 2016

டாகோர் – தங்க கோபுரமும் துலாபாரமும்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 29

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

படம்: இணையத்திலிருந்து....

ஏரிக்கரையின் அழகினை ரசித்து வீடு திரும்பிய நாங்கள் நிம்மதியாக உறங்கினோம். அடுத்த நாள், பயணத்தின் முதலிரண்டு நாட்கள் எங்கள் வாகனத்தினை ஓட்டிய வசந்த் [b]பாய் அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவர் நண்பரின் வாகனத்தில் எங்களை அழைத்துச் செல்லப் போகும் இடம் டாகோர் எனும் சிற்றூர் – அஹமதாபாத் நகரிலிருந்து பரோடா செல்லும் வழியில் இருக்கிறது இவ்விடம். பஞ்ச் துவாரகா என அழைக்கப்படும் இடங்களில் இந்த டாகோர் கோவிலும் உண்டு.


National Expressway - 1

அஹ்மதாபாத் நகரிலிருந்து National Expressway – 1-ல் பயணித்து பிறகு Gujarat State Highway 12-ன் வழியாக சுமார் 85 கிலோமீட்டர் பயணித்தால் டாகோர் எனும் கிராமத்திற்கு வந்து விடலாம். மிகவும் பழமையான கிராமம். முந்தைய காலத்தில் சிவன் கோவில் காரணமாகப் பிரபலமாக இருந்திருந்தாலும், இப்போது கிருஷ்ணர் கோவில் தான் இங்கே பிரபலமாக இருக்கிறது.  ஊருக்கு டாகோர் எனப் பெயர் வரக் காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.....

படம்: இணையத்திலிருந்து....

இடும்பவனம் என அழைக்கப்பட்ட அடர்த்தியான வனப் பகுதியாக இருந்த இடத்தில் பல முனிவர்கள் தங்களது ஆஸ்ரமங்களை அமைத்து வாழ்ந்த காலம். இந்த இடத்தில் டங்க் ரிஷி என அழைக்கப்பட்ட ரிஷிமுனி தனது ஆஸ்ரமத்தினை அமைத்து சிவபெருமானை நோக்கி கடும்தவம் இருக்கிறார். அவரது தவத்தில் மெச்சிய சிவபெருமான் அவருக்குக் காட்சியளித்து வேண்டிய வரம் கேட்கும்படிச் சொல்ல, சிவபெருமானை தன்னுடனேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படிக் கேட்கிறார்.  தனக்கு பதிலாக தன்னைப் போலவே ஒரு உருவத்தினை அங்கே விட்டுச் செல்கிறார்! அவருக்குப் பெயர் டங்க்நாத் மஹாதேவ் – அவரது பெயரிலேயே ஊரின் பெயரும் டாங்கோர் என அழைக்கப்பட்டு அதுவே மருவி டாகோர் என ஆகிவிட்டது என்பது ஒரு கதை!

அது சரி இங்கே குடிகொண்டிருந்தது சிவன் என்றால் இப்போது பஞ்ச் துவாரகா ஸ்தலங்களில் ஒன்றாக டாகோர் கருதப்படுவது ஏன் என்ற கேள்வியும் நமக்கு வருவது இயல்பு.  அதற்கும் ஒரு கதை இருக்கிறது. காரணம் அதே டங்க் ரிஷி தான். 

படம்: இணையத்திலிருந்து....

சிவபெருமானை இங்கே வரவழைத்தாகிவிட்டது, அடுத்ததாய் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்திருப்பார் போலும்.....  அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள கிருஷ்ணரும் பீமனும் அவரது ஆஸ்ரமத்திற்கு வர அவ்விருவரையும் வரவேற்று உபசரித்தார்.  டங்க் ரிஷிக்கு ஏதேனும் வரம் அளிக்க விரும்பிய கிருஷ்ணர் என்ன வரம் வேண்டும் கேளுங்கள் தருகிறேன் என்று கேட்க, அவர் கேட்ட வரம் – “என்னுடனேயே நிரந்தரமாகத் தங்கி விடுங்கள்!என்பது தான்! அனைவரையும் தன்னுடனேயே தங்க வைத்துக் கொள்ள நினைப்பார் போலும்!

படம்: இணையத்திலிருந்து....

சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்த கிருஷ்ணர், சரி உங்களுக்கு வரம் தந்தேன். ஆனால் கலியுக ஆரம்பம் வரை துவாரகாவில் இருந்துவிட்டு அதன் பிறகு தான் நான் டாகோர் வந்து நிரந்தரமாக தங்குவேன் என்று சொல்லிவிட, கலியுகத்தின் ஆரம்பத்தில் இங்கு வந்து சேர்ந்ததாகவும் “ராஞ்சோட்ராய்ஜிஎன அழைக்கப்படும் கிருஷ்ணருக்கு இங்கே கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாறு. 

