அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட எதிர்பாரா இழப்பு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சென்ற வாரத்தில் நடை நல்லது பதிவில் குறிப்பிட்டது போல, இதோ மீண்டும் ஒரு நடை நல்லது பகிர்வுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். நடுவில் இரண்டு நாட்கள் இடைவெளி ஆகிவிட்டாலும் தொடர்ந்து காலை நேர நடையினால் கிடைக்கும் சுகானுபவத்தினை நானும் இல்லாளும் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். சமீபத்திய மழை காரணமாக காலை நேரங்கள் கொஞ்சம் குளிர்காற்று இருக்கிறது. இருந்தாலும் நடை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விதம் விதமான நபர்களை பார்க்க முடிகிறது. சில நபர்கள் தொடர்ந்து நடப்பவர்கள். சிலரை புதிதாகப் பார்க்க முடிகிறது. ஒரு சிலர் வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வருகிறார்கள். “அடாது மழை பெய்தாலும்” விடாது நடப்போம் என்று நடப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே! அப்படி இடைவேளி விடுபவர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நடப்பவர்களை - குறிப்பாக நண்பர் நெல்லைத் தமிழன் போன்றவர்களை - நாம் நமக்கு Inspiration ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிலர் தனியே தன்னந்தனியே என்று நடக்க, சிலர் நண்பர்களை இந்த நடைக்குக் கூட்டுச் சேர்த்துக் கொள்கிறார்கள். சில நாட்களாக மேலூர் கிராமத்தினைச் சேர்ந்த சில பெண்மணிகள் கூட்டாக நடக்க வருகிறார்கள். அவர்களுக்குள் சம்பாஷணைகள் நடந்த வண்ணமே இருக்கின்றது. இரண்டு மூன்று பேர் சேர்ந்துவிட்டால் போதும் - அது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி - சிலரின் தலை உருளாமல் இருப்பதில்லை! இல்லாத ஒருவரைப் பற்றிப் பேசுவதில் அனைவருக்குமே ஒரு வித ஆனந்தம்! காலை நேர நடையில் கூட இப்படி அடுத்தவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே நடக்கும் மனிதர்களையும் பார்க்க நேரிடுகிறது. நானும் இல்லத்தரசியும் வாழ்க்கை குறித்த சிந்தனைகளையும், பார்க்கும் இலை, செடி, கொடி, பூக்கள், பறவைகள், விலங்குகள் என விதம் விதமான விஷயங்களைக் குறித்த எங்களுக்குத் தெரிந்த தகவல்களை பரிமாறிக்கொண்டபடி நடக்கிறோம்.
எப்போதும் நடக்கும் இடத்தில் ஒரு செடி பார்த்தோம். அது என்ன செடி என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் இரண்டு நாட்கள் முன்னர் தான் அது திருநீற்றுப் பச்சிலை செடிகள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அந்தச் செடி தானோ என்று Confirm செய்து கொள்ள சில இலைகளைப் பறித்து முகர்ந்து பார்த்தோம். அதன் பிறகு பார்த்தால் பார்க்கும் இடங்களில் எல்லாம் அந்தச் செடி கண்களுக்குப் புலப்பட்டது! நுணா செடி, அதன் காய், பூ, போன்றவையும் நிறையவே இருக்கிறது. போலவே கிருஷ்ணகமலம் பூக்கள் கொடிகளில் இருக்கிறது. நிறைய வகை காட்டுப் பூக்கள், செடிகள் என பாதை முழுவதுமே இருக்கிறது. சாலையோரத்தில் பார்த்தீனியம் செடிகள் இருப்பதைப் பார்த்து, இது தொட்டா கை அறிக்கும் என்று சொன்னார் இல்லத்தரசி! சாலையோரத்தில் நிறைய கீரை வகைகள் போல செடிகள். வேலைக்குச் செல்லும் ஒரு மூதாட்டியிடம் கேட்க, “எங்கம்மா இருக்கறப்ப, இப்படி நிறைய கீரையப் பத்தி சொல்லும்! எனக்கு பெரிசா ஒண்ணும் தெரியல!” என்றார். எனது தாயார் கூட தோட்டத்திலிருந்து, தானாக வளர்ந்து இருக்கும் நிறைய கீரைகளைப் பறித்து, கலவைக் கீரை என்ற பெயருடன் அதில் கூட்டு செய்வார். இப்போது நம்மில் பலருக்கும் இது போன்ற விஷயங்கள் தெரிவதில்லை - சொல்லித் தரவும் ஆளில்லை!
