அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் இந்த நவராத்திரி நாட்களில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு ஒன்று - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
நவராத்திரி 2026 - முதலாம் நாள் - 11 அக்டோபர் 2026:
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியை சக்தியின் அம்சமாக இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் நாம் மனதார வழிபட்டு மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி சக்தியை மேம்படுத்திக் கொள்ளும் நன்னாளாக கொண்டாட வேண்டும்!
நம்மிடையே உள்ள வன்மம், கோபம் போன்ற தீய குணங்கள் அனைத்தும் அழிந்து பிரபஞ்சத்தில் அன்பும், ஒற்றுமையும் தழைக்க வேண்டும்! பண்டிகைகள் என்றாலே குடும்பத்தில் உள்ளவர்களின் பங்களிப்பும், மெனக்கெடுதலும், சந்தோஷமும், உற்சாகமும் நிறைந்திருக்கும்!
என்னவர் மற்றும் மகளின் பெரும் உதவிகளால் இந்த வருட நவராத்திரி கொலு மிகவும் அழகாக அமைந்துள்ளது! அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கணும்! நல்லதே நடக்கணும்!
முதல் நாளான இன்று மாலை அக்கம்பக்கம் உள்ளவர்கள் எல்லோரையும் நேரில் குங்குமம் கொடுத்து அழைத்து வந்தேன்! அப்படி செல்லும் இடத்தில் எல்லாம் எனக்கும் குங்குமமும், தாம்பூலமும், சுண்டலும் தரவே அவற்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன்! அக்கம்பக்கம் உள்ளவர்கள் தவிர மற்ற நட்புகளை அலைபேசி மூலம் அழைத்தும், வாய்ஸ் மெசேஜ் அனுப்பியும் அழைத்தாயிற்று!
முதல் நாள் நிவேதனமாக இனிப்புடன் ஆரம்பிக்கலாமே என்று எண்ணி ரோஸ்மில்க் கேசரி செய்து நிவேதனம் செய்தேன்! இன்றைய நிறமாக ஆரஞ்சு நிறத்தில் புடவையும் உடுத்திக் கொண்டாச்சு!
மீதிக்கதைகளை தொடர்ந்து பார்க்கலாம்.
*******
நவராத்திரி இரண்டாம் நாள் - 12 அக்டோபர் 2026:
இன்று மாலை நிவேதனமாக பச்சைப்பயறு சுண்டல் செய்திருந்தேன்! குடியிருப்பில் உள்ள நட்புவட்டத்தினரின் வருகையினால் மாலை நேரம் மிகவும் இனிமையாகச் சென்றது! இதோ இப்போது தான் வேலையை முடித்தேன்! இன்றைய நிறம் வெண்மை என்பதால் வெண்மை நிறத்தில் புடவையும் உடுத்திக் கொண்டேன்!
தொடர்ந்து மீதிக்கதைகளை பார்க்கலாம்!
*******
நவராத்திரி 3ஆம் நாள் - 13 அக்டோபர் 2026:
இன்றைய கொலுவுக்கு அக்கம்பக்கம் உள்ள நட்புகள், என்னவரின் அலுவலக நட்பு (இதுவரை இந்த ஊரில் இப்படி சொல்ல வாய்ப்பு கிடைத்ததே இல்லை!), என்னுடைய மாமா பெண்ணும் அவளுடைய குழந்தையும் என்று எல்லோரும் வருகை தந்திருந்ததால் மிகவும் இனிமையான நாளாகவே சென்றது!
இதனிடையே லோக்கல் சேனலுக்காக கொலுவை காணொளியாக எடுக்கவும் என்னை அதில் சில வார்த்தைகள் பேசச் சொல்லவும் எங்கள் இல்லம் தேடி வந்திருந்தார்கள்! முதலில் நேரமில்லை என்று சொல்லி விட்டாலும் கிடைத்திருக்கும் வாய்ப்பை தவற விட வேண்டாமே என்று மைக்கை பின் செய்து கொண்டதும் என்னைப் பற்றிய அறிமுகத்துடன் நவராத்திரியின் சிறப்பை பற்றியும் எங்கள் வீட்டு கொலுவைக் குறித்தும் இயல்பாகவே பேசி விட்டேன்..🙂 காணொளி எடுத்தவர்கள் கூட நல்லாவே பேசிட்டீங்க மேடம்! என்றனர்! அவர்களின் அன்பளிப்பாக 'ரங்கநாதரின் கிரீடம்' fridge magnetஆக தந்திருக்கிறார்கள்!
இன்றைய நிவேதனமாக கருப்பு கொண்டக்கடலையில் சுண்டல் செய்திருந்தேன்! இன்றைய நிறமாக சிவப்பு வர்ணப் புடவையும் உடுத்திக் கொண்டாச்சு!
மீதிக்கதைகளை தொடர்ந்து பார்க்கலாம்! அடுத்த பதிவில்…
*******
இன்றைய தொகுப்புப் பகிர்வு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
19 அக்டோபர் 2026















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....