புதன், 2 டிசம்பர், 2015

தத்தளிக்கும் சென்னை.....நேற்று இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்வது மட்டுமல்லாது, இன்னும் சில தினங்களுக்கு கடும் மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பும் வந்த வண்ணம் இருக்கிறது. சக பதிவர்கள், மற்ற சென்னை வாசிகள் என அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறார்கள். இன்று நாள் முழுவதும் நண்பர்களையும் உறவினர்களையும் தொலைபேசியில் அழைத்து அவர்களின் நிலை பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்தாலும், வெகு சிலரையே தொடர்பு கொள்ள முடிந்தது.

நண்பர் பாலகணேஷ் அவர்களுக்கு தொடர்ந்து அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தேன். அவரும் அவரது அம்மாவும் நலமாக இருக்க வேண்டும். போலவே சென்னைப் பித்தன் ஐயாவும், அவரது அம்மாவும் தரைத் தளத்தில் இருப்பதால், அவரைப் பற்றிய கவலையும் இருந்தது. கார்த்திக் சரவணன், சீனு, கார்த்திக் [லக்ஷ்மிநரசிம்மன்] ஆகியோர் தொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட அவர்கள் நலம் அறிந்து மகிழ்ச்சி. திருமதி கீதா [தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ்] அவர்களிடம் மட்டுமே பேச முடிந்தது. அனைத்து நண்பர்களும், மற்ற சென்னை வாசிகளும், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமே என்ற பிரார்த்தனைகளுடன் இங்கே இருக்க வேண்டியிருக்கிறது.  நாள் முழுவதும் பணிச் சுமை அழுத்தினாலும், அவ்வப்போது சென்னை நிலை பற்றி தொடர்ந்து கவனித்து வந்தேன்.....

இத்தனை மழையோ, இந்த அளவிற்கு வெள்ளமோ இங்கே இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. மக்கள் அனைவருமே இப்படி கஷ்டத்தில் இருக்க, இந்த நேரத்திலும், ஆளும் கட்சி, எதிர் கட்சி, அரசு என்ன செய்தது, தவறு யார் மேல் என்று விவாதத்தில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்காமல், மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.  கட்சியோ, தலைமையோ எதைப் பற்றியும் யோசிக்காது வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அனைவரையும் மீட்பதிலும், அனைவருக்கும், உணவு, உடை போன்றவற்றை வழங்குவது மட்டுமே இப்போதைய குறிக்கோளாக இருப்பது நல்லது.மத்திய அரசு சரியில்லை, மாநில அரசின் சுணக்கம், இனிமேல் தடுக்க என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதற்கான நேரம் இதுவல்ல....  செயல்வீரர்களாக செயல்பட வேண்டிய நேரம்.  சென்னையிலும், சுற்றுப்புறத்திலும் இருக்கும் அனைத்து கட்சியினரும், தாங்கள் சம்பாதித்த பணம் கொண்டும், தங்கள் உடல் உழைப்பு கொண்டும் ஒன்று சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு பரிதவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய காலம் இது. நான் இந்த கட்சி, அவர் அந்த கட்சி, நாங்க தான் நல்லவங்க, அவங்க கெட்டவங்க, என்று பேசிக்கொண்டிருப்பதையும், குற்றம் காண்பதையும் விட்டு விடுங்கள்....  மக்களுக்கு உதவி செய்யுங்கள்.....

தலைநகர் தில்லியில் இருந்து ஊடகங்கள் மூலமாகப் பார்க்கும் போதே மன அதிர்ச்சியும் கவலையும் தோன்றும்போது கஷ்டங்களை நேரடியாக அனுபவிக்கும் மக்களை நினைக்கும் போது மனது பதறுகிறது.  இப்போதும் சில ஊடகங்களில் வரும் அரசியல்வாதிகள் இந்த ஆட்சிதான் தவறு செய்கிறது, நாங்கள் ஆட்சி செய்தபோது ரொம்பவும் நன்றாக நடத்தினோம் என்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது கோபம் வருகிறது.

கூடவே அடையாறு பகுதியில் கரைபுரண்டு ஓடும் ஆற்றினைப் பார்ப்பதற்கும், காணொளிகள் எடுப்பதற்கும் திரண்டிருக்கும் மக்களைப் பார்க்கும்போது அவர்களின் அறியாமை திகைக்க வைக்கிறது. எந்த நேரத்திலும் வெள்ளம் அவர்களை அடித்துச் செல்லக் கூடும் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லையே என மனம் பதறுகிறது. ஏற்கனவே சுனாமி சமயத்தில் வேடிக்கைப் பார்க்கப்போன பலரை நாம் இழந்திருக்கிறோம்....

பேரிடரில் மூழ்கியிருக்கும் மக்கள் அனைவரும் இந்த இடரிலிருந்து விரைவில் விடுபட வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு.....

வெங்கட்

புது தில்லி. 

