அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட முகராசி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
நேற்றைக்கு முகராசி என்ற தலைப்பில் பதிவு எழுதினேன் என்றால் இன்றைய தலைப்பு “முகம்”... ஏன் இந்தத் தலைப்பு? என்ற கேள்வி உங்களில் சிலருக்கு வரலாம். முகம் என்று சாதாரணமாக நினைத்துவிடலாம். ஆனால் அந்த முகத்திற்கு எத்தனை எத்தனை சக்தி இருக்கிறது. முகம் பார்த்தே அந்த மனிதரைப் பற்றிச் சொல்லி விடும் சிலர் உண்டு (அது சரியா தவறா என்ற கேள்விக்கு பதில் அந்த முகம் கொண்ட மனிதருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்!). ஒரு சில முகங்கள் பார்த்தவுடன் பிரமிப்பினை உருவாக்கும் என்றால் சில முகங்கள் அதிர்ச்சி தரும் விதமாகவும் இருக்கும். சில முகங்கள் மனதை விட்டு அகலாத வகையில் கூட இருக்கும்!
முகநூலில் நேற்று எதையோ பார்த்தபோது ஒரு பெண்மணியின் முகம் இருக்கும் நிழற்படத்தினைப் பகிர்ந்து அதற்கு கவிதை ஒன்றையும் எழுதியிருந்தார். அந்த முகத்தினைப் பார்த்ததும், எனக்கு பல முகங்கள் நினைவுக்கு வந்து சென்றன. அலமேலு போல வருமா என்று முன்னர் ஒரு பதிவு எழுதி இருந்தேன். நிஜத்தில் இருந்த ஒரு தம்பதி பற்றிய பகிர்வு அது - கதை போல முயற்சி செய்திருந்தேன். முகநூலில் பார்த்த பெண்மணியின் நிழற்படம் எனக்கு அலமேலு அம்மாவினை நினைவுபடுத்தியது. கூடவே முகங்கள் குறித்த பல எண்ணங்கள் மனதில் வந்து போனது. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு கதை சொல்லுமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை முகங்கள்! ஒவ்வொரு முகமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தினை நமக்குச் சொல்லும் விதமாக அமைவதுண்டு. அப்படி ஒரு வாழ்க்கைப் பாடத்தினைத் தந்த முகம்…..
நான் பணியில் சேர்ந்த சில நாட்களில் பார்த்த ஒரு முகம் - செகல் (Sehgal) என்ற மனிதருடைய முகம். அப்படி ஒன்றும் அழகானவர் என்றோ, பிரமிக்க வைக்கும் தோற்றத்தை, பொலிவை உடையவர் என்றோ சொல்லவே முடியாது. ஆனால் அந்த முகம் முப்பத்தி ஆறு வருடங்கள் கடந்தும் என்னால் மறக்கவே முடிவதில்லை.
கொஞ்சம் அலாதியான மனிதர். கல்யாணம் ஆகாதவர்! கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர் என்று கூட சிலர் சொல்வார்கள். ஏதோ மாத்திரை மருந்துகள் கூட எடுத்துக் கொண்டார் என்றும் தெரியும். தனது சகோதரன் வீட்டில், சகோதரன் மனைவி தரும் உணவை உண்டு திருப்தி அடைபவர். மாதத்தில் பல நாட்கள் சகோதரனின் மனைவி மதிய உணவைத் தராமல் அனுப்ப, பல நாட்களில் காற்றும் தண்ணீரும் தான் மதிய உணவு. என்ன தான் சம்பாதிப்பது அவர் தான் என்றாலும், “உனக்கு ஒண்ணும் தெரியாது! உன்னை ஏமாத்திடுவாங்க!” என்று சொல்லி சம்பளம் வந்த அன்றைக்கே அலுவலகத்திற்கு வந்து சம்பளப் பணம் முழுவதையும் சகோதரனின் மனைவி வந்து வாங்கிச் சென்று விடுவார். அவ்வப்போது இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்று அவராகக் கொடுத்தால் தான் உண்டு. அதை வைத்து அலுவலகம் வந்து திரும்ப வேண்டும், மதிய உணவும் உண்ண வேண்டும், இரண்டு வேளை தேநீர் அருந்த வேண்டுமென்றால் எப்படி அத்தனையும் நடக்கும்?
அவர் போட்டிருக்கும் உடை கூட அவருக்கெனத் தைக்கப்பட்டதைப் போலவே இருக்காது! அவர் ஒரு புறம் செல்ல, அவரது உடை வேறு புறம் செல்லும்! பட்டன் இருக்காது! பல சமயங்களில் அலுவலகத்தில் கிடைக்கும் குண்டூசிகளை வைத்து சட்டைகளைப் போட்டுக் கொண்டிருப்பார். அதிலும் உடைகளைத் தோய்த்துப் பல நாட்கள் ஆனது போலவே இருக்கும். கடை நிலை ஊழியராக இருந்த அவரை அதிகாரிகள் பெரும்பாலும் ஒன்றும் சொல்வதில்லை. அவர் ஒன்றும் தெரியாதவர், ஏதோ இருக்கும் வரை அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு போகட்டும் என்று விட்டு வைத்த அதிகாரிகள் தான் அதிகம் இருந்தார்கள். இப்படியானவரை நம்பி ஏதேனும் கோப்புகளைக் கொடுத்தனுப்பினால் அது போக வேண்டிய இடத்திற்குப் போகாமல் வேறெங்கோ போய்க் கிடக்கும். போகும் இடத்தில் வேறு ஒருவர் ஏதேனும் வேலை தந்தால், முதலில் கொண்டு சென்ற கோப்பை அப்படியே போட்டுவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுவார்.
அகன்ற நெற்றி, பெரிய மூக்கு, தடிமனான உதடுகள், பருத்த முகம் கொண்ட அவரையும், அவரது முகத்தினையும் இத்தனை வருடங்கள் கழித்தும் நினைவில் வைத்திருக்க முடிகிறது. கிடைக்கும் பணத்தை எல்லாம் சகோதரன் மனைவி எடுத்துக் கொண்டுவிட, அதனைக் குறித்து அந்த சகோதரனும் பெண்டாட்டி தாசனாக இருந்து கொண்டு, சம்பாதிக்கும் சகோதரனை ஏமாற்றிக் கொண்டு இருந்தார்கள். பல வருடங்களாக இப்படித்தான். கடைசியில் அலுவலகத்தில் பணி ஓய்வு சமயத்தில் கிடைத்த பணம் முழுவதையும் வாங்கிக் கொண்டது, பென்சன் பணம் கூட சகோதரனும், சகோதரன் மனைவியுமே அனுபவித்தார்கள். ஒரு காலத்தில் அந்த மனிதர் இறந்தும் போனார் - இறப்பு அந்த சகோதரனுக்கும் அவரது மனைவிக்கும் பெரிய இழப்பு என்று அழுதார்கள் - ஆமாம் சும்மாவே கிடைத்துக் கொண்டிருந்த பணம் நின்று விடுமே! யாரையும் நம்பக் கூடாது - சொந்த சகோதரனாகவே இருந்தாலும் எனும் பாடத்தினைச் சொன்ன அந்த முகம் எப்போதும் நினைவில் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
இப்படி எத்தனையோ முகங்கள்! அப்படி மறக்க முடியாத முகம் எது என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் யாருடைய முகத்தினைச் சொல்வீர்கள்…. பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
12 நவம்பர் 2026


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....