எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, January 25, 2016

பொங்கலும் பேருந்து பகல் கொள்ளையும்விமானப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை “விமானத்தில் அன்னியள் பதிவில் ஏற்கனவே சொல்லி விட்டேன். இப்பதிவில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் போது கிடைத்த அனுபவங்களைப் பார்க்கலாம்.....

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து திரிசூலம் இரயில் நிலையத்தினை நோக்கி நடந்தேன். அங்கிருந்து இரயில் மூலம் தாம்பரம் வந்து சேர்ந்தேன். அங்கே உள்ள உணவகம் ஒன்றில் பொங்கலும் தோசையும் சாப்பிட்டு திருச்சி செல்லும் பேருந்திற்காகக் காத்திருந்தேன். ஒரு பேருந்தில் Express என்று எழுதி இருக்கவே சரி விரைவாக, By Pass வழியாகச் செல்லுமா என்று கேட்டுவிட்டு ஏறி அமர்ந்தேன். எல்லா இருக்கைகளும் நிரம்ப பேருந்தினை எடுத்தார்கள். ஏறி அமரும் போதே நடத்துனரிடம் எனது பெட்டியை முன் பக்கத்தில் வைக்கிறேன் என்று சொல்ல அவரும் சம்மதித்தார்.

பொங்கல் சமயம் என்பதால் பேருந்தில் நிறையவே கூட்டம். சில தனியார் பேருந்துகள் சென்னையிலிருந்து திருச்சி வரை செல்ல 1500 ரூபாய் கூட கேட்பதாக பேருந்தில் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் பயணித்தது அரசுப் பேருந்து என்பதால் 200 ரூபாய்க்குள் தான் கட்டணம் வசூலித்தார்கள். ஆனாலும் அந்த நடத்துனர் வேறு சில விதத்தில் மக்களை கஷ்டப் படுத்திக் கொண்டிருந்தார். முதலில் திருச்சி தவிர நடுவில் எங்கும் நிற்காது என்று சொன்னாலும், வரும் வழியிலுள்ள அனைத்து ஊர்களுக்குள்ளும் பேருந்து சென்று அங்கிருந்தும் மக்களை ஏற்கனவே நிரம்பி வழிந்த பேருந்தில் திணித்துக் கொண்டார்.

உட்கார இடம் கிடைக்காத பலர் இரு பக்க இருக்கைகளுக்கு இடையே உட்கார்ந்து கொண்டு பயணிக்க ஆரம்பித்தார்கள். எனது இருக்கைக்கு அருகே ஒரு குடும்பம் – கணவன், மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை. வரிசையாக எதையோ உண்டபடியே வந்து கொண்டிருந்தார்கள். குழந்தைக்கு மசாலா வடை, ஹல்திராம் மூங்க் தால், பிஸ்கெட் என வரிசையாகக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். சாப்பிடுவது தவறாகத் தோன்றவில்லை. நடுநடுவே குழந்தையிடம் வாந்தி வருகிறதா என்று கேட்டது தான் கொஞ்சம் பீதியைக் கிளப்பியது.  அப்படி வாந்தி எடுத்தால் என் மீது தான் எடுத்திருக்க வேண்டியது....

அக்குடும்பம் நடுவே ஏதோ ஊரில் இறங்க, அங்கே அடுத்து ஒரு குடும்பம் ஆக்கிரமித்தது.  கணவன், மனைவி, ஏழு எட்டு வயது பெண் ஆகிய மூவரும் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரத்திலேயே அச்சிறுமி கிடைநிலைக்கு மாறி அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டார். சில நிமிடங்களில் நல்ல உறக்கம் போலும். அவரது காலால் என் காலில் உதைத்துக் கொண்டே வந்தார் அச்சிறுமி. உதை வாங்கிக் கொண்டே வந்தேன். சிறுமியின் அம்மா பார்த்தாலும் கண்டு கொள்ளவே இல்லை. இருக்கும் கொஞ்ச இடத்தில் உதை வாங்காமல் தப்புவது பெரும்பாடாக இருந்தது!சிறிது நேரத்தில் சிறுமி முழித்துக் கொள்ள சாப்பாட்டுக் கடை ஆரம்பித்தது. வழியில் வரும் பனங்கிழங்கு, வறுத்த கடலை, வெள்ளரிப் பிஞ்சு என எதையும் விடவில்லை. அனைத்தும் வயிற்றுக்குள் சென்று கொண்டிருந்தது. நடுவே பையிலிருந்து சாப்பாட்டுப் பொட்டலங்கள் எடுத்து மூன்று பேரும் சாப்பிட்டார்கள். கைகளை சீட்டுக்கடியில் துடைத்துவிட்டு, கரும்பு தின்ன ஆரம்பித்தார்கள். கரும்புச் சக்கைகளையும் சீட்டுக்கடியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். இதில் பேருந்தில் சுத்தமே இல்லை என்று புகார் வேறு!

