திங்கள், 2 நவம்பர், 2026

உதாரணப் பெண்மணி - பத்மா மணி அம்மா - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும்  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




தனது இளவயது நிழற்படத்துடன் பத்மாமணி அம்மா...

இங்கு முகநூலில் தான் அறிமுகமானார் பத்மா மணி அம்மா! மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்காக  சென்னைக்கு சென்ற போது குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்து அவரது ஆசிகளை பெற்று வந்தோம்!



பத்மாமணி அம்மாவை நாங்கள் சந்தித்தபோது...


நல்ல மனுஷி! பன்முகத் திறமையாளர்! உழைப்பால் உயர்ந்தவர்! வயது மூப்பிலும் கணினியில் டைப் செய்து இங்கு பதிவுகளை பகிர்ந்திடுவார்! எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுவார்! ஒரு வாரமாகவே அம்மாவின் நினைவாகவே இருந்து கொண்டே இருந்தது! அவரது பக்கத்திலும் போய் தேடிப் பார்த்தேன்! யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை! சென்ற வாரம் தான் தெரிந்தது அவர் இனி இல்லை என்று….  பத்மா மணி அம்மாவின் ஆன்மா சத்கதி அடைய பிரார்த்தனைகள்! அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.🙏 🙏


சிறுவயது முதலாக நாம் வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எத்தனையோ பேரை Inspirationஆக எடுத்துக் கொண்டு அவர் போல உடை உடுத்தவும், நடை பயிலவும், பேசவும், சமுதாயத்தில் முன்னேறவும், வாழப் பழகவும் முயற்சி செய்திருப்போம் இல்லையா! அப்படி நாம் வாழும் நாட்களிலேயே நம்மைச் சுற்றி வலம் வந்த ஒரு சிறந்த பெண்மணியாக இருந்தவர் தான் நம்ம பத்மா மணி அம்மா!


மூத்த பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, சமுதாயத்தின் பால் அக்கறை கொண்டு சமூகச் சேவைகள் செய்த பெண்மணியாக நம்மிடையே  வாழ்ந்து சென்றிருக்கிறார்! 90 வயதைக் கடந்து வயது மூப்பின் காரணமாக நேற்றைக்கு நம்மை விட்டு மறைந்த செய்தியை அவரது பக்கத்தில் பார்த்து விட்டு எத்தனையோ பேர் அவர் மேல் கொண்ட அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்திய விதத்தை பார்த்தேன்! பிரம்மித்துப் போனேன்!


அந்த கமெண்ட்ஸை எல்லாம் பார்த்த போது பத்மா அம்மாவைப் பற்றி என்னை நிறைய சிந்திக்க வைத்தது எனலாம்! ஒருவரால் எப்படி இப்படி தனிப்பட்ட முறையில் எல்லோரிடமும் அன்போடும், உரிமையோடும் பழக முடிந்தது!! எத்தனையோ பெண்களுக்கு உதாரணமாகவும், வழிநடத்திச் செல்லும் ஆசானாகவும், அம்மாவாகவும், பாட்டியாகவும், உற்ற தோழியாகவும் பழக முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டேன்!


நம்மிடம் இருக்கும் அன்பை ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே  குறுக்கிக் கொண்டு விடாமல் சகமனிதரிடத்திலும் பாரபட்சமின்றி பரவச் செய்தால் தான் நாம் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் நமக்காக நாலு பேர் இருப்பார்கள் என்ற பெரிய உண்மையை மனதில் பதிக்கச் செய்து சென்றிருக்கிறார் பத்மா அம்மா!


இன்றைய காலகட்டத்தில் அக்கம்பக்கம் இருப்பவர்களின் பெயரே கூட தெரிந்து வைத்துக் கொள்ளாத சூழலில், இந்த பரந்து விரிந்த இணைய உலகில் உள்ளவர்களோடு நட்பு பாராட்டி அவர்கள் ஒவ்வொருவரோடும் பேசிப் பழகி, அவர்களை ஊக்கபடுத்தவும், உற்சாகப்படுத்தவும் ஒரு ஆளாக இருந்து அறிவுரைகள் பல தந்து வழிநடத்திச் சென்றிருக்கிறார் என்பது எத்தனை பெரிய செயல் இல்லையா!


அவரின் திறமை, உழைப்பு, அங்கீகாரம்  என்பதைத் தாண்டி அவரின் அன்பால் கட்டியமைத்த பிரம்மாண்டான தேன்கூடாக அவரைப் போற்றி புகழவும், வியந்து பாராட்டவும் இத்தனை மனிதர்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்பதே பெரும் சாதனை! இவ்வளவு பெருமைகளைக் கொண்ட பெண்மணியை சந்திக்க முடிந்ததும், பேசிப் பழக முடிந்ததும் என் பாக்கியமாக கருதுகிறேன்!


நாம் ஒவ்வொருவருமே இவரை ஒரு உதாரண மனுஷியாக எடுத்துக் கொண்டு அனைவரிடமும் நட்பு பாராட்டவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் கற்றுக் கொள்வோம்! Padma Mani  அம்மா நீங்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் எங்கள் எல்லோர் உள்ளத்திலும் ஒரு தாயாகவும், பாட்டியாகவும் வாழ்ந்து கொண்டுதான் கொண்டிருப்பீர்கள்! உங்கள் ஆன்மா இறைவனின் பாதங்களில் நற்கதியை பெற மனதார பிரார்த்திக்கிறேன் அம்மா. 🙏 🙏


*******


இன்றைய பகிர்வு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

2 நவம்பர் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....