செவ்வாய், 3 நவம்பர், 2026

நிழற்படத்திற்கான கவிதை மற்றும் கதை - ஸ்ரீராம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட உதாரணப் பெண்மணி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



சென்ற வாரம் நடை நல்லது பதிவில் எங்களது நடைப்பயணத்தின் போது நான் எடுத்த ஒரு நிழற்படத்தினை (படம் மேலே) பகிர்ந்து கொண்டு அதற்கான கவிதையோ கதையோ எழுதி அனுப்பும்படிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  இப்படியான படங்கள் எடுப்பது பொழுதுபோக்குக்காக என்றாலும் அந்தப் படம் பார்க்கும் நபர்களில் எந்த விதமான எண்ண அதிர்வுகளை உண்டாக்குகிறது என்று தெரிந்து கொள்வதில் ஒரு வித சந்தோஷம் எனக்கு. அந்தப் படம் நண்பர்களுக்குத் தந்த உணர்வுகளை, ஒரு கவிதையாகவோ அல்லது கதையாகவோ எழுதி அனுப்பினால் இங்கே எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் ஒரு வித மகிழ்ச்சி.  அந்தப் பதிவில் வெளியிட்ட நிழற்படத்திற்கு நண்பரும் எங்கள் பிளாக் வலைப்பூவின் உரிமையாளர்களில் ஒருவருமான ஸ்ரீராம் அவர்கள் உடனடியாக ஒரு கவிதையும், சிறு கதை ஒன்றையும் எழுதி அனுப்பி வைத்திருந்தார் - மின்னஞ்சல் வழி.  இதோ இன்றைக்கு அந்த நிழற்படமும், படத்திற்கான கவிதை மற்றும் சிறுகதை உங்கள் பார்வைக்கு!

 

கவிதை: 


மணம் செய்து வைத்தார் 

மனைவி கிடைத்தாள்.

மகனோ மகளோ கிடையாது 

வசிக்க நிரந்தர  வீடில்லை 

அன்றாடம் கஞ்சி குடிக்க 

ஆங்காங்கே ஓடவேண்டும் 

கிடைத்த இடத்தில் வேலை, சோறு 

படுத்த இடத்தில் தூக்கம்.

பணமில்லை சேர்த்து வைக்க 

மனமுண்டு வாழ்ந்து பார்க்க

எதிர்பார்ப்பில்லை 

அதனால் ஏமாற்றமுமில்லை 

அடுத்த இடம் பார்க்க 

ஆவலாய் நடக்கிறோம் 

எப்படி இருக்குமோ 

புதுவீடு?

மகிழ்ச்சியாகத்தான் போகிறது 

வாழ்க்கை


*******


ஜனனம் - சிறுகதை :


"வெரசா எட்டு வச்சி நட புள்ளே..  மழை வர்ற மாதிரி இருக்கு..  ஒதுங்க கூட இடமில்லை"


"ஆமா..   வேகமா..  நடப்பாக..     இப்படியா இருக்க காசுக்கெல்லாம் பேத்திக்கு துணிமணி, ம் மாப்பிள்ளைக்கு பொண்ணுக்கு ட்ரஸ்ஸு..  " 'ஸ்' ஸில் நல்ல அழுத்தம் கொடுத்துச் சொன்னாள் பூமாலை.  வேகமா வுக்கும் நடப்பதாக வுக்கும் நடுவில் ராகத்துடன் ஒரு இடைவெளி கொடுத்தாள்!


அவள் குரலில் இருந்தது கோபமில்லை.  வருத்தமுமில்லை.  பெருமையுடன் ஒரு அலுப்பு!


குணசேகர் இவர்கள் ஒரே பெண் அஞ்சலையை விரும்பி மணம் செய்து கொண்டிருந்தான்.  அவன் மேஸ்திரியாயிருந்தான்.  அங்கு வேலை பார்க்க வந்த அஞ்சலையைப் பார்த்ததும் அவனுக்கு பிடித்துப்போய் இவர்களிடம் வந்து விட்டான் நேராக.


சென்ற தீபாவளி முடிந்து கல்யாணம் எளிமையாக நடந்தது.  சாலையோர கோவில் ஒன்றில் மாலை மாற்றி தாலி கட்டினான்.


இந்த தீபாவளிக்கு கையில் ஒரு குழந்தை.  அவர்களுக்கு தன் சக்திக்குத் தக்கவாறு 'துணிமணிகள்' எடுத்துக் கொண்டு பார்த்தால் பஸ்ஸுக்கு கூட காசு மிஞ்சவில்லை.


"பக்கத்து ஊர்தானே.. நான் நடந்தே சென்று கொடுத்து வந்து விடுகிறேன்" - என்றான் முருகேசு.


"அட நான் என்ன கோமாளியா..   நானும்தான் வர்றேன்" - பூமாலை.


"நடக்கணும் புள்ள"


"புதுசா என்ன..  நடந்தாப் போச்சு.. குழந்தையை என் கைல தூக்க வேணாமா நானு?"


"சரி வா"


மெல்ல நடந்து கையில் இருந்த சொற்ப காசில் நடுவில் ஒரு தள்ளு வண்டிக்கு கடையில் இட்லி சாப்பிட்டு நடையைத் தொடரநதார்கள்.


"மாப்பிள்ளை என்ன சொல்வாரோ.."


"ஏதாவது நெனச்சுக்குவாரோ"


"அஞ்சலை என்ன பண்ணுதோ..   குழந்தையையும் வச்சுக்கிட்டு என்ன பாடு படுதோ...   இத பாரு புள்ள..  போனோமா வந்தமான்னு கிளம்பிடனும்..  அவங்களுக்கு தொல்லை தரக்க்கூடாது பார்த்துக்கோ"


பேசிக்கொண்டே ஊரை நெருங்கினார்கள்.


குணசேகர் இவர்களுக்கும் சேர்த்து ஜவுளி வாங்கி வைத்திருப்பதோ, இவர்கள் வந்ததும் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் அவர்களை அங்கேயே இருத்திக் கொள்ளவும் அஞ்சலையிடம் பேசி வைத்திருப்பது இவர்களுக்குத் தெரியாது.


"நமக்கு உதவிக்கு ஆள் வேணும்னு சொல்லு.  கஷ்டப்படறோம்னு சொல்லு..  வேலை வேலைன்னு ஊர் ஊரா அலையாம அவங்க கொஞ்ச நாள் இங்கே நிம்மதியா இருக்கட்டும்.   எனக்குதான் யாருமில்ல..  ஒத்தயில நின்னவன்..  இவங்காளால்தான் எனக்கு நீ கிடைச்ச.."


இவர்கள் நடந்து வருவார்கள் என்பதை எதிர்பார்க்காத குணசேகர் நாள் நெருங்குவதை உணர்ந்து தினசரி மூன்று வேளை ஊருக்குள் வரும் பஸ்ஸை வந்து நோட்டமிட்டு சென்று கொண்டிருக்கிறான்.


*******


படத்திற்கான கவிதையும் கதையும் எழுதி அனுப்பிய நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

3 நவம்பர் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....