திங்கள், 26 அக்டோபர், 2026

நலம்… நலம் அறிய ஆவல் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும்  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




தலைப்பில் உள்ள பாடல் - காதல் கோட்டை படத்தில் வரும் ஒரு பாடல்! அதே போல ஒரு பாடல் - இன்னமும் பின்னோக்கிப் போனால் - “நலம் தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலம் தானா?” இது போன்ற பாடலைக் குறித்து இங்கே ஒரு கேள்வி கேட்கும் அளவிற்கு போய்விட்டது எனது வலையுலக வருகை! கடைசியாக பதிவு எழுதியது - நாளொரு நூலும் பொழுதொரு குறும்படமும் - என்ற பதிவு - ஆகஸ்ட் மூன்றாம் தேதி! - அதாவது எண்பது நாட்கள் இடைவெளி! சற்றே நீண்ட இடைவெளி தான்! தினம் தினம் பதிவுகள் வெளியிட்டு வந்த நான் இப்படி இடைவெளி விட்டால் நல்லதல்ல என்று தெரிந்தே இருக்கிறது. “Long Time No See!” என்று கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்! இது போன்ற நீண்ட இடைவெளி, ஏன் எழுதவில்லை, என்ன பிரச்சனை என்ற கேள்விகள் எழுப்ப மட்டுமல்லாது, தேவையற்ற கற்பனைகளுக்கும் வழி செய்து விடுகின்றன.  எழுதாமல் இருந்ததற்கு பெரிதாக ஒரு காரணமும் இல்லை! எழுதுவதற்கு விஷயங்களும் இல்லாமல் இல்லை!


அலுவலக வேலைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது - வரிசையாக ஊழியர்கள் ஓய்வு பெற்றுக் கொண்டே போக, புதியதாக அலுவலகத்தில் யாரும் சேர்வதில்லை.  நான் இங்கே மாற்றம் பெற்று வந்து ஒரு வருடம் ஆகியிருக்கிறது - இந்த ஒரு வருடத்தில் பத்து பேருக்கும் மேலாக ஓய்வு பெற்று இருக்கிறார்கள் - அவர்களுக்கு பதில் வேறு இடங்களிலிருந்து பணி மாற்றம் பெற்று வந்தவர்கள் மூன்று பேர் மட்டும்! இப்போதே வேலைப் பளு அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் வரப்போகும் ஆண்டில் மொத்தம் 11 பேர் எங்கள் அலுவலகத்திலிருந்து பணி ஓய்வு பெறப் போகிறார்கள்! அந்த சமயத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று இப்போதே சிந்தனைகள்! அவ்வப்போது என்ன செய்யலாம் என்பது குறித்தான கலந்துரையாடல்கள் என நடத்திக் கொண்டிருக்கிறோம்.  எப்படியும் ஏதேனும் ஒரு வழி கிடைத்தே ஆக வேண்டும் - இல்லையெனில் வேலைப்பளு அதிகரிக்கும்!


கிடைக்கும் நேரத்தில் வீட்டு வேலைகள், வெளி வேலைகள் முடித்து அலுவலகம் சென்று திரும்புவதே பெரிய சவாலாக இருப்பது போலத் தோன்றிவிட்டது. இதற்கிடையே சில கடமைகளும் இருப்பதால் அதற்கும் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  சரி சில நாட்களுக்கு எழுத்திற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம் - வலைப்பூவில் எழுதுவதற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம் என்று விட்டுவிட, அந்த விடுப்பு நீண்டு கொண்டே போனது! மடிக்கணினி முன்னர் அமர்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாமல் இருந்தது முன்பு! இப்போது அப்படி இல்லை - அதனால் வீட்டு வேலைகளில் அதிகம் ஈடுபாடு செலுத்த முடிந்தது. அலுவலக சிக்கல்களைத் தீர்ப்பதிலும், அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் - எந்தப் பணிகளை முதலில் முடிக்க வேண்டும் என்ற சிந்தனைகளில் கவனம் செலுத்தவும் முடிந்தது. கொஞ்சம் ஓய்வு என்று தொடங்கியது இப்படி நீண்டு கொண்டே போய்விட்டது!  


சில நாட்களாகவே வலையுலக நண்பர்கள் WhatsApp வழி “ஏன் எழுதவில்லை?” என்ற கேள்விகளைக் கேட்ட வண்ணமே இருக்கிறார்கள் - குறிப்பாக எனது பயணக் கட்டுரைகளைப் படிக்க முடியாமல் இருப்பதில் பல நண்பர்களுக்கு வருத்தம்! சென்ற ஞாயிறன்று கூட இரு நண்பர்கள் அலைபேசி வழி தொடர்பு கொண்டு  Lahaul Spiti Circuit பயணத் தொடர் பாதியிலியே நிறுத்தி விட்டீர்களே? எப்போது தான் அதைத் தொடரப் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.  அனைவரையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது! இது ஒரு சுகமான விஷயம் தான் - நம் எழுத்தையும் படிக்க, ரசிக்க நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது அறியும்போது மனதுக்கு மகிழ்ச்சி தானே! அனைவருக்கும் நான் “நன்றி” என்ற வார்த்தையைச் சொல்வதன்றி வேறென்ன சொல்லி விட முடியும்!  எழுதாமல் இருந்த இந்த நாட்களில் இது குறித்து சிந்தித்த, விசாரித்த, அலைபேசி வழி தொடர்பு கொண்ட நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. 


தினம் தினம் பதிவுகள் எழுத முடியாவிட்டாலும், அவ்வப்போது பதிவுகள் வெளியிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் - இதோ ஒரு பதிவுடன் இன்றைக்கு உங்கள் முன்னே வந்திருக்கிறேன்! முடிந்த போதெல்லாம் பதிவுகள் எழுதுவதோடு, மற்ற நண்பர்களின் வலைப்பூக்களையும் படிக்கவும் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். நின்று போயிருந்த நடைப் பயணங்களும் மீண்டும் தொடங்கி இருக்கிறேன். காலை நேர நடை நல்லதொரு விஷயம் இல்லையா? அது மட்டுமா முன்பு நடை குறித்தும் எழுத விஷயங்கள் இருந்ததே! இடைப்பட்ட இந்த நாட்களில் கிடைத்த அனுபவங்கள், சந்தித்த விஷயங்கள், நடை நல்லது பதிவுக்கான விஷயங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் எழுதலாம்! எழுதுவேன்! எழுதுவதற்கு விஷயத்திற்கா பஞ்சம்! கொஞ்சம் நேரமும், நிறைய ஆர்வமும் இருந்தால் தினம் தினம் எழுதலாம்! ஆதலால் முடிந்த போதெல்லாம் எழுத்து வழி தொடர்ந்து சந்திப்போம் நண்பர்களே! 


**********


இன்றைய பகிர்வு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

26 அக்டோபர் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....