அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
எப்போதும் ஆர்வத்துடன் ஒவ்வொன்றையும் செய்து முகநூலில் சுடச்சுட பகிர்ந்து கொள்வேன்! அதில் ஒரு சந்தோஷம்! இம்முறை எல்லாவற்றையும் செய்து முடித்த பின் பகிர்ந்து கொள்கிறேன்...🙂 இந்த வருடம் இப்படி!
இம்முறை நம்ம வீட்டில் தீபாவளி ஸ்பெஷலாக பாம்பே ஹல்வா, மில்க் பேடா, முள்ளு தேன்குழல் மற்றும் மிக்சர் செய்திருக்கிறேன்! தீபாவளி மருந்தும் அரைத்து கிளறிவிட்டேன்!
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அப்பா வாசலில் வைக்கும் சரத்தில் விழித்து எழும் அன்றைய எங்கள் தீபாவளி! வருடத்தில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் புதுசை உடுத்திக் கொள்ளப் போகும் ஆர்வம்! நாட்களை எண்ணுவதும் அவ்வப்போது எடுத்துப் பார்த்துக் கொள்வதும் என சந்தோஷம் இருந்தது!
காலங்கள் தான் மாறுமா! நம் எண்ணங்களும் கொண்டாட்டங்களும் கூட தான் மாறிப் போகும் என அந்தந்த பருவத்துக்கு ஏற்றாற் போல் தீபாவளியும் தான் மாறியது! திருமணமானது முதல் நான் வடக்கில் கொண்டாடிய தீபாவளி! அங்கு பார்த்த வண்ண வண்ண விளக்குகளும், வாணங்களும் நெஞ்சை நிறைத்தது!
எனக்கே எனக்கான புத்தம் புது வாழ்வில் ஒவ்வொரு முறையும் பரிசோதனையில் நான் செய்து பார்த்த பட்சணங்களும் அதில் கிடைத்த பெருமிதமும், சந்தோஷமும்! ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக செய்து பார்க்க துடித்த கரங்களும் என் ஈடுபாடும்!
சின்னஞ்சிறு வயர் கூடையில் அம்மா வாங்கி வரும் பட்டாசை மூன்று பாகமிட்டு தம்பியோடு போட்டியிட்டுக் கொண்டு வெடித்த நாட்கள் மாறியது! என் சின்னஞ்சிறு மகளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய வாணங்களும் அவளின் கைப்பிடித்து வைத்த மத்தாப்புகளும் என ஆனது!
உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒளிபரப்பும் திரைப்படங்களை ஆர்வமுடன் பார்த்த காலங்களும் உண்டு! வடக்கில் தீபாவளி சமயத்தில் போடப்படும் சாலையோரக் கடைகளை ஓடியோடி பார்த்த நாட்களும் உண்டு! இப்போது கும்பல் இருக்கும் இடமே வேண்டாம் என தவிர்க்கும் நாட்களும் உண்டு!
ஆக மொத்தம் அன்றைய நாளோ, இன்றைய நாளோ, கொண்டாட்டங்கள் என்பது எப்போதுமே உண்டு தான்! அதை நாம் பார்க்கும் மனநிலையும் நம்முடைய சூழலும் தான் மாறுகிறது!
நம் எண்ணங்கள் மெருகேறி பண்டிகைகளை சிறப்புடன் கொண்டாடும் சூழல்கள் தொடர்ந்து உருவாகட்டும்! நம் மனதில் உள்ள இருள் அகன்று தீப ஒளி எங்கும் நிறைந்திருக்கட்டும்!
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
*******
இன்றைய பகிர்வு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
9 நவம்பர் 2026







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....