வியாழன், 26 நவம்பர், 2026

நடை நல்லது - நல்ல மனசு 1 மற்றும் 2 - ஏழிலைப் பாலை - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


நல்ல மனசு - 1:  


காலை வேளைகளில் நல்ல பனி இருக்கிறது.  கொஞ்சம் குளிர்ந்த காற்றும் வீசிக் கொண்டிருக்கிறது. வடக்கில் இருக்கும் குளிரையே சமாளித்திருந்தாலும் அங்கிருக்கும் குளிர் வேறு மாதிரி, இங்கே இருப்பது போல காற்றில் ஈரப்பதம் இருக்காது. கொஞ்சம் Dry Winter. இங்கே அப்படி அல்ல. இங்கே காலை நேர குளிர் உடனடியாக நம்மைப் பாதிக்கும் என்று சொல்வதுண்டு.  காலை நேர நடையின் போது காதை மூடி ஒரு குல்லாய் போட்டுக் கொண்டு தான் போகிறேன்.  ஆனாலும் சில நாட்கள் குல்லாயை மறந்து விடுவதுண்டு. அப்படி குல்லாய் இல்லாமல் வீட்டை விட்டு கீழே இறங்கி நடக்க ஆரம்பிக்க, பின்னால் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.  என்னைக் கடக்கும்போது சரியாக அவர் சொன்னது “சார் பனி ரொம்ப பெய்யுது… குல்லா போட்டுட்டு போங்க! அப்புறம் படுத்தும்…”  நல்ல மனது கொண்ட அவருக்கு நன்றி சொன்னேன்!  என்னைக் கடந்து சைக்கிளில் சென்றவரைப் பார்த்தபோது….  அவர் தலையில் குல்லாய் இல்லை! ஹாஹா…. 


*******

நல்ல மனசு - 2: 


அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.  மாலை ஆறரை மணிக்கு மேலிருக்கலாம்.  காற்றில் ஈரப்பதம் இருக்க, கொஞ்சம் சில்லென்று தான் காற்றடித்துக் கொண்டிருந்தது.  வாகனத்தில் இப்படியான சூழலில் பயணிப்பது சுகானுபவம்.  ஹெல்மெட் இருப்பதால் குளிர் காற்று பற்றிக் கவலையில்லை.  பாடலொன்றை முணுமுணுத்தபடி வாகனம் செலுத்திக் கொண்டிருந்தபோது என்னை ஒரு ஸ்கூட்டர் கடந்து சென்றது.  அதிக வேகமில்லை. மிதமான வேகம் தான்.  ஓட்டிச் சென்ற மனிதருக்கு நரைத்த தலை - அறுபதுகளில் இருக்கலாம். பின்னால் அவரது இல்லாள். அந்த மனிதரின் தலையில் ஹெல்மெட் இல்லை. நல்ல குளிர் காற்று அடிக்க, காது வழி குளிர் செல்லுமே…  அது பிறகு படுத்துமே என்று அவர் வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அவரது இல்லாள், தனது இரு கைகளாலும், தனது கணவரின் காதுகளை பொத்திக் கொண்டு அமர்ந்திருந்தார்.  கணவர் மீது பாசமும் அக்கறையும் அதிகம் போல!  நல்ல மனதுதான்.  எனக்குள் வேறு சில எண்ணங்களும் - இரண்டு கைகளையும் கணவரின் காதுகளைப் பொத்திப் பிடித்துக் கொண்டிருக்க, திடீரென ப்ரேக் பிடித்தால் பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்து விடப் போகிறாரே என்று தான் எனக்குத் தோன்றியது.  காவிரிப் பாலம் கடந்து அவர்கள் நேர் பாதையில் செல்ல, நான் அம்மா மண்டபம் பாதையில் திரும்பிவிட்டேன். 


பாதை மாறினாலும், அந்தப் பெண்மணியின் நல்ல மனதும், அவர் செய்த செயலும் மறக்க முடியவில்லை. கூடவே எனது எச்சரிக்கை எண்ணங்களும்! 


*******


ஏழிலைப் பாலை : 




சப்தபர்ணி


பன்னீர் பூ


ஏழிலைப் பாலை - சப்தபர்ணி போன்ற பெயர்களில் அழைக்கப்படும் பூக்கள் பூக்கும் மரங்கள் சித்திரை வீதிகளில் நிறையவே வைத்திருக்கிறார்கள் - திருச்சி கார்ப்பரேஷன் சார்பில் என்று தான் தோன்றுகிறது.  எப்போது வைத்தார்களோ தெரியவில்லை - ஆனால் தற்போது சிறு சிறு மரங்களாக வளர்ந்து நிறைய பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன தற்போது. ஒவ்வொரு நாளும் காலை நடையின் போது பல வீட்டின் வாசல்களில் இந்த மரங்களையும் அதன் பூக்களையும் பார்க்க முடிகிறது.  சில இடங்களில் பன்னீர் பூ மரங்களும், சில வீடுகளின் வாசல்களில் பவழ மல்லி மரங்களும் இருக்கின்றன.  ஒவ்வொன்றிலும் பூக்கள் பூத்துக் குலுங்குவது தரையெங்கும் பாய் விரித்தாற்போல அதன் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன.  அவற்றுடன் இப்போது இந்த ஏழிலைப் பாலை பூக்களும்.  தில்லியில் இந்த ஏழிலைப் பாலை பெரிய பெரிய மரங்களாக இருக்கும். பெரும்பாலான சப்தபர்ணி மரங்களில் ஏழு இலைகள் ஒரு கொத்தாக இருக்கும் என்பதாலும் இதன் பெயர் சப்தபர்ணி என்று சொல்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.  இந்த ஏழிலைப் பாலை/சப்தபர்ணி மருத்துவ குணம் நிறைந்தது என்றும் சொல்வதுண்டு.  இது குறித்து உங்களுக்குத் தெரியுமா?  தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

26 நவம்பர் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....