நடுவே விக்ரவாண்டியில் சாப்பாட்டுக்கு ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். உணவகத்தின் பெயர் ஹில்டா! அங்கே கிடைத்த உணவினைப் பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றவில்லை.  சென்னையில் சாப்பிட்டதே போதும் என்று தோன்றிவிட, அங்கே ஒரு இளநீர் மட்டும் குடித்தேன். மீண்டும் பேருந்து புறப்பட அவஸ்தைகள் ஆரம்பித்தது.  

நடத்துனர் எப்படியாவது அன்றைய Collection தொகையை அதிகரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். பொதுவாக சாக்கு மூட்டையோ, அல்லது அட்டைப் பெட்டியோ கொண்டு வந்தால் அதற்கு Luggage என அரை டிக்கெட் வசூலிப்பதைப் பார்த்திருக்கிறேன். இவர் என்னடா என்றால் சிறிய பை தவிர, பெட்டிகளுக்கும் Luggage போட வேண்டும் என அனைவரிடமும் வசூலித்துக் கொண்டிருந்தார். நான் பெட்டியை வைக்கும் போது ஒன்றுமே சொல்லவில்லையே எனவும் தோன்றியது. எத்தனையோ மாநிலங்களில் பயணித்திருக்கிறேன். எங்குமே இப்படி ஒரு விஷயம் பார்த்ததில்லை.  ஏன் விமானத்தில் கூட 15 கிலோ வரை கொண்டு வர அனுமதி உண்டு.

விக்கிரவாண்டியில் நிறுத்தியது தவிர, சின்னச் சின்ன ஊர்களிலும் பேருந்தினை நிறுத்தி பயணிகளை அழைத்துக் கொண்டு வந்தது பேருந்து. எப்படியும் வசூலை அதிகரிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். மீண்டும் தேநீருக்காக பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் 10 நிமிடத்திற்கு பேருந்தினை நிறுத்தி பயணிகளை கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருந்தார்.  பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிவறையிலிருந்து பயங்கர துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது. இத்தனைக்கும் ஐந்து ரூபாய் வசூலிக்கிறார்களே – கொஞ்சமாவது சுத்தம் செய்து வைப்பதில்லையே என்று பெருங்கோபம் வந்தது.

இப்படியாக திருச்சி அருகே வந்து கொண்டிருந்தபோது சமயபுரம் தாண்டியதும் எனது பெட்டியை எடுக்க முன்னே சென்ற போது நடத்துனர் என்னிடம், “இது உங்க பெட்டியா? இதற்கு ஏன் Luggage வாங்கவில்லை?என்று கேட்க, “வைக்கும்போது நான் உங்களிடமும், ஓட்டுனரிடமும் சொல்லிவிட்டு தானே வைத்தேன், அப்போது என்னிடம் ஒன்றும் கேட்கவில்லையே?என்று சொல்ல, Checking வந்திருந்தால் நாங்க தான் மாட்டி இருப்போம் என்று புலம்ப ஆரம்பித்தார். சமயபுரம் Toll Gate-ல் நான் இறங்கிக் கொள்ள வண்டி நகர்ந்த பின்னும் புலம்பியபடியே உள்ளே சென்றார்.

எனக்குத் தெரிந்து பயணிகள் கொண்டு வரும் Suitcase-க்கு Luggage கேட்கும் ஒரே ஊர் நமது ஊராகத் தான் இருக்கவேண்டும். வடக்கிலும், வேறு சில மாநிலங்களிலும் பல முறை பேருந்துகளில் பயணித்திருக்கிறேன். எங்கேயும் இப்படி Suitcase-க்கு Luggage Charges கேட்டதில்லை. என்னுடைய Suitcase-உம் அப்படி ஒன்றும் மிகப்பெரிய பெட்டி அல்ல, Normal-ஆன அளவு கொண்ட பெட்டி தான். தங்களது Collection-ஐ அதிகமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்களே என்று நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.

ஒவ்வொரு பயணத்திலும் இப்படி சில அனுபவங்கள் கிடைத்தாலும் பயணம் செய்வது மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.....  பயணம் செய்வது பிடித்திருக்கிறதே!

மீண்டும் வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து.....

46 comments:

 1. பயணக் களைப்பைவிட இந்த 'உடன்பயண'க் களைப்பு அதிகமாகிவிடும் போலவே!!
  நானே ராஜா நானே மந்திரி எண்ணம் தான் ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும்,,, இன்னும் பலருக்கும்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 2. மிகவும் சிரமமான பயணத்தை நன்கு விவரித்துள்ளீர்கள்.

