செவ்வாய், 10 நவம்பர், 2026

முகராசி - எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தீபாவளி 2026  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


காட்சி - ஒன்று: திருவரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் இருக்கும் காவேரி சூப்பர் மார்க்கெட் வாசலில் இருந்த ஒரு பெண்மணி… வாய் முழுக்க வெற்றிலை போட்டு மென்று கொண்டிருக்கிறார். அவர் என்னிடம் கேட்டது…


“புரட்டாசி மாசங்க இது… இந்த மாசத்துல ரங்கநாதருக்கு படையல் போட்டுட்டு, அப்புறம் அப்படியே திருப்பதிக்கும் போய் படையல் போடறது எங்க வழக்கங்க…  அதுனால ஏதோ உங்களால முடிஞ்சது, ஒரு மூட்டை அரிசியும், பருப்பும் வாங்கித் தந்தீங்கன்னா நாங்க குடும்பத்தோட போய் படையல் போட்டுட்டு வந்துடுவோம்…”


காட்சி - இரண்டு: திருவரங்கம் ராஜகோபுரம் அருகே இருக்கும் சேம்ராஜ் பொரிகடலைக் கடை வாசலில் இருந்த பெண்மணி…. கடையில் பலரும் நின்று வேண்டியதை வாங்கிக் கொண்டிருக்க சரியாக என்னிடம் வந்து…. 


“கொஞ்சம் கடலைப்பருப்பு வாங்கிக் கொடேன்…”


காட்சி - மூன்று:  காலை நேர நடையின் போது - நான் இதுவரை பார்த்திராத ஒரு நபர்…. 


“Good Morning Sir… இது தான் என்னோட Duty Point… நான் தான் இங்கே Security Guard”..  


நான்:  “ஓ… அப்படியா! நல்லது!” என்றேன் நடந்தபடியே!


காட்சி - நான்கு:  காலை நேர நடையின் போது - பள்ளியின் Watchman…. 


“Good Morning Sir… சரியா ஸ்கூல் வாசல்ல வந்து மாடுகள்லாம் உட்கார்ந்து சாணி போட்டு நாறடிக்குதுங்க!  


யாருன்னே தெரியல! நாலு பசங்க! இந்த ஸ்கூல்ல தான் படிக்கிறோம்னு சொல்லிக்கிட்டு ஸ்கூல் வாசல்ல வந்து வெடிய கொளுத்திப் போடறாங்க! முழுக்க குப்பை! 


இப்ப தான் ஒரே குப்பையா இருக்கேன்னு முழுக்க கூட்டி விட்டேன்.  யாருட்ட சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க!  இதோ பாருங்க! இன்னிக்கு பஸ் கூட இல்லை! புள்ளம்பாடில இருந்து வண்டியிலேயே வந்து Duty பார்க்க வேண்டியிருக்கு!”


காட்சி - ஐந்து:  காலை நேர நடையின் போது…  ஒரு முதியவர் நேரே என்னிடம் வந்து…


“இந்த ரோடுல போனா திருக்கழுக்குன்றம் வருமா?” 


“என்னது திருக்கழுக்குன்றமா?”


“இல்ல... இல்ல… இந்த ரோடுல போனா திரிகோணமலை போயிடலாம்ல?”


காட்சி - ஆறு :  அலுவலக வளாகத்தின் அருகே… ஒரு இளைஞர்…


“வந்த வேலைய முடிச்சுட்டு, இப்பதான் இங்கே டீ குடிக்க காசு எடுத்துக் கொடுத்தேன்… ஆனால் இப்ப பார்த்தா பாக்கெட்ல இருந்த காசு எதுவும் காணோம்! நான் ஊருக்குத் திரும்ப போகணும்! நாகூர் தாண்டி இருக்கு எங்க ஊரு!  ஊர் திரும்பிப் போக ஒரு 400 ரூபா கிடைக்குமா?” 


*****

இதெல்லாமே சில நாட்களுக்குள் நடந்த விஷயங்கள். அது என்னமோ தெரியல! எப்பவுமே இப்படி நிறைய நடக்கும்! தில்லியில் கூட ரோட்டில் பலர் சென்று கொண்டிருக்க சரியாக என்னிடம் வந்து இது போன்ற விஷயங்களைக் கேட்பார்கள்!  நமக்கு முகராசி அப்படி இருக்கு போல! வடிவேலு பட காமெடி போல, “இவன் ரொம்ப நல்லவண்டா… எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா!” என்று என்னைப் பார்த்தவுடன் நினைத்துக் கொள்வார்கள் போலும்! அப்படி ஒரு முகராசியோ? என்னவோ போடா மாதவா!


என்னது, உங்களுக்கும் ஏதாவது உதவி வேணுமா! நான் வரல சாமி இந்த ஆட்டத்துக்கு! 🙂


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

10  நவம்பர் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....