வியாழன், 29 அக்டோபர், 2026

நடை நல்லது - மீண்டும் தொடர்ந்த நடை - மனிதர்கள் பலவிதம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட வாசிப்பை நேசிப்போம் - 100 புத்தகங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******





கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக காலை நேர நடையில் தடை! இரவு நீண்ட நேரம் விழித்து இருப்பதால் காலை நேரங்களில் எழுந்திருக்க ஒரு சோம்பல்! அதனால் நடைக்குத் தடை. கொஞ்சம் பழக்கம் விட்டுவிட்டால் கூட ஒரு வித சோம்பல் வந்துவிடுகிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் போனால், மீண்டும் மனதை ஒரு நிலைப்படுத்தி காலை நேரம் சீக்கிரம் எழுந்திருந்து வேலைகளை முடித்துக் கொண்டு நடந்து செல்ல ஆரம்பித்தோம்.  நடுவே இல்லத்தரசி எத்தனையோ முறை சொன்னாலும் ஏனோ விரைவில் எழுந்து நடக்கத் தோன்றவே இல்லை.  சில நாட்களாக மீண்டும் நடை தொடங்கிவிட்டோம் - ஒரு வழியாக! ஒவ்வொரு நாளும் காலை நேரம் எழுந்து வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் நுழைவாயில் வரை சென்று திரும்பி, வரும் வழியில், தோப்பு ஒன்றினை அழித்து புதியதாக வீட்டு மனைகளாகப் பிரித்து நடுவே சாலைகள் அமைத்து இருக்கும் இடத்தில் இரண்டு சுற்று! அதன் பிறகு வீடு வந்து சேர்கிறோம். கிட்டத்தட்ட 45 நிமிட நடை. 





நடையை விட்டதில் இழந்தது எது என்று யோசிக்கும்போது காலை நேரத்தின் அமைதி, அந்த அமைதியில் காதில் கேட்கக் கிடைக்கும் பல பறவைகளின் குரல்கள், மயில்களின் அகவல், மேய்ச்சலுக்குப் புறப்பட்ட ஆநிரைகள், வீட்டு வேலைக்கும், கட்டிட வேலைக்கும் அந்த நேரத்திலேயே புறப்பட்டு, நடந்து போகும் பெண்கள் மற்றும் வாகனங்களில் செல்லும் ஆண்கள், காலை நேரத்தில் வழியில் இருக்கும் Turf - இல் விளையாடச் செல்லும் சிறுவர்கள், சிறுமிகள் என எல்லாவற்றையும் பார்க்கும்போது மனதில் ஒரு வித புத்துணர்வு நமக்குள்ளும் வந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்கிறது.  அந்தப் புத்துணர்வு நாள் முழுவதும் இருப்பது கண்கூடு! வீட்டு மனைகள் போட்டிருக்கும் இடத்தில் ஒரு அப்பா தன் இரு மகள்களுடன் வந்து Jogging செய்வது, Exercise செய்வது என்று அந்த காலை நேரத்திலேயே பரபரப்பாக இருக்கிறார்.  சின்ன மகள் கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளையாக இருக்க, அவ்வப்போது அவரை கண்டித்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட வைக்கும்போது கொஞ்சம் புன்னகை எங்கள் முகத்தில்!





பேசிக்கொண்டே நடக்கும் எங்களைப் போலவே இன்னும் ஒரு தம்பதியினர் - ஒரு பக்கம் அலைபேசியில் ஏதோ ஒரு ஸ்லோகம் ஓடிக்கொண்டிருக்கிறது. சில ஆண்கள் - மூன்று நான்கு பேராக நடக்கும்போது தான் உலக அரசியல், வியாபாரம், விளையாட்டு என பலவற்றையும் அலசியபடி செல்கிறார்கள்.  எல்லாம் கோடிகளில் தான் பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்க முடிந்தது - லட்சங்கள் எல்லாம் இப்போது பேசுவதில்லை - ஏதோ ஒரு Flat குறித்து பேசும்போது ஒரு வீடு மூன்றரை கோடி என்றார்.  எனக்கு சினிமாவில் வரும் “ஒரு கோடிப்பே!” நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது.  மக்களுக்கு வீட்டு மனைகள்/வீடுகள் வாங்குவதில் இருக்கும் மோகம் குறைவதே இல்லை.  அதனால் தான் பல இடங்களில் Whether it is worthy or not, வீட்டு மனைகளின்/வீடுகளின் விலை வானளாவி நிற்கிறது.  பலராலும் எண்ணிப் பார்க்க முடியாத உயரத்தினைத் தொட்டு நிற்கிறது! வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு கடன் கொடுப்பதால் மக்களின் Buying Power அதிகரித்து இருக்கிறது என்பது கண்கூடு. 





காலை நேர நடையின் போது பார்த்த ஒரு முதியவரும் மூதாட்டியும் பேசிக்கொண்டே நடந்தது மனதைத் தொட்டது.  இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள் என்று தெரிந்தது. அந்த வயதிலும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? வீட்டில் யார் அவர்களுடன் இருக்கிறார்கள் என்றெல்லாம் என் யோசனையாக இருக்க, அவர்கள் எந்தவித கவலைகளும் இல்லாதது போல பேசிக்கொண்டே நடந்தார்கள். எதிரே வரும் மனிதர்களை நோக்கி புன்னகை புரியவும் தவறவில்லை.  இன்னும் ஒரு நபர் ஏதோ செடியைத் தேடி அதிலிருந்து இலைகளைப் பறித்துக் கொண்டிருக்க அந்த முதியவரும் மூதாட்டியும் நடப்பதை நிறுத்தி, “என்ன பறிக்கிற?” என்று கேட்க, அந்த நபர் “இது துத்தி இலை, Piles க்கு நல்லது, அதான் பறிக்கிறேன்!” என்றார்.  யோசனையுடன் அவர்கள் மேலும் நடக்க, அவர்கள் பேசிய சில விஷயங்கள் காதில் கேட்டது.  அது பிறகு சொல்கிறேன். மேலே உள்ள படம் தான் அந்த முதியவர்களுடைய படம்! இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கு என்னென்ன எண்ணங்கள் தோன்றியது! அது கவிதையாகவும் இருக்கலாம், கதையாகவும் இருக்கலாம்! எழுதி அனுப்புங்களேன் - எனது மின்னஞ்சல் முகவரிக்கு! (venkatnagaraj@gmail.com).  இங்கே பிரசுரிக்கிறேன். 


மேலும் நடை தொடர்ந்து கொண்டிருக்கிறது! ஒவ்வொரு நாளும் - கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே!  முடிந்த போதெல்லாம் நடை நல்லது பதிவு வழி உங்களைச் சந்திக்கிறேன் நண்பர்களே! 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

29 அக்டோபர் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....