  //பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிவறையிலிருந்து பயங்கர துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது. இத்தனைக்கும் ஐந்து ரூபாய் வசூலிக்கிறார்களே – கொஞ்சமாவது சுத்தம் செய்து வைப்பதில்லையே என்று பெருங்கோபம் வந்தது.//

  பெரும்பாலான இடங்களில் இது மிகக்கொடுமையான விஷயம்தான்.

  //எங்கேயும் இப்படி Suitcase-க்கு Luggage Charges கேட்டதில்லை.//

  கொள்ளை அடிக்கிறார்கள். எதையுமே கேள்விகேட்க முடியாமல் உள்ளது. :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. பகல் நேரப் பேருந்துகள் எல்லாமே இப்படி மெயின் ரோடிலிருந்து பிரியும் சிறு சிறு சாலைகளைக் கண்டால் உள்ளே நுழைந்து புறப்படும் வழக்கம் இருக்கிறது. எக்ஸ்ப்ரஸ் என்று போட்டுக் கொண்டு இவர்கள் செய்வது அநியாயம். சூட்கேஸுக்கு லக்கேஜா! அநியாயம்தான்.

  'அவர்கள்' சாப்பாட்டுப் பொட்டலங்கள் தவிர வருவதை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவது பற்றிப் படித்தபோது மதுரை "உண்ணும் விழா" (சித்திரைத் திருவிழா) நினைவுக்கு வந்தது!!!

  ReplyDelete
  Replies
  1. பகல் நேரம் பேருந்துகள் பயணிப்பது இப்படி பல விஷயங்களை நமக்குத் தருகிறது. சில கோபம் தரும் அனுபவங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. ஹூம், ஆனால் இம்மாதிரிச் சிலசமயங்களில் எங்களுக்கும் நடந்திருக்கு. தமிழ்நாட்டில் இத்தகைய சட்டங்கள் மாறிக் கொண்டே இருக்கும்போல! :(

  ReplyDelete
  Replies
  1. அவரவர் வைத்தது தான் சட்டம்.... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 5. என்ன சொன்னாலும் எத்தனை முறை சொன்னாலும் பேருந்து நிலை இதுதான். நாமும் வேறு வழியின்றி சகித்துக் கொள்ள பழகி விட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. சகித்துக் கொள்ள பழகிவிட்டோம்.... உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 6. பகல் நேரப் பயணத்தில் இப்படித்தான் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. எக்ஸ்பிரஸ்னு போடுவது போல் செல்வது இல்லை தான்...பகலில் ஒரு கொள்ளைப் பயணம் தான்...என்ன செய்வது.....தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 8. இந்தக் கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொள்ளும்படியாகப் பழக்கி விட்டார்கள்..

  இவர்களிடம் ஒழுங்கு முறை பற்றி பேச நினைத்தோமேயானால் -
  கோயம்பேட்டிலேயே இருக்க வேண்டியது தான்..

  ReplyDelete
  Replies
  1. கோயம்பேட்டிலேயே இருக்க வேண்டியது தான்.... :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 9. ஒரு முறை ஒரு திடீர்ப் பயணத்தில் சாதாரண கட்டணப் பேருந்தில் சென்னையிலிருந்து திருச்சி வரும்போது, வழியில் வேக வைத்த நிலக்கடலை வாங்கினோம். நடத்துனர் அருகே வந்து குப்பையை உள்ளே போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்! எனக்கு குப்பைகளை, சாக்லேட் காகிதமாயினும் கீழே போடும் பழக்கம் இல்லையென்பதால், கோபம் வந்தது. செக் பண்ணிக்கச் சொன்னேன்! இப்போது இதைப் படித்த பின், அந்த நடத்துனரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது!! :-))

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பயணத்தில் நடத்துனர் அப்படி சொல்லவில்லை. அவருக்கு பணம் பறிப்பதில் மட்டுமே கவனம் இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில் கிளாஸ் மாதவி.

   Delete
 10. சகிப்பும் கூட ஒரு அனுபவம் தான்...

  ReplyDelete
  Replies
  1. சகித்துக் கொள்வது எப்படி என்பது தானே நமக்கு பால பாடம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. பொறுமை புருஷ லட்சணம். மொதல்ல அதப் புரிஞ்சுக்கோங்க!

