சனி, 31 அக்டோபர், 2026

காஃபி வித் கிட்டு - 248 - 2050 Care with Love - விலகவில்லை - கொள்ளை - பிள்ளையார் - அம்பானி - தீபாவளி - நம்பிக்கைப் பெண்மணி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நிழற்படமும் எண்ணங்களும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் குறும்படம் :  “2050 Care with Love”



சில குறும்படங்கள் மனதை விட்டு அகலுவதில்லை.  அப்படியான ஒரு குறும்படத்தினை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.  இப்போது 2026-ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம்.  இன்னும் 24 நான்கு ஆண்டுகளில் அதாவது 2050 - ஆம் ஆண்டில் நம் நாட்டின் முதியவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக ஆகும் என்று கணித்திருக்கிறார்கள்.  இப்போதே பல முதியவர்கள் தனியாக இருக்கிறார்கள்.  முதியோர் இல்லங்கள், முதியோர் குடியிருப்புகள் என ஒரு வியாபார நோக்கத்துடன் பல இடங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  கோவையில் இப்படி நிறைய இடங்கள் இருப்பதை நீங்களும் அறிந்திருக்கலாம்.  இப்படி இருக்க, இன்னும் 24, 25 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருக்கும் போது எப்படியெல்லாம் நம் வாழ்க்கை இருக்கப் போகிறது என்பதை எண்ணிப் பார்த்தால் கொஞ்சம் கலக்கமாகவும் கூட இருக்கலாம்.  2050 Care with Love என்ற குறும்படம் இப்படி ஒரு மூதாட்டியின் கதையைச் சொல்கிறது. மகன் வெளிநாட்டில் இருக்க, மூதாட்டி தனியாக இருக்கிறார்.  அவரைப் பார்த்துக்கொள்ளும் நர்ஸ் ஆக Jamie Lever (நடிகர் ஜானி லீவரின் மகள்!) நடித்திருக்கிறார்.  ஹிந்தியில் இருக்கும் படம் என்றாலும் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.  பாருங்களேன்.



மேலே உள்ள காணொளி வழி பார்க்க முடியாவிட்டால், கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம்!


2050 Care with Love | Short Film | Sulbha Arya | Jamie Lever | Avinash D | Lakshmi R Iyer | - YouTube 



******

 

இந்த வாரத்தின் கவிதை : விலகியிருக்கவில்லை…


சா. ரா. எழுத்து என்ற பெயரில் முகநூலில் எழுதுபவரின் கவிதைகள் படிக்கக் கிடைத்தன.  அவர் எழுத்தும், வெளியிடும் படங்களும் மனதைக் கவர்ந்தன.  அப்படி ரசித்த ஒரு படமும் அதற்கான அவரது கவிதையும் கீழே!



மறந்துவிட்டதாக, என்னை நானே

சமாதானப்படுத்திக்கொண்ட

ஒரு சாயங்காலம்...


திடீரென்று ஒரு வாசனை,

ஒரு பாடல்,

யாரோ அணிந்திருந்த அதே நிற ஆடை...


போதும்.


பல வருடங்களை

ஒரு நொடிக்குள்

திரும்பக் கொண்டுவர

நினைவுக்கு இவ்வளவுதான் தேவை.


நான் கடந்த காலத்தை

விட்டு தூரங்கள் வந்திருக்கலாம்;

அது என்னை இதுவரை

விட்டுவிலகியிருக்கவேயில்லை.


✍️ சா.ரா. எழுத்து ❣️



******


பழைய நினைப்புடா பேராண்டி : கொள்ளை


2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட்ட பதிவு - கொள்ளை - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


இரண்டு நாட்களுக்கு  முன் ஒரு அடையாள அட்டையின் இரண்டு நகல்கள் எடுக்கக் கடைக்குச் சென்றேன்.  அந்தக் கடையின் வெளியே ”மொத்த அளவில் நகல் எடுத்தால் ஒரு பக்கத்திற்கு 45 பைசா, மேலும் விதவிதமான பைண்டிங் செய்து தரப்படும் –  நியாயமான விலையில்!" என்றெல்லாம் விளம்பரம் எழுதி வைத்திருந்தார்கள். 


உள்ளே சென்ற என்னிடமிருந்த அடையாள அட்டையை வாங்கி  கடையில் வேலை செய்யும் நபர் நகல் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவரிடம் வெளிநாட்டினைச் சேர்ந்த ஒரு இளைஞர் உள்ளே வந்து அவரது மின்னஞ்சலுக்கு வந்திருக்கும் ஒரு இ-டிக்கெட்டினை அச்சிட வேண்டும் என்றார் . 


அப்போது நடந்த சம்பாஷனையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு:


வெளிநாட்டு இளைஞர்:  என் மின்னஞ்சலில் வந்திருக்கும் பயணச்சீட்டை  படிமம் எடுக்க வேண்டும். எவ்வளவு? 

