அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நிழற்படம் மூன்று - படத்திற்கான கவிதையும் கதையும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் விளம்பரம் : “Save Today”
பணம் மட்டுமே சேமிக்க வேண்டிய விஷயம் அல்ல… சேமிப்பதற்கு நிறைய விஷயங்கள் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த விளம்பரம். பாருங்களேன்.
மேலே உள்ள காணொளியை பார்க்க முடியாவிட்டால், கீழே உள்ள சுட்டி வழியாகவும் சென்று பார்க்கலாம்.
Save Today for a Better Tomorrow
******
இந்த வாரத்தின் வாகன வாசகம் : பாசக்கார தாத்தா
எங்கள் வீட்டின் அருகிலுள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் சில சமயங்கள் ஒரு ஆட்டோ நிற்பதைப் பார்ப்பதுண்டு. வண்டியில் கடந்து செல்லும்போது அந்த ஆட்டோவில் எழுதி இருக்கும் வாசகம் முழுவதும் படிக்க இயலா அளவுக்கு நீண்டதாக இருக்கும். பேரன் குறித்து ஏதோ எழுதி இருக்கும். பாசக்கார தாத்தா எந்த அளவுக்கு தனது பேரன் மீது பாசம் வைத்திருக்கிறார் என்பதை இரண்டு நாட்கள் முன்னர் தெரிந்து கொள்ள முடிந்தது. காவிரி பாலம் தாண்டியதும் வரும் சிக்னலில் சரியாக எனக்கு முன்னால் அந்த தானி (ஆட்டோவுக்கு தமிழாம்! படுத்தறாங்க மை லார்ட்!) நின்று கொண்டிருந்தது. உடனடியாக அலைபேசியில் ஒரு படம் எடுத்துக் கொண்டேன். அதில் எழுதி இருந்த வாசகம் கீழேயுள்ள படத்தில் இருக்கிறது. அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு எப்படியும் அறுபதிற்கு மேலிருக்கலாம். தனது மகன்/மகள் மீது கூட இந்த அளவு பாசம் வைத்திருப்பாரா என்பது சந்தேகம் தான். பாருங்களேன் எப்படி எழுதி வைத்திருக்கிறார் என்று! பேரன் தாத்தாவை அதே அளவு பாசத்துடன் வைத்திருப்பான் என்று நம்புவோமாக!
******
பழைய நினைப்புடா பேராண்டி : ஓர்ச்சா என்றொரு நகரம்…
2011-ஆம் ஆண்டு எங்களது வலைப்பூவில் இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஓர்ச்சா என்றொரு நகரம்… - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் [Tikamgarh] மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊரின் பெயர் தான் ஓர்ச்சா. ஹிந்தியில் ஓர்ச்சா என்றால் ”மறைந்துள்ள” என்று அர்த்தம். இந்த ஊர் “பேத்வா” [Betwa] ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
புந்தேலா [Bundela] ராஜாக்களின் தலைநகராகத் திகழ்ந்த ஒரு இடம் தான் இது. Bundelkhand என்று மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளைச் சேர்த்து தனி மாநிலம் கேட்கிறார்களே அதற்கெல்லாம் முன்னோடி நகரம் தான் இது. 1501-ஆம் வருடம் புந்தேலா ராஜாவான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் இது.
இந்த நகரத்தில் பலப்பல பழமையான கட்டிடங்கள் இருக்கின்றன. அரண்மனைகள், கோவில்கள், சத்ரி [இறந்த ராஜா-ராணிகளுக்கென கட்டப்பட்ட சமாதிகள், மற்றும் நாட்டியமாடும் ஒரு கவிதாயினிக்கு என கட்டப்பட்ட ”ராய் ப்ரவீன் மஹால்” என ஊர் முழுவதும் புராதனமான கட்டிடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டிடங்களிலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பலவிதமான ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன.
பதிவினை, மேலே உள்ள சுட்டி வழி முழுமையாகப் படித்து ரசிக்கலாமே நண்பர்களே!