  ReplyDelete
  Replies
  1. பொறுமை புருஷ லக்ஷணம்... ஹாஹா. புரிந்து கொண்டிருப்பதால் தான் காலம் தள்ள முடிகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 12. முதுகு வலி பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன். இந்தத் தடவை கம்பிகளில் (இருக்கைப் பக்கம் இருப்பது) பேன்ட்டுக்கு சேதாரம் இல்லை போலிருக்கிறது. மழை பெய்தால், டார்ஜிலிங்க், ஏற்காடு எஃபெக்ட் கிடைத்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா... முதுகு வலி! இருந்தால் இப்பதிவிலேயே சொல்லி இருப்பேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 13. கழுகுக்கு எப்படி அழுகியது தெரிகிறதோ
  அதைப் போலத்தான் இந்த அரசு வண்டிக் காரர்களுக்கு
  ஒரு பாடாவதிக் கடை எப்படிக் கிடைக்கிறதோ தெரியவில்லை

  நானும் கடந்த வாரம் அவஸ்தைப் பட்டேன்

  தேர்தல் அறிக்கையில் பஸ்ஸை பாடாவதி இடத்தில் நிறுத்த
  விட மாட்டோம் என்னும் வாக்குறுதியையும் கோரலாமோ ?

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான ஓட்டுனர்/நடத்துனர் இப்படி பாடாவதி இடங்களில் தான் நிறுத்துகிறார்கள். ம்ம்ம்ம்.... கஷ்டம் தான்.

   தேர்தல் வாக்குறுதி! கேட்டுப் பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. அரசு பஸ் தன் கடமையை நன்றாகவே செய்கிறது !

  ReplyDelete
  Replies
  1. கடமை தவறுவதே இல்லை அவர்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 15. எனக்கும் இதே போன்ற அனுபவம் உண்டு. சென்னையில் இருந்து திருச்சி வரை ஒரு பஸ்சும், திருச்சியிலிருந்து மதுரை ஒரு பஸ்சும் மாறி வந்தேன். ஏன்டா ஏறினோம் என்று என்ற அளவுக்கு ஆக்கிவிட்டார்கள். அதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று வைத்திருக்கிறேன்.
  அருமையான அனுபவ பகிர்வுக்கு நன்றி!
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் பதிவாக எழுதுங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 16. நம் நாட்டில் தடி எடுத்தவன் எல்லோரும் தண்டல்காரன்தான் ஜி

  ReplyDelete
  Replies
  1. தடி எடுத்தவன் தண்டல்காரன்! அதே அதே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete

 17. வசூலாகும் தொகையில் அவர்களுக்கு தரகுப் பணம் (commission) உண்டு என்பதால்அ அரசுப் பேருந்துகளில் பானைகளில் புளியை அடைப்பதுபோல் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். என் செய்ய! தனியார் பேருந்திலோ பெருங்கொள்ளை அடிக்கிறார்கள். நமக்கு வேறு வழியில்லை.

  ReplyDelete
  Replies
  1. வசூலாகும் தொகையில் தரகுப் பணம் உண்டு... அதனால் இப்படியா? பானைகளில் புளியை அடைப்பது போல! சரியான உதாரணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 18. வணக்கம்
  ஐயா

  நிகழ்வை படித்த போது நாங்களும் பயணித்தது போல ஒரு அனுபவம்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 19. டெல்லியில் இருந்து நேரடியாக திருச்சிக்கு பிளைட் இல்லையா,ஜி :)

  ReplyDelete
  Replies
  1. நேரடி விமானம் இல்லை பகவான் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 20. அடடா.... இப்படியெல்லாம் நடக்குமா....?

  நல்ல அனுபவம் தான் உங்களுக்கு நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 21. என்ன செய்வது? நமக்கும் வேறு வழியில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 22. தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை சமயங்களில் திருவான்மியூரிலிருந்து மறைமலைநகருக்கு மாமனார் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஒவ்வொரு சமயமும் படாதபாடு பட்டுத்தான் போகவேண்டியிருக்கும். பிள்ளைகளும் அப்போது சின்னப்பிள்ளைகள். ஏறி இறங்குவதற்குள் உன்பாடு என்பாடு ஆகிவிடும். பல சமயம் பேருந்து கிடைக்காமல் போய்ச்சேர அரைநாள் கூட ஆகிவிடும். எங்களுடைய அந்த நாட்களை நினைவுபடுத்தியது உங்களுடைய பயண அனுபவம்.

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் இப்படித்தான் நடந்து விடுகிறாது. உங்கள் நினைவுகளையும் இப்பதிவு மீட்டெடுத்திருக்கிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 23. நேற்றே படித்தும் கருத்தும் இட்டேன்! கூகிளார் சுட்டுவிட்டார் போல! சென்னை திருச்சி பயணிக்க அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் சிறப்பு. சென்னை பணிமனை, திருச்சி பணி மனை பேருந்துகள் ஆயின் பெரம்பலூர் செல்லாமல் பைபாஸில் செல்கின்றன. விக்கிரவாண்டி உணவகமும் பெரம்பலூர் சிறுநீர் நாற்றமும் மாறவே மாறதது என்று தோன்றுகிறது. ஆறேழு வருடங்களாக வருடம் ஓரிரு முறை என் மாமனார் வீட்டுக்கு கரூர் வந்து போவதால் இந்த தகவல்கள் அறிந்திருக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....