 

கடைக்காரர்:  ஒரு பக்கத்திற்கு 40 ரூபாய். 


முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படித்துப் பாருங்களேன் - இது வரை நீங்கள் அந்தப் பதிவினை படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும்! 😀


******


இந்த வாரத்தின் ஓவியம்  : பிள்ளையார்


மகள் வரையும் ஓவியங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வது வழக்கம்.  இந்த வாரத்தின் ஓவியமாக மகள் சமீபத்தில் வரைந்த ஒரு பிள்ளையார் ஓவியம் உங்கள் பார்வைக்கு!



******


இந்த வாரத்தின் கதைமாந்தர் - அம்பானியாவது எப்படி :


எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர்.  Overnight இல் அம்பானியாக வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்.  அவர் செய்யும் வேலைகள் எல்லாமே நமக்கு நிறையவே அதிர்ச்சியைத் தரும் விதமாக இருக்கிறது. தில்லியில் உடன் பணிபுரிந்த அவர் செய்யாத வேலையில்லை. எதையாவது செய்து முன்னேற வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வைத்திருக்கும் அவரை பாராட்டலாம் என்றால் பாராட்டும் விதமாக அவரது முயற்சிகள் முடிவதில்லை.  திடீரென்று கிரெடிட் கார்ட் பயன்படுத்தி பிட் காயினில் முதலீடு செய்வார் - அந்த முதலீடு லாபமும் தராமல் நஷ்டம் தருவதோடு, கிரெடிட் கார்ட் பணமும் கட்ட வேண்டியிருக்கும்.  சரி பரவாயில்லை வேறு விதமாக சம்பாதிக்கலாம் என்று நிலம் வாங்கப் போகிறேன் என்று எவரோ சொன்ன ஒரு நிலத்திற்காகக் கடன் வாங்குகிறேன் என்பார் - அந்த நிலம் எங்கே இருக்கிறது என்று பார்த்தால் ஏதோ ஒரு பள்ளத்தாக்கில் இருக்கும்! அங்கே விலைபடியாத ஒரு நிலத்தை இவர் தலையில் கட்டப் பார்ப்பது நமக்குத் (பு)தெரியும்! ஆனாலும் அவர் அதில் அதிக ஈடுபாடு காண்பிப்பார்.  எப்படியாவது பெரிய ஆளாக வேண்டும் என்ற அவரது ஆசை நல்லதாக இருந்தாலும், பெரிய பெரிய சிக்கல்களில் மாட்டிக் கொள்ளப் போகிறாரே என்று தான் எனக்குத் தோன்றும்.  ஆனாலும் பெரிதாக அவருக்குத் தடை ஒன்றும் சொல்வதில்லை - நல்லது நடந்தால் சரி என்று இருக்க வேண்டியிருக்கிறது. அறிவுரை சொல்வதற்குக் கூட பயம் தான் - நான் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்காதே என்று சொல்லி விடக்கூடுமே!


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் :  தீபாவளி


சில பல ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி சமயத்தில் தமிழகத்தில் இருக்கிறேன். தீபாவளிக்கான முஸ்தீபுகளில் திருச்சி நகர மக்களும், வியாபாரிகளும் இருப்பது நகரத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசல்களிலிருந்து நன்றாகவே தெரிகிறது.  தினமும் காலையும் மாலையும் சாலையில் அதீத அளவில் போக்குவரத்து இருக்கிறது.  அனைவருக்கும் ஒரு அவசரம் - ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு செல்ல வேண்டும் என்ற வேகத்தில் பறக்கிறார்கள்.  இவர்களுக்கு நடுவே நாமும் புகுந்து புறப்பட வேண்டியிருக்கிறது - அதிலும் சிலர் வாகனத்தில் அதி வேகமாக வருவதைப் பார்க்கும் போதே எருமை மேல் அமர்ந்து வரும் எமதர்மராஜாவைப் போலவே வருகிறார்கள்! அவர்களது கைகளில் பாசக்கயிறு மட்டும்தான் Missing! திருச்சி நகரில் முன்பு இருந்ததை விட பல புதிய கடைகள் - பிரம்மாண்டமான கடைகள் திறந்த வண்ணம் இருக்கிறார்கள்.  கடையின் அளவு சொல்லும்போது 80,000 சதுர அடி, 1,00,000 சதுர அடி என்றெல்லாம் விளம்பரப் படுத்துவதில் போட்டியே இருக்கிறது.  அதிலும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த TVS Toll Gate, சத்திரம் பேருந்து நிலையம் அருகே என்றெல்லாம் புதிய பிரம்மாண்ட கடைகள் வர, அங்கே இன்னும் போக்குவரத்து அதிகரித்து வாகனங்கள் ஸ்தம்பிக்கின்றன.  


