அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட எதிர்பாரா இழப்பு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சென்ற வாரத்தில் நடை நல்லது பதிவில் குறிப்பிட்டது போல, இதோ மீண்டும் ஒரு நடை நல்லது பகிர்வுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். நடுவில் இரண்டு நாட்கள் இடைவெளி ஆகிவிட்டாலும் தொடர்ந்து காலை நேர நடையினால் கிடைக்கும் சுகானுபவத்தினை நானும் இல்லாளும் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். சமீபத்திய மழை காரணமாக காலை நேரங்கள் கொஞ்சம் குளிர்காற்று இருக்கிறது. இருந்தாலும் நடை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விதம் விதமான நபர்களை பார்க்க முடிகிறது. சில நபர்கள் தொடர்ந்து நடப்பவர்கள். சிலரை புதிதாகப் பார்க்க முடிகிறது. ஒரு சிலர் வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வருகிறார்கள். “அடாது மழை பெய்தாலும்” விடாது நடப்போம் என்று நடப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே! அப்படி இடைவேளி விடுபவர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நடப்பவர்களை - குறிப்பாக நண்பர் நெல்லைத் தமிழன் போன்றவர்களை - நாம் நமக்கு Inspiration ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிலர் தனியே தன்னந்தனியே என்று நடக்க, சிலர் நண்பர்களை இந்த நடைக்குக் கூட்டுச் சேர்த்துக் கொள்கிறார்கள். சில நாட்களாக மேலூர் கிராமத்தினைச் சேர்ந்த சில பெண்மணிகள் கூட்டாக நடக்க வருகிறார்கள். அவர்களுக்குள் சம்பாஷணைகள் நடந்த வண்ணமே இருக்கின்றது. இரண்டு மூன்று பேர் சேர்ந்துவிட்டால் போதும் - அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி - சிலரின் தலை உருளாமல் இருப்பதில்லை! இல்லாத ஒருவரைப் பற்றிப் பேசுவதில் அனைவருக்குமே ஒரு வித ஆனந்தம்! காலை நேர நடையில் கூட இப்படி அடுத்தவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே நடக்கும் மனிதர்களையும் பார்க்க நேரிடுகிறது. நானும் இல்லத்தரசியும் வாழ்க்கை குறித்த சிந்தனைகளையும், பார்க்கும் இலை, செடி, கொடி, பூக்கள், பறவைகள், விலங்குகள் என விதம் விதமான விஷயங்களைக் குறித்த எங்களுக்குத் தெரிந்த தகவல்களை பரிமாறிக்கொண்டபடி நடக்கிறோம்.
எப்போதும் நடக்கும் இடத்தில் ஒரு செடி பார்த்தோம். அது என்ன செடி என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் இரண்டு நாட்கள் முன்னர் தான் அது திருநீற்றுப் பச்சிலை செடிகள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அந்தச் செடி தானோ என்று Confirm செய்து கொள்ள சில இலைகளைப் பறித்து முகர்ந்து பார்த்தோம். அதன் பிறகு பார்த்தால் பார்க்கும் இடங்களில் எல்லாம் அந்தச் செடி கண்களுக்குப் புலப்பட்டது! நுணா செடி, அதன் காய், பூ, போன்றவையும் நிறையவே இருக்கிறது. போலவே கிருஷ்ணகமலம் பூக்கள் கொடிகளில் இருக்கிறது. நிறைய வகை காட்டுப் பூக்கள், செடிகள் என பாதை முழுவதுமே இருக்கிறது. சாலையோரத்தில் பார்த்தீனியம் செடிகள் இருப்பதைப் பார்த்து, இது தொட்டா கை அறிக்கும் என்று சொன்னார் இல்லத்தரசி! சாலையோரத்தில் நிறைய கீரை வகைகள் போல செடிகள். வேலைக்குச் செல்லும் ஒரு மூதாட்டியிடம் கேட்க, “எங்கம்மா இருக்கறப்ப, இப்படி நிறைய கீரையப் பத்தி சொல்லும்! எனக்கு பெரிசா ஒண்ணும் தெரியல!” என்றார். எனது தாயார் கூட தோட்டத்திலிருந்து, தானாக வளர்ந்து இருக்கும் நிறைய கீரைகளைப் பறித்து, கலவைக் கீரை என்ற பெயருடன் அதில் கூட்டு செய்வார். இப்போது நம்மில் பலருக்கும் இது போன்ற விஷயங்கள் தெரிவதில்லை - சொல்லித் தரவும் ஆளில்லை!