******
இந்த வாரத்தின் செய்தி : 79 வருடங்களுக்குப் பிறகு
சமீபத்தில் படித்த ஒரு செய்தி கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி தான். பல வசதிகள் நாம் அனுபவித்துக் கொண்டிருந்தாலும் எப்போதும் அரசாங்கங்களை, அவர்களால் உண்டான குறைகளைச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் இன்னமும் பல கிராமங்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றன என்பதை எனது பல பயணங்களில் பார்த்து, கேட்டு இருக்கிறேன். இந்தச் செய்தி கூட அப்படியான ஒன்று தான். சீன எல்லையில் இருக்கும் உத்திராகண்ட் மாநிலத்தின் சீப்பு என்றொரு கிராமம் - கடல் மட்டத்திலிருந்து 11820 அடி உயரத்தில் இருக்கும் கிராமம் - சமீபத்தில் தான் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. கடினமான பாதை தான் என்றாலும் இப்போதாவது சாலை ஏற்பட்டு இருக்கிறதே என்பதில் மகிழ்ச்சி தான். கடுமையான மலையேற்றம் தான் இது நாள் வரை - கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தங்களுக்குத் தேவையான பொருட்களை தூக்கிக் கொண்டு மலையேற்றம் செய்ய வேண்டியிருந்தது. இனி கவலையில்லாமல் வாகனங்களில் பொருட்களை ஏற்றிச் செல்வதோடு, குழந்தைகள், பெரியவர்கள் போன்றவர்களும் தங்களது வீடுகளுக்கு வாகனத்தில் பயணிக்கலாம்! நல்லதொரு விஷயம் - பாராட்டுக்குரியதும் கூட. முழு செய்தியையும் கீழே உள்ள சுட்டி வழி வாசிக்கலாம்.
79 years after independence, road finally reaches Uttarakhand’s remote Sipu village
******
இந்த வாரத்தின் சிறுகதை - கொடுப்பினை :
இந்த வாரத்தின் ரசித்த சிறுகதையாக சொல்வனம் தளத்திலிருந்து சு. வேணுகோபால் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதை. கதையிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு.
தஸ்புஸ் என்று இடும்பன் கோயில் வாசலுக்கு வந்து கும்பிட்டனர். இடும்பனைச் சுற்றிவிட்டு மேலேரும் படிக்கட்டில் கால்வைத்து “அப்பா முடியலைப்பா” என்றாள் சாம்பவி. மஞ்சள் சீலை அணிந்த ஒரு கோஷ்டி “வெற்றிவேல் முருகனுக்கு” “அரோகரா” என்று சொல்லிக்கொண்டு மேலேறிச் சென்றது.
முட்டியைப் பிடித்து மேலேறினார்கள். அம்மா குமரனையும் தூக்கிக்கொண்டு முன்னே போய்க்கொண்டிருந்தார். அம்மா மனம் முழுக்க வேகம் புகுந்திருக்கிறது.
உடம்பில் வேர்வை வழிய வழிய அப்பா வயது உள்ள இருவர் பால்காவடி, பன்னீர்காவடி சுமந்தபடி “முருகனுக்கு” “அரோகரா” “கந்தனுக்கு” “அரோகரா” சொல்லிக்கொண்டு கடந்து சென்றார்கள். பொசுக்கும் கல்படியில் வைத்து தாங்கமுடியாமல் மாற்றிவைத்து மேலேறினர்.
நான்கு பெண்களுடன் ஒருதாய் மெல்லமாய் ஏறிக்கொண்டிருந்தாள். அவர் முதுகுச் சட்டையெல்லாம் நனைந்து ஒட்டிப் போய்விட்டது. படி ஓரங்களில் செவ்வாடை அணிந்த பண்டாரங்கள் திருவோடுகளை எடுத்து புடைத்து புடைத்து பிச்சை கேட்டார்கள்.
முழுக்கதையும் படிக்க சுட்டி கீழே!
