அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட நடை நல்லது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்த வாரத்தின் நடை நல்லது பதிவில் எங்களது நடைப்பயணத்தின் போது நான் எடுத்த ஒரு நிழற்படத்தினை (படம் மேலே) பகிர்ந்து கொண்டு அதற்கான கவிதையோ கதையோ எழுதி அனுப்பும்படிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பதிவில் வெளியிட்ட நிழற்படத்திற்கு நண்பரும் எங்கள் பிளாக் வலைப்பூவின் உரிமையாளர்களில் ஒருவருமான ஸ்ரீராம் அவர்கள் உடனடியாக ஒரு கவிதையும், சிறு கதை ஒன்றையும் எழுதி அனுப்பி வைத்திருந்தார் - மின்னஞ்சல் வழி. இதோ இன்றைக்கு அந்த நிழற்படமும், படத்திற்கான கவிதை மற்றும் சிறுகதை உங்கள் பார்வைக்கு!
கவிதை - அன்றாடம் கங்கம்மா :
செருப்பு வாங்கற காசில்
செக்கெண்ணெய் வாங்கிடலாம்
பஸ்ல போகிற காசில் தினம்
பத்து ரூபா சேர்த்துடலாம்
வெயிலுக்கு முன்னாடி போய்வரணும்
வெற்றியின் ரகசியம் அதுதான்
பத்து காசு சேர்ந்தாலும் அதை
பத்திரமா வச்சுக்கணும்
நியாயமான வியாபாரத்தில்
நிச்சயம் லாபம்தான்.
அலுப்பு பார்க்காம
அன்றாடம் அலையணும் - முகச்
சுளிப்பு காட்டாம என்றும்
வியாபாரம் பார்க்கணும்
ஊரெல்லாம் நம் உறவுதான்
என்று நினைக்கணும்
உதவாத பொருட்களை - ஊராருக்கு
விற்காம ஒதுக்கணும்
இப்படிதான்
தங்கமா கடக்கிறா தன்
அன்றாட வாழ்வை
கங்கம்மா தினமும்!
*******
கங்காவின் நியாயங்கள் - சிறுகதை :
"அம்மா.. நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சு, மொத சம்பளமும், வாங்கிட்டேன். இன்னமும் நீ காய்கறி விக்க போகணுமாம்மா...? சொன்னா ஏன் கேட்க மாட்டேங்கறே?"
"அப்படி இல்லப்பா.. நான் செய்யறது சாதாரண வேலைதான். அதுலதான் உன்னையும் படிக்க வச்சேன். அப்பா இப்படி கைகால் விளங்காம படுத்தும் அசராம உழைச்சேன். அதுல நல்ல மனுஷங்கள சம்பாதிச்சேன்ப்பா.. எனக்கு அவங்க தேவை இருந்த மாதிரியே அவங்களுக்கும் என் தேவை இருக்கு.. என் தேவை முடிஞ்சதும் யோசிக்காமல் அவங்களை மறக்கறது நியாயமில்லை... கொஞ்ச நாள் போகட்டும்.. அப்புறமா நிறுத்தறேன்.."
ஒன்றும் பேச முடியாமல் திருப்தியில்லாமல்தான் எழுந்து போனான் சரவணன்.
இப்படி அவன் கேட்பான் என்று முன்னரே எதிர்பார்த்திருந்தாள் கங்கா. அதற்கான பதிலும் அதனால்தான் தயாராக வைத்திருந்தாள். ஆறுமுகம் பக்கவாதத்தில் படுத்தபோது சரவணனுக்கு பத்து வயது. அவன் காய்கறி விற்றுக்கொண்டு எலக்ட்ரீசியன் வேலை, பிளம்பிங் எல்லாம் செய்து சம்பாதித்து வந்தான். அவன் படுத்தது குடும்பத்துக்கு பெரிய நஷ்டம்தான்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு குடிசை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதை ஒரு காங்கிரீட் வீடாகவும் ஆக்கி இருந்தான். சுற்றி இருந்த நிலத்தில் கங்கா காய்கறிகள் பயிரிட்டு அவனிடம் அனுப்பி விற்பனை செய்து வந்தாள். ஆறுமுகம் படுத்த பிறகு வேறு வழியில்லாமல் இதையே முழுநேர தொழிலாக மாற்றிக் கொண்டாள் கங்கா. சிலர் அங்கேயே வந்து காய், கீரை என்று வாங்கிச் சென்றார்கள். இவளும் கூடையில் போட்டு தெருக்கள் அலைந்து விற்று வந்தாள். போகப் போக சிலர் முதல் நாளே சொல்லி வைத்து இன்ன காய், இன்ன கீரை வேண்டும் என்று சொல்லி வைத்து அதை கங்கா மறுநாள் காலை நேராக அவர்கள் வீட்டில் கொடுத்து பணம் பெற்றும் வந்தாள்.
