வெள்ளி, 20 நவம்பர், 2026

நிழற்படம் மூன்று - படத்திற்கான கவிதையும் கதையும் - ஸ்ரீராம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


******* 




சமீபத்தில் எங்களது காலை நேர நடைப்பயணத்தின் போது நான் எடுத்த ஒரு நிழற்படத்தினை நண்பர் ஸ்ரீராம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டு அதற்கான கவிதையோ கதையோ எழுதி அனுப்பும்படிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  அந்தப் பதிவில் வெளியிட்ட நிழற்படத்திற்கு ஸ்ரீராம் அவர்கள் மின்னஞ்சல் வழி எழுதி அனுப்பிய கவிதையும் கதையும் இன்றைய பகிர்வாக உங்கள் பார்வைக்கு!

 

கவிதை - பத்மாக்களின் தினங்கள் : 





சந்தைக்கு வரும் கூட்டம் 

தன் கடைப் பக்கம் 

திரும்பாதா 

என்று பார்த்திருக்கிறாள் 

பத்மா 



இங்கேயே இருந்து 

அழுகி முடிவோமா 

இல்லை 

தன்னை விரும்புவோரை  

அடைந்து பயனுள்ளவையாவோமா 

என்று 

காய்கறிகளும் காத்திருக்கின்றன 

பத்மாவோடு 



கஸ்டமர்கள் வரும் முன்பு 

வருகிறார்கள் 

ஏரியா தாதாவும் 

ஏட்டு பொன்னுசாமியும் 

மாமூல் வாங்க 



மால்களில் 

அவர்கள் சொல்லும் 

விலையில் 

மௌனமாக வாங்கி வரும் 

மக்கள் 

ஏழைத் தெருவோர 

வியாபாரிகளிடம் மட்டும் 

எகிறி எகிறி 

பேசுகிறார்கள் பேரம்.



இத்தனை காய் வைத்திருந்தாலும் 

இல்லாத ஒன்றை மட்டுமே 

கேட்டு  தாண்டிச்செல்லும் 

மக்களில் சிலர் 



இயங்கிக் கொண்டிருக்கிறது 

உலகம் 

மாறாத இந்த குணங்களோடு 

கடந்து கொண்டிருக்கிறது 

இவர்களின் வாழ்க்கையும் 

இப்படியே


*******


மாறியது நெஞ்சம் மாற்றியது பத்மா - சிறுகதை :


"இந்தாம்மா...  ஏம்மா…  இங்க பாரும்மா.." என்று அவர் அவள் கவனத்தைத் திருப்பினார்.


முதலிலேயே அவரை கவனித்து விட்டாலும் 'இன்று என்ன வம்போ?' என்று தயங்கிதான் பத்மா இவர் பக்கம் திரும்பினாள்.


"கொஞ்ச நேரத்துக்கு முன்னால காய் வாங்கிட்டு போனேன்லே..?"


'போச்சு...    மறுபடி அதே கதை'


அவர் தொடர்ந்தார் "அதுல வெண்டைக்காய் ஒரு கிலோ கேட்டேன்ல?  அதை ரெண்டு தரம் போட்டுட்டேம்மா..  இந்தா.."  என்று திருப்பிக் கொடுத்தார்.


ஒருகணம் திகைத்துப் போனாலும் மறுகணமே அவள் மனதுக்குள் புன்னகை வந்தது.  என்ன என்று புரிந்தது.


"வேணாம்னு ஒதுக்கித் தூக்கிப்போட்ட வெண்டைக்காய் ஏன் இங்க இருக்கு ரேவதி?" மகளைக் கேட்டாள் பத்மா.


"அந்த ஃபிராடு அங்கிள் வந்தாரும்மா..  இன்னிக்கி அவருக்கு இதுலேருந்து அளந்து கொடுத்துட்டேன். எப்பவும் உன்னை ஏமாத்தறாரு "


பத்மா பதறிப்போனாள்.  "ஏம்மா அப்படி   அவர்தான் அப்படி நடந்துக்கிட்டாருன்னா அவர் நடந்துக்கறது தப்புன்னு சொல்றே இல்லே..  அப்போ இதுவும் தப்புதானம்மா ?"


ஓரளவு அடிக்கடி இங்கு காய் வாங்குபவர்தான் அவர்.  இரண்டு மூன்று முறையாக ஏதாவது சொல்லி இவர்களை ஏமாற்றுகிறார்.  முதல் நாள் கையில் வெண்டைக்காய் பாக்கெட்டுடன் வந்த அவர் "ஏம்மா ஒரு கிலோ வெண்டைக்காய் கேட்டேன்.. நீ கம்மியாய்த்தான் கொடுத்திருக்கே" என்றார்.


