அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட துலா ஸ்நானம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இரா. முருகன் - 03.11.2026:
நான் பிறந்த மண்ணான சிவகங்கைச் சீமையைச் சேர்ந்தவர்! எங்கள் ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் ஒரு அண்ணாவாகவும், நண்பராகவும், என் பாட்டிக்கு இன்னொரு பிள்ளையாகவும் திகழ்ந்தவர்!
மூன்று வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த என் மாமா பிள்ளையின் திருமணத்தில் தான் இவரை நான் நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது! என்னை இவரிடம் அறிமுகம் செய்து வைத்து ஓரிரு வார்த்தைகள் பேச வைக்க அன்று என் மாமா, மாமி என உறவினர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர்!
அண்ணா! இவ யாருனு தெரியறதா! நம்ம 'சுந்தரியோட பொண்ணு' இவளும் நிறைய எழுதறாண்ணா! என்று அவ்வளவு மகிழ்வுடன் என்னை அறிமுகம் செய்து வைத்து சந்தோஷப்பட்டனர்!
இவரின் மனைவியை மதுரையில் நடைபெற்ற என் மாமா பெண்ணின் திருமணத்தில் சந்தித்து பேசியிருக்கிறேன்! என் பிள்ளை தான் கிரிக்கெட்டர் 'அஸ்வின் முருகன்' என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார் இரா முருகன் அவர்களின் மனைவி. இரா. முருகன் அவர்களின் மனைவியும் இப்போது உயிருடன் இல்லை...🙁
என் மாமா அனுப்பிய தகவலை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். உடல்நலக் குறைவால் இரா முருகன் அவர்கள் ஈசனின் திருவடியை அடைந்து விட்டதாக தகவல் அறிந்தேன்! அவரது ஆன்மா சத்கதியை அடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்! 🙏 🙏
*******
ரெடிமேட் சொர்க்கம் - 17.11.2026 :
கோவையின் ரேஸ்கோர்ஸ் ரோடும், கோவைக்கே உரித்தான முகத்தை வருடும் சில்லென வீசும் காற்றும் என வாசித்ததும் காலைநேர குளிர்காற்றில் வாக்கிங் ரோட்டில் நானும் நடந்து செல்கின்ற உணர்வை என்னால் உணர முடிந்தது! என்பது மிகுந்த ஆச்சர்யத்தை தந்தது!
நெடுநாட்களுக்குப் பிறகு அலமாரியிலிருந்து நான் எடுத்து வாசித்த த்ரில்லர் புத்தகமாக ராஜேஷ்குமார் சாரின் நாவல் ஒன்று! புத்தகத்தில் இரண்டு கதைகள் உள்ளன! ‘ரெடிமேட் சொர்க்கம்’ என்று சொல்லப்படுகின்ற முதல் கதை நான் படித்து, வளர்ந்து அப்பா அம்மா தம்பியோடு இனிமையாக நாட்களை செலவிட்ட என்னுடைய பகுதியான ரேஸ்கோர்ஸ் ரோட்டில் தான் துவங்குகிறது!
சட்டென நிகழும் ஒரு சாலை விபத்தும், அதன் பின்னணியும் அதைத் தொடர்ந்து நடைபெறுகின்ற அதிரடியான சம்பவங்களும் என விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாத கதையாகத் தான் செல்கிறது! இன்றைய இளைஞர்கள் இந்த சமுதாயத்தை பார்க்கும் கோணம் என்ன என்பதைத் தான் இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ளது!
*******
நைட் ஃப்ளைட் டூ நியூயார்க் - 17.11.2026 :
இரண்டாவது கதையாக நைட் ஃப்ளைட் டூ நியூயார்க் என்பதில் பிசினஸ் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் தன் கணவனை கண்காணிக்கவும், அவரை பாதுகாக்கவும் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகுகிறாள் ஒரு பெண்மணி! அவள் தேர்ந்தெடுக்கும் டிடெக்டிவ் ஏஜென்சியை நடத்திக் கொண்டிருக்கும் தேவேந்திரனும், அவரின் அசிஸ்டெண்ட் லேகாவும் தான் இந்தக் கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள்!
நியூயார்க் செல்லும் இவர்கள் அங்கே சந்திக்கும் மனிதர்களும் அவர்களால் ஏற்படும் நிகழ்வுகளும், அதனால் மாறிய கதையின் போக்கும் என முற்றிலும் எதிர்பாராத காட்சிகளுமாக நம்மை பயணிக்க வைக்கிறது! இந்தக் கதையும் விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாதது தான்!
இந்த புத்தகத்தில் உள்ள இரண்டு கதைகளையும் வாசித்த போது இன்றைய இளம் தலைமுறையினரை குறை கூறிக் கொண்டிருக்கும் சமுதாயத்தில், அவர்களால் நேர்மையான சமூகமும் உருவாகி வருவதாகத் தான் ஆசிரியர் ராஜேஷ்குமார் சார் குறிப்பிட்டுள்ளார்! இது ஒரு நல்ல மாற்றம் தானே! வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்களேன்!
*******
நடை நல்லது - 17.11.2026 :
அவ்வப்போது வீட்டுச்சூழலால் காலைநேர நடையில் தடைகள் ஏற்பட்டாலும், அதை எப்படியாவது தொடர வேண்டும் என்ற உந்துதலில் சில நாட்களாக நான்கு கிமீக்கும் குறையாமல் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கிறோம்! அன்றாடம் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டும், வழியில் பார்க்கும் மனிதர்களையும் அவர்களின் வாழ்வைக் குறித்தும் பேசிக் கொண்டும், இன்றைக்கு என்ன சமைக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டும் ஒவ்வொரு நாளும் பயணித்துக் கொண்டிருக்கிறது எங்கள் நடை!
*******
இன்றைய கதம்பம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
19 நவம்பர் 2026



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....