அப்படியே சரவணனை படிக்க வைத்து ஒரு பட்டதாரியும் ஆக்கினாள். அவனும் சாந்தி என்கிற பெண்ணும் பழகி வருகிறார்கள் என்று கங்காவுக்குத் தெரிந்திருந்தது. சொல்லப்போனால் நகராட்சி அலுவலகத்தில் க்ளெர்க் வேலை கிடைத்ததற்கு சாந்தியும் ஒரு காரணம் என்பதையும் அறிந்திருந்தாள்.
அவர்கள் இருவரும் இணைவதில் கங்காவுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை என்றாலும் சற்றே வசதியான வீட்டுப் பெண்ணான சாந்தியிடம் சற்று ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் என்று அவள் உள்ளுணர்வு அவளை எச்சரித்து வந்தது.
சாந்தி இவளிடம் பேச வந்த போது சட்டென எழுந்து நின்று பேசினாள் கங்கா.. அதை எந்த வகையிலும் ஆட்சேபிக்கவில்லை சாந்தி. புன்னகையுடன் பேசிச் சென்றாள்.
தான் மட்டும் இருந்தால் கூட பரவாயில்லை.. கைகால் விளங்காத கணவனையும் காக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால் கணக்கு பார்க்க வேண்டிய சூழல் வந்து விடக்கூடாது என்பது அவள் எண்ணம். சரவணனிடம் அதைச் சொல்லாமல் வேறு காரணங்களை சொல்லி தொடர்ந்து தான் வியாபாரம் செய்வதாகச் சொல்லி இருக்கிறாள். முடிந்தவரை இப்படியே ஓட்டிவிடுவதாகத் தீர்மானம்.
இதோ மூன்றாம் தெருவில் சகுந்தலா மாமி கேட்ட கீரையுடனும், சக்தி அபார்ட்மென்ட்டில் சசிகலா கேட்ட காயையும் எடுத்துக் கொண்டு நடக்கிறாள்.
தாண்டிச் சென்ற பஸ்ஸிலிருந்து கண்டக்டர் திருமலை புன்னகையுடன் கையாட்டி சென்றான்.
"கூப்பிட்டாலும் வரமாட்டே ஆயா... எப்போ வரணுமோ கை காமி.. நிறுத்திப்புடறேன்.. நீ காசு கீசு எதுவும் தரவேணாம் " -
முன்னரே இவளிடம் “காசு தர வேணாம் பஸ்ல ஏறு.. நான் பார்த்துக்கறேன் ஆயா.. எவ்ளோ தூரம் நடப்பே..?" என்று கூப்பிட்டிருக்கிறான்.
"வேணாம் ராசா.. ஒன் அன்பே போதும்.. நடந்தாதான் ராசா தெம்பு.. இன்னிக்கி பஸ்ல ஏறிட்டேன்னா கொஞ்சம் கொஞ்சமா உடம்புல அலுப்பு ஏறிடும்.. நான் இன்னும் ரொம்ப நாள் யாவாரம் பார்க்கணும் ராசா... இந்தா இந்த கீரையை வூட்ல குடு.."
வாங்கி கொண்டு காசை எடுத்தவனிடம் "வேணாம் ராசா.. நீ என் புள்ள மாதிரி..." என்றாள்.
"ஐய.. நீ கூடத்தான் என் ஆயா மாரி.. நீ கூப்டா பஸ்ல வர்றியா.. இல்லை இல்ல?.. இந்தா காசு வச்சுக்கோ" என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறிக்கொண்டான் திருமலை அன்று.
கங்காவின் காலைகள் சுறுசுறுப்பாய் கச்சிதமாய்த்தான் விடிகின்றன.
*******
படத்திற்கான கவிதையும் கதையும் எழுதி அனுப்பிய நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
6 நவம்பர் 2026


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....