அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
ரிலாக்ஸான ஞாயிறு என்ற தலைப்பில் வார இறுதியில் நாங்கள் சென்று வந்த இடங்களைப் பற்றி ஒரு சில பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்! தொடர்ந்து வந்த பண்டிகைகள் மற்றும் வீட்டுச்சூழலால் அதில் சற்றே நீண்ட இடைவெளியாகி விட்டது!
சரி! வாங்க! இந்த வாரம் அதைத் தொடரலாம்! ஞாயிறன்று காலை வழக்கமான எங்கள் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய நாங்கள் சட்டென்று குளித்து ஒரு இடத்துக்கு தயாரானோம்! புதிதாக வேறு எங்கும் இல்லை! எல்லோருக்கும் தெரிந்த நம்ம ஆனைக்காவுக்கு தான்! அகிலாண்டேஸ்வரியை பார்த்து ரொம்ப நாளாச்சு!
திருவரங்கம் அந்தக் காலை வேளையிலும் அதீத சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது! இங்கு வருடம் முழுவதும் வருகை தரும் சுற்றுலாவாசிகள், காவிரியில் துலா ஸ்நானம் செய்ய வந்தவர்கள், தற்போது கார்த்திகை மாதம் என்பதால் வருகை தரும் ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்த கோடிகள், அடுத்து வைகுண்ட ஏகாதசிக்காக குவியப் போகும் பக்தர்கள் என எங்கும் எப்போதும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருக்கிறது அரங்கம்! காவிரியில் வெள்ளம் அல்ல இது மக்கள் வெள்ளம்!
இந்த மாலை என்ன விலைண்ணே? 170 ம்மா என்றார் சாத்தார வீதியில் உள்ள மலர் சந்தையில் கடை வைத்திருந்த கடைக்காரர்!
சரி! ஒண்ணு குடுங்கண்ணே!
எதுக்காக வாங்கறீங்க? கோயிலுக்கா? Deathக்கா?
அகிலாண்டேஸ்வரிக்கு தாண்ணே! என்றேன்!
கட்டியிருந்த சாமந்தி சரத்தை இணைக்காமல் அதில் இருபுறமும் ரோஜா வைத்து கட்டித் தந்தார்! பத்து ரூபாய் குறைத்தும் எடுத்துக் கொண்டார்! இது அவரின் இறை பக்தி!
நாங்கள் ஆனைக்காவலுக்கு சென்றதும் முதலில் அம்பாளை பார்த்து விடலாம் என்று தான் சென்றோம்! அந்த நேரம் சன்னிதி மூடியிருந்தது! எப்போது திறப்பார்கள் என்றும் தெரியவில்லை! அதனால் அங்கே காத்திருந்த பக்தர்களுடன் நாங்களும் பிரகாரத்திற்குள்ளேயே காத்திருக்கத் துவங்கினோம்!
அங்கே அமர்ந்திருந்த போது எங்களை நோக்கி புன்னகை புரிந்த வண்ணம் வந்தார் ஒரு பெண்மணி! அவரைப் பார்த்ததும், இவங்க என் ஆஃபீஸ்! பேர் சாந்தி! என்றதுடன் அவரிடம் இவங்க என் ஒய்ஃப்! என்று ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தார் என்னவர்!
பிரகாரத்தின் உள்ளே உள்ள கிரானைட் பதித்த சுற்றுச்சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த தமிழாக்கத்தினை வாசித்துக் கொண்டிருந்தார் என்னவர்! என் கண்களில் அதற்கு மேலே பொறிக்கப்பட்டிருந்த சமஸ்கிருத எழுத்துக்களை பார்த்ததும் அது செளந்தர்ய லஹரி என்பது புரிந்தது! ஈசன் அம்பாளின் அழகை வர்ணித்த செளந்தர்ய லஹரி, அதை ஆதிசங்கரர் இயற்றி உருவான வரலாறையும் அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!
இதற்கிடையே அம்பாள் சன்னிதியும் திறக்கவே அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க எல்லோருமாக உள்ளே சென்றோம்! பொது தரிசன வழியில் கும்பலாக இருக்கவே 50 ரூ கட்டண வழிக்கான டிக்கெட்டை வாங்கிக் கொண்டோம்! அம்பாளின் அருகே சென்றதும் என் கையில் வைத்திருந்த பையிலிருந்து 9 கஜப்புடவை ஒன்றும் அதற்கான ரவிக்கைத்துணி அவற்றுடன் நாங்கள் வாங்கிச் சென்றிருந்த மாலை என்று எல்லாவற்றையும் எடுத்து கோவில் குருக்களிடம் தந்தேன்!
இது அம்மாவுக்காக(மாமியார்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்! சில மாதங்களுக்கு முன் என் கனவிலும் வந்து அதை சூட்சுமமாக எனக்கு நினைவுபடுத்தியும் விட்டார் அம்மா! மறக்கலம்மா! இப்போ கோவிலுக்கு போக முடியாதேம்மா! என்ன செய்ய! வருஷாப்தீகம் முடியட்டும்! நிச்சயமா வாங்கித் தந்துடுவேன்! என்று சொன்னதும் தான் நிம்மதியானார்!
நாங்கள் தந்த புடவையை வாங்கிக் கொண்ட குருக்கள் இப்போ அம்பாள் மேல போட்டுடறேன்! அடுத்த கால பூஜைக்கு அபிஷேகம் ஆனதும் இந்தப் புடவையை கட்டி விடுவேன்! முடிஞ்சா வந்து பாருங்கோ! என்றார்! இருக்கட்டும்! அம்பாள் மேல போட்டதே சந்தோஷம்! என்று சொல்லி அவளிடம் மனமுருகி பிரார்த்தித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம்!
இனி! எந்த ஒரு கோவிலிலும் நிதானமாக நின்று தரிசிக்க முடியாது என்ற புரிதலுடன் தான் வெளியே வந்தோம்! அங்கிருந்து கிளம்பி நாங்கள் அடுத்து ஒரு கோவிலுக்கும் செல்லத் துவங்கினோம்! எங்கே???
தொடர்ந்து பயணிப்போம்.
*******
இன்றைய பகிர்வு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
28 நவம்பர் 2026



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....