இத்தனைக்கும் இன்றைய காலம் Online காலமாக இருக்கிறது. பல இளைஞர்கள் நேரடியாகக் கடைகளுக்குச் செல்லாமல் Online மூலமாகவே தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்வதையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி இப்படி இணைய வழி வாங்குவதையும், அது பிடிக்கவில்லை என்று திருப்பி அனுப்பவதையுமே தொடர்ந்து செய்து வருகிறார். நேரில் பார்த்து வாங்குவதைப் போல இணைய வழி வாங்க முடிவதில்லை - படத்தில் இருப்பது ஒன்றாகவும், நேரில் வருவது வேறாகவும் இருக்கத்தானே செய்கிறது. பல முறை நான் பார்த்து அவரிடமே கேட்டிருக்கிறேன் - “ஏம்மா, வாங்கிட்டு நல்லா இல்லை என்று திருப்பி அனுப்புவதற்கு நேரடியா இங்கே இருக்கிற பெரிய கடைகளில் வாங்கலாமே?” என்றால் அதற்கு என்னை ஒரு பார்வை பார்த்து - மனதிற்குள் “சரியான பூமர் அங்கிளாக இருக்கிறாரே” என்று நினைத்திருப்பாள் போலும்! “உங்களுக்கெல்லாம் இது புரியாது அங்கிள்!” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள்! வடிவேலு போல எனக்கு நானே “உனக்கு இது தேவையா?” என்று கேட்டுக் கொண்டேன்! வேற வழி! சும்மா இருப்பதே சுகம்! புரிந்து கொண்டால் நல்லது!


******


இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்தி - ஆட்டோ :


முகநூல் பக்கத்தில் Bhasker Sekar என்பவரின் பக்கத்தில் படித்த ஒரு செய்தி - இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்தியாக! 



கொஞ்ச நாட்களுக்கு முன்பு, பெங்களூருவில் நண்பர் வீட்டிலிருந்து திரும்ப ரொம்ப நேரமாகிவிட்டது. மணி இரவு 9-ஐ தாண்டியிருந்தது. Uber Auto புக் செய்து விட்டு சாலையில் தனியாக நின்று கொண்டிருந்தேன்.


சற்று நேரத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஓட்டி வந்தது ஒரு அக்கா. முதலில் கன்னடத்தில் தான் பேசினோம்.


அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது. போனை எடுத்து, _இருபா வந்துட்டு இருக்கேன்..._ என்று அழகான தமிழில் சொன்னார்.


அந்த ஒரு வார்த்தை என்னை உலுக்கியது.


அக்கா... நீங்க தமிழா? என்றேன்.


ஆமா தம்பி என்று புன்னகைத்தார்.


எந்த ஊரு அக்கா?


 தென்காசி பக்கம்… ஒர் ஊர் பெயர் சொன்னார் .


அந்த நள்ளிரவில், பெங்களூருவின் நடுவே ஒரு தமிழ் உறவை பார்த்த உணர்வு. 


அக்கா இந்த வேலையை எப்போல இருந்து செய்யுறீங்க?" என்று மெதுவாக கேட்டேன்.


சற்று மௌனத்திற்கு பின் சொன்னார், கணவர் இறந்ததில் இருந்து ஓட்டுறேன்பா...


என்ன ஆச்சு அக்கா?


உடம்பு சரியில்லாம போய் சேர்ந்துட்டாருப்பா. அதுக்கப்புறம் பொழப்புக்காக நிறைய வேலை பார்த்தேன். ஒண்ணும் சரிப்பட்டு வரல. வருமானமும் இல்ல. ரெண்டு பொம்பள பிள்ளைகள வச்சிட்டு என்ன பண்றதுனு தெரியல. அதான் இந்த ஆட்டோவை எடுத்தேன். ஆரம்பத்துல ரொம்ப பயமா, கஷ்டமா இருந்துச்சு தம்பி. இப்போ எல்லாம் பழகிப்போச்சு.


இதுல வர்ற காச வச்சு தான் பெரியவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தேன்பா. சின்னவ இப்போ காலேஜ்ல படிச்சிட்டு இருக்கா. 


இருட்டான அந்த சாலையில், அந்த ஆட்டோவின் வெளிச்சத்தை விட பிரகாசமாக இருந்தது அந்த தாயின் முகம்.


வாழ்க்கை நமக்கு எத்தனையோ பாடங்களை சொல்லிக்கொடுக்கிறது. அன்று அந்த அக்கா மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம் - தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால், தனியாக நின்றாலும் இந்த உலகத்தையே ஜெயித்து விடலாம்.


இறங்கும் இடம் வந்ததும், அக்கா ஒரு போட்டோ எடுத்துக்கவா? என்றேன்.


தாராளமா எடுத்துக்கோ தம்பி என்று அந்த தைரியலட்சுமி சிரித்தார்.

அந்த இரவு எனக்கு வெறும் ஆட்டோ பயணமாக இல்லை. அது தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊக்குவித்த நாள்....


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

31 அக்டோபர் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....