"இல்லீங்கய்யா..  அப்படி செய்ய மாட்டேன்.  என்று கேரி பேகை வாங்கியவள் அதைக் காட்டினாள்.  "பாருங்க ஒரு கிலோ போடணுமேன்னு பெரிய பேக் தான் எடுத்திருக்கேன்..  அரை கிலோ கால் கிலோன்னா சின்ன பேக் எடுப்பேன்"


"அதெல்லாம் சரிதான்மா..  பெரிய பை எடுத்தும் ஏதோ ஞாபகத்துல அரை கிலோதான் போட்டிருக்கே போல"


அதை நிறுத்துப் பார்த்தாள் பத்மா.  140 கிராம் இருந்தது.  "அரை கிலோன்னா கூட  சரியா நிறுத்து போடுவேன்யா..  இதுல பாருங்க..  கம்மியா காட்டுது"


"ஓ..   அதுலயும் கம்மியாதான் கொடுத்திருக்கியா..  என்னம்மா இது!"


அவளுக்கு அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்தது.  இரண்டு நாட்களுக்கு முன் காய் எடை போட்டுக் கொண்டிருக்கும்போது இரண்டு எலுமிச்சம்பழம் எடுத்து பையில் போட்டுக் கொண்டதைப் பார்த்ததை இன்னொரு கஸ்டமர் சொன்னார்.


ஒவ்வொரு காயாக சொல்லிக் கொண்டே கேரட்டை எடுத்துக் கடிப்பார்.  மூன்று நான்கு கேரட் அவர் வாய்க்குள் போகும்!   தக்காளியை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்.  காசு கொடுத்துக் கிளம்பும்போது ஒரு முருங்கைக்காயை எடுத்து "இதை எடுத்துக்கறேன்" என்று சொல்லி பதிலை எதிர்பாராமல் போவார்.  


இதோ இன்று இப்படி..  


ஒன்றும் சொல்லாமல் வெண்டை இன்னும் அரைகிலோ அளந்து கொடுத்தனுப்பினாள்.


இதைத் தெரிந்துதான் ரேவதி - பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் அவள் மகள் - இப்படி செய்திருக்கிறாள்.


வரிசையான கடைகளைத் தாண்டித் சென்று இவர்களுக்கு பின்னால் கடையில் ஏதோ வாங்க நின்றிருந்த அவரும் இதைக் கேட்டு விட்டார்.  சட்டென கோபம் வந்தது அவருக்கு.  இதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசித்த படியே மறுபடி சுற்றிக்கொண்டு இவர் கடைக்கு வந்தார். நடுவில் இவர் அலுவலகத்தில் வேலைசெய்யும் பரணி எதிர்ப்பட, ஓரிரு வார்த்தை அவரோடு பேசியதில் பேச்சு சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த பத்மா சட்டென எழுந்து வந்து "ஒரு நிமிஷம் ஐயா...   " என்று சொன்னபடியே அவர் கையிலிருந்த பைகளிலிருந்து வெண்டைக்காய் பையை வாங்கிப் போனாள்.  



அதைக் கொட்டி விட்டு நல்ல காயாய் அளந்து அந்த பையில் போட்டு கூட ஒரு கைப்பிடி வெண்டையையும் சேர்த்துப் போட்டு கட்டி இவர் கையில் கொடுத்தாள்.  


"பொண்ணு தெரியாம அந்தக் கூடையிலேருந்து எடுத்துக் கொடுத்துட்டா.  மன்னிச்சுக்குங்க ஐயா..  அவளுக்குத் தெரியாது" என்று கைகூப்பினாள்.


அவருக்கு முகம் மாறி விட்டது.  சற்றே குற்ற உணர்வுடன் வீடு வந்து சேர்ந்தார்.


அதன் பிறகு ஒரு வாரம் அவர் கண்ணில் படவில்லை.  அப்புறம் இன்றுதான் வந்து வாங்கிப் போனார்.  இப்போது இதோ திரும்பி வந்து இப்படிச் சொல்கிறார்.


பத்மா ஒன்றும் சொல்லாமல் இசைவான புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள்.  அவர் மனம் கோண வேண்டாம் என்று மறுக்க விரும்பவில்லை.  


ஆச்சர்யகரமாய் அடுத்தடுத்த வாரங்களில் ஒரு முறை கோவக்காய், ஒருமுறை அவரைக்காய் என்று திரும்பி வந்தது.


அடுத்த முறை அவர் காய் வாங்கியபோது அவர் முகத்திலும் சுதந்திரமடைந்த ஒரு புன்னகை இருந்தது.  அவர் பையை மறுபடி வாங்கி ஒவ்வொரு பையாய் எடுத்து சோதித்து, காய்களை செக் செய்து கொடுத்து விட்டு பத்மா சொன்னாள் …


"செக் செய்துட்டேன்..  எல்லாம் சரியா இருக்குங்கய்யா...  எல்லாம் சரியாப் போச்சு!"


*******


படத்திற்கான கவிதையும் கதையும் எழுதி அனுப்பிய நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

20 நவம்பர் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....