மேலே சொல்லி இருக்கும் மேலூர் பெண்மணிகள் நடக்கும்போது அவர்களை எதிரும் புதிருமாக சில முறை கடக்க வேண்டியிருந்தது. அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையும் கேட்க முடிந்தது. அப்படிக் கேட்ட விஷயம் தான் இந்தத் தலைப்பின் ஒரு வார்த்தையாக! சரியாக நாங்கள் அவர்களைக் கடக்கும்போது அந்தப் பெண்மணிகளில் ஒருவர், தனது தோழிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் - “ஏய் 06.40 மணி ஆயிடுச்சு! வாங்க வீட்டுக்குத் திரும்புவோம்! அந்த ஆள் வேற, ஏண்டி லேட்டு? எருமை”ன்னு சொல்லும்! என்றார். எப்படிச் சுலபமாக தனது இல்லாளை எருமை என்று சொல்லி விட முடிகிறது அந்த மனிதரால்! ஒரு வேளை அதீத அன்பில் கூட இப்படிச் சொல்லலாம்! என் அம்மா கூட என்னை டில்லி எருமை! என்று அவ்வப்போது அழைத்ததுண்டு - அதிலும் நான் படித்த காலங்களில்! தில்லி தான் வாழ்க்கையைத் தரப் போகிறது என்று அறியாத நாட்களில்! ஆனாலும் தனது மனைவியை எப்படி எருமை என்று சொல்லத் தோன்றுகிறது என்ற எண்ணம் எனக்குள்! ஒரு வேளை செல்லமாக அப்படிச் சொல்கிறாரோ என்னமோ? அவருக்குத் தான் தெரியும்! சிரித்தபடியே அவர்களைக் கடந்து எங்கள் நடையைத் தொடர்ந்தோம்.
இப்படி காலை வேளைகளில் நடக்கும்போது பார்க்கக் கிடைக்கும் இன்னும் ஒரு மூதாட்டி குறித்து இன்று பார்க்கலாம். காலை நேரத்தில் தனது மகன் அல்லது பேரனுடன் வண்டியில் வந்து சாலையோரத்தில் இறங்கி, தலையில் காலி மூங்கில் தட்டு அல்லது ஒரு அலுமினிய கூடையுடன் உள்ளே நடந்து செல்வார். திரும்பி வருகையில் தலையில் உள்ள மூங்கில் தட்டில்/கூடையில் - சில வாழைக்காய், சுரைக்காய், புடலங்காய், கேரட் என்று இருக்கும்! அவற்றை எல்லாம் அக்கம் பக்கத்தில் இருக்கும் குடியிருப்புகளில் விற்பனை செய்கிறார். தலைச் சுமையுடன் நடந்து சென்று வியாபாரம். எப்படியும் எழுபதிற்கு மேலிருக்கும் அவரது வயது - பொக்கை வாய் பாட்டியாக இருந்தாலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது. இன்றைய இளைஞர்களில் பலர் எந்த வித கடினமான வேலையையும் செய்ய விரும்புவதில்லை. தினம் தினம் அவரைப் பார்க்கும்போதும் அவரது உழைப்பும், சுறுசுறுப்பும் என் மனதைத் தொடும். ஒரு நாள் அவரை என்னால் நிழற்படமாக அலைபேசி வழி எடுக்க முடிந்தது. அந்தப் படம் மேலே! இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கு என்னென்ன எண்ணங்கள் தோன்றியது! அது கவிதையாகவும் இருக்கலாம், கதையாகவும் இருக்கலாம்! எழுதி அனுப்புங்களேன் - எனது மின்னஞ்சல் முகவரிக்கு! (venkatnagaraj@gmail.com). இங்கே பிரசுரிக்கிறேன்.
நடைப்பயணங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித அனுபவம்! மேலும் நடை தொடரத் தொடர “நடை நல்லது” பதிவுகள் வழி நானும் உங்களைச் சில எண்ணங்களுடன் சந்திக்கிறேன். தொடர்ந்து நடை நல்லது பதிவுகள் வழி சந்திப்போம் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
5 நவம்பர் 2026

.jpeg)



.jpeg)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....