38 கருத்துகள்:

 1. வலைப்பதிவர்கள் பற்றிய தங்களது நலன் விசாரிப்பிற்கும், பதிவிற்கும் நன்றி. யாரும் எதனைப் பற்றியும் பேச முடியாத நிலைமையில் எல்லோரும் துயரத்தில்தான் இருக்கிறோம். சென்னையில் உள்ள உறவினர்கள் பலரிடம் தொடர்பே கொள்ள முடியவில்லை. அடையாறு வெள்ளத்தில் சிக்கிய கோட்டூர்புரம் உறவினர் குடும்பத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது; ஒன்றும் அறிய முடியவில்லை. திருச்சியிலும் விட்டு விட்டு மழை. (இன்று பரவாயில்லை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 2. அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத்தக்கது அண்ணா,,,
  அனைவரும் பாதுகாப்பாய் பத்திரமாய் இருக்க வேண்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 3. மிகச் சரியான நேரத்தில் மிகச் சரியான பதிவு
  அரசுக்கு ஆதரவாகவும் அல்லது எதிராகவும் என
  பிரச்சாரத்திற்கு இந்த இய்றகைப் பேரழிவினைப் பயன்படுத்த
  நினைக்கும் யாரும் தரம் குறைந்தவர்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 4. சென்னை மாநகர் மிகப் பெரிய சோதனையினை சந்தித்து வருகின்றது ஐயா
  இன,மொழி,மன வேறுபாடின்றி அனைவருமே கடும் பணியாற்றி வருகின்றனர்
  சென்னை விரைவில் தன் நிலைக்கு மீண்டு வரும்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. சென்னை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்..
  பெரும் துயருற்ற மக்களின் வேதனை நீங்க வேண்டும்..

  அனைவரும் பிரார்த்திப்போம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 6. ஆழ்ந்த பிரார்த்தனைகள் - அனைத்து மாவட்டத்தில் உள்ளவர்களும் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. மத்திய அரசு சரியில்லை, மாநில அரசின் சுணக்கம், இனிமேல் தடுக்க என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதற்கான நேரம் இதுவல்ல.... செயல்வீரர்களாக செயல்பட வேண்டிய நேரம்.


  தாங்கள் சொல்வது சரி தான் சகோ,

  சுட்டுவிரல் நீட்டும் நேரம் அல்ல இது, உதவி செய்ய வேண்டிய நேரம். அடுத்து என்ன செய்வது என்று ,,,,,,

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 9. சென்னையில் பலரையும் தொடர்புகூடக் கொள்ள முடியவில்லை. இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம். மனிதாபிமானத்துடன் செயல் புரிய வேண்டிய தருணம் இது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 10. பலரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது மேலும் வருத்தமளிக்கிறது. இயற்கையின் பேரிடர் முன்னே மனிதன் என்ன செய்ய முடியும்.?
  த ம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கை பேரிடர் என்றாலும் இதில் மனிதர்களின் பங்கும் இருக்கிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   நீக்கு
 11. சென்னை மக்கள் மீண்டுவர இறைவனை பிரார்த்திப்போம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 12. யாரையும் தொடர்பு கொள்ளாமல் உள்ளுக்குள்ளே நினைந்து கொண்டிருக்கின்ற என்னைப் போன்றவர்களுக்கு உங்களின் பதிவு ஆறுதல்.

  உங்களோடு என் கையும் இணைந்தொரு வேண்டுதல்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள்.....

   நீக்கு
 13. நானும் பல பேரை தொடர்பு கொள்ள முடிய வில்லை ,விரைவில் மாமூலான நிலை திரும்ப வேண்டுமென விரும்பகிறேன் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 14. அடையாறு பகுதியில் கரைபுரண்டு ஓடும் ஆற்றினைப் பார்ப்பதற்கும், காணொளிகள் எடுப்பதற்கும் திரண்டிருக்கும் மக்களைப் பார்க்கும்போது அவர்களின் அறியாமை திகைக்க வைக்கிறது. எந்த நேரத்திலும் வெள்ளம் அவர்களை அடித்துச் செல்லக் கூடும் என்ற அடிப்படை உணர்வு கூட இல்லையே என மனம் பதறுகிறது. ஏற்கனவே சுனாமி சமயத்தில் வேடிக்கைப் பார்க்கப்போன பலரை நாம் இழந்திருக்கிறோம்....//
  இதே எண்ணம் எனக்கும் வந்தது. விடுப்புப் பார்ப்பதில் ஒரு எல்லையில்லையா? உயிரைப் பணயம் வைத்தா?
  பல மீட்பில் ஈடுபடும் தொண்டர்களுக்குக் கூட இவர்கள் இடஞ்சலாக உள்ளதை உணர்வதாகவில்லை.
  சென்னை மீண்டு வரும், பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊடகங்களில் பார்க்கும் போதே மனது பதறியது. அபாயம் என்று தெரிந்தும் இப்படிச் செய்பவர்களை என்ன சொல்ல.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்.