கொடுப்பினை – சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : ட்ரை சைக்கிள்…
உங்களில் யாரேனும் ட்ரை சைக்கிள் ஓட்டி இருக்கிறீர்களா? குழந்தைகளாக இருந்த போது ஓட்டிய மூன்று சக்கர சைக்கிள் அல்ல! பாரம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் மூன்று சக்கர வாகனமாகிய ட்ரை சைக்கிள்! ஒரு சில ட்ரை சைக்கிள்களில் முன்புறம் இரண்டு சக்கரங்களுடன் கூடிய பாரம் சுமக்கும் பகுதியும், அதன் பின்னே ஓட்டுபவர் உட்கார ஒரு சீட்டும், பின்னால் ஒரு சக்கரமும் இருக்கும். மாறாக, முன்னால் ஒரு சக்கரமும் பின்னால் பாரம் சுமக்க ஏற்ற ட்ராலியும் அதனுடன் இரண்டு சக்கரங்களும் இருக்கும் வண்டிகளும் உண்டு. அவற்றினை - இரண்டு வகைகளையும் நான் சிறு வயதில் ஓட்டி இருக்கிறேன். முன்புறம் பாரம் இருக்கும் வண்டியை இயக்குவது கொஞ்சம் சிரமம் தான். கொஞ்சம் Balance தவறினாலும், குடை சாய்ந்து நாமும் கீழே விழுந்துவிடுவதோடு முன்புறம் இருக்கும் பொருட்களும் கீழே விழுந்து விடும். அதனை இயக்க கவனம் அதிகம் தேவை. வீட்டின் எதிரே இருந்த கடையில் இப்படியான வாகனங்கள் இருக்க, அவற்றை நான் வீடு இருக்கும் சாலையில் ஓட்டிப் பழகி இருக்கிறேன்.
சமீபத்தில் காலை நேர நடையின் போது சாலையோரத்தில் பாழடைந்த நிலையில் முன்பக்கம் இரண்டு சக்கரங்கள் இருக்கும் ட்ரை சைக்கிள் பார்த்தவுடன் பழைய நினைவுகள் எனக்குள்! ஒரு காலத்தில் ஒரு வியாபாரத்திற்கு உதவிய இந்த வண்டி இன்றைக்கு கேட்பாரில்லாமல் ஒன்றுக்கும் உதவாமல் கிடக்கிறது. காயலான் கடைக்கும் போட்டுவிட அந்த வண்டியின் உரிமையாளருக்கு மனதில்லை போலும். அது ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறாரோ என்னமோ என்ற எண்ணம் என் மனதுக்குள். கூடவே வேறு சில எண்ணங்களும்… இந்தியாவில் பல இடங்களில் இப்படியான பழைய வாகனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வாகனம் இயங்கும் வரை அவற்றைப் பயன்படுத்திய பிறகு அதனை அப்படியே விட்டு விடுகிறார்கள். என்னதான் நம் நாட்டில் பல இடங்களில் Authorized Vehicle Scrapping Facility இருந்தாலும் நிறைய பேர் அதனை பயன்படுத்துவதில்லை. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் இப்படியான பழைய வாகனங்கள் அடைத்துக் கொண்டிருக்கும் இடம் எவ்வளவு என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! இது குறித்து வேறு ஒரு சமயத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.
இன்றைக்கு ட்ரை சைக்கிள் நினைவுகள் மட்டும் - மீண்டும் கேட்கிறேன் - உங்களில் எத்தனை பேர் இப்படியான வாகனங்களை ஓட்டி இருக்கிறீர்கள் - சொல்லுங்களேன் பின்னூட்டத்தில்!
******
இந்த வாரத்தின் முகநூல் இற்றை - உயர்ந்த எண்ணம் :
முகநூலில் பார்த்த ஒரு இற்றை… நகைச்சுவைக்காக மட்டும்! இது அனைவருக்கும் பொருந்தாது - எனும் Foot note உடன் இங்கே சேர்த்திருக்கிறேன்! 🙂(என்ன ஒரு எச்சரிக்கை!)
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… விடைபெறுமுன்... இன்றைய காஃபி வித் கிட்டு கொஞ்சம் ஸ்பெஷல்! என்ன என்று சொல்லுங்களேன்!
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
21 நவம்பர் 202





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....