மேலே சொல்லி இருக்கும் மேலூர் பெண்மணிகள் நடக்கும்போது அவர்களை எதிரும் புதிருமாக சில முறை கடக்க வேண்டியிருந்தது. அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையும் கேட்க முடிந்தது. அப்படிக் கேட்ட விஷயம் தான் இந்தத் தலைப்பின் ஒரு வார்த்தையாக! சரியாக நாங்கள் அவர்களைக் கடக்கும்போது அந்தப் பெண்மணிகளில் ஒருவர், தனது தோழிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார் - “ஏய் 06.40 மணி ஆயிடுச்சு! வாங்க வீட்டுக்குத் திரும்புவோம்! அந்த ஆள் வேற, ஏண்டி லேட்டு? எருமை”ன்னு சொல்லும்! என்றார். எப்படிச் சுலபமாக தனது இல்லாளை எருமை என்று சொல்லி விட முடிகிறது அந்த மனிதரால்! ஒரு வேளை அதீத அன்பில் கூட இப்படிச் சொல்லலாம்! என் அம்மா கூட என்னை டில்லி எருமை! என்று அவ்வப்போது அழைத்ததுண்டு - அதிலும் நான் படித்த காலங்களில்! தில்லி தான் வாழ்க்கையைத் தரப் போகிறது என்று அறியாத நாட்களில்! ஆனாலும் தனது மனைவியை எப்படி எருமை என்று சொல்லத் தோன்றுகிறது என்ற எண்ணம் எனக்குள்! ஒரு வேளை செல்லமாக அப்படிச் சொல்கிறாரோ என்னமோ? அவருக்குத் தான் தெரியும்! சிரித்தபடியே அவர்களைக் கடந்து எங்கள் நடையைத் தொடர்ந்தோம்.
இப்படி காலை வேளைகளில் நடக்கும்போது பார்க்கக் கிடைக்கும் இன்னும் ஒரு மூதாட்டி குறித்து இன்று பார்க்கலாம். காலை நேரத்தில் தனது மகன் அல்லது பேரனுடன் வண்டியில் வந்து சாலையோரத்தில் இறங்கி, தலையில் காலி மூங்கில் தட்டு அல்லது ஒரு அலுமினிய கூடையுடன் உள்ளே நடந்து செல்வார். திரும்பி வருகையில் தலையில் உள்ள மூங்கில் தட்டில்/கூடையில் - சில வாழைக்காய், சுரைக்காய், புடலங்காய், கேரட் என்று இருக்கும்! அவற்றை எல்லாம் அக்கம் பக்கத்தில் இருக்கும் குடியிருப்புகளில் விற்பனை செய்கிறார். தலைச் சுமையுடன் நடந்து சென்று வியாபாரம். எப்படியும் எழுபதிற்கு மேலிருக்கும் அவரது வயது - பொக்கை வாய் பாட்டியாக இருந்தாலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருக்கிறது. இன்றைய இளைஞர்களில் பலர் எந்த வித கடினமான வேலையையும் செய்ய விரும்புவதில்லை. தினம் தினம் அவரைப் பார்க்கும்போதும் அவரது உழைப்பும், சுறுசுறுப்பும் என் மனதைத் தொடும். ஒரு நாள் அவரை என்னால் நிழற்படமாக அலைபேசி வழி எடுக்க முடிந்தது. அந்தப் படம் மேலே! இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கு என்னென்ன எண்ணங்கள் தோன்றியது! அது கவிதையாகவும் இருக்கலாம், கதையாகவும் இருக்கலாம்! எழுதி அனுப்புங்களேன் - எனது மின்னஞ்சல் முகவரிக்கு! (venkatnagaraj@gmail.com). இங்கே பிரசுரிக்கிறேன்.
நடைப்பயணங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித அனுபவம்! மேலும் நடை தொடரத் தொடர “நடை நல்லது” பதிவுகள் வழி நானும் உங்களைச் சில எண்ணங்களுடன் சந்திக்கிறேன். தொடர்ந்து நடை நல்லது பதிவுகள் வழி சந்திப்போம் நண்பர்களே.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
5 நவம்பர் 2026

.jpeg)



.jpeg)



நடை எப்போதுமே சலிப்பதில்லை. அதுவும் இயற்கையை ரசித்தபடி அதைப் பற்றி சிந்தித்தபடி நடந்தால் நடப்பதே தெரியாது. உங்களைப் போலவேதான் நானும். பார்க்கும் மரம் செடி பறவை பூச்சி என எல்லாவற்றையும் படம்பிடித்தபடிதான் நடப்பேன்.
பதிலளிநீக்குமோசமான வார்த்தைகளைச் சொல்லி அழைக்காமல் எருமை, குரங்கு, கழுதை என்பதோடு விட்டுவிடுகிறார்களே என்று எண்ணி கேட்பவர்களும் சும்மா இருக்கிறார்களோ என்னவோ.
என்னால் விடாது நடக்க முடியவில்லை. இடைவெளி விழுந்து விடுகிறது. பேத்தி பிறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன் மறுபடி தொடங்கினேன். உடனேயே நின்று விட்டது!!!! பார்க்கில் ஒருவர் என்னை ரொம்ப விசாரித்து குழம்பினார். க+\அயித்தாரா, அல்லது என்னை யாரோ என்று நினைத்து குழம்பிக் கொண்டாரோ...
பதிலளிநீக்குஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் என்று மனதுக்குள் பாடிக்கொண்டு அவருக்கு ஒரு அசட்டு புன்னகையை பதிலாகக் கொடுத்தேன்.
கீரை என்று நினைத்து வேறு எதையாவது பறித்து சமைத்துவிட்டால் கலவைக்கூட்டு கவலைக்கூட்டு ஆகிவிடும்!
பதிலளிநீக்குகாலி மூங்கில் தட்டுடன் உள்ளே நடந்து செல்வார் சரி, எதனுள்ளே?
பதிலளிநீக்குஇந்த வாரமும் கதை, கவிதையா... முயற்சிக்கிறேன்!
நடைபயணங்களில் பார்த்த செடி, கொடிகள், பூக்கள்,சூரியன் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குபூச்சி அரித்து இருக்கும் இலையும் அழகு.
பெண்களின் உரையாடல் கடைசியில் அவர் சொன்னது சிரிப்பு வந்தது.
அம்மா டெல்லி போகும் முன்னேயே செல்லமாக திட்டி இருக்கிறார்களே!
சுமை தூக்கி செல்லும் அம்மாவை பற்றிய கதை, கவிதையை படிக்க ஆவல்.
நானும் இப்படி தினம் சூரியன் உதிப்பதை , நிலவு வருவதை, பூக்கள், இலைகள் எல்லாவற்றையும் படம் எடுத்து காலை ஸ்டேடஸ் போட்டு கொண்டு இருக்கிறேன்.
அன்பின் வெங்கட், நடை நல்லது தான். அதுவும் இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதத் தெரிந்தால் இன்னும் நன்மை. 70 வயது மூதாட்டியா:) எனக்கு 78 வயது ஆகிறது. மூதாட்டியாக உணர்வதே இல்லை. :)
பதிலளிநீக்குதில்லி எருமையா? யார்? எல்லா அம்மாக்களும் (என் மாமியார்) பலவித திட்டுகளை வர்ஷித்திருக்கிறார்கள் என் அம்மா ரொம்ப எரிச்சல் வந்தால் நீ நாசமில்லாமல் போக என்பார்:) அந்தக் கோப முகத்தைப் பார்த்தாலே நான் அடங்கிவிடுவேன்.
பதிலளிநீக்குசரமாகத் தொங்கும் பூ என்னவாக இருக்கும்?
பதிலளிநீக்குபெண்கள் சேர்ந்து நடக்கும் போது வம்பும் இருக்கும், கணவரைப் பற்றிய ஆதங்கமும் இருக்கும். அதெல்லாம் இல்லாமல் தான் வாழ்க்கை வெறுமையாகிறது.
பதிலளிநீக்குசூரிய அஸ்தமனம் காட்சிகள் மிக அருமை. நீங்கள் அனுப்பிய இலைகளையும்பூக்களையும் கூகிள் செய்து பார்த்ததில் காட்டு ஆமணக்கு என்று சொல்லியது. மற்றொரு பூ விஷச்செடி என்று எச்சரிக்கை செய்கிறது. அதனால் நடக்கும் போது எந்த செடியையும் தொடவேண்டாம்.
பதிலளிநீக்குசுமை சுமக்கும் பாட்டி தன்மானம் மிக்கவள். மனம் நிறை பாராட்டுகள். .எல்லோருக்கும் இந்த சுதந்திரம் கிடைக்குமா தெரியவில்லை. நலமே வாழ வாழ்த்துகள். நம் நாட்டில் சீக்கிரமே வயதான தோற்றம் வந்து விடும். அதனால் அவருக்கு 60 வயது இருக்கலாம்.பேட்டி எடுக்க முடிந்தால் எத்தனை சுகமாக இருக்கும்!!!
பதிலளிநீக்குசுமக்கும் பாட்டி... எனக்கு வித்தியாசமாகத் தெரியவில்லை.
பதிலளிநீக்குநான் பெரியவங்க எல்லோரையும் முடிந்த அளவு ஏதாவது செய்யவேண்டும் என்றே சொல்லுவேன். அவங்க ஆசைப்பட்டு சில சில வேலைகளைச் செய்ய வரும்போது, வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க என்று சொன்னால், அப்படிச் சொல்லாதீங்க என்பேன்.
ஆனால் வீட்டுக் கஷ்டத்துக்காகவும், தன் ஒரு சாண் வயிற்றுக்காகவும் வேறு வழியில்லாமல் வேலை செய்யும் வயதானவர்கள் என் மனதை மிகவும் பாதிப்பார்கள். முடியாதவர்களைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் (ஓரளவு பார்த்துக்கொள்ளுதல்) அவர்கள் பெற்றவர்களால் பயன் என்ன?
பொதுவா நடைப் பயிற்சி என்பது கொஞ்சம் வேகமாக நமக்காக நடப்பது. அது போரடிக்கும்போதுதான் இன்னொருவரிடம் பேசிக்கொண்டே நடப்பது என்பது என் எண்ணம். (காரணம் இருவர் ஒரே வேகத்துடன் நடப்பது அரிது).
பதிலளிநீக்குஇங்கு வளாகத்திலும் 3 பேர்கள் அல்லது 6-7 பேர்கள் சப்தமாகப் பேசிக்கொண்டு நடப்பார்கள். தவறில்லை.
தொடுத்த சரம் போன்ற படம் மிக மிக அழகு
படத்தைப் பார்த்ததும் நான் பார்த்த இரு நபர்கள் நினைவுக்கு வருகின்றனர். ஒரு வயதான பெண்மணி, நான் எம்.எஸ்.ஸி படித்தபோது காலேஜ் ஹாஸ்டலுக்கு வருவார், அதிரசம் முறுக்கு வடை என்று பல தீனிகளை எடுத்துக்கொண்டு. நாங்கள் பணம் கொடுத்து வாங்கிக்கொள்வோம். அதுபோல பெங்களூர் மார்க்கெட்டில் வயதான ஒருவர் பழங்கள் விற்பார்.
பதிலளிநீக்குவீட்டுக் கஷ்டமா? இல்லை சோம்பேறியாக வீட்டில் உட்காரக்கூடாது என்ற எண்ணமா? இல்லை தன் வயிறுக்கு தான் உழைத்துச் சாப்பிடணும் என்ற எண்ணமா? இல்லை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதா? யாரே அறிவர்?