   நீக்கு
 15. பேரிடரில் மூழ்கியிருக்கும் மக்கள் அனைவரும் இந்த இடரிலிருந்து விரைவில் விடுபட வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு.....//

  நாங்களும் உங்களுடன் பிரார்த்தனை செய்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 16. நன்றிகள் சார்..உங்கள் உள்ளம் சொன்ன சோகம் புரிந்தது? இனி வரும் காலங்களில் மக்களுக்கு புரிய வேண்டுமே எதனால் இந்த நிலையென்று? பார்க்கலாம் ஒரு மார்றம் வரும் வாசம் தெரிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றம் வரும் வாசம்....

   மாற்றம் வரட்டும்... நல்லது நடக்கட்டும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வகுமார்.....

   நீக்கு
 17. மழையிலும் வெள்ளத்திலும் தத்தளித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு தங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவும், இறைவணக்கமும் ஊக்கத்தை தருகின்றன. நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் நிலை சீராக எனது பிரார்த்தனைகளும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 18. சென்னையிலும், சுற்றுப்புறத்திலும் இருக்கும் அனைத்து கட்சியினரும், தாங்கள் சம்பாதித்த பணம் கொண்டும், தங்கள் உடல் உழைப்பு கொண்டும் ஒன்று சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு பரிதவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய காலம் இது. நான் இந்த கட்சி, அவர் அந்த கட்சி, நாங்க தான் நல்லவங்க, அவங்க கெட்டவங்க, என்று பேசிக்கொண்டிருப்பதையும், குற்றம் காண்பதையும் விட்டு விடுங்கள்.... மக்களுக்கு உதவி செய்யுங்கள்.....// நல்ல கருத்து வெங்கட்ஜி. ஆனால் அங்கு ந்டப்பதைச் செய்தித்தாளில் பார்க்கும் போது வேதனையாகத்தான் இருக்கின்றது. எப்போது மாற்றம் வருமோ...தன்னார்வலர்கள் தான் களத்தில் இறங்கியிருந்திருக்கின்றார்கள் அதிகமாக. வாழ்த்துவோம் அவரை. தாமதத்திற்கு மன்னிக்கவும். சென்னைதானே எங்கள் தலைமையகம் பதிவுகள் வெளியிட, கருத்துகள் வெளியிட எல்லாம். அங்கு மின்சாரம், இணையம் இல்லாததால் எந்தவிதத் தொடர்பும் கொள்ள முடியவில்லை...கிட்டத்தட்ட ஒரு வாரம். இப்போதுதான் முடிகின்றது. எல்லோர் நிலைமையும் ஃபேஸ்புக்கில்தான் பார்க்க முடிந்தது. கணேஷ் சாரின் நிலைமையும்.

  கீதா: மிக்க நன்றி வெங்கட்ஜி தாங்கள் விளித்து விசாரித்தமைக்கு. சென்னைப்பித்தன் சாரின் தெரு ஒரு மூன்று நாட்கள் முன்புவரை தண்ணீரில் இருந்தது. குறைந்திருந்தது என்றாலும். எங்கள் பகுதி தண்ணீர் தேக்கம் இல்லாமல் தப்பித்தது. அருகில் இருக்கும் மைதானங்கள், கல்விவளாகங்கள் பூங்காக்கள், முள்ளுக்ச்செடிக் காடுகள் மரங்கள் நிலங்கள் அனைத்தும் தண்ணீரை உள்வாங்கிவிட்டன. அங்குதான் தேங்கியது. சாலைகளில் அல்ல. மெயின் ரோடு செல்ல முடிந்தது. ஆனால் மெயின் ரோட்டில் தண்ணீர் தேக்கம்.!!

  மின்சாரம் நான்கு நாட்கள் இல்லாமல் அப்புறம் வந்து தொலை தொடர்பு எல்லாம் இன்றுதான் சீரானது. இணையம் அவ்வப்போது வரும் போகும் என்ற நிலை. பிஎஸ் என் எல் ஃப்ரீ என்றார்கள் ஆனால் தொலைபேசி வேலைசெய்யவில்லை!! அது போன்று பேருந்து ஃப்ரீ என்றார்கள் ஆனால் எங்கள் பகுதிக்கு மினி பஸ் வரவில்லை!!! அதே போன்று மெயின் ரோட்டிலும் பஸ் ஃப்ரீக்வென்சி வெகு குறைவு.!!!! நிறைய சர்வீஸ்கள் இல்லை. நேற்றுவரை இல்லை. பள்ளி திறந்தால் இருக்குமோ என்னவோ.

  மிக்க நன்றி ஜி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 19. இயற்கைப்பேரிடர் முன்பு யாராலும் எதுவும் செய்யத்தான் முடிவது இல்லை. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது உள்பட பல்வேறு தகவல்களைப் புரியும்படிச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....