கோவிலின் முகப்பு - வெளிப்புறத்திலிருந்து எடுத்த படம்.....

மிகவும் பழமையான இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம்.  விழாக் காலங்களிலும் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் இங்கே அதிக அளவில் மக்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். 

சிறப்பான சாலை என்பதால் மிதமான வேகத்தில் வாகனம் செலுத்தும் வசந்த் [b]பாய் கூட NE-1 சாலையில் மணிக்கு 130-140 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தினைச் செலுத்தினார்.  ஒன்றரை மணி நேரத்திற்குள் நாங்கள் டாகோர் கோவிலின் வாயிலுக்கு வந்து விட்டோம்.  நாங்கள் சென்ற நாள் பௌர்ணமி நாள் என்பதால் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராமங்களிலிருந்து பல கிராம மக்களும் கோவிலுக்கு வந்திருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நாங்களும் சென்று டாகோர் நகரில் குடிகொண்டிருக்கும் ராஞ்சோட்ராய்ஜியை தரிசித்தோம்.  சிறப்பான தரிசனம் கிடைத்தது.

பழமையான கோவில் என்றாலும், இக்கோவிலில் தங்க மண்டபமும் தங்கத்தினால் செய்யப்பட்ட பெரிய துலாபாரமும் உண்டு. துலாபாரத்திற்கும் ஒரு கதை உண்டு.  அது என்ன கதை?

படம்: இணையத்திலிருந்து....

விஜயானந்த் போதனா, எனும் ஒரு பக்தர் ஒரு மண் பாத்திரத்தில் துளசிச் செடி வளர்த்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை துளசியோடு துவாரகா சென்று த்வாரகாதீஷ் என அழைக்கப்படும் கிருஷ்ணரை வணங்குவது வழக்கம். தொடர்ந்து வருடாவருடம் இப்படிச் சென்று வந்த அவருக்கும் வயதாகி விட்டது. ஒரு முறை அப்படிச் செல்லும் போது, “கிருஷ்ணா எனக்கு வயதாகி விட்டது. அடுத்த முறை என்னால் வர முடியுமா எனத் தெரியவில்லை. நீதான் எனக்கு வழி சொல்ல வேண்டும் எனச் சொல்ல, “அடுத்த முறை வரும்போது வண்டி கட்டிக்கொண்டு வா, நான் உன்னுடனேயே வந்து விடுகிறேன் எனச் சொல்ல ஆறு மாதத்திற்குப் பிறகு மாட்டு வண்டி பூட்டிக் கொண்டு துவாரகைக்கு வருகிறார் போதனா.

படம்: இணையத்திலிருந்து....
டாகோர் செல்லும் வழியில் சற்றே ஓய்வு....

படம்: இணையத்திலிருந்து....
பக்தரை ஓய்வெடுக்கச் சொல்லி, தானே வண்டியோட்டிக் கொண்டு போகும் கிருஷ்ணர்...

துவாரகாவில் பூஜித்து வரும் பூஜாரிகள் எதற்கு வண்டி பூட்டிக் கொண்டு வந்திருக்கிறாய் எனக் கேட்க, தான் திரும்பும் போது த்வாரகாதீஷையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போகப் போவதாகச் சொல்ல கோவிலை பலமாகப் பூட்டிக் கொண்டு போகிறார்கள் பூஜாரிகள். இரவு நேரம், அனைத்து பூட்டுகளையும் உடைத்துக் கொண்டு போதானாவுடன் டாகோர் பயணிக்கிறார் கிருஷ்ண பகவான்.....  காலையில் கோவிலுக்கு வந்து பார்த்த பூஜாரிகள் டாகோர் நோக்கி கோபத்துடன் பின் தொடர்கிறார்கள்.

படம்: இணையத்திலிருந்து....
ஈட்டியால் வீழ்ந்த போதனா... சிவப்பான குளம்....

பயந்து போன போதனாவிடம் கிருஷ்ணர் தன்னை கோம்தி குளத்திற்குள் மறைத்து வைக்கும்படிக் கூற அப்படியே செய்கிறார். பூஜாரிகளை சமாதானம் செய்யச் சென்ற போதனாவினை நோக்கி அவர்கள் ஈட்டியை எறிய அவ்விடத்திலேயே போதானாவின் உயிர் பிரிகிறது.  அவரைத் தாண்டி கோம்தி குளத்திற்குள் ஈட்டி பாய், குளம் எங்கும் ரத்தம் நிறைகிறது.  குளத்திற்குள் மறைத்து வைத்த கிருஷ்ணர் சிலையிலிருந்து ரத்தம் வருகிறது. கலங்கிப் போன பூஜாரிகள் கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டு, தங்களுடன் வர வேண்டுகிறார்கள்.

படம்: இணையத்திலிருந்து....

கோம்தி குளக்கரையிலேயே அவர்கள் உண்ணாவிரதம் இருக்க, கிருஷ்ணர் தனது எடைக்கு எடை தங்கத்தினை போதனாவின் மனைவி பூஜாரிகளுக்குத் தருவார் எனவும், சில வருடங்கள் கழித்து த்வாரகாதீஷ் சிலை போலவே வேறொரு சிலை பூஜாரிகளுக்கு சுயம்பு வடிவில் கிடைக்கும் என்றும் சொல்கிறார்.  போதானாவின் மனைவியான கங்காபாய் தனது மூக்குத்தியைக் கழற்றி தராசில் வைக்க, கிருஷ்ணரின் எடை அளவுக்கு இருக்கிறது! வேறு வழியில்லாமல் மூக்குத்தியை எடுத்துக் கொண்டு சுயம்பு வடிவாய் வரப் போகும் துவாரகாதீஷுக்காக துவாரகா சென்று காத்திருக்கிறார்கள் பூஜாரிகள்!

பழமையான கோவில் எனும்போது இப்படி நிறைய கதைகள் – செவி வழிக் கதைகள் கேட்க முடிகிறது.  கோம்தி குளம் எப்படி உருவானது என்பதற்கும் ஒரு கதை உண்டு! அது என்ன கதை என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  2. கதைகள் ரசனை! இப்போது எங்கே பகவான் அப்படி எல்லாம் வருகிறார்? அந்த இடும்பவனம் இடும்பியை மணந்து பீமன் அரசாண்ட அதே இடம்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். இடும்ப வனம் மிகப் பெரியது போலும்.... ஹிமாச்சலத்திலும் இப்படி இடும்ப வனம் உண்டு....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பயணங்கள் தொடரட்டும்
    தொடர்கிறேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. ஒரு தலத்திற்குத்தான் எத்தனைக் கதைகள்! அழகான படங்களுடனும், தகவல்களுடனும், கதைகளுடனும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைகள் உண்மையோ, பொயோ, அவை ஸ்வாரஸ்யம் தான் இல்லையா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.

      நீக்கு
  5. புதிய கதைகளுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. படங்களும் பல்வேறு வரலாற்றுக்கதைகளுமாக பதிவு ஜோர் ஜோர் ... பாராட்டுகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  8. டாகோர் பெயர் காரணம் பயண விவரங்கள் எல்லாம் வெகு சுவாரசியமா இருக்கு வெங்கட் சார் என் பதிவு பக்கம் வந்து ஒரு யுடியுப் லிங்க் கொடுத்தீங்க. அதாவது ப்ளாக்ல ஃபாலோவர் கெட்ஜட் இணைப்பது பற்றி அதுல இருக்கும்படி ட்ரை பண்ணி பாத்தேன். ஒர்க் அவுட் ஆகல.இப்ப என்ன பண்ண?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள். பதில் அனுப்புகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ராப்தம்....

      நீக்கு
  9. கதைகள் சுவாரஸ்யம்! அருமையாக செல்கிறது தொடர்! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  10. பயண விபரங்களுடன் கோயில் குறித்த விபரங்களும் அருமை.
    130- 140 ல் வேகம்.அங்கே சாத்தியமானதா? சூப்பர் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாத்தியம் தான் - 140-ல் வேகம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  11. தாங்கள் அழைத்துச்சென்ற இடங்களைக் கண்டோம். அடுத்த கதைக்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. பயணங்கள் தொடரட்டும்
    படங்கள் வழக்கம் போல அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  13. நாங்க சிவன் கோயிலுக்குப் போகலை! ரண்சோட்ராயை மட்டும் தரிசித்தோம். :) டங்க் மஹரிஷி கதை இப்போத்தான் கேள்விப் படறேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  14. கதைகளை இரசித்தேன். தொடர்கிறேன்.

    பி.கு ஊரில் இல்லாததால் பதிவுலகம் வர இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  15. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

    தொடர்ந்து விடுபட்ட அனைத்து பதிவுகளையும் படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....