எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 29, 2016

ஃப்ரூட் சாலட் – 156 – நம்பிக்கை – தமிழில் பேசு... - சொன்னா கேட்டாத்தானே!

நம்பிக்கை:

முகப் புத்தகத்தில் இதைப் படித்தவுடன் நம்பிக்கையுடன் இருக்கும் இந்தச் சிறுவனைப் பற்றி இந்த வார ஃப்ரூட்சாலட்-ல் பகிர்ந்து கொள்ள சேமித்து விட்டேன்.....  நம்பிக்கையோடு இருக்கும் இச்சிறுவனுக்கு நல்லதோர் எதிர்காலம் அமையட்டும்....  வாழ்த்துகளும் பாராட்டுகளும்....போனவாரம் ஸ்ரீரங்கம் போயிருந்தப்போ கோயில் முகப்புல இந்த சிறுவனை பார்க்க நேர்ந்தது.

பச்சை வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தான். வாங்கிக் கோங்க என்று என் மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். என் மகள் வேணாம்டா என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவனும் விடுவதாக இல்லை. அக்கா வாங்கிக்கோங்க என்று வற்புறுத்தவே வேர்க் கடலை வேணாம் 10 ரூபாய் தர்றேன் வாங்கிக்கோ என்றார். அவன் வாங்க மறுத்து, என் குடும்ப சூழ்நிலை காரணமா பள்ளி முடிச்சுட்டு சாயந்திரத்தில இந்த வேர்க்கடலை வியாபாரம் பண்றேன். ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு வித்தா எனக்கு 5 ரூபா கிடைக்கும். 30 பாக்கெட் வித்துடுவேன். 150 ரூபாய் கிடைக்கும். நான் பிச்சை எடுக்க விரும்பல. என்னை இதுமாதிரி இலவசமா பணம் கொடுத்து சோம்பேறியா ஆக்க முயற்சிக்காதீங்க. ஒரு வாட்டி நான் இப்படி வாங்கிட்டா நாளடைவிலே அதுவே எனக்கு பழகிப் போயிடும். வியாபாரம் செஞ்சு சம்பாதிக்க நினைக்கிறேன். வேணும்னா காசு கொடுத்துட்டு வாங்கிக்கோங்க. இல்லைன்னா விடுங்கன்னு சொல்லிட்டு விறு விறு என நடக்க ஆரம்பித்தான். என் மகளுக்கு 'பொளேர்' என்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது..

20 ரூபாய் கொடுத்து ‍வேர்க்கடலை வாங்கினார் என் மகள். விடியற்கலை எழுந்து எங்க போய் வாங்கறான், அத எப்படி பொட்டலம் போடறான்கிற விவரங்களை சொல்லிக் கொண்டே வந்தான். அவன் நிறைய விஷயங்கள் பேசப்பேச என் மகள் பிரமித்துப்போய் கேட்டுக்கொண்டே வந்தார். சரி வா ஏதாச்சும் வாங்கித் தர்றேன் சாப்பிட்டுட்டு போ என்றார். அதற்கும் மறுத் தான். அக்கா நான் இதுலேயும் ரொம்ப கட்டுப்பாடோட இருக்கேன். யார் எது வாங்கிக் கொடுக்கனும்னு முயற்சி செஞ்சாலும் வேணாமுன்னு சொல்லிடுவேன்னான். ஏண்டா அப்படின்னு கேட்டா, ஒரு முறை யாராச்சும் வாங்கிக் கொடுத்து சாப்பிட ஆரம்பிச்சா அதுவும் நாளடைவில பழகிப்போய் எந்த வேலையும் செய்யாம யாராச்சும் வாங்கிக்கொடுப் பாங்களாங்கிற என்கிற எண்ணம் வந்துடும். இதுவும் ஒரு வகையான சோம்பேறித்தனத்திற்கான வழிதான் என்றான்.

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கின்றான். அம்மா கோவில் வாசலில் பூ வியாபாரம். அவரைப் காண்பித்தான். பாவம் உடலெல்லாம் ஒட்டிப்போய் ஈனஸ்வரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.

மொத்தம் இவனுடன் சேர்த்து 6 பிள்ளைகள். இவனுக்கு 2 தங்கைகள், இரண்டு அக்கா ஒரு அண்ணன். அப்பா நோய் வாய்ப்பட்டு 2 வருஷத்துக்கு முன்னாடியே இறந்து போயிட்டாராம். குடும்பத்துக்கு மாசம் எவ்வளவு செலவாகுதுன்னு பட்ஜெட் போட்டு பார்த்து இவங்க வங்க இவ்வளவு சம்பாதிக்கனும்னு கணக்கு போட்டு சம்பாதிச்சுகிட்டு பள்ளிக்கும் சென்று கொண்டு எல்லாருமே ஏதோ ஒரு வியாபாரம் செய்து குடும்பத்தின் செலவுகளை கவனித்துக்கொள்கின்றார்களாம்..

படிப்பு எப்படிடா எனக் கேட்டாள் மகள். 3 ரேங்குக்குள்ள வந்துடுவேன்க்கா என்றான். கடைசியாக உன் பெயர் என்னடா என என் மகள் வினவ ரங்கநாதன் என்றான்.. அவன் போனபின்னர் அந்த ரங்கநாதனே வந்து எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து சென்றதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது என்றார் என் மகள்..

வறுமையில் வாடும் ஒரு சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்க்கையில் உழைக்க சோம்பல் பட்டுக் கொண்டு பிச்சைக்காரர்களாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கைச் சக்கரம் அதிலேயே உழன்று முடிந்து போய்விடுகின்றது. திறமையைும் ‍உழைப்பும் இருந்து யாசகம் கோராமல் எதையாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என்று கருதும் இதுபோன்ற சிலருக்கு ஆதரவு என்ற வகையில் இந்த சமுதாயம் பரிதாபப்பட்டு எதையாவது கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சிக்கின்றது. இது சமுதாயத்திற்கு தெரியாமலேயே பரிதாபம் உதவி என்ற பெயரில் நடந்துபோகும் விஷயம் தான். இதில் சிக்காமல் ஒரு சிலர் அதிலிருந்து தப்பித்து ஒரு குறிக்கோளுடன் உழைத்து வெற்றி பெறுகின்றார்கள்.

இந்தச் சிறுவனது பேச்சில் ஒரு நம்பிக்கையும் தெளிவும் இருந்தது. கண்களில் ஒரு பிரகாசம் தெரிகின்றது.இவன் வாழ்க்கையில் உழைத்து வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கின்றது.. பாராட்டுவோம்...

@உதய குமார்

பாடம்.....

உங்களுக்குக் கற்றுக் கொள்ளும் மனமிருந்தால், நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூடப் பாடம் கற்றுக்கொள்ள முடியும். அந்த மனம் இல்லாவிட்டால் உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்றுக்கொள்ள முடியாது – ஓஷோ....

கல்யாணம்... கல்யாணம்!:மனைவி: உங்களை நேர்ல பாக்காமலே கல்யாணத்துக்கு சம்மதிச்சது என்னோட உயர்ந்த குணம்.....

கணவன்:  உன்னை நேர்ல பார்த்த பிறகு கூட கல்யாணத்துக்கு சம்மதிச்சது என்னோட உயர்ந்த குணம்!

தமிழா பேசு.....  தமிழில் பேசு:

நல்லதோர் குறும்படம்....  பாருங்களேன்!


Posted by Balaiya Kalidhasan on Saturday, January 9, 2016


சொன்னா கேட்டாத்தானே...

ராஜா காது கழுதைக் காது பகுதி எழுதி ரொம்பவே நாளாச்சு! இதை எழுதாம இருக்கவும் முடியல!

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்ல 1 to 1 பேருந்தில் அமர்ந்திருந்தேன். “புதுக்கோட்டை மட்டும் ஏறு, புதுக்கோட்டை, புதுக்கோட்டைஎன்று கதறிக்கொண்டிருந்தார் பேருந்தின் நடத்துனர். மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து சில நிமிடங்கள் ஆன பிறகு தான் அனைவருக்கும் பயணச் சீட்டு கொடுக்க ஆரம்பித்தார்.  எனது இருக்கைக்கு அருகே வந்த போது பக்கத்தில் இருந்த மூன்று சீட்டுகளில் இருந்த ஒருவர் “கீரனூருக்கு 3 டிக்கட் கொடுங்க”, என்று கேட்டவுடன், கண்டக்டர் “கரடியாக் கத்தினேனே, புதுக்கோட்டை மட்டும் ஏறுன்னு என்று சொல்லி, கீரனூர் போகாதுங்க, TVS Toll Gate-ல இறங்கி வேற பஸ்ஸுல போங்க! என்று சொல்லி விட்டார்.  அதன் பிறகு நடந்தது.....

3 டிக்கட் கேட்டவரின் மனைவி சொன்னார்: பஸ்ஸுல ஏறும்போதே சொன்னேனே, கீரனூர் போகுமான்னு கேட்க சொன்னேனே, கேட்டீங்களா? எங்க நாங்க சொல்றத எப்ப கேட்டு இருக்கீங்க! கேட்டா இப்படி நடந்து இருக்குமா? என்று ஏகப்பட்ட அர்ச்சனைகள்.  TVS Toll Gate-ல் இறங்கிய பிறகு பேருந்து புறப்பட, அர்ச்சனையும் தொடர்ந்தது!

என்ன அழகு எத்தனை அழகு..... 

நீ கொள்ளை அழகுடா செல்லம்.....


Awww Adorable <3
Posted by Filmygyan Videos on Thursday, January 21, 2016


இதுவும் துறவு தான்.
------------------------

ஆஹா..
என்ன அருமையான துறவு இது!

காசிக்குச் சென்று
கஷ்டப் பட்டு துறக்க வேண்டாம்.

தாய்மை அடைந்தால் போதும்.
தாலாட்டி மகிழத் தாயானால் போதும்.
குழந்தைக்காக துறப்பதெல்லாம்
பெற்றதை மகிழ்வுடன் வளர்க்கத்தானே!
அன்புத் துறவு; ஆசைத் துறவு; இன்பத் துறவு.
என்றெல்லாம் போற்றச் சொல்லும் தாயன்பு.

குழந்தையின் நலன் கருதி
கர்ப்பத்திலும்; பிள்ளை பெற்ற பின்னும்
ஆசைப் பண்டங்கள் பலவற்றை
மகிழ்வுடன் ஒதுக்கி பாசம் வளர்க்கும்
அன்னையர்கள் அனைவரும் துறவிகளே!
தன்னலம் துறந்த தனிப்பிறவிகளே!

-    பரிமேலழகர் பரி....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….
நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....

40 comments:

 1. பெங்களூருவில் பட்டதாரிகள் பிச்சை எடுக்கிறார்களாம். வேலைக்குச் செல்வதை விட அதிக வருமானம் அதில் கிடைக்கிறதாம். இந்தச் செய்திகளைப் படிக்கும்போது ரங்கனாதனை எப்படிப் பாராட்டாமலிருக்க முடியும்?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. இந்த வார பழக்கலவையில் அந்த ரங்கநாதன் என்ற சிறுவனைப் பற்றிய தகவலும்
  ‘தமிழா பேசு... தமிழில் பேசு’ என்ற காணொளியும் (முன்பே பார்த்திருந்தாலும் கூட) அந்த அழகு குழந்தையும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 3. ப்ரூட் சாலட் அனைத்து பகுதிகளும் சூப்பர். கவிதை அருமை.

  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகநாதன் ஜி!

   Delete
 4. நானும் முக புத்தகத்தில் இந்த சிறுவனை பற்றி வாசித்தேன் .... பாராட்ட பட வேண்டிய சிறுவன் ... வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.

   Delete
 5. குறும்படம் ....நாட்டிலே இப்படிப் பட்ட 'தமிழ் செல்வன்'கள் பெருகிவிட்டார்கள் ஜி :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 6. ஃப்ரூட் சாலட் அருமை. ரங்கநாதன் இந்தச் சின்ன ரங்கநாதனுக்கு எல்லா அருளும் புரிந்து வாழ்வில் நல்ல நிலை அடைந்து அவனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க அருளிபுரிவாராக!!

  குறும்படம் நல்ல படம்.

  கல்யாணம் கல்யாணம், பாடம் எல்லாமே சிறப்பு.

  அந்த மனைவியின் அர்ச்சனை ஹஹ்..அதுதானே!!

  அனைத்தும் அருமை...வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 7. முதல்வர் அம்மா அந்தப் பையனிடம் பாடம் கற்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. 2வரி 3வரியில் பதிவு போடுவோர் மத்தியில் ஒரே பதிவில் எத்தனை செய்திகள்!
  உங்கள் வெற்றியின் ரகசியம் புரிகிறது நண்பர் வெங்கட் அவர்களே!
  அந்த ரெங்கநாதன்கள்தான் எதிர்கால இந்தியாவைக் கெட்டுப்போகாமல் கட்டிக் காப்பாற்ற வேண்டும். இந்தத் தமிழில் பேசு வாட்ஸாப்பில் வந்திருந்தது நானும் பல நட்புக் குழுவுக்கு அனுப்பி என் தமிழ்க்கடமையைச் செய்திருக்கிறேன்.. அப்புறம் அந்த மனைவி திட்டு... அது எப்படிங்க, நம் தனி உணர்வுகளைப் பொதுமைப் படுத்தி எழுதுறததான் கதை, கவிதை னு நான் சொல்வதுண்டு. இதை கவிதை கதையில் இல்லாவிட்டாலும் கணவனைத் திட்டும்போது சரியாகச் செய்கிறார்கள் எல்லா மனைவியரும்! (ஒரு ஆறுதல்தான்!)

  ReplyDelete
  Replies
  1. இன்று மீண்டும் உங்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.....

   ஒரு ஆறுதல் தான்! :)))
   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.

   Delete
 9. //இந்தச் சிறுவனது பேச்சில் ஒரு நம்பிக்கையும் தெளிவும் இருந்தது. கண்களில் ஒரு பிரகாசம் தெரிகின்றது.இவன் வாழ்க்கையில் உழைத்து வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கின்றது.. பாராட்டுவோம்...//

  அவன் நிச்சயமாக படித்து முன்னேறி மிகப்பெரிய தொழிலதிபர் ஆகி பலருக்கும் வேலை வாய்ப்புகள் தருவான் என்ற நம்பிக்கை எனக்கும் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 10. என்ன அழகு எத்தனை அழகு..... சூப்பர் !

  >>>>>


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. // டிக்கட் கேட்டவரின் மனைவி சொன்னார்: ”பஸ்ஸுல ஏறும்போதே சொன்னேனே, கீரனூர் போகுமான்னு கேட்க சொன்னேனே, கேட்டீங்களா? எங்க நாங்க சொல்றத எப்ப கேட்டு இருக்கீங்க! கேட்டா இப்படி நடந்து இருக்குமா?” என்று ஏகப்பட்ட அர்ச்சனைகள். TVS Toll Gate-ல் இறங்கிய பிறகு பேருந்து புறப்பட, அர்ச்சனையும் தொடர்ந்தது!//

  அர்ச்சனைகள் செய்பவர்களையும் செய்யப்படுபவர்களையும்விட, கேட்டு வேடிக்கை பார்க்கும் பக்தகோடிகளுக்கு நல்ல சுவாரஸ்யமாகவே இருக்கும். :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வேடிக்கை பார்க்கும் பக்தகோடிகள்... :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. //மனைவி: உங்களை நேர்ல பாக்காமலே கல்யாணத்துக்கு சம்மதிச்சது என்னோட உயர்ந்த குணம்.....

  கணவன்: உன்னை நேர்ல பார்த்த பிறகு கூட கல்யாணத்துக்கு சம்மதிச்சது என்னோட உயர்ந்த குணம்!//

  நல்ல காமெடி :)

  அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 13. வேர்க்கடலை விற்கும் பையனை நினைத்து பெருமையாக இருக்கின்றது ஜி இவன் நிச்சயம் எதிர் காலத்தில் நல்ல நிலைக்கு வருவான்.
  எத்தனையோ பணக்கார குழந்தைகள் பின்நாட்களில் கஷ்டப்படுவது இந்த வாழ்வியல் உண்மை தெரியாததே காரணம்
  குறும்படம் அருமை தமிழ் கற்காதோருக்கு சவுக்கடி கொடுக்கும் வசனம்
  குழந்தை கொள்ளை அழகு ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 15. அந்த சிறுவனை மனதார பாராட்டுகிறேன், அவன் மனம் போல வாழட்டும் வாழ்க வாழ்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 16. வணக்கம்
  ஐயா
  சிறுவனைப்பற்றி சொல்லியுள்ளீர்கள் படித்தது போதுமனசு கனத்தது ஐயா.. இந்த ரங்கநான் வாழ்க்கையில் முன்னேற நாம் அனைவரும் வேண்டுவோம் இறைவனிடம்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 17. உதயகுமார் சிறப்பாக வருவார்... வாழ்த்துகள்...

  அருமையான துறவு...!

  ReplyDelete
  Replies
  1. சிறுவனின் பெயர் ரங்கநாதன். இற்றை எழுதியது உதயகுமார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 18. Ellamae rombha azhagudhan nam thamiz polar !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனு பாஸ்கர்.

   Delete
 19. விழித்தெழு தமிழா !!இப்போதாவது !!விழித்தெழு !!குறும்படத்தைப் பார்த்தபோது குளமாகின கண்கள் !! குன்றின் மேலிருந்தது தமிழ் அன்று !! வறுமையினின்று தப்பிக்க ஆங்கிலம் படித்தோம் !! வளமான தமிழை கற்றிட மறந்தோம் !! விழித்தெழு தமிழா !! இப்போதாவது !! இல்லையென்றால் நீ வீழ்ந்திடப்போகும் புதைகுழி இருக்குது உன்னருகிலேயே !! விழித்தெழு தமிழா !! விழித்தெழு !! தமிழா இப்போதாவது !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலகிருஷ்ணன் ராமசுவாமி.

   Delete
 20. வேர்க்கடலை விற்கும் பையனிடம் உள்ள சுயமரியாதை உணர்வுகளையும் அவனது உள்ளத்தில் இருக்கும் எவரிடமும் எதையும் இலவசமாகப் பெறக்கூடாது என்ற முடிவும் என்னை மெய்சிலிர்த்திடச் செய்தது. இந்த உணர்வு தமிழ்நாட்டின் வாக்காளர்கள் மனத்தில் பதிந்து விட்டால், செயல்படாத அரசுகள் இந்த நாட்டை ஆள்வதிலிருந்து காப்பாற்றிட முடியும் என்ற நம்பிக்கையும் எழுகின்றது. தமிழக வாக்காளப்பெருமக்களின் மனப் பதிவாக அந்தப் பையன் வரும் தேர்தலில் பதிந்திட வேண்டும். இதுவே எனது எண்ணமும் விருப்பும் ஆகும்.நன்றி. வணக்கம். அன்புடன். திருமலை.இரா.பாலு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